கட்டுரைகள்

சட்டத்தின்படியும் நீதியின்படியும்...

தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்து அதற்குரிய தண்டனைகளைப் பெற்று சிறையில் இருப்பவர்கள் விடுதலை பெற வேண்டும் என உறவினர்கள், நண்பர்கள் வேண்டுகோள் சமர்ப்பிப்பது மனித நேயம் உள்ளவர்கள் அனைவரும் ஏற்கத்தக்கது என்பது உண்மை.

செ. மாதவன்

தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்து அதற்குரிய தண்டனைகளைப் பெற்று சிறையில் இருப்பவர்கள் விடுதலை பெற வேண்டும் என உறவினர்கள், நண்பர்கள் வேண்டுகோள் சமர்ப்பிப்பது மனித நேயம் உள்ளவர்கள் அனைவரும் ஏற்கத்தக்கது என்பது உண்மை. சாதி, மத, இன, மொழி உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, சிறைக் கைதிகளை மனித நேய உணர்வோடு, சட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டு விடுதலை செய்ய முயற்சிப்பதும் அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க பண்பாடாகும்.

குற்றங்கள் பற்றி, அதற்குரிய தண்டனைகள் பற்றி சட்டங்களில் கூறப்பட்டுள்ளது. குற்றத்திற்கு உரிய தண்டனை, குற்றச் சூழ்நிலை, குற்றச் செயலுக்குள்ள நோக்கம் இவைகளை எல்லாம் ஆராய்ந்து உரிய தண்டனைகளை வழங்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளின் உறவினர்கள், நண்பர்கள் குற்றவாளிகள் விடுதலை பெறவும் அல்லது குறைந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் பல விதமான வழிகளில் முயற்சிப்பதும், தண்டனை பெற்றுச் சிறையில் இருப்பவர்கள் விரைவில் விடுதலை பெற முயற்சிப்பதும் இயற்கை நிகழ்ச்சிகள் ஆகும்.

சாதி, மத, இன, மொழி உணர்வுகளோடு சிறையில் வாடும் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் தருவதும் இன்றைய சமுதாயத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் என்பதும் உண்மையே. இதே உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள், உயிர்களை இழந்தவர்கள், குற்றவாளிகளை விடுதலை செய்யக் கூடாது என்று வாதிடுவதும் மனித சமுதாயத்தின் இயல்புதான்.

இதுபோன்ற விருப்பு, வெறுப்பு உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, சிறையில் வாடும் கைதிகளை, பன்னெடுங்காலமாகப் பின்பற்றி வரும் விதிமுறைகளைப் பின்பற்றி சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று முடிவு எடுப்பதுதான் சாலச் சிறந்ததாகும்.

குற்றங்கள், சூழ்நிலைகள் பற்றி ஆராய்ந்து உரிய தண்டனைகள் வழங்கும் நீதிமன்றங்களின் முடிவுக்குக் கட்டுப்படுவதுதான் நல்லது. சிறையில் வாடுபவர்கள் பற்றி ஆராய்ந்து அவர்களின் செயல்பாடுகள், நன்நடத்தைகளின் அடிப்படையில் சிறைத் தண்டனைகளைக் குறைத்து, விரைவில் விடுதலை செய்திட வழிமுறைகள் சிறை விதிமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் சிறைக் கைதிகளை விடுதலை செய்வதுதான் நல்லது.

சிறை விதிகளின்படி கைதிகளை விடுதலை செய்திட பரிந்துரை செய்வதற்கு ஆலோசனைக்குழு அமைக்கப்படுகின்றது. இந்தக் குழுவில் நீதிபதிகள், அரசு அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், குற்றங்கள், குற்றப் பின்னணி, கைதிகளின் நடத்தை, உடல்நிலை போன்றவற்றை ஆய்வு செய்து தண்டனை அளவை குறைப்பதும், விரைவில் விடுதலை செய்திட பரிந்துரை செய்வதும் ஆலோசனைக் குழுவின் பணிகள். இதை ஏற்று கைதிகளை அரசு விடுதலை செய்வதும் நீண்ட காலமாக நடைமுறைகளில் உள்ளது.

இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் மொழி, இன உணர்வு அல்லது குற்றச் செயல்களால் உயிரை இழந்தவர்களின் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து முடிவெடுப்பது நல்லதல்ல. எத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள், சிறையில் இருந்தபோது அவர்களுடைய நடவடிக்கைகள், உடல்நலம் போன்றவற்றின் அடிப்படையில் மட்டுமே விடுதலை செய்வதுதான் நல்லதாகும்.

ஆயுள் கைதி ஒருவர் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தால், அவரை விடுதலை செய்திட ஆலோசனைக் குழு பரிந்துரைக்கும் நிலை இருந்தது. சிலருக்கு அதை விட குறைவாக சிறையில் இருந்தாலும், விடுதலை செய்திட அரசு உத்தரவு போடும் நிலை ஏற்பட்டபோது எதிர்ப்புக் குரல் எழுப்பப்பட்டது. இதைத் தவிர்த்திட, பத்து ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களை மட்டும்தான் விடுதலை செய்திட வேண்டும் என்ற உத்தரவு போடப்பட்டது. இதற்கும் எதிர்ப்புக் குரல் எழுப்பப்பட்டது.

14 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களுக்கு மட்டும்தான் விடுதலை செய்ய பரிந்துரை செய்திட வேண்டும் என்று 1978ஆம் ஆண்டு மத்திய அரசு சட்டத்தைத் திருத்தியது. இந்தச் சட்டம் செல்லும். இதன்படிதான் ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்திட வேண்டும் என்று 1991ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பின்படி சிறை ஆலோசனைக் குழுவினர் பரிந்துரை செய்திட வேண்டும். இந்த பரிந்துரையின்படி மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே விடுதலை செய்திட குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை ஆவதற்கு ஒரே மாதிரியான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 72 மற்றும் 161ஆவது பிரிவுகளின்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு, குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்களின் தண்டனைகளை நிறுத்தி வைத்திடவும், மன்னிப்பு வழங்கிடவும், தண்டனை காலத்தைக் குறைத்திடவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரத்தை ஆதரித்தும் எதிர்த்தும் உலகம் முழுவதும் விவாதங்கள், நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நடைபெற்று வருகின்றன. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த பின்பற்ற வேண்டிய வழிகாட்டு முறைகளை வகுத்திட வேண்டும் என்ற பரிந்துரையை உச்சநீதிமன்றம் 1980ஆம் ஆண்டில் வழங்கியுள்ளது.

கொலை வழக்குகளில் மரண தண்டனை வழங்குவதையும், சில வழக்குகளில் காணப்படும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, ஆயுள் தண்டனை வழங்குவதையும் நீதிமன்றங்கள் பின்பற்றி வருகின்றன. மரண தண்டனை வழங்கும் சட்டத்தை நீக்கிட வேண்டும் என்ற கருத்து இங்கிலாந்து நாட்டில் 1907ஆம் ஆண்டு முதல் பரவத் தொடங்கி, இறுதியில் 1965ஆம் ஆண்டு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில் சில மாநிலங்களில் மரண தண்டனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன்பு அமெரிக்காவில் மிசௌரி (ஙண்ள்ள்ர்ன்ழ்ண்) மாநிலத்தில், வயது குறைந்த ஒரு சிறுமியை கடத்திச் சென்று, கற்பழித்துக் கொன்ற குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற சட்ட விதிகள் இந்தியாவிலும் அமல் படுத்த வேண்டும் என்று மகளிர் குழுக்கள் சார்பாக குரல் எழுப்பப்பட்டு வருகிறது. மரண தண்டனை அகற்றப்பட வேண்டும் என்ற கருத்தும் பரவி வருகிறது.

இலங்கை வாழ் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கிட, இலங்கை அரசமைப்புச் சட்டத்தையே திருத்தச் செய்து, இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றச் செய்து, சரித்திரம் படைத்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, இந்தியப் படையை ஈழம் என்று பேசப்படுகின்ற யாழ்ப்பாணப் பகுதிக்கு அனுப்பி இலங்கைப் படையை விரட்டியடித்தவர்.

இதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், ராஜீவ் காந்தியைப் பாராட்டிப் பேசியதை தொலைக்காட்சிகளில் பார்த்து இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

அதே ராஜீவ் காந்தியை இலங்கைத் தலைநகரில் ராணுவ மரியாதையுடன் வரவேற்றபோது இலங்கை ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் தலையில் அடித்துக் கொல்ல முயற்சி செய்த காட்சியும் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டது.

ஆனால், ஈழ விடுதலைக்கு எதிராக, கூட்டாட்சி முறைக்கு ஆதரவாக, ராஜீவ் காந்தி ஒப்பந்தம் வழி வகுத்துள்ளது என்ற உணர்வு விடுதலைப் புலிகளிடையே வலிமை பெற்றது. அதன் காரணமாக ராஜீவ் காந்தி தமிழ்நாட்டிலேயே கொல்லப்பட்டது உண்மை.

தங்கள் தலைவரை, இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கிய தலைவரை கொன்றவர்களுக்கு விடுதலை வழங்கக் கூடாது என்ற உணர்ச்சிக்குரல் எழுப்பப்படுகின்றது. இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தமிழர்கள் என்ற உணர்வோடு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற உணர்ச்சிக் குரலும் எழுப்பப்பட்டு வருகின்றது.

மத்திய அரசின் நிர்வாகத்திற்குள், அதிகாரத்திற்குள் வரும் இந்த வழக்கில் மத்திய ஆட்சியாளர்கள் நினைத்திருந்தால், இந்த கைதிகளை மரண தண்டனைக்கு உட்படுத்தியிருக்க முடியும். ஆனால் சட்டம் மற்றும் நீதிமன்றங்களுக்கு தலைவணங்கி இதுவரை மரண தண்டனையை நிறைவேற்றவில்லை.

இத்தகைய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, சட்டம், விதிகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் தண்டனை பெற்று 23 ஆண்டுகளாக சிறையில் வாடும் கைதிகளை விடுதலை செய்திட வேண்டும் என்று வேண்டுகோள் வைப்பதே நீதிக்கும், நியாயத்திற்கும் தலை வணங்குவதாகும் என்பதை உணர வேண்டும்.

அரசியல் கட்சிகளின் மொழி, இன பற்றுக்கு அப்பாற்பட்டு, அரசும், அரசியல் கட்சிகளும் செயல்பட வேண்டும். சிறையில் உள்ள கைதிகள் அனைவர் விஷயத்திலும் விதிகளின்படி மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.

சிறைகளில் வாடும் அனைவரையும் சமமாகக் கருதி ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களை விடுதலை செய்யும்போது, 23 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்களையும் விடுதலை செய்வதுதான் நியாயமும் தர்மமும் ஆகும்.

கட்டுரையாளர்:

தமிழக முன்னாள் அமைச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT