வரவிருக்கும் புதிய வங்கிகள்
இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 2ஆம் தேதி ஓர் அறிவிப்பை வெளியிட்டது. ஐ.டி.எஃப்.சி. லிமிடெட் மற்றும் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டுள்ள பந்தன் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு புதிதாக வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி கொள்கை அடிப்படையில் அனுமதி வழங்கி இருக்கிறது என்பதுதான் அது.
இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 2ஆம் தேதி ஓர் அறிவிப்பை வெளியிட்டது. ஐ.டி.எஃப்.சி. லிமிடெட் மற்றும் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டுள்ள பந்தன் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு புதிதாக வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி கொள்கை அடிப்படையில் அனுமதி வழங்கி இருக்கிறது என்பதுதான் அது. தேர்தல் தேதிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று ரிசர்வ் வங்கி இதனை அறிவித்தது.
இந்த நடவடிக்கையின் பின்னணி என்ன?
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவே, மத்திய அரசு, புதிய தனியார் வங்கிகளைத் தொடங்குவதில் முனைப்பு காட்டி வந்தது. ஆனால் ரிசர்வ் வங்கி இவ்விஷயத்தில் நிதானப் போக்கையே கடைப்பிடித்தது. நீண்ட பரிசீலனைக்குப் பிறகே இதற்கு சம்மதம் தெரிவித்தது. ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு நியாயமானதே.
2012ஆம் ஆண்டு, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வங்கிச் சட்ட திருத்த மசோதாவில், புதிய தனியார் வங்கிகளைத் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பொதுமக்களின் டெபாசிட் தொகைகளுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்ற நோக்கில் விரிவான நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி புதிதாக அறிவித்தது. அதன்படி தனியார் துறையில் 10 ஆண்டுகளுக்கு குறையாமல் செவ்வனே தொழில் நடத்திய நிறுவனங்கள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் (என்.பி.எஃப்.சி.) புதிய வங்கி அமைக்க முன் வரலாம் என ரிசர்வ் வங்கி 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தெரிவித்தது. அப்போது இதற்கான விரிவான வழிமுறைகளையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
குறைந்தபட்ச மூலதனம் ரூ.500 கோடி; நிறுவனத்தின் பங்கு 40 சதவிகிதத்துக்கு குறையக் கூடாது; இயக்குனர் குழுவில் நிறுவனத்தைச் சாராத சுயேச்சையான இயக்குனர்கள் 50 சதவீதம் பேர் இருக்க வேண்டும்; 25 சதவீதத்துக்கு குறையாமல் கிராமக் கிளைகள் தொடங்கப்பட வேண்டும் ஆகியவை நிபந்தனைகளில் குறிப்பிடத்தக்கவை.
இதுதவிர, புதிய வங்கிகளைக் கண்காணிப்பதுடன், தேவைப்படும்போது, அந்த வங்கிகளின் நிறுவன அமைப்புகளையும் ஆய்வு செய்யும் அதிகாரம்; சம்பந்தப்பட்ட புதிய வங்கிகளின் இயக்குனர் குழுவை அடியோடு மாற்றி அமைக்கும் அதிகாரம் போன்ற பல புதிய அதிகாரங்களையும் ரிசர்வ் வங்கிக்கு புதிய சட்டம் வழங்கியது.
27 பெரும் தொழில் நிறுவனங்கள் புதிய வங்கி தொடங்குவதற்கு விண்ணப்பித்தன. சில காலம் கழித்து, 2 விண்ணப்பங்கள் திரும்பப் பெறப்பட்டன. ஆக, மீதம் இருந்த 25 பெரு நிறுவனங்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
பொதுத் துறையில் இந்திய அஞ்சல் துறை, ஐ.எஃப்.சி.ஐ., எல்.ஐ.சி. வீட்டுக் கடன் வசதி நிறுவனம் மற்றும் தனியார் துறையில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிட்டல், ஆதித்திய பிர்லா குழுமம், எல். அண்ட் டி. ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ், ரெலிகார் என்டர்பிரைசஸ், ஸ்ரீராம் கேபிடல் உள்ளிட்டவை விண்ணப்பித்த நிறுவனங்களில் அடங்கும்.
விண்ணப்பங்கள் ரிசர்வ் வங்கியால் துருவித் துருவி பரிசீலிக்கப்படுகின்றன; விரைவில் முடிவுகள் தெரியவரும் என்ற செய்திகள் வந்தன.
இந்நிலையில் டாக்டர் ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக, 2013 செப்டம்பர் 4ஆம் தேதி பொறுப்பேற்றார். அதன் பிறகு ஒரு திருப்பம் ஏற்பட்டது. புதிதாக வங்கி தொடங்குவதற்கான விண்ணப்பங்களைப் பரிசீலிக்க, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தான், ரிசர்வ் வங்கி அண்மையில் மேற்கூறிய இரண்டு நிறுவனங்களுக்கு "கொள்கை அடிப்படையிலான' (இன்-பிரின்ஸிபிள்) அனுமதியை வழங்கியது. இவ்விரண்டு நிறுவனங்களின் மீதும் இதுவரை எவ்வித சர்ச்சையின் சாயல் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பந்தன் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனம் ஒரு மைக்ரோ ஃபைனான்ஸ் என்கிற சிறு, குறு நிதி உதவி வழங்கிடும் வங்கி சாரா நிதி நிறுவனமாகும். "பந்தன்' என்றால் "பந்த பாசம்' என்று பொருள்.
இதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சந்திரசேகர் கோஷ் திரிபுரா மாநிலம், அகர்தலாவில், இனிப்பு கடைக்காரரின் மகனாகப் பிறந்தவர். சிறு வயதில் கடை சிப்பந்தியாக வேலை செய்து கொண்டே படிப்பையும் மேற்கொண்டவர்.
டாக்கா பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, குடும்பத் தொழிலை சில காலம் மேற்கொண்டார். பிறகு உலகின் மிகப் பெரிய, புகழ் வாய்ந்த சிறு, குறு நிதிஉதவி நிறுவனத்தில், ஃபஸ்லர் ஹுசைன் அபெட் தலைமையில், பணிபுரிந்தார். ஏழை, எளிய கிராமவாசிகளிடம் பழகி அவர்களது அன்றாட துன்பங்களையும், துயரங்களையும் நேருக்கு நேர் பார்த்தவர். அதனால் அவர்களது துயரைப் போக்கிட முனைந்தவர்.
இந்தியா திரும்பிய பிறகு, அதே மாதிரி குறும் நிதி கடனுதவி (மைக்ரோ ஃபைனான்ஸ்) தொடர்புடைய பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரிந்தார்.
2002ஆம் ஆண்டு சிறு, குறு கடன் அளிப்பதற்காக பந்தன் நிதி நிறுவனத்தை கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியான கொனாகரில் தொடங்கினார். குடும்பத்திலிருந்து பெற்ற ரூ.2 லட்சம்தான் முதலீடு. பின்னர் சிறுதொழில் முதலீட்டுக் கழகம் (சிட்பி) ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, அகமதாபாத் மகளிர் அமைப்பு ஆகியவற்றின் உதவியோடு வளர்ந்தது பந்தன்.
இந்நிறுவனம் தந்துள்ள கடன் ரூ.6,200 கோடி; கடனுதவி பெற்றவர்கள் 54 லட்சம் பேர். தற்போது 13 ஆயிரம் ஊழியர்களுடன், 22 மாநிலங்களில், 2,016 கிளைகளுடன் பந்தன் செயல்படுகிறது. இந்த 13,000 ஊழியர்களும், புதிய வங்கியில் பணிபுரிவார்கள் என்கிறார் கோஷ். இந்த மகத்தான வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது, 53 வயதான, சந்திரசேகர் கோஷின் அர்பணிப்பு, அயராத உழைப்பு மற்றும் ஏழைகளின் மீதான உண்மையான அக்கறை ஆகியவையே!
புதிய வங்கிக்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துவிட்டு, அனுமதி கிடைத்தால் எப்படி சமாளிப்பது என்ற கவலையில் இருந்துள்ளார் கோஷ்! "கொள்கை அடிப்படையிலான அனுமதிக்கு 18 மாத கால அவகாசம் இருப்பதால், சவால்களை எதிர்கொண்டு, நிபந்தனைகள் அனைத்தையும் 100க்கு 100 நிறைவேற்றி, வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வேன் என்கிறார் கோஷ்!
ஐ.டி.எஃப்.சி. நிறுவனம், ஏற்கெனவே வெற்றி நடை போடும் அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்பாட்டுக்கான, வங்கி சாரா நிதி கம்பெனியாகும். இந்த கம்பெனியின் பங்குகளில் அரசின் முதலீடு 17.6 சதவீதமாகும். ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான நிதி தொழிலை திறம்பட கையாளும் கம்பெனி இது.
இந்த நிறுவனத்தின் ஒவ்வொரு பங்குதாரரும் புதிய வங்கியின் பங்கு தரகராக இருப்பார் என்றும், அதேநேரம் அந்நிய நாட்டு பங்குத் தொகையை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நிர்வாகம் தெரிவிக்கிறது.
இந்திய அஞ்சல் துறையைப் பொருத்தவரை, புதிய அரசு அமைந்த பிறகுதான் முடிவு மேற்கொள்ளப்படும். காரணம், அதற்குத் தேவையான மூலதனம் மத்திய அரசிடமிருந்தே வரவேண்டி உள்ளது.
மீதமுள்ள விண்ணப்பங்களுக்கு அனுமதி இல்லை என்பது வெளிப்படை. புதிய வங்கிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான முடிவுகள், மிகவும் கவனமாகவும், எச்சரிக்கை உணர்வுடனும், நிதானப் போக்கை கடைபிடித்துதான் (கன்ஸர்வேடிவ் அணுகுமுறையில்) மேற்கொள்ளப்பட்டது என்கிறார் ரகுராம் ராஜன். இதை யாரும் மறுக்கமாட்டார்கள்.
அதேநேரம், அவர் மேலும் ஒரு விஷயத்தைச் சொல்லுகிறாரே, அதுதான் கவனிக்கத்தக்கது. "இந்த இரு புதிய வங்கிகளின் மூலம் கிடைக்கக் கூடிய அனுபவத்தின் அடிப்படையில், எதிர்காலத்தில் புதிய வங்கிகள் தொடங்குவதற்கான நிபந்தனைகள் சில மாற்றத்துடன் அறிவிக்கப்பட உள்ளது என்கிறார் ஆளுநர்.
அதுதவிர, முக்கியமாக, அனைத்து வகை வங்கிச் சேவைகள் வழங்கும் வங்கிகளுக்கான அனுமதி மற்றும் சில குறிப்பிட்ட வங்கிச் சேவைகளை மட்டுமே வழங்கக் கூடிய வித்தியாசமான வங்கிகளுக்கான அனுமதி என பல வகை அனுமதி வழங்கப்பட உள்ளன என்கிறார் ரகுராம் ராஜன்.
அதன்பிறகு, தற்போது அனுமதி கிடைக்காமல் போன நிறுவனங்களும், இதர தகுதியுள்ள நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம். ரிசர்வ் வங்கியின் இந்த கூற்று, அதன் சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உணர்த்துகிறது. ரிசர்வ் வங்கியின் கொள்கையில் மாற்றம் இருந்தால் அது விரைவாக தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் கிராமவாசிகள் உள்ளிட்ட அனைவருக்கும் வங்கிச் சேவை சென்றடைய வேண்டும் என்பதற்காகவே புதிய வங்கிகள் தேவை என்று சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், புதிய கொள்கை அறிவிப்பில் இழுபறி நீடித்தால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வழங்கப்பட்டுள்ள இரண்டே இரண்டு "கொள்கை அடிப்படையிலான அனுமதி' என்பது "மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதை போல் ஆகிவிடும்!'