கட்டுரைகள்

அகதிகளல்ல; சகோதரர்கள்!

நம் பாரத மணித் திருநாட்டில் பல்வேறு காலகட்டங்களில் நம்மைச் சுற்றியுள்ள வெவ்வேறு அண்டை நாடுகளிலிருந்தும் பலவிதமான மக்கள் அகதிகளாகவும், ஊடுருவல்காரர்களாகவும் நுழைந்துள்ளனர்.

அா்ஜுன் சம்பத்

நம் பாரத மணித் திருநாட்டில் பல்வேறு காலகட்டங்களில் நம்மைச் சுற்றியுள்ள வெவ்வேறு அண்டை நாடுகளிலிருந்தும் பலவிதமான மக்கள் அகதிகளாகவும், ஊடுருவல்காரர்களாகவும் நுழைந்துள்ளனர். பெர்ஷியா அதாவது இன்றைய ஈரான் பகுதியிலிருந்து ஜொராஷ்ட்ரிய சமயத்தை பின்பற்றுகின்ற பார்சிகள் அன்றைய பாரசீகத்தில் ஏற்பட்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பு காரணமாக இந்தியாவிற்கு குடிபெயர்ந்து தஞ்ச மடைந்தனர்.

நெருப்புக் கடவுளை வழிபடுகின்ற இவர்கள் இறந்த பின்பு தங்கள் உடலை கழுகுகளுக்கு இரையாக்கிவிடும் ஈமச் சடங்கை செய்பவர்கள்.

இந்தியாவிற்குள் தஞ்சமடைந்த பார்சிகள் இந்திய சுதேசி மன்னர்களிடம் அடைக்கலம் கோரியபோது இந்திய சிற்றரசர் ஒருவர் பால் நிரம்பிய குவளையை காட்டி இங்கு நீங்கள் குடியேற இடமில்லை எனக் குறிப்பால் உணர்த்தினார். ஆனால் பார்சிகளின் தலைவரோ கொஞ்சம் சர்கரையை பால் குவளையில் கலந்து இந்த பாலுக்கு சர்க்கரை இனிமை சேர்ப்பது போல நாங்கள் இந்திய கலாச்சாரத்திற்கு வலுசேர்ப்போம் என்று வினயமாக கூறி இந்திய சிற்றரசரை சம்மதிக்க வைத்தார் என்பது செவி வழிச் செய்தியாகும்.

கடந்த மூன்று நூற்றாண்டுகளில் பார்சிகள் இந்திய தேசிய கலாசாரத்தின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டனர். பார்சிகள் அவர்களது பாரம்பரியமான ஜொராஷ்ட்ரிய சமயத்தையும், வழிபாட்டு முறைகளையும் பின்பற்றி வருகின்றனர்.

இந்திய நாட்டில் பார்சிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லை. டாட்டா போன்ற பெரும் தொழிலதிபர்களும், ஹோமிபாபா போன்ற விஞ்ஞானிகளும், பல சுதந்திரப் போராட்ட வீரர்களும், மறைந்த பாரதப் பிரதமர் இந்திராகாந்தியின் கணவர் பெரோஸ் காந்தி போன்ற அரசியல் வாதிகளும் இந்தியாவில் தோன்றி இந்திய நாட்டிற்கு வலு சேர்த்து வருகின்றனர்.

அகதிகளாக, ஏதிலிகளாக இந்தியாவில் தஞ்சமடைந்த பார்சிகள் இந்தியாவின் மதிப்பு மிகு குடிமக்களாக மாறியுள்ளனர். குஜராத், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பார்சிகள் இந்தியர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்தியா } பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் பூர்வகுடிகளாக வசித்து ஆறு கோடி இந்தியர்கள் அகதிகளாக மாறினர். இவர்களில் பஞ்சாபிகள், சீக்கியர்கள், சிந்திகள் உள்ளிட்ட இந்திய பூர்வகுடி இந்துக்கள் பாகிஸ்தானியர்களால் விரட்டியடிக்கப்பட்டனர்.

சுமார் இரண்டு கோடி இந்துக்கள் பாகிஸ்தானிலிருந்து சுதந்திர இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்தனர். புதிதாக அமையப் பெற்ற நேரு தலைமையிலான இந்திய அரசு தஞ்சம் புகுந்தவர்களுக்கு தேவையான உதவிகளையும், இருப்பிடங்களையும், மருத்துவ உதவிகளையும் வழங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டது.

சிந்திக்களுக்கும், பஞ்சாபிகளுக்கும், சீக்கியர்களுக்கும் இந்தியாவில் தஞ்சமளித்து இடம், தொழில், கல்வி, வேலைவாய்ப்புகளை இயன்ற அளவு ஏற்படுத்திக் கொடுத்து குடியுரிமை வழங்கியது. இன்றும் பஞ்சாபிகளும், சீக்கியர்களும், சிந்திக்களும் அமைதியாக நிம்மதியாக இந்தியர்களாக வாழ்கின்றனர்.

உலகின் கூரை என்று அழைக்கப்பட்ட திபெத் நாட்டை கம்யூனிச நாடான சீனா கபளீகரம் செய்த காரணத்தால் சுமார் இரண்டு லட்சம் திபெத்தியர்கள் அவர்களின் புத்தமதத் தலைவர் தலாய் லாமாவுடன் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர்.

தலாய்லாமாவிற்கு அடைக்கலம் கொடுத்த இந்தியா திபெத்தியர்களுக்கான குடியிருப்புக்களை இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவிலும், கர்நாடகவில் ஹன்சூர் பகுதியிலும் அமைத்துக் கொடுத்து உள்ளது.

இந்திய அரசின் சார்பில் திபெத்தியர்களுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கி பொருளாதார உதவி செய்து வருவதோடு, கல்வி, வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு கிடைக்கிறது. புத்த சமயத்தைப் பின்பற்றுகின்ற திபெத்தியர்களுக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்தால் கம்யூனிச சீன நாட்டுடன் நமக்கு இன்றளவும் பகை நிலவுகிறது.

இங்கு வசிக்கும் திபெத்தியர்கள் தலாய் லாமாவின் தலைமையில் திபெத் விடுதலைப் போராட்ட இயக்கத்திற்கு மானசீக ஆதரவளித்தும் வருகின்றனர். திபெத்தியர்களால் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கோ, இந்திய குடிமக்களுக்கோ யாதொரு இடையூறும் இல்லை.

1970-71-ஆம் வருடங்களில் வங்காள தேசத்தில் அதாவது கிழக்கு பாகிஸ்தானில் மேற்கு பாகிஸ்தான் மேற்கொண்ட கொடூர அடக்குமுறை நடவடிக்கைகள் காரணமாக ஏராளமான வங்கதேச முஸ்லிம்கள் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழைந்தனர்.

பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெறத்துடித்த வங்கதேச மக்களிடம் பாகிஸ்தான் ராணுவம் மிகக்கொடூரமாக கற்பழிப்பு, படுகொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டது. கோடிக்கணக்கான வங்கதேச முஸ்லிம்கள் இந்தியாவிற்கு அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

1971-ஆம் வருடம் வங்கதேச முஸ்லிம்களை பாகிஸ்தானிடமிருந்து காப்பாற்ற அன்றைய பிரதமர் இந்திரா காந்தி பாகிஸ்தான் மீது போர் தொடுத்து வெற்றி பெற்று வங்க தேசத்திற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார்.

வங்கதேசத்தில் அரசியல் குழப்பங்களும், திடீர் ராணுவப் புரட்சியும், இஸ்லாமிய அடிப்படைவாத ஜிகாதிகளின் பயங்கரவாதச் செயல்களும் இன்றளவும் நீடிக்கின்ற காரணத்தால் வங்க தேச இஸ்லாமியர்கள் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவி வருகின்றனர்.

வறுமை, வளர்ச்சியின்மை, ஜனத்தொகை பெருக்கம் ஆகியவை காரணமாக இந்த ஊடுருவலை வங்கதேச அரசாங்கமே ஊக்குவித்து வருகின்றது.

