வள்ளுவர் வழியில் காந்தியார்
இந்தியாவில் 1918க்குப் பிறகு ஒத்துழையாமைப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய காந்தியார் மகாத்மா என்று பாராட்டப்பட்டார். அதற்கு முன்னதாகவே அவருக்கு மகாத்மா என்ற சிறப்புப் பெயர் கவி ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் தரப்பட்டது என்று பலரால் கூறப்படுகிறது.
இந்தியாவில் 1918க்குப் பிறகு ஒத்துழையாமைப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய காந்தியார் மகாத்மா என்று பாராட்டப்பட்டார். அதற்கு முன்னதாகவே அவருக்கு மகாத்மா என்ற சிறப்புப் பெயர் கவி ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் தரப்பட்டது என்று பலரால் கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த காலத்தில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, எம்.கே.காந்தி, காந்தி ஆகிய பெயர்களில்தான் அவர்களுடைய கட்டுரைகள், கடிதங்கள், குறிப்புகள் எல்லாம் உள்ளன. தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் அவரது போராட்டங்கள் பற்றிய இந்தக் கட்டுரையில் காந்தி என்ற பெயர் பொதுவாக தரப்படுகிறது.
தமது ஆயுட்காலத்தில் மகாத்மா காந்தி எழுதிய கட்டுரைகள், கடிதங்கள் அனைத்தையும் எடுத்து இந்திய அரசாங்கத்தின் செய்தி - ஒளிபரப்பு அமைச்சகம் 98 தொகுப்புகளில் - தேதி உட்பட நிகழ்ச்சிக் குறிப்புகளுடன் - 1988இல் வெளியிட்டது.
1907இல் தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்தபொழுது, ஆங்கில காமன்வெல்த் அமைப்பின் தென்னாப்பிரிக்க அரசாங்கம் ஜெனரல் ஸ்மட்ஸ் தலைமையில் இருந்தது. 1907 மார்ச் மாதத்தில் இந்தியர்-சீனர்களைப் பாதிக்கும் டிரான்ஸ்வால் ஆசியாவினர் பதிவுச் சட்டம் போடப்பட்டது. அதன்படி, தென்னாப்பிரிக்காவில் இருந்த இந்தியர்களும் சீனர்களும் பத்து விரல்களின் பதிவுடன் அரசாங்கத்துக்கு தமது வாழும் விவரங்களைச் சட்டபூர்வமாகத் தரவேண்டும்.
அதற்குக் கடுமையான எதிர்ப்பு இந்திய - ஆசிய மக்களிடமிருந்து வந்தாலும், அமைதியான முறையில் அதன் விளைவுகளைச் சமாளிக்க காந்தியார் முதலில் பாடுபட்டார். ஆயினும் ஸ்மட்ஸ் தந்த ஒப்புதல்கள் நிறைவேற்றப்படாத நிலையில், அந்தச் சட்டப்பிரிவை செயல்படுத்த அரசாங்கம் முற்பட்டது.
கடைசியாக 1907 ஜூலை மாத இறுதியில் பிரிட்டோனியா நகரில் நடைபெற்ற கூட்டத்தில், அமைதியான தடுப்பு முயற்சி (பாசிவ் ரெசிஸ்டன்ஸ்) என்று காந்தியார் பின்பற்றும் சாத்வீக முறை பலவீனமானமானவர்கள் நடத்தும் செயல்முறை என்று பலர் நினைத்ததால், நீண்ட ஆலோனைகளுக்குப் பிறகு அமைதியான எதிர்ப்புப் போராட்டமான சத்யாகிரகத்தை (சத்யா என்றால் உண்மை, கிரகம் என்றால் பலமானது) முதலில் தென்னாப்பிரிக்காவில் காந்தி ஆரம்பித்தார். பிறகு இந்தியாவில் அது முழுமையாகச் செயல்படுத்தப்பட்டது. இந்திய அரசியல் வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் காந்தியாரின் சத்யாகிரகம் இடம் பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் காந்தியார் நடத்திய சத்யாகிரகப் போராட்டங்களில் தமிழர்கள் பெற்ற பங்கினையும் தியாகத்தையும் விளக்கி, தமது "இந்தியன் ஒப்பீனியன்' இதழில் பலமுறை அவர் எழுதியுள்ளார். அவற்றில் சில நிகழ்ச்சிகள் பின்வருமாறு: தொகுப்பின் (வால்யூம்) எண், தேதி ஆகியவற்றின் விவரங்கள் அடைப்புகளில் தரப்பட்டுள்ளன.
காந்தியின் சத்தியாகிரகங்களில் தமிழர்களின் பங்கு:
ஜோகன்ஸ் எல்லையை விட்டு 48 மணி நேரத்தில் அகன்றுவிட வேண்டும் என்று மாஜிஸ்ட்ரேட் இட்ட உத்தரவை காந்தி நிறைவேற்றவில்லை என்று, மறுநாள், 1908 ஜனவரி 10, மாஜிஸ்ட்ரேட்முன் குற்றவாளியாக அவர் நிறுத்தப்பட்டார். குற்றத்தை ஏற்றுக் கொண்டு, உரிய தண்டனைக்குத் தயாராக இருப்பதாக காந்தி கூறினார். இரண்டு மாத தண்டனை போதுமானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதுதான் காந்தி வாழ்க்கையில் முதல் தடவையாக சிறைக்குச் சென்ற நிகழ்ச்சி.
காந்தி சிறை சென்ற விவரத்தை வெளியிட்ட ராண்ட் டெய்லி மெயில் என்ற செய்தித்தாள், அவருடன் வழக்கில் இணைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்றவர்கள், பி.கே.நாயுடு, இ.எம்.பிள்ளை, ஜான் போர்ட்டன், எம்.ஈஸ்டன், எம்.ஈ.கட்வா ஆகியோர் என குறிப்பிட்டுள்ளது.
இதில் பங்கு பெற்ற நாயுடு மீண்டும் சிறை சென்றபொழுது அவரின் தியாகச் செயல்பற்றி காந்தி எழுதினார். அப்பொழுது அவருடைய மனைவியின் குறைப் பிரசவத்தில் குழந்தை இறந்துவிட்டது. இறந்த குழந்தை அடக்கம் செய்யப்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல், சமுதாயத்துக்கு தான் ஆற்றும் கடமையாக நாயுடு சிறைசென்றார். அவரைவிட அவர் மனைவி மேற்கொண்ட வைராக்கியம் குழந்தையை இழந்த ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்க முடியாத ஒன்று. இதை ஆழ்ந்த துயரத்துடன் எழுதுகிறேன் (இந்தியன் ஒப்பீனியன் ஆசிரியராக இருந்த காந்தி தம்பெயரில் வெளியிட்டார் (தொகுதி 8 - தேதி 1908 ஆகஸ்ட் 3).
ஜோசப் ராயப்பன், டேவிட் ஆண்ட்ரூ, சாமுவல் ஆகியோர் இன்று மூன்று மாத தண்டனை பெற்றனர். எதிர்பார்த்ததை விடப் பல மடங்கு அதிகமாக தமிழ் சமுதாயத்தினர் போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் மட்டும்தான் இப்பொழுது போராட்டங்களில் ஈடுபடத் தயாராக இருக்கின்றனர். மற்ற வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் அடங்கி விட்டார்கள். ராயப்பன் போக்கில் சத்யாகிரகத்தில் பங்கு பெற்றவர்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு வேறு பேர்வழிகள் யாரும் முன்வரவில்லை.
(தொகுப்பு 10 - தேதி 5 பிப்ரவரி, 1910)
சத்யாகிரகிகளுக்கு ஒரு ஆலோசனை: சத்யாகிரக அணிவகுப்பில் தற்பொழுது எஞ்சி இருப்பவர்கள் தமிழ் நண்பர்கள் மட்டும்தான். நான் குஜராத் மொழியில் எழுதும் கட்டுரை அவர்களுக்கு எட்டுமா என்பது தெரியவில்லை. அவர்களிலும் குஜராத் மொழி தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். சிறையில் இருப்பவர்களைச் சந்திக்க நான் விரும்பினேன். ஆனால் சிறையில் இருந்து வெளிவந்தவர்கள் சிறைக்கைதிகளைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. சிறைக்குச் செல்லாதவர்கள் சிலர் கைதிகளைப் பார்த்தார்கள். அவர்கள் மிகவும் உணர்ச்சியுடன் இருப்பதாகத் தெரிகிறது.
தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பற்றி, டி. ஸ்ரீநிவாசன், பாரிஸ்டர் அட் லா, கிரிட்டிக் ஆபீஸ், கோமளீஸ்வரன் பேட்டை, மவுண்ட் ரோடு, மதராஸ் என்பவருக்கு காந்தி எழுதிய கடிதம்: உங்களுடைய 20 ஜனவரி கடிதத்துக்கு உடனடி பதில் எழுத முடியாததற்கு மன்னிக்கவும். இங்குள்ள இந்தியத் தமிழர்கள் பெரும்பாலும் பிள்ளை, முதலியார், நாயுடு, செட்டியார், படையாச்சி என்று இருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவுக்கு வந்த பிறகு சிலர் கிருத்துவர்களாக ஆகியுள்ளனர். பொருளாதாரத்தில் அவர்கள் சற்று முன்னேறியவர்கள். இது அவர்களுடைய நாட்டுப்பற்றைக் குறைத்துவிடவில்லை.
நமது போராட்டம் நிச்சயமாக வெற்றியை அடையும் காலம் வரும். அதில் எனக்கு எந்த ஐயப்பாடும் கிடையாது. வெற்றி பெறுவதை தமிழர்களின் விவரிக்க முடியாத வீரமும், மன திடமும் துரிதப்படுத்துகின்றன. தென்னாப்பிரிக்காவில் அடியெடுத்து வைத்த காலத்திலிருந்து ஏதோ ஒரு வகையில் அவர்கள் பக்கம் நான் சென்றேன். ஆனால் யாரும் கனவு காண முடியாதபடி அவர்களுடைய தீவிரமும், நாட்டின் பிரச்னைக்காக பெரிய அளவில் ஈடுபடும் தியாக சக்தியும் இருந்தன. மேலும் நீங்கள் கடிதம் எழுதினால் நான் பதில் எழுதுகிறேன். இங்ஙனம் எம்.கே.காந்தி, (தொகுப்பு 10 - தேதி 1910 மார்ச் 24).
தொபிசாமி, செல்லையா, டேவிட் சாலமன், முனுசாமி செல்லன், முனுசாமி பால், ஜான் எட்வர்ட், ஆகியவர்கள் தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கோவிந்தசாமி நாராயண் பிள்ளை, கணபதி நாராயண் பிள்ளை, எல்லாரி முனுசாமி, மதுரை முத்து, முனுசாமி, சின்னசாமி, கோவிந்தசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் தனிப்பட்டு தமது வேலை, சம்பளம் ஆகியவற்றை இழந்து, அரசாங்கம் தந்த கட்டாயக் குடியுரிமை ஏடுகளை எரித்தவர்கள். அவர்கள் எல்லோரும் தமிழர்கள். எத்தகைய அச்சமும் திகைப்பும் இல்லாமல் அவர்கள் போராட்டங்களில் கலந்து கொண்டனர். இவ்வாறு தமிழ் சமுதாயத்தினர் செய்யும் தியாகத்துக்குத் தக்க இடம் உலகளாவிய வரலாற்றில் இடம் பெறும் (தொகுப்பு 10 - தேதி 1910 ஏப்ரல் 4).
ரஸ்கின், தோரியோ கருதிய ஒத்துழையாமை இயக்கம்:
வன்முறையைத் தவிர்த்து சாத்வீகமான முறையில் மக்கள் நல் வாழ்வுக்கான முடிவுகளை அடைவதற்கு, காந்தி தமது போராட்ட முறையை வளர்த்துக் கொண்டார். ஆங்கில எழுத்தாளர் ரஸ்கின் ,அமெரிக்க மேதை தோரியோ ஆகியோர் வெளியிட்ட கருத்துகள் காந்தியை மிகவும் கவர்ந்தன.
ஜான் ரஸ்கின் (1819-1900) சமுதாய-பொருளாதார நிலைமைகளில் மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தினார். இயந்திரத் தொழிலின் பெருக்கம், பொருளாதாரத்தில் மக்களின் ஏற்றத் தாழ்வுகளை விரிவுபடுத்தியதுடன், மனிதர்களின் ஒழுக்கமுறைகளை சிதைத்துவிட்டது என்று அவர் கருதியது காந்திக்கு மிகவும் முக்கியமானதாகப் பட்டது.
ஹென்றி டேவிட் தோரியோ (1817-62) முன்வைத்த கோட்பாடு, அரசாங்கம் செய்யும் அநீதிகளைப் போக்க மக்களின் ஒத்துழையாமை இயக்கம் மிகவும் தேவையான ஒன்று. அரசாங்கத்தின் உள்நின்று சீர்திருத்தங்களைச் செய்ய முயல்வது பயன்தராது. அமெரிக்காவில் இருந்த அடிமைத்தனத்தைக் கண்டித்து வரி செலுத்த மறுத்து தோரியோ ஒரு நாள் சிறைவாசத்தை ஏற்றுக்கொண்டார். தோரியோவின் ஒத்துழையாமை இயக்கம் என்ற ஏற்பாடும் வரிசெலுத்த மறுத்து சிறைவாசம் மேற்கொண்டதும் காந்தியாரின் சத்யாகிரகப் போராட்டங்களில் இடம் பெற்றன.
டால்ஸ்டாய் அறிமுகப்படுத்திய திருக்குறள்:
லியோ டால்ஸ்டாய் (1828-1910) ருஷியாவின் பிரபல எழுத்தாளர்.
அவர் எழுதிய சிறுகதைகளும், தத்துவங்கள் நிரம்பிய கட்டுரைகளும் காந்தியின் கவனத்தை ஈர்த்தன. 1990 செப்டெம்பர் மாதத்தில் லண்டனில் வெளிவந்த இலஸ்ட்ரேட்டட் நியூஸ் வீக்லி என்ற பத்திரிகையில் டால்ஸ்டாய் எழுதிய இந்துவுக்கு ஒரு கடிதம் என்ற நீண்ட கட்டுரை காந்தியார் கவனத்துக்கு வந்தது.
டால்ஸ்டாய் அந்தக் கட்டுரையில் எழுதினார்: ஒரு வியாபாரக் குழு 20 கோடி மக்கள் உள்ள ஒரு நாட்டை அடிமைப்படுத்தி விட்டது. என்ன நடந்தது என்றால், 30,000 பேர் பலசாலிகளாக இல்லை, எலும்பும் தோலுமாக இருந்தவர்கள் 20 கோடி மக்களை அடக்கிவிட்டார்கள் என்றால், அது இங்கிலீஷ்காரர்களின் சாமர்த்தியமல்ல; இந்தியர்கள் தம்மையே அடிமையாக்கிக்கொண்ட நிலைமைதான்.
பிறகு டால்ஸ்டாய்க்கு காந்தியார் கடிதம் எழுதி அவரின் அனுமதியைப் பெற்று கட்டுரையின் மொழிபெயர்ப்பை வெளியிட்டார். அதிலிருந்து டால்ஸ்டாயுடன் காந்தி கடிதங்கள் மூலம் அவரின் கருத்துகளை அறிந்து கொண்டார். ஒரு வன்முறையை எதிர்த்து நிற்க மற்றொரு வகை வன்முறையை மேற்கொள்ளாமல் அமைதியான வகையில் செயல்படலாம் என்ற கோட்பாடு எப்படி டால்ஸ்டாய்க்கு வந்தது என்று காந்தி வினவிய பொழுது, டால்ஸ்டாய் பதிலளித்தார், "நான் திருக்குறளின் மொழிபெயர்ப்பை படித்தபொழுது வள்ளுவர் எழுதிய இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தில் உள்ள இன்னா செய்தாரை ஒறுத்தல் என்ற குறள் தந்த உணர்வுதான்' என்று பதில் அனுப்பினாராம்.
அந்தக் குறளின் முழு வடிவம்
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
இதன் பொருள் "தனக்குத் துன்பம் கொடுத்தவரைத் தண்டிக்கும் முறையாவது, அவர் வெட்கப்படும்படியான அளவுக்கு நல்ல நன்மைகளைச் செய்து அவர் செய்த தீமையையும் தான் செய்த நன்மைகளையும் ஒருங்கே மறந்துவிடுதலாகும்'.
இதுபற்றி மகாத்மா காந்தி அவர்களே வெளிப்படையாகக் கூறினார். திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை அதன் மொழியிலேயே படிக்கவேண்டும் என்பதுதான் தமிழ்மொழியை நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததற்குக் காரணம். அந்த நூலைப்போல் ஒழுக்க நெறிமுறைகளை மக்களுக்கு ஊட்டும் அறிவுக் களஞ்சியம் வெறெதுவும் இருக்கமுடியாது.
தென்னாப்பிரிக்காவில் காந்தியார் வழிநின்று தமிழர்கள் அவருடைய போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழ்ப்பெரும் புலவர் வள்ளுவர் வகுத்த வழியிலேயே காந்தியார் தமது போராட்டங்களை நடத்தினார்.
இன்று மகாத்மா காந்தி பிறந்தநாள்.