கட்டுரைகள்

நட்பு என்னும் தேசம்

நெஞ்சத்து அகநக நட்பது நட்பு' என்றும், "அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு' என்றும், "இடுக்கண் களைவதாம் நட்பு' என்றும், "கொட்புன்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை' என்றும் விதவிதமாக நட்பைப் பற்றி விவரிக்கிறார் வள்ளுவர்.

பிரபா ஸ்ரீதேவன்

நெஞ்சத்து அகநக நட்பது நட்பு' என்றும், "அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு' என்றும், "இடுக்கண் களைவதாம் நட்பு' என்றும், "கொட்புன்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை' என்றும் விதவிதமாக நட்பைப் பற்றி விவரிக்கிறார் வள்ளுவர். நட்பின் சுகமே நம் இதயத்தில் பிறக்கும் எண்ணங்களை எந்தவித தடையுமில்லாமல் பகிர்ந்து கொள்ள ஒரு இடத்தை நமக்கு சிருஷ்டி செய்து தருவதில்தான் உள்ளது.

நம் கோபங்களை, தாபங்களை, எதிர்பார்ப்புகளை, ஏமாற்றங்களை, அறிவுரைகளை, பிதற்றல்களை - எல்லாவற்றையும் ஒப்புதல் வாக்குமூலம்போல அங்கே கொட்டிவிடலாம். நம் நண்பர் நம்மை அதை வைத்து எடை போட மாட்டார். ஏதோ இன்று இவள் மனநிலை இது என்று அவர் புரிந்துகொள்வார். உண்மையான நட்பென்பது இந்த சுகம்தான். அங்கு நாம் பசப்ப வேண்டாம், வேடம் போடவேண்டாம், இல்லாததைச் சொல்ல வேண்டாம். அங்கு நாம் நாமாக இருக்கலாம்.

இறைவன் தன்னுடைய பிரதிநிதியாக இவ்வுலகத்தில் தாயை அனுப்புகிறான் என்கிறார்கள். அதை மறுக்கவில்லை. ஆனால் நிச்சயமாக நல்ல நண்பர்களும் அவருடைய பிரதிநிதிகள்தான். இதனால்தான் "தூக்குதூக்கி'யில் வரும் ஆறு வசனங்களில் ஒன்று "உயிர் காப்பான் தோழன்'. இங்கு சற்று மாற்றுப் பாதையில் செல்வோம்.

அதே படத்தில் "கொலையும் செய்வாள் பத்தினி' என்று வரும். அதற்கு ஒரு சிறு உரை எழுத விரும்புகிறேன். கணவன் கெட்டவன் என்றால் அவனை கொலையும் செய்வாள், "அந்த நாள்' படத்தில் வரும் நாயகி போல. அவன் நல்லவன் என்றால் அவனை காக்கும் பொருட்டு கொலையும் செய்வாள். இதுதான் உண்மையான பொருள். வேறு எதையும் ஒப்புக்கொள்ள இயலாது. நிற்க. நாம் வண்டியைத் திருப்பி நட்பின் பாதைக்கு செல்வோம்.

எனக்கு மிகவும் பிடித்த நட்பு - என் மனதை கவர்ந்த நட்பு என்று கூட கூறலாம் - எது என்றால் அவ்வை - அதியமான் நட்புதான். அவ்வையின் அறிவுரையை அதியமான் நம்பினான், நாடினான். இந்த நட்பில் அன்பு இருந்தது; பரஸ்பர மதிப்பும் இருந்தது; அவரவர் இயல்பாக இருக்கும் எளிமையும் இருந்தது. இதற்கு மேல் ஒரு நட்பு என்ன கொடுக்க முடியும்?

இன்றும் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு போராட்டம் நடக்கிறது. ஆனால் அன்றே அவ்வை என்ற பெண்மணி சுதந்திரமாக எங்கும் சென்றாள். அவ்வை என்று பலர் இருந்தார்கள் என்ற சர்ச்சை எழுப்பினால், மேலே கூறியதை "பெண்மணிகள்' என்று படிக்கவும்.

அரசர்கள் அவரை சமமாக, ஏன் தம்மை விட உயர்வாகவே மதித்தார்கள். அவ்வை - அதியமான் நட்பு, பாலின சாயத்தில் தோய்ந்ததாகத் தெரியவில்லை. இந்த நட்பின் சிறப்பு அதுதான். எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு.

அன்று ஒரு கல்லூரியில் மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. "நீங்கள் ஆண்களும் பெண்களும் நல்ல நண்பர்களாக இருக்க முடியும் என்று நிரூபியுங்கள்' என்று அந்த இளம் மாணவ மாணவியரிடம் கூறினேன். இளைஞர்கள் இதுபோல நல்ல நட்பை வளர்க்கக் கற்க வேண்டும். அது இரு சாராருக்கும் நன்மை தரும்.

ஒரு பொருளை, ஒரு சம்பவத்தை, ஒரு மனிதரை, ஆணும் பெண்ணும் நோக்கும் விதமே வேறு. ஒரு நண்பர் வீட்டிற்கு கணவன் மனைவி விருந்திற்கு சென்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். வீடு திரும்பும்போது நடைபெறும் உரையாடல்:-

மனைவி: "இரண்டு பேருக்கும் சண்டை போல இருக்கு'

கணவன்: "இல்லயே, நல்லாதானே இருந்தார்கள்?'

மனைவி: "அந்த இனிப்பு கொண்டுவரும் பொழுது தட்டை வச்சதை பார்க்கலே?' அவரும் பார்த்தார், ஆனால் தட்டைப் பார்த்தார். அதிலிருந்த இனிப்பைப் பார்த்தார். வேறெதையும் அவர் பார்க்கவில்லை. சொல்லில்லா மொழி (ய்ர்ய்-ஸ்ங்ழ்க்ஷஹப் ஸ்ரீர்ம்ம்ன்ய்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்) பெண்களுக்குதான் புரியும். பேச்சினால் நாம் தெரிவிப்பது 35% என்றால், பேசாமல் நாம் தெரிவிப்பது 65% ஆகும்.

இதுபோல பல வேற்றுமைகள் ஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் உள்ளது. ராகினி வர்மா என்ற பென்சில்வெனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் இதைப்பற்றி ஒரு ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளார். விஞ்ஞான ரீதியாக இது ஒப்புக்கொள்ளப்படுகிறது என்று தெரிகிறது.

ஒருவர் உயர்வு மற்றவர் தாழ்வு என்று நான் சொல்லுகிறேன் என்று எண்ண வேண்டாம். இருவரும் சமம் ஆனால் வேறு. ஆகையால் ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாக இருந்தால் அந்த மாற்று கண்ணோட்டத்தின் பயனை இருவரும் அடையலாம். பஞ்சு - நெருப்பு உவமை எனக்கும் தெரியும். ஏன் இரண்டும் தெளிந்த நீரோடையாக அருகருகே சலசலக்கக் கூடாதா?

இன்னொரு நட்பைப் பற்றிய கதை. மகாபாரதக் கதை. கர்ணனும் துரியோதனனும் உயிர் நண்பர்கள். ஒரு நாள் கர்ணனும் துரியோதனன் மனைவி பானுமதியும் அவள் அந்தப்புரத்தில் தாயம் ஆடுகிறார்கள். கர்ணன் வெல்லும் தறுவாயில், பானுமதி சரேலென்று எழுந்து நிற்கிறாள், பின்னால் அவள் கணவன் வருவதால்.

கர்ணன் அவள் தோற்க விரும்பாமல் ஓடுகிறாளென்றெண்ணி அவள் இடையிலிருந்த மேகலையை பிடித்துத் தடுக்கிறான். மேகலை அறுந்து முத்துக்கள் சிதறி ஓடுகின்றன. பிறகே தன் நண்பன் வருவதைப் பார்த்து அவனும் நிற்கிறான். நண்பனோ துளியும் பதறாமல் "எடுக்கவோ கோர்க்கவோ?' என்று கேட்கிறான். இதுதான் கதை.

அதில் எப்போதும் மதிப்பெண்கள் பெறுவது துரியோதனன்தான். மற்றவர்கள் இருவரும் சிறிதும் குறைந்தவர்கள் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. எவ்வளவு முதிர்ச்சியும், தெளிவும், கொச்சைத்தனமின்மையும், அன்பு கலந்த நட்பும் அவர்களிடையே இருந்தால் பானுமதி கர்ணனுடன் தன் அந்தப்புரத்தில் தாயம் விளையாடியிருப்பாள்? கர்ணன் அவள் மேகலையை பிடித்திழுத்திருப்பான்? அங்கு பஞ்சும் இல்லை நெருப்பும் இல்லை. இரு தூய தெளிந்த நீரோடைகளே இருந்தன. துரியோதனனுக்கும் அது தெரிந்தது.

ஆண்களும் பெண்களும் சேர்ந்து படித்து, பணி புரியும் இந்நாள்களில் இருவரும் நட்போடு பழக பெரியவர்கள்தான் சொல்லித்தர வேண்டும். ஆண் - பெண் நட்பை கொச்சைப்படுத்தி, சந்தேக விதையை நாம் தூவினால், பின்னர் விளைவது எட்டியும் விஷமுமாகத்தான் இருக்கும்.

இந்த தூய சினேகத்தை ஊடகங்களும் தயை கூர்ந்து முன் வைத்தால் சமூகத்திற்கு நன்மை விளையும். அவள் என் தோழி, அவன் என் தோழன் என்று நம் இளைய தலைமுறை நினைத்தால் பாலியல் வன்முறை பெருகாது. நட்புக்குத்தான் இனம், பால், சாதி, வயது எல்லாவற்றையும் தாண்டும் வலிமை உண்டு.

"சிவகாமியின் சபத'த்தில் மாமல்லனும் பரஞ்சோதியும் நல்ல நண்பர்கள். ஒருவர் மன்னர், இன்னொருவர் அவரின் படைத்தலைவர். இரண்டாமவர் சில நேரங்களில் மன்னரின் மனசாட்சி போலகூடத் தோன்றும். நடந்த போரும், அதனால் நடந்த பேரிழப்புகளைப் பற்றியும் பரஞ்சோதி என்ன நினைத்தார் என்பதை அவர் சிறுத்தொண்டர் ஆனதிலிருந்து நாம் அறியலாம்.

இன்னொரு அதிசய நட்பு, ரவீந்திரநாத் தாகூரின் காபுலிவாலாவும் சிறுமி மினியும். இது என்ன ஒரு மாயை! எந்தவித சமதளமும் இல்லாத இரு அன்புள்ளங்களின் சந்திப்பு. மினி வளர்ந்த பின் அந்த நட்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. ஆனால் என்றும் அதன் சிறப்பு குறையாது.

"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே' என்ற பாட்டும் காட்சியும் நட்பின் பெருமைக்கு ஒரு உரைகல். சிறு வயதில் நண்பர்கள். இன்றோ ஒருவர் முதலாளி மற்றவர் அவருடைய வண்டி ஓட்டுனர். பல சுவர்கள் இருவருக்கிடையே.

அவர்கள் ஒரு நாள் எங்கோ வெளியே செல்வார்கள். வண்டியை விட்டு இறங்கி இருவரும் தங்கள் தொப்பிகளை வானில் விட்டெறிவார்கள். அத்துடன் ஒரு நொடியில் சமூகத்தின் சுவர்களும் மறையும். "இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே' சிரிப்பும் அழுகையும் கலந்த ஒரு கவிதை அது. இன்றும் தமிழ்த் திரையுலகம் நட்பின் மகிமையை மதிக்கிறது என்பதற்கு ஒரு அத்தாட்சி போதும்... நண்பேண்டா!

என் பள்ளி நாள்களில் என் நண்பர்களுடன் வகுப்பில் பேசிப்பேசி, ஆசிரியர்களை வெறுப்பேற்றி, மதிய உணவு நேரத்தில் பேசி, பின் வீட்டிற்கு நடந்து வருகையில் பேசி.. என்ன தான் பேசினோமோ. ஆனால் அந்த நாள் ஞாபகம் இனிக்கிறது. எங்கள் ஒவ்வொருவருக்கும் ரகசிய பெயர் சூட்டி மகிழ்ந்தோம். ஏன் என்று இன்று யோசித்தால் நினைவில்லை.

அது ஒரு களங்கமில்லா நிலாக்காலம். இடைவிடாமல் பேசியதால் என்னை ஆசிரியர் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த அனுபவமும் உண்டு. அந்த சினேகிதியுடன் இன்றும் அந்த நினைவை பகிர்ந்து சுவைக்க முடிகிறது.

நம் வாழ்க்கை என்பது எந்தவித உத்தரவாதத்துடனும் வருவதில்லை. சரிவோம், விழுவோம், காயப்படுவோம். நல்ல நண்பர்கள் இருந்தால் இந்த இடர்களை எளிதாகத் தாங்க முடியும். ஆனால் நட்பிலேயே பல தரங்கள் உள்ளன. சில வாசல் வரை மட்டுமே, சில வெளி பிராகாரம் வரை, சில உள் பிராகாரம் வரை, சில கருவறை வரை.

சிலர் பள்ளி நண்பர்கள், சிலர் பணியிட நண்பர்கள், சிலர் பக்கத்து வீட்டு நண்பர்கள். சிலர் சில காலம் நண்பர்கள், சிலர் ஆயுட்காலம். சிலருடன் கடற்கரை, சிலருடன் திரைப்படம், சிலருடன் எண்ணப்பரிமாற்றம், சிலரிடம் உணர்ச்சி சமர்ப்பணம். ஆனால் எல்லோரும் நண்பர்களே.

நட்பு சில நேரங்களில் தடம் புரண்டும் போகும். ரோம் நாட்டு ஜூலியஸ் சீசர் - புரூட்டஸ் போல. அப்பொழுது கொலையும் செய்வது பத்தினி அல்ல தோழன்.

இந்நாட்டு இதிகாசத்திலும் துருபத நாட்டு அரசனும் துரோணரும் சிறு வயதில் நெருங்கிய நண்பர்களாக இருந்து, பின் அந்த நட்பு பழிக்குப்பழியிலும் கொல்வேன் என்ற சபதத்திலும் முடிகிறது. இதுபோல நெருங்கிய நட்பு, துவேஷத்தில் முடிவதை இக்காலத்திலும் பார்த்துள்ளோம்.

நட்பை பத்திரமாக, மணலை உள்ளங்கையில் ஏந்துவது போல காக்கவேண்டும். இறுக்கினால் மணல் விரல்களின் இடுக்கு வழியாக உதிர்வது போல நட்பும் உதிரும்.

என் கணவர் ஸ்ரீதேவனுக்கு எஸ்.என்.ஏ.அஜீஸ் என்று ஒரு நண்பர். என்னைவிட ஸ்ரீதேவனிடம் ஒருவருக்கு அன்பிருக்கும் என்றால் அது அஜீஸ்தான் என்று அவர் அம்மாவே என்னிடம் கூறியிருக்கிறார். இளம் வயதிலேயே அஜீஸ் காலமாகிவிட்டார். ஆகையால் நான் சந்தித்ததில்லை. கல்லூரி விடுமுறை நாள்களில்கூட தன் ஊருக்கு போகாமல் மயிலாடுதுறையில் எங்கள் வீட்டிலேயே இருப்பாராம். அப்படி ஒரு நட்பு.

பயங்கர விபத்து ஏற்பட்டு அஜீஸ் பிழைப்பாரா என்ற நிலைமையில் இருக்கிறார். அப்போது டாக்டர் யாருக்கு செய்தி சொல்லவேண்டும் என்று அவரிடம் கேட்டபோது ஸ்ரீதேவனுக்கு சொல்லுங்கள் என்றாராம் அஜீஸ்.

நட்பு ரத்த பந்தம் போல இல்லை. திருமண பந்தம் போலுமில்லை. அது ஒரு சுதந்திரக் காற்று. அந்தக் காற்று நறுமணத்தையும் இதத்தையும் நமக்கு அள்ளிக் கொடுக்கும். அஜீஸ் போலவே ஃபாதர் ஜார்ஜ் என்று ஒரு நண்பர். அவர் எந்த ஊரில், எந்த நாட்டில் இருந்தாலும் நான் நலமாக இருக்கிறேனா என்று அவர் நண்பர் சென்றுவிட்ட பின்னும் இன்று வரை விசாரிக்கும் ஒரு ஆயுட்கால அன்பு.

"என் தங்கையின் நலனுக்காக ஆண்டவனிடம் இன்று பிரார்த்தித்தேன்' என்பார். இது ஒரு கடன் சுமையா? இல்லை. இது வாழ்க்கை தந்த வரம். புன்னகையுடன் அனுபவித்துவிட வேண்டியதுதான்.

நெருங்கிப் பழகி தினம் தினம் பார்க்க வேண்டும் என்று கட்டாயமில்லை. "உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்' என்று தான் சொல்லிவிட்டாரே.

ஜலாலுத்தீன் ரூமி என்று ஒரு பெர்ஷிய கவி. 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஸþஃபி சிந்தனையாளர். அவரும் இதே கருத்தை எதிரொலிக்கிறார். "சொற்கள் எல்லாம் ஒரு மேற்பூச்சுதான். ஆன்மாவின் பந்தம் ஒன்றே இருவரைக் கட்டுகிறது, சொற்கள் அல்ல' என்று.

தமிழில் இல்லாததா என்று கேட்கலாம். ஒரு மொழியைக் காதலிப்பதால் பிற மொழிகளுடன் நட்பு வைக்கத் தடையா?

நட்பு செய்வோம். எல்லோருடனும் நட்பு பயிரிடுவோம். அதே பாட்டில் வரும் "பாசமென்றும் நேசமென்றும் வீடு என்றும் மனைவி என்றும் நூறு சொந்தம் வந்த பின்னும் தேடுகின்ற அமைதி எங்கே' என்று.

இரு நண்பர்கள் இருப்பதால் "தேடுகின்ற அமைதி இங்கே' என்று பாடியிருக்கலாம். அதுதான் நட்பு என்னும் தேசம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 வாக்காளா்கள் நீக்கம்

ஓமந்தூராா் மருத்துவமனையில் 20,000 இதய இடையீட்டு சிகிச்சை: மருத்துவக் குழுவினருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டு

முதல்வா் ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில் ஒரு லட்சம் போ் நீக்கம்

நீதி, துணிவுக்கான சமகால சான்று சென்னை உயா்நீதிமன்றம்: நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்

தடை விதிக்கப்பட்ட நாய்களை வளா்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT