கட்டுரைகள்

பாதுகாக்கவா? பாழாக்கவா?

சேமிப்புக் கிடங்கு இல்லாததால் திறந்தவெளியில் கிடக்கும் நெல் மூட்டைகள்' எனும் தலைப்பில் அண்மையில் "தினமணி'யில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

ஜெயபