கட்டுரைகள்

உள்ளிருந்து உருக்கும் நோய்

நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரும் தடைக் கல்லாய் விளங்குவதாக நாம் ஊழலை நினைக்கிறோம்.

கிருங்கை சேதுபதி

நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரும் தடைக் கல்லாய் விளங்குவதாக நாம் ஊழலை நினைக்கிறோம். அதன் தாயாக லஞ்சத்தைக் கருதுகிறோம். இரண்டும் இணைந்து அகத்திலும் புறத்திலும் உண்டாக்கிய அழுக்குகளைக் களைந்து தூய்மை இந்தியாவை உருவாக்கக் கருதும் இந்த வேளையில், இவற்றையெல்லாம் விடப் பெரியதொரு தடைக் கல்லாக விளங்குவது வேறொன்றாக இருக்கிறது.

அதுதான் சோம்பல்.

தனி மனித நிலையில் தொடங்கிச் சமுதாய அளவில் படர்ந்து தேச அளவில் விரிந்து நிற்கும் இந்நோய் உள்ளிருந்து உருக்கும் அகநோய். இதனைப் பெற்ற அன்னையின் பெயர் தாமதம். தந்தையின் பெயர் மறதி. உற்ற துணையாய் உடன் வருவது உறக்கம்.

தானும் கெட்டு, தன்னைச் சார்ந்த யாரையும் கெடுக்கும் ஆற்றல் வாய்ந்தவை இவை என்பதால், இந்நான்கையும் இணைத்துக் கெடுநீரார் காமக்கலன் என்றார் திருவள்ளுவர்.

இதில் காமக் கலன் என்பதற்கு, இறக்கும் இயல்பினை உடையார் விரும்பி ஏறும் மரக்கலம் என்று விளக்கம் தருகிறார் பரிமேலழகர். அது அவர் காலத்து வாகனம். இன்றைக்கு இக்கலன் விமானத்தைவிடவும் விரைந்து கொண்டுபோய் அழிவிற்செலுத்தும் பறக்கும் விண்கலமாக விளங்கி வருகிறது என்றால் அது மிகையில்லை.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்

என்பது வள்ளுவர் வாக்கு.

தாமதமாகிய நெடுநீரும், மறதியாகிய மறவியும் கூடிப் பெற்ற குழந்தை சோம்பல். அது முதலில் துயிலில் ஆழ்த்தும். பின்னர், எந்தப் பயனுமின்றி வாழ்க்கையை உள்ளீடற்று அழித்து மரணத்தில் வீழ்த்தும். உறக்கம் என்பதே மரணத்துக்கான ஒத்திகைதானே!

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு

என்பதுதானே உண்மை. ஆக, உறங்காமல் இருப்பது மாத்திரம் வாழ்க்கையன்று. இறவாமல் இருப்பது, இதற்குத் துயிலாமல் இருப்பது என்பதன்று பொருள். துயிலுங்காலத்தில் துயின்று எழும் காலத்தில் எழுதல் வேண்டும். தூக்கமிலாக் கண் விழிப்பே சக்தி என்பார் பாரதி.

சோம்பேறிதான் அதிகம் தூங்குவான் என்பார் என் தாயார். அது மட்டுமல்ல, சோம்பேறிதான் அதிகம் பொறாமைப்படுவான் என்றும் சொல்வார்.

பொறாமையை, அழுக்காறு என்பார் வள்ளுவர். அனைத்து அழுக்குகளையும் உள்கொண்டு வந்து சேர்க்கும் வழி என்று அதற்குப் பொருள். அது முதலில் மனத் தூய்மையைக் கெடுக்கும். பின்னர் புறத் தூய்மையையும் பல்வேறு வழிகளில் பாழ்படுத்தும்.

இவ்வளவுக்கும் காரணமாகும் சோம்பலுக்கு எது மருந்து? சுறுசுறுப்பு என்று பலர் சொல்லுவார்கள். ஆனால், பாரதி சொல்கிறார் அதுவும் பால பருவத்தில் இருந்தே தாய்ப் பால் போலத் தரவேண்டிய மருந்தாக, மாற்றாகப் பாப்பாவுக்குச் சொல்கிறார்:

சோம்பல் மிகக் கெடுதி பாப்பா

சரி. அது வந்துவிட்டால், மாற்று மருந்து

- தாய் சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா

பணியெனத் தாய் கொடுப்பதை, அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லித் தப்பிக்கிறபோது, நெடுநீர் ஆகிய தாமதம் வருகிறது. மறுபடி அந்த வேலை என்னாயிற்று என்று தாய் கேட்கிறபோது, மறந்து

போனது நினைவுக்கு வருகிறது. மறதிகளின் அடுக்ககமாகத் துயில் வருகிறபோது, நம்மையே நாம் மறந்துவிடுகிறோம். அப்புறம் வேலையாவது, விருப்பமாவது எல்லாம் இழந்து கையற்று நிற்கிற நிர்பந்தம் வந்துவிடுகிறது.

அவர்கள்தான் ஒருபொழுதும் வாழ்வது அறியாத வீணர்கள். ஆனால், அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும், அப்படி, இப்படி என்று ஆயிரக்கணக்கான அல்ல, கோடிக்கணக்கான மனக்கோட்டைகளைக் கட்டிச் சொற்கோட்டங்களை உருவாக்கிப் பின்னர் சோர்ந்து அழிவார்கள்.

இது தெரிந்தும் இவற்றை விடமுடியாமல் தவிப்பவனைப் பேதை என்கிறார் வள்ளுவர். மடிமடிக் கொண்டொழுகும் பேதையின் குடும்பம் அவனுக்கு முன்னதாகவே அழிந்து விடுமாம். ஒரு குடும்பத்தின் உள்ளே இந்தச் சோம்பல் புகுந்துவிட்டால், அது பகைவரிடத்தில் அக்குடும்பத்தாரை அடிமையாக்கிவிடும் என்று தொடர்ந்து எச்சரிக்கிறார் அவர்.

அந்த இடத்தில்தான் பாரதி விழிக்கிறார். நாட்டு விடுதலையை மனக்கொண்டு பாட்டுக் கட்டும் பணி செய்கிற அவர், புதுச்சேரி மணக்குள விநாயகரிடத்தில் தன் மனத்தை நிறுத்தி ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு தம் பணியாகிய தமிழ்ப் பணியைத் தொடங்குகிறார்.

அந்த உடன்படிக்கையின் முதல் திட்டம் - நமக்குத் தொழில் கவிதை. அடுத்தது - நாட்டுக்கு உழைத்தல்.

மனிதர்க்கே உரிய மகத்தான நோயான சோம்பலைப் புறந்தள்ள அடுத்த ஒப்பந்தத் திட்டமாக, பணியாக, மூன்றாவதைக் குறிப்பிடுகிறார். அதாவது, இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று சொல்லி நிறுத்துகிறார்.

கண் இமைக்கும் அந்தக் கணத்தில்கூடச் சோம்பல் வந்து மனிதனைச் சுனாமிபோலச் சுருட்டிவிடும் என்று அஞ்சுகிறார் அந்தப் பெருங்கவி. இது அவர் அனுபவத்தில் கற்ற அறிவியல்.

புதுச்சேரியில் அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு ஜூலை மாதக் காலைப்பொழுது. (2.7.1915)

வியாதி பயம், சோம்பர். இன்று காலைப்பொழுதையும் இவை வந்து வீணாக்கிவிட்டன என்று நாட்குறிப்புப்போல் எழுதத் தொடங்குகிறார். இன்று காலைப்பொழுது என்றால், அது நேற்றும் வந்திருக்கிறது என்று பொருள். இதுபோல் பல காலைப்பொழுதுகளையும் காவு கொண்டிருக்கிறது என்று பொருள்.

பத்திரிகைகளுக்கு வியாஸங்கள் எழுத வேண்டும். கடிதங்கள் எழுத வேண்டும். சோம்பர் உதவாது என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வதுபோல எழுதித் தள்ளுகிறார் பாரதி. இதற்குச் சித்தக்கடல் என்று தலைப்பு.

சித்தம் ஒரு கண்ணாடி. ஓயாமல் பராசக்தியைத் தியானம் செய்யுமானால், அவளுடைய சாயை இதிலே படும். அதிலே சுகம் உண்டு என்று எழுதுகிறார்.

இதில் இவர் சுட்டும் பராசக்தி, சூலம் ஏந்திக் குங்குமம் அணிந்த பெண் தெய்வ உரு அன்று. பேருருக் கொண்ட பிரபஞ்ச ஆற்றல் அது, துன்பமிலாத நிலை, தூக்கமிலாத கண்விழிப்பு, சோம்பர் கெடுக்கும் துணிவு

துன்ப மிலாத நிலையே சக்தி

தூக்க மிலாக் கண்விழிப்பே சக்தி

என்றெல்லாம் இந்தப் பராசக்தியைச் சித்தக் கண்ணாடியில் படம் பிடித்துக் காட்டும் பாரதி, "சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி' என்றும் தெளிவுபடுத்துகிறார். இந்தத் தெளிவும் துணிவும் எல்லா இந்தியர்களுக்கும் வரவேண்டும்.

பதவியும் பாராட்டும் பெற விரும்பும் ஒருவனுக்குப் பணியும் முக்கியம். அதோடு, அப்பணி சோம்பல் இல்லாது தொடரும் நற்பணியாக இருத்தலும் வேண்டும் என்பது சொல்லாமல் விளங்க வேண்டும்.

இந்த நேரத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் ஒருமுறை கூறியது நினைவுக்கு வருகிறது. சோம்பல் என்று நாம் கருதுவது ஒன்று இல்லை. அது மூன்று என்றார்.

முதலாவதான சோம்பல், தன்னை யாரும் கட்டிப்போட வேண்டாம். நானே என்னைக் கட்டிக்கொள்கிறேன் என்று முழங்காலைக் கைகளால் கட்டிக் கொண்டு ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்கும் சோம்பல்.

அடுத்தது, ஒüவையார் சொன்ன சோம்பல் - சோம்பித் திரியேல் என்ற வகைச் சோம்பல். அதாவது, எந்த நோக்கமுமின்றிச் சோம்பேறித்தனமாகச் சுற்றித் திரிவது. இது செயலளவிலும் நிகழும், மனதளவிலும் நடக்கும்.

இவற்றையெல்லாம்விட, ஆபத்தானதும், நாட்டு வளர்ச்சிக்குக் கேடு விளைவிப்பதுமானதுதான் மூன்றாவது வகைச் சோம்பல்.

அது, தன்னால் முழுமையாகச் செய்ய முடியும் என்றாலும், இந்த அளவுக்குப் போதும் என்று ஒவ்வொரு பணியையும் அரைகுறையாகச் செய்யும் ஆபத்தான சோம்பல். இது, துறைதோறும் புகுந்து அனைத்து வளர்ச்சிகளையும் அரைகுறையாக ஆக்கி, அழிவுக்குள்ளாக்கும் ஆக்கம்.

அகசுத்தியோடு நினைத்துப் பார்த்தால், இந்த ஆபத்து நன்கு புரியும். நம்மால் அரைகுறையாக விடப்பட்ட ஆக்கப் பணிகள்தாம் எத்தனை, எத்தனை?

இதற்காக, சென்றதையே சிந்தைசெய்து கொண்டிருந்தால், இன்றும் சோம்பலில் கழியும் ஒருநாள் ஆகிவிடுமே. காலையிலேயே இந்தக் கவலைக்கு இடம் தரலாமா? வேண்டாம். இதற்கு மாற்று மருந்தாய், பாரதி ஒரு மந்திரம் சொல்கிறார்.

நீங்கள் கருதியது கைகூட வேண்டுமா, நினைத்த காரியம் நிச்சயம் வெற்றியோடு முடிய வேண்டுமா?

முன்னர் சொல்லியதுபோலவே, மூன்று படிநிலைகளைக் கொண்ட எளிய மந்திரம். ஒன்று: நன்று கருது; இரண்டு: நாளெல்லாம் வினை செய்; மூன்று: இனி வேறொன்றும் செய்ய வேண்டாம். வேலை முடிந்துவிடும். அதாவது, நினைப்பது முடியும்.

நன்றாய் இருக்கிறதே. இதை என்று தொடங்கலாம் என்று நாள் பார்க்கிறீர்களா? நாளைக்கு என்று உள்மனம் சொல்கிறதா? சந்தேகமே வேண்டாம். உங்களுக்குள்ளும் இருக்கிறது சோம்பல். கூடவே வரும் மறதி. அது கொண்டுவரும் துயில்.

வேண்டவே வேண்டாம் என்கிறீர்களா? மறுபடியும் சோம்பல் தவிர்க்க, சோம்பலைத் தவிர்த்து இந்தக் கட்டுரையை முதலில் இருந்து படியுங்கள்...

கட்டுரையாளர்: துணைப் பேராசிரியர், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, புதுச்சேரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT