கட்டுரைகள்

மரபுகளை உருவாக்குவோம்!

"மக்களுக்காக, மக்களால், மக்களே ஆட்சிபுரிவது தான் ஜனநாயகம்' என்றார் ஆபிரஹாம் லிங்கன். நல்ல நடைமுறை ஜனநாயகத்திற்கு இரண்டு

முனைவா் அ. பிச்சை

"மக்களுக்காக, மக்களால், மக்களே ஆட்சிபுரிவது தான் ஜனநாயகம்' என்றார் ஆபிரஹாம் லிங்கன். நல்ல நடைமுறை ஜனநாயகத்திற்கு இரண்டு அம்சங்கள் இன்றியமையாதவை. முதலாவது, லட்சியப் பிடிப்புள்ள ஆளும் கட்சி. இரண்டாவது, துணிச்சலும், துடிப்பும் மிக்க எதிர்க்கட்சி.

"ஓடும் குதிரை ஆளும் கட்சி. அதன் ஓட்டத்தை முறைப்படுத்தும் கடிவாளம் எதிர்க்கட்சி' என்றார் அண்ணா.

ஒரு கட்சி ஜனநாயகம் தானாகவே சர்வாதிகாரம் ஆகிவிடும். எதிர்ப்பே இல்லை என்றால் என்ன ஆகும்? ஆக்சிலரேட்டர் மட்டுமே வேலை செய்து, பிரேக் பிடிக்கவில்லை என்றால், ஏற்படுவது ஆக்ஸிடெண்ட்தானே எனச் சொன்னவர் ராஜாஜி.

இன்று ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ள பா.ஜ.கட்சி மக்களவைத் தேர்தலில் பெற்ற இடங்கள் 282. அது தலைமை தாங்கக்கூடிய தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றுள்ள மொத்த இடங்களோ 332. அத்துடன் பல மாநிலக் கட்சிகளும், சுயேச்சைகளும் கூட, ஆளும் கூட்டணிக்கு ஆதரவுக் கட்சிகள் வரிசையில் வருபவைதான். இந்நிலையில், இன்று ஆளும் கட்சி, அதன் கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் அசுர பலத்துடன் நிற்கிறது.

ஆனால், எதிர்க்கட்சி வரிசையில் நிற்பவை காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகளே. அவைகளின் மொத்த பலம் மிகவும் குறைவானதே. ஆளும் கட்சி வலுவாக உள்ளது. எதிர்க்கட்சியோ வலுவிழந்து, நிற்கிறது.

இந்தச் சூழலில், தனக்கு 44 இடங்களும், தன் கூட்டணிக் கட்சிகளுக்கு 16 இடங்களும் ஆக மொத்தம் 60 இடங்கள் கிடைத்திருப்பதால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தங்களுக்கே தர வேண்டும் என்பது காங்கிரஸின் வாதம்.

ஆனால், ஆளும் கட்சியினரோ, மொத்த இடங்கள் 543-இல் 10 சதவீதத்தை எட்டாததால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் பெறத் தகுதியில்லை என்ற சட்ட ரீதியான பதில் தருகிறார்கள்.

காங்கிரஸ் பெற்ற இடங்கள் 44 என்பது 8 சதவீதமாக இருக்கலாம். ஆனால், அக்கட்சி பெற்ற வாக்குகள் 19.4 சதவீதம் ஆகும். அதே சமயம், பா.ஜ.க. பெற்ற வாக்குகள் 31.1 சதவீதமே. 31.1 சதவீத வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க ஆளும் கட்சி ஆகமுடியும் என்றால், 19.4 சதவீத வாக்குகள் பெற்ற காங்கிரஸூக்கு எதிர்க்கட்சி என்ற தகுதியைக் கூடத் தரமறுப்பது சரியா?

மக்களவையில் ஒரு கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுக்கலாமா கூடாதா என்பது மக்களவை தொடர்பான விஷயம்.

ஆனால், காங்கிரஸூக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி அளிக்கலாமா கூடாதா என்ற பிரச்னை தொடர்பாக மக்களவைத் தலைவர், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலிடம் கருத்துக் கேட்டிருப்பது ஒரு விநோதமான செயல்.

சட்ட விதிகளின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். அல்லது மரபுகள் அல்லது முன் உதாரணங்களின் அடிப்படையில் மக்களவைத் தலைவரே முடிவு எடுக்க வேண்டிய பிரச்னை இது.

10 சதவீத உறுப்பினர்களை, அதாவது 55 உறுப்பினர்களைப் பெறாத காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி பெற, சட்டப்படி தகுதி இல்லை என்கிறார்கள். அது சட்டப்படி சரியாக இருக்கலாம்.

10 சதவீத இடங்களைப் பெறாவிட்டாலும், அதிக இடங்களைப் பெற்றுள்ள ஒரு கட்சிக்கு, அல்லது ஆளும் கட்சிக்கு அடுத்து அதிக சதவீத வாக்குகள் பெற்ற கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கொடுக்கலாம் என்று ஓர் சட்டத் திருத்தம் கொண்டு வரலாமல்லவா?

சட்டச் சிக்கலை சற்றே தள்ளிவைப்போம். முன் உதாரணம் ஏதும் இல்லையே,  இத்தகைய சம்பிரதாயங்கள், மரபுகள் எதனையும் இதுவரை சந்தித்ததில்லையே என்கிறார்கள்.

1947-இல் இந்தியா விடுதலை பெற்றபோது, மகான் காந்தி, தனது நம்பிக்கைக்குரிய தலைவர்கள் பண்டித நேரு, சர்தார் படேல், அபுல்கலாம் ஆசாத், ராஜேந்திர பிரசாத் ஆகியோரை அழைத்துச் சொன்னார்: "சுதந்திரம் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது; காங்கிரஸூக்கு அல்ல. காங்கிரûஸச் சேராத மற்றவர்களையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளுங்கள்' என்று.

ஆகவேதான், வாழ்நாள் முழுவதும் காங்கிரûஸ எதிர்த்த ஆர். கே. சண்முகம் செட்டி, அண்ணல் பி.ஆர். அம்பேத்கர், இந்து மகாசபையைச் சார்ந்த சியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரையும் அமைச்சர்களாக்க முடிந்தது.

இந்த நல்ல காரியத்தைச் செய்வதற்கு நம் தேசத் தலைவர்கள் முன் உதாரணங்களையா தேடிக் கொண்டிருந்தார்கள். முன்மாதிரிகளைத் தாங்களே உருவாக்கினார்கள்.

நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் பிரதமராக இருந்த காலகட்டத்தில், எந்த எதிர்க்கட்சிக்கும் தலைவர் பதவி என்ற அங்கீகாரம் அளிக்கவில்லையே. இன்று ஏன் இந்தப் புதிய கோரிக்கை என்ற கேள்வியும் எழுகிறது.

அன்று அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி என்ற தகுதி எவருக்கும் அளிக்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், அன்று ஆளும் காங்கிரûஸச் சார்ந்த சில உறுப்பினர்களே - குறிப்பாக பெரோஸ் காந்தி, சந்திரசேகர், மோகன்தாரியா, கிருஷ்ணசாந்த் போன்ற துடிப்பான இளைஞர்கள், மகாவீர் தியாகி போன்ற காங்கிரஸ் எம்.பி.க்களே, எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டிய பணியைச் சிறப்பாகக் செய்தார்கள்.

நாடாளுமன்றத்திற்கு வெளியே வினோபா பாவே, ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற மக்கள் செல்வாக்குப் பெற்ற நாடறிந்த தலைவர்கள், அரசுக்கு ஆலோசனையும் அறிவுரையும் சொல்வதற்கும், தவறு செய்தால் தட்டிக் கேட்பதற்கும் இருந்தார்கள். அப்படி ஆட்சியாளர்கள் மதித்து, ஆலோசனை பெறத் தக்க தேசத் தலைவர்கள் இன்று இல்லையே.

எல்லாவற்றிற்கும் மேலாக, அரசியல் அமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள உயர் பதவிகள், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்கள், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர், சி.பி.ஐ., தேசிய மனித உரிமை ஆணையர், லோக்பால் போன்றவற்றில் தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் குழுவில், பிரதமர், மக்களவைத் தலைவர் அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சரோடு எதிர்கட்சித் தலைவரும் ஓர் உறுப்பினராகச் செயல்பட வேண்டும்.

இந்த அரசியல் அமைப்புச் சட்டப் பணியை நிறைவேற்றுவதற்கும் ஓர் எதிர்க்கட்சித் தலைவர் அவசியமாகிறாரே. அவரது கருத்தைப் பெறாமல், அவர் இல்லாமல் உயர்நிலைக் குழு எடுக்கும் முடிவு அல்லது தேர்வு ஒரு தலைப்பட்சமானதாகவே இருக்கும். அம்முடிவு சர்ச்சையைக் கிளப்பாவிட்டாலும், சந்தேகத்தைக் கிளப்புமே?

மக்களவைச் செயல்பாடு தொடர்பான இந்த முக்கியப் பிரச்னையில், மக்களவைத் தலைவரே முடிவு எடுக்க வேண்டுமே தவிர, அட்டர்னி ஜெனரல் என்ற அரசுப் பிரதிநிதியிடம் ஆலோசனை பெறுவது, தனது அதிகாரத்தை நாடாளுமன்ற சுதந்திரத்தை விட்டுக் கொடுப்பதாக ஆகிவிடுமல்லவா?

அவரது கருத்தை அப்படியே ஏற்கவேண்டும் என்ற கட்டாயமும் மக்களவைத் தலைவருக்கு இல்லை என்றாலும், அரசு வழக்குரைஞரிடம் கருத்துக் கேட்பதே நல்ல மரபு அல்லவே.

மக்களவைத் தலைவர், மக்களவை தலைமைச் செயலரின் ஆலோசனையைப் பெற்று, சுதந்திரமாக முடிவு எடுக்க வேண்டும். 10 சதவீத இடங்களைப் பெறாவிட்டாலும். அதிக இடங்களைப் பெற்றுள்ள கட்சி அல்லது ஆளும் கட்சிக்கு அடுத்து அதிக சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி அளிக்கலாம் என்று மக்களவைத் தலைவர் தீர்ப்புக் கூறிவிட்டால், அதனை எவராலும் கேள்வி கேட்க முடியாது.

அதுவே நல்ல முன் உதாரணம் ஆகிவிடும். அது மக்களவைத் தலைவருக்கும் பெருமை. 10 சதவீத இடங்கள் என்ற சட்ட விதி இருக்குமானால், அதனை நீக்கும் புதிய சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றலாமே!

ஆளும் கட்சியே இம்மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றினால், இதன் பெருமையை அவர்களே எடுத்துக் கொள்ளலாம். பெருந்தன்மைக்குப் பெயர் போனது எங்கள் கட்சி என்ற பெயரையும் தட்டிக்கொள்ளலாமே.

ஆளும் கட்சியினர் செய்யத் தவறினால், எதிர்க்கட்சி வரிசையில் உள்ளவர்களில் ஒருவர், ஒரு தனிநபர் மசோதாவைக் கொண்டுவந்தால், அதனை ஆதரிப்போரே அதிகம் இருப்பர்.  ஆகவே, மசோதா நிச்சயம் நிறைவேறும்.

தீர்க்கப்படாத நிலையில் இப்பிரச்னையை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க முடியாது என்றாலும், ஆலோசனைகள் வழங்கி, அதனை மக்களவை ஏற்றால், மக்களவையின் மாட்சி குறைந்து விடுமே.

எழ இருக்கும் சிக்கல்களை, இலகுவாகத் தீர்த்து, தனக்குத் தானே வழிகாட்டிக் கொள்வது தானே நல்ல நாடாளுமன்ற நடைமுறை? 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT