முகப்பு
கட்டுரைகள்

வாராக்கடனுக்கெதிரான வலுவான ஆயுதம்

இன்று வங்கிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருவது, அதிகரித்து வரும் வாராக்கடன் தொகை. ஏறக்குறைய இரண்டு லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க முடியாத கடனாக முடங்கிக் கிடக்கிறது. இதில் ஐம்பதே ஐம்பது கார்ப்பரேட் நிறுவனங்களில் மட்டும் 40,000 கோடி ரூபாய் வாராக்கடன் சிக்கியுள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 3:56 AM
பகிர்:

இன்று வங்கிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருவது, அதிகரித்து வரும் வாராக்கடன் தொகை. ஏறக்குறைய இரண்டு லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க முடியாத கடனாக முடங்கிக் கிடக்கிறது. இதில் ஐம்பதே ஐம்பது கார்ப்பரேட் நிறுவனங்களில் மட்டும் 40,000 கோடி ரூபாய் வாராக்கடன் சிக்கியுள்ளது.

மொத்த வாராக்கடனில், மூன்றில் ஒரு பங்கு, அதாவது, 70,000 கோடி ரூபாய், நீதிமன்றங்களில் பல்வேறு கட்ட விசாரணை நிலையில் உள்ளது. 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 4,085 ஆகும்.

மகாராஷ்டிரத்தில் மட்டும் ரூ.66,921 கோடி ரூபாய்க்கான வாராக்கடன் வசூலிப்பதற்கு 1,076 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. வழக்குகளின் எண்ணிக்கையிலும், வாராக்கடன் தொகையிலும் தில்லி இரண்டாவது இடத்திலும், ஆந்திரம் மூன்றாவது இடத்திலும், தமிழ்நாடு நான்காவது இடத்திலும் உள்ளன.

நீதிமன்றங்களில் அதிக காலதாமதம் ஆவதைத் தவிர்க்கும் வகையில், 2002-ஆம் ஆண்டில் "சர்ஃபாசி' சட்டம் (Securitization and Reconstruction of Fiancial Assets and Enforcement of Security Interest Act) கொண்டு வரப்பட்டது. அது ஓரளவு தாமதத்தை குறைத்திட உதவியது என்றாலும், மேற்கூறிய வழக்குகளின் எண்ணிக்கையும், ஒட்டுமொத்த வாராக்கடன் தொகையும் கவலை அளிப்பதாகவே உள்ளன.

இந்நிலையில், வாராக்கடனை விரைந்து வசூலிப்பதற்கு ஏதுவாக, மத்திய நிதி அமைச்சகம் வலுவான புதிய சட்டங்களை உருவாக்குவதற்கும், இருக்கும் சட்டங்களில் புதிய திருத்தங்களைக் கொண்டு வருவதற்கும் பரிந்துரை வழங்க ஒரு உயர்நிலைக் குழுவை அண்மையில் அமைத்துள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தின் இணைச் செயலர் அனுராக் ஜெயின், சட்ட அமைச்சகத்தின் முன்னாள் இணைச் செயலர் வி.கே. பசீன், ரிசர்வ் வங்கி, கடன் வசூல் டிரிப்யூனல் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். அனுபவம் மிக்க இந்த மூத்த வல்லுனர்களின் பரிந்துரைகள் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் தொழில்களை விரிவாக்கம் செய்வதற்கு வங்கிக் கடன் பெறுவதும், பிறகு அது வாராக்கடனாக மாறுவதும் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் கார்ப்பரேட் கம்பெனி நிறுவனர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதும், அவர்களது கம்பெனிகள் நலிந்து விட்டதாகக் கூறுவதும சர்வ சாதாரணமாக நிகழ்கின்றன.

இதில் வேதனை என்னவெனில், வங்கியிலிருந்து பெற்ற கடனில் ஒரு பகுதித் தொகையைக் கொண்டே வங்கிக்கு எதிராக வழக்காடுகிறார்கள் என்பதே.

இந்நிலையில், சர்ஃபாசி சட்டம் 2002 மற்றும் ஆர்.டி.டி.பி. சட்டம் (Recovery of Debts Due to Banks and Financial Institutions) ஆகியவற்றை மேலும் கூர்மைப்படுத்துவது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. இதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படும்.

ஆனால், உடனடியாக செய்யக்கூடியது ஒன்று உண்டு. புதிய பட்ஜெட்டில், ஆறு புதிய "டெப்ட் ரிகவரி டிரிபூனல்' உருவாக்கப்படும் என்றும், இவை சண்டிகர், பெங்களூரு, எர்ணாகுளம், டேராடூன், சிலிகுரி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் அமைக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.

இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்தினால் நல்லது. ஏனெனில், ஏற்கெனவே செயல்பட்டு வரும் டிரிபூனல்களில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாய்க்கான நாற்பது ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வாராக்கடன் என்ற பிரச்னைக்கு இரண்டு கோரமான முகங்கள் உண்டு. பொதுமக்களின் டெபாசிட் தொகை மற்றும் அரசு வழங்கும் (மக்களின் வரிப் பணத்திலிருந்துதான்) மூலதனத்திலிருந்து கடனாகப் பெற்று கபளீகரம் செய்திடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு முகம்; வாராக்கடன் விகிதம் அதிகரிக்க அதிகரிக்க, புதிய கடன்கள் - தொழில் கடன், சிறுதொழில் கடன், விவசாயக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் - வழங்கும் விகிதம் குறைந்து கொண்டே போவது இரண்டாவது முகம்.

சில ஆண்டுகள் முன்புவரை, பொதுமக்களுக்கும் தொழில்களுக்கும் தரப்படும் வங்கிக் கடன் 17 முதல் 18 சதவீதம் அதிகரித்தது. கடந்த ஓரிரு ஆண்டுகளாக வங்கிக் கடன் தொகை 13 முதல் 14 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சம் பாதிக்கப்படுவது நிலக்கரிச் சுரங்கத் துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் துறை (National Highways Authority of India) ஆகியவை.

இவ்விரு துறைகளுக்கும் உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில், ஒரு புதிய திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. உதாரணத்துக்கு, நிலக்கரிச் சுரங்கத் துறைக்கு ஒரு புதிய சொத்து மறு சீரமைப்பு நிறுவனத்தை (Asset Reconstruction Company - ஏ.ஆர்.சி.) அமைப்பதாகும்.

வங்கிகள் வசம் உள்ள நிலக்கரித் தொடர்பான வாராக்கடன்களை உத்தேச சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்துக்கு விற்றுவிட்டு, புதிய நிலக்கரித் தொடர்பான கடன்களை வழங்கிட வங்கிகள் முன்வரும். ஏ.ஆர்.சி.யில் வங்கிகளின் மூலதனப் பங்குகள் குறைவாகவும், நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (N.T.P.C.) என்கிற பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகள் கூடுதலாகவும் இருக்கும்.

இந்த ஏற்பாட்டின் மூலம் வங்கிகளின் சுமை அடுத்த சில ஆண்டுகளுக்கு என்.டி.பி.சி.யின் தோள்களுக்கு மாறும். எல்லாம் திட்டமிட்டபடி நிகழுமேயானால், சில வருடங்களில், என்.டி.பி.சி.யின் இழப்பு ஈடு செய்யப்படும். லாபமும் கிடைக்கக் கூடும்.

இதே மாதிரியான திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திலும் செயல்படுத்திட மத்திய நிதி அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு மூலக் காரணம், வங்கிகளில் அதிகரித்து வரும் வாராக் கடன் தொகையே என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்தச் சூழலில், சில தினங்களுக்கு முன், நம்பிக்கையூட்டும் முன்னேற்றம் வாராக்கடன் விஷயத்தில் ஏற்பட்டுள்ளது. அதுதான், வாராக்கடன்களுக்கு காரணமானவர்களில், வேண்டும் என்றே கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களை இனம் கண்டு, பகிரங்கமாக அவர்கள் பெயர்களை அறிவித்திடும் புதிய நடைமுறை.

பொருளாதார மந்தநிலை அல்லது தொழில்களில் ஏற்படக்கூடிய "ரிஸ்க்', எதிர்பாராத இடர்ப்பாடுகள், இழப்புகள், சர்வதேசக் காரணங்கள் ஆகியவற்றின் காரணமாக கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை ஏற்படுவது உண்டு.

ஆனால், கடன் பணத்தை திரும்பச் செலுத்துவதற்கான வசதி இருந்தபோதும், வேண்டும் என்றே தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை காரணம் காட்டி அல்லது லாபத்தை வேறு காரணங்களுக்குப் பயன்படுத்திவிட்டு, கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களைக் கண்டறிந்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, கடும் தண்டனை வழங்குவதற்கு ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் முன் வந்துள்ளன.

இதன் அடிப்படையில், ஒரு பொதுத்துறை வங்கி, பெரும் தொகையை கடனாகப் பெற்றுக் கொண்டு, திரும்பச் செலுத்தாத ஒரு தனியார் விமான நிறுவனத்தின் நான்கு இயக்குனர்களை "வேண்டுமென்றே கடனைத் திரும்பச் செலுத்தாத கடனாளிகள்' என்று அண்மையில் முறைப்படி அறிவித்துள்ளது.

இந்த நிகழ்வு, வங்கித் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய திருப்பமாகும்.

இந்த விமான நிறுவனம் 9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடன் தொகையை திரும்பச் செலுத்தவில்லை. இந்த நிறுவனத்தின் நான்கு இயக்குனர்கள், வேண்டும் என்றே கடனைத் திரும்பச் செலுத்தாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டதால் இவர்களுக்கும், இந்த நிறுவனத்துக்கும் இந்தியாவில் எந்த வங்கியோ, நிதி நிறுவனமோ இனி கடன் வழங்காது.

மேற்கூறிய இயக்குனர்கள் இனி சட்டப்படி எந்த ஒரு நிறுவனத்திலும் இயக்குனர்களாக பொறுப்பு வகிக்கவும் இயலாது. இவை தவிர, சட்டப்படியான தண்டனைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், "வேண்டும் என்றே கடனைத் திரும்பச் செலுத்தாதவர் என்கிற அறிவிப்பு வாராக்கடனுக்கு எதிரான மிக வலுவான ஆயுதம்' என்று வர்ணித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக வங்கித் துறையை, குறிப்பாக, பொதுத்துறை வங்கிகளை பீடித்திருந்த பிணி இனி கட்டுக்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம். தற்போதுள்ள சட்டங்களை மேலும் வலுவாக்குவது, புதிதாக மேற்கொள்ளப்படும் அணுகுமுறை ஆகியவற்றால் வங்கிகளின் வாராக்கடன் விரைந்து வசூலிக்கப்படும்.

இதன் பயனாக, உண்மையான தேவைகளுக்கும், சரியான நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும், வங்கிக்கடன் உரிய நேரத்தில், உரிய அளவில் கிடைக்கும் என்று நம்பலாம்.

இது... இது... இதைத்தானே எதிர்பார்த்தோம்!

கட்டுரையாளர்: வங்கி அதிகாரி (ஓய்வு).

முழு கட்டுரையைப் படிக்க →