நமது இந்திய ரூபாய் நோட்டுக்கள் அவசரத்திற்கும், ஆடம்பரத்திற்கும் உதவும் பேப்பராக பயன்படுத்தப்படுகின்றன.
படித்தவர்கள் மட்டுமல்ல, படிக்காதவர்களும் ரூபாய் நோட்டுக்களை மதிப்பதே இல்லை. அவரசத் தேவைக்கு அதில் தொலைபேசி எண்களை எழுதுவதற்கும், குறிப்புகளை எழுதுவதற்கும், ஒரு கட்டில் எத்தனை நோட்டுகள் இருக்கின்றன என்று எழுதுவதற்கும் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்துகின்றனர்.
அதோடு மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்களுக்கும் கோயில்களில் கடவுளுக்கும், ரூபாய் நோட்டு மாலைகளை அணிவிக்கின்றனர். ரூபாய் நோட்டுக்கான மதிப்பு என்ன என்பதை அறிந்திருந்தும் அதனை கண்டு கொள்வதில்லை. இதில் மிகவும் மோசமானது என்னவெனில் சிலர் தங்களுடைய பெயர்களை அதில் எழுதுகின்றனர்.
ரூபாய் நோட்டுகளில் எழுதினால் அந்த நோட்டு செல்லாது என்று ஏற்கெனவே ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த போதிலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ரூபாய் நோட்டுகளில் எழுதுகிறவர்கள் எழுதிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருந்தாலும், வெளிநாடுகளின் சதியாலும், தீவிரவாதிகளாலும் இந்தியாவில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன. கள்ள நோட்டு புழக்கத்தால் இந்தியப் பொருளாதாரம் சீர்குலையும். பல்வேறு தீய சக்திகளால் நம் நாடு பல வழிகளிலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில் நம்முடைய நாட்டு மக்களே நம் நாட்டு ரூபாய் நோட்டுக்களுக்கு அவமரியாதை செய்வது வருந்தத்தக்கது.
பணத்தை சம்பாதிக்க ஒவ்வொருவரும் எவ்வாறு கஷ்டப்படுகிறோம், உழைக்கிறோம் என்பது அனைவரும் அறிந்ததே. சில நேரங்களில் பலர் தங்களுடைய மானம், மரியாதையை இழந்து கூட அந்த பணத்தை சம்பாதிக்கின்றனர். அவ்வாறு மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ரூபாய் நோட்டுக்கு மரியாதை கொடுப்பதில்லை என்பது மிகவும் வருத்தமான செயலாகும்.
ரூபாய் நோட்டுக்களை மக்கள் பயன்படுத்தும் முறையில் ரிசர்வ் வங்கி அறிவித்த ஒரு செய்தி இணைய தளத்தில் வெளியாகியிருந்தது. இந்திய இறையாண்மையின் சின்னமாக விளங்கும் ரூபாய் நோட்டுக்களை அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மாலையாக அணிவித்து அவமரியாதை செய்யாதீர்கள் என்று அந்த செய்தியில் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. தேர்தல் கூட்டங்களுக்கு வரும் கட்சித் தலைவர்களுக்கு, தேர்தல் நிதியை மாலையாகக் கட்டி அணிவித்து, கட்சித் தலைவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவது தொண்டர்களின் வழக்கம்.
இதனை கண்டிக்கும் வகையில், நாட்டு மக்களுக்கு ரிசர்வ் வங்கி சார்பில் அந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், தலைவர்களுக்கும், கடவுளுக்கும் ரூபாய் நோட்டுக்களை மாலையாக கட்டி அணிவிப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்திய இறையாண்மையின் சின்னமாக விளங்கும் ரூபாய் நோட்டுக்களை மக்கள் மதிக்க வேண்டும். அதனை மாலையாகக் கட்டி அவமதிக்கக் கூடாது. ரிசர்வ் வங்கியின் இந்த வருத்தத்தை எவரும் ஒரு பொருட்டாக கொள்ளப் போவதில்லை.
ஆனாலும் இது நடைமுறைக்கு சாத்தியமா என்று பார்த்தால் அது சந்தேகமே. அரசாங்க சட்டங்களையே மக்கள் மதிப்பதில்லை. அறிவிப்புகளையும், கோரிக்கைகளையும் எப்படி மதிப்பார்கள்?
முதலில் ரூபாய் நோட்டுக்களை மக்கள் மதிக்க செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பிறகு அதனை நடைமுறைபடுத்த சட்டங்களை கடுமையாக்க வேண்டும்.
ரூபாய் நோட்டுகளில் எழுதியிருந்தால் அவை கண்டிப்பாக செல்லாது. அது கள்ள நோட்டு போன்றது என்று ரிசர்வ் வங்கி அறிவித்து அதனை முழுமையாக நடைமுறைபடுத்த வேண்டும். அதே போல ரூபாய் நோட்டுக்களை மாலையாக கட்டி போட்டால் அதனை பறிமுதல் செய்யவும் வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு சட்டங்களை கடுமையாக்கினால் மக்களும் ரூபாய் நோட்டை மதிப்பார்கள். நேர் வழியில் பயன்படுத்துவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.