சுமார் இரண்டு கோடி வங்கதேசத்தவர்கள் இந்தியா முழுவதும் ஊடுருவியுள்ளதாக கடந்தகால காங்கிரஸ் அரசு அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டு உள்ளது. வங்கதேச ஊடுருவல்காரர்களால் அசாம் மாநிலத்தில் உள்ளூர் அசாமிய இந்தியர்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், அரசியல் ஆகியவற்றில் ஊடுருவல்காரர்களின் ஆதிக்கம் தொடர்வதால் அசாமிய மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள போராடி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் 1979-இல் சோவியத் ரஷியாவின் ஆக்கிரமிப்புக் காரணமாக அறுபதாயிரம் ஆப்கானிய முஸ்லிம் மக்கள் இந்தியவிற்குள் தஞ்சமடைந்துள்ளனர். ஆனால், இந்திய அரசு அலுவல் பூர்வமாக இவர்களை அகதிகளாக அங்கீகரிக்கவில்லை.

சர்வதேச மனித உரிமை அமைப்பு மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் இவர்களுக்கான உதவிகளைச் செய்து வருகின்றன. ஆப்கானிய அகதிகள் மீண்டும் ஆப்கனுக்கு திரும்பிச் சென்றதாக செய்தியுமில்லை. இது குறித்து இந்திய அரசிடம் விவரங்களும் இல்லை.

பர்மாவிலிருந்து அதாவது இன்றைய மியான்மரிலிருந்து ராணுவ சர்வாதிகார ஆட்சி காரணமாக முஸ்லிம் ரோஹிங்கியா இன மக்கள் கணிசமான அளவில் இந்தியாவிற்குள் நுழைந்து தில்லி, காஷ்மீர், மேற்கு வங்கம், வட கிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்திய அரசாங்கம் இவர்களை அகதிகளாக அங்கீகரிக்கவில்லை. ஆனால், சர்வதேவ அமைப்புகள் மூலம் இவர்களுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன.

1948-இல் ஆங்கிலேயரிடம் விடுதலை பெற்ற இலங்கை 1952-இல் பூர்வகுடி இலங்கைத் தமிழர்களைப் புறக்கணித்து தன்னை ஒரு முழுமையான பெüத்த சிங்கள பேரினவாத நாடாக அறிவித்துக் கொண்டது.

புத்த மத இலங்கை அரசு இலங்கையின் பூர்வ குடி மக்களாகிய இந்துத் தமிழர்களை அழித்தொழிக்கும் அரசியல், ராணுவ நடவடிக்கைகளைத் துவக்கின. இதன் காரணமாக 1980-களில் இலங்கையிலிருந்து லட்சக் கணக்கான தமிழர்கள் இந்தியாவிற்குள் தஞ்சமடைந்தனர்.

தமிழகத்திலும், பெங்களூரூவிலும் அகதிகள் முகாம் அமைக்கப்பட்டு சுமார் ஐந்து லடசம் பேர் அகதிகளாக உள்ளனர். இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படவில்லை. சர்வதேச விதிமுறைகளின்படி அகதிகள் அந்தஸ்து முழுமையாக வழங்கியிருந்தால் கூட கூடுதல் வசதிகள் கிடைத்திருக்கும்.

ஆனால், திறந்த வெளிச் சிறைச்சாலைகள் போல உள்ள முகாம்களிலேயே அடைக்கப்பட்டு உள்ளனர். இலங்கைத் தமிழர்களுக்கு அகதிகள் முகாம்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நமது தாய்நாட்டில் நமது சகோதரர்களை அகதிகள் என அழைக்கும் நிலை மாற வேண்டும்.

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். பிரிவினையின் போது பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த சீக்கியர்களுக்கும் சிந்திகளுக்கும் பஞ்சாபிகளுக்கும் என்னென்ன வசதிகள் செய்து தரப்பட்டனவோ அத்தகைய வசதிகள் இப்போது இலங்கைத் தமிழர்களுக்கும் செய்து தரப்படவேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் அகதிகள் அல்ல; நம் சகோதரர்கள். இதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்: தலைவர், இந்து மக்கள் கட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT