வென்றால்தான் மக்கள் சேவையா?
நமது நாடு விடுதலை அடைந்த பிறகு நாடாளுமன்றத் தேர்தல்கள், சட்டமன்றத் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் என்று எத்தனையோ தேர்தல்களைச் சந்தித்திருக்கிறது. இனியும் சந்திக்க இருக்கிறது.
நமது நாடு விடுதலை அடைந்த பிறகு நாடாளுமன்றத் தேர்தல்கள், சட்டமன்றத் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் என்று எத்தனையோ தேர்தல்களைச் சந்தித்திருக்கிறது. இனியும் சந்திக்க இருக்கிறது.
ஒரு தொகுதியில் போட்டியிடுகின்ற ஒரு வேட்பாளர், அந்தத் தொகுதியின் உறுப்பினராக மாறுவதற்காக பல்வேறு வகையில் பாடுபடுகிறார். தான் போட்டியிடுகின்ற தொகுதியின் நலன்களுக்கான வாக்குறுதிகளை பகிரங்கமாக மேடைகளில் நின்று உரத்த குரலில் முழங்கும் அவர், தனக்கு வாக்களிக்கும் வாக்காளர்களுக்கான அன்பளிப்புகளையும் தணிந்த குரலில் தனிவழியில் அனுப்பி வைக்கிறார்.
தொகுதி மக்களின் நன்மைகளுக்காகப் பாடுபடுகின்ற சேவை இயல்பைக் கொண்ட வேட்பாளர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்கிற நிலை இப்போது மாறிவிட்டது. மாறாக வெற்றியடைவதற்குரிய அனைத்து வழிகளையும் கண்டறிந்து அத்தனை வழிகளிலும் மிகக்கடுமையாகப் பாடுபட வேண்டும்.
அதிலும் குறிப்பாக வாக்காளர்களையும் வாக்குகளையும் கணக்கிட்டுப் பணம் தரவேண்டும் என்கிற நிலை இப்போது தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இது மிகமிக அபாயகரமான ஒரு போக்காகும்.
நமது ஜனநாயகத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கிற கலாசாரம் தொடங்கிவிட்டது என்றாலும் கூட, அண்மைக்காலத் தேர்தல்களில் அந்தக் கலாசாரம் நெடு வடிவமெடுத்து நீக்கமற நிறைந்து பெருகிக் காணப்படுகிறது,
வாயில் வருகிற வாக்குறுதிகளையெல்லாம் கொடுத்தும், வாக்காளர்களுக்குப் பணத்தைக் கொடுத்தும் மக்கள் சேவையாற்ற வருகிறவர்கள் நிச்சயம் சந்தேகத்திற்குரியவர்களாவர். ஒரு வேட்பாளராக வயல் வரப்புகளிலும், காடு மேடுகளிலும் நடந்து தன்னந்தனியாக இருக்கும் மனிதர்களையெல்லாம் தேடித் தேடிச் சென்று சந்தித்து கும்பிட்டு வாக்கு கேட்பவர்கள், வெற்றி பெற்றபின், மக்களைப் பெருங்கூட்டமாகப் பார்த்தால் மட்டுமே கும்பிட முடியும் என்கிற நிலைக்கு மாறுகிறார்கள்.
ஒரு கட்சியின் தலைவர் மக்களிடம் வாக்குக் கேட்டு ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது, அந்தத் தொகுதியின் வேட்பாளர் கைகூப்பிய வண்ணம் மணிக்கணக்கில் நிற்கிறார் அல்லது நிற்க வைக்கப்படுகிறார். அந்த வேட்பாளர் வெற்றி பெற்று உறுப்பினரானவுடன் எந்த மேடையிலும் அப்படி நிற்பதில்லை.
ஒரு வேட்பாளராகத் தாங்கள் அளித்த வாக்குறுதிகளைக் குறித்து, உறுப்பினர்களாக மாறிய அவர்கள் அலட்டிக் கொள்வதேயில்லை. வாக்களித்த மக்களும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதேயில்லை. தங்களது வாக்குகளுக்கு மட்டுமல்ல, தேர்தலுக்குப் பிறகு வாய் திறக்காமல் இருப்பதற்கும் சேர்த்தே அவர்கள் பணம் வாங்கிவிடுகின்றனர் என்றே எண்ணுகிறார்கள் போலும்.
மேலும் தேர்தல் அரசியலில் ஈடுபடுகின்ற முதன்மையான கட்சிகள் அனைத்தும் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிடுவதை ஒரு கட்டாய வழக்கமாகக் கொண்டுள்ளன. அந்த அறிக்கைகள் எத்தனைப் படிகள் அச்சிடப்பட்டு யார் யாருக்கு விநியோகம் செய்யப்படுகின்றன? ஊடகங்களுக்கு அளிக்கப்படுகின்றன என்றால் ஊடகங்கள் அவ்வறிக்கைகளுக்கு எந்தெந்த வகையில் எதிர்வினைகளைப் புரிகின்றன?
ஒரு தேர்தல் அறிக்கையை முன் வைத்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்து அந்த ஆட்சியை நிறைவு செய்த கட்சியிடம், அவ்வறிக்கையின்படி நிறைவேற்றப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அவ்விசாரணையின் வெள்ளை அறிக்கையை மக்களுக்குத் தெரிவிக்கின்ற அதிகாரம் பெற்ற அமைப்புகள் ஏதேனும் இருக்கின்றனவா?
ஒரு கட்சி தனது தேர்தல் அறிக்கையில் சொல்லாதவற்றையெல்லாம் செய்யும்போது வாக்களித்த, பாதிக்கப்படுகிற மக்கள் என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நமது அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் எழுப்பிக் கொண்டேயிருக்கின்றன.
ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றியடைந்து சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ தேர்ந்தெடுக்கப்படுகிற ஓர் உறுப்பினர், தனது வெற்றிக்குப் பிறகு தன் தொகுதியையும் தொகுதி மக்களையும் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.
வெற்றி பெற்றவர்கள் இப்படி என்றால் தோல்வி அடைந்தவர்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. தோல்விக்குப் பிறகு, தான் போட்டியிட்ட தொகுதியின் பக்கம் தலை வைத்துக்கூட அவர்கள் படுப்பதில்லை.
ஒரு தொகுதியில் லட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்ற, ஒரு சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர்களின் செயல்பாடுகளைப் பற்றிய ஒரு புதிய பார்வை இப்போது தேவைப்படுகிறது. வெற்றி பெற்ற வேட்பாளருக்கு அடுத்த நிலையில் வாக்குகளைப் பெறுகிற ஒரு வேட்பாளர் தொகுதி மக்களின் பெருவாரியான வாக்குகளைப் பெற்ற, ஆனால் வெற்றி வாய்ப்பை இழந்த ஒரு மக்கள் பிரதிநிதிதானே? அந்தத் தொகுதியைப் பொறுத்தவரை அவரையே எதிர்கட்சி உறுப்பினராகக் கருதலாம்.
ஒரு தொகுதியில் வென்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினரின் மக்கள் செல்வாக்கிலும் அதிகாரத்திலும், அவருக்கு அடுத்த நிலையில் நின்று தோற்ற வேட்பாளருக்கும் சரி பாதி பங்கு உண்டு என்பது உறுதி செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் ஒரு தொகுதியில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகம் இருப்பதைப் போலவே அவருக்கு அடுத்த நிலையில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட அளவில் வாக்குகளைப் பெற்றுள்ள எதிர்கட்சி வேட்பாளருக்கும் தொகுதியில் ஓர் அலுவலகம் இருத்தல் நலம்.
வென்றவர்களுக்கு அரசு செய்யும் செலவினங்களில் குறிப்பிட்ட விழுக்காட்டினை தோற்றவருக்கும் ஒதுக்கி அந்தத் தொகுதியில் தொடர்ந்து மக்கள் பணியாற்ற அவரை பணிக்க வேண்டும்.
ஒரு தொகுதியின் உறுப்பினராக வேண்டும் என்பதற்காக குறைந்த கால அவகாசத்தில் நுற்றுக்கணக்கான முறை அத்தொகுதியின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் பயணப்பட்டு வென்ற பலர் சட்டமன்றத்திற்கே போவதில்லை. அவர்கள் அங்கு போகாததற்கான காரணங்களும் மிகவும் அற்பமாக இருக்கின்றன.
எந்த இடத்துக்குப் போகவேண்டும் என்பதற்காக இரவு பகலாக இவர்கள் தொகுதி மக்களின் காதுகளைக் கிழித்து வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்களோ அந்த இடத்துக்கே போகாதபோது தொகுதிக்கு மட்டும் எப்படிப் போவார்கள்?
அரசுகள், தமது ஆட்சிக் காலத்தில் மக்கள் நலச் சாதனைகளாகத் தாம் செய்தவற்றை அடுத்த தேர்தலின்போதோ அல்லது தேவைப்படும்போதோ பட்டியலிடுவதுண்டு. ஆனால் தொகுதிப் பேராளர்கள் எவரும் தன் பதவிக்காலம் முடிவடையும்போது தான் செய்த சாதனைகளைத் தனது தொகுதியின் மக்களுக்குக் கூட்டம் போட்டு விளக்கிச் சொல்லி விடைபெறுவதில்லை.
இந்தச் சூழ்நிலையில்தான் வென்று உறுப்பினர்களானவர்களை விட்டுவிட்டு அவர்களுக்கு அடுத்த நிலையில் வாக்குகளைப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர்களை குறித்த சில சிந்தனைகள்: வெற்றி வாய்ப்பை இழந்த முதன்மை நிலை வேட்பாளர்கள், தங்களுக்கு வாக்களித்த லட்சக்கணக்கான மக்களுக்கு தேர்தலுக்குப் பிறகும் தொகுதிக்குத் திரும்பி வந்து எத்தகைய பணிகளைச் செய்கிறார்கள்? தாங்கள் போட்டியிட்ட தொகுதியில் அவர்களும் ஓர் அலுவலகத்தை (ஐந்து ஆண்டுகளுக்கு) அமைத்துக்கொண்டு மக்களுக்காக ஏன் பாடுபடக்கூடாது?
குறிப்பாக, வேட்பாளர்களாக இருந்தபோது தாங்கள் அளித்த வாக்குறுதிகளையும், தங்களை வென்றவர்கள் அளித்த வாக்குறுதிகளையும் அடிக்கடி மக்களுக்கு நினைவுபடுத்தி, அவை ஈடேறப் பாடுபடுவதுதானே உண்மையான மக்கள் சேவையாக இருக்க முடியும்? மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்தால் மட்டும்தான் அவர்களால் சேவை செய்ய முடியுமா?
எங்களை நீங்கள் உங்களுக்கான சேவையாளர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கோரி அன்னை தெரசாவும், ராமகிருஷ்ண பரமஹம்சரும், டேமியனும், வேரியர் எல்வினும் அவர்களைப் போன்ற நுற்றுக்கணக்கான மக்கள் சேவையாளர்களும் கைகூப்பி வணங்கிக் கொண்டே திறந்த ஜீப்பில் வலம் வந்தார்களா என்ன?
மக்களின் வாக்குகளைக் கொஞ்சம் குறைவாகப் பெற்றவர்கள், தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பாடுபட முடியாதா? விளையாத தனது வயற்காட்டைக்கூட அடிக்கடி போய் எட்டிப் பார்த்து ஒரு சுற்று சுற்றிவிட்டு வரும் விவசாயிகளின் மனோநிலைகூட தோற்ற வேட்பாளர்களுக்கு ஏன் இருப்பதில்லை?
நான் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசின் துணையோடு உங்களுக்கான அனைத்து நன்மைகளையும் செய்வேன். தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் அந்த ஐந்து ஆண்டுகளுக்கும் அலுவலகம் அமைத்து உங்களுடனேயே தங்கி அரசு உள்ளிட்ட அமைப்புகளிடம் வாதாடி போராடி உங்களுக்கான தேவைகளைப் பெற்றுத் தருவேன் என்று எத்தனை வேட்பாளர்களால் உறுதியளிக்க முடியும்?
தோற்றாலும் நான் தொகுதியில் இருந்து கொண்டு பாடுபடுவேன் என்று ஒரு வேட்பாளர் அறிவித்தால் அவரை யாரால் தடுக்க முடியும்? வென்றாலும் தோற்றாலும் தொகுதியில் பத்து ஆண்டுக்காலம் தங்கிப் பணியாற்ற முன்வருவோருக்கே போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் அதாவது சீட் கொடுக்கப்படும் என்று அரசியல் கட்சிகள் ஏன் பகிரங்கமாக அறிவிக்கக் கூடாது? விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் உள்ளிட்டத் தேர்தல் சீர்த்திருத்தங்களோடு இதனையும் யோசிக்கலாமே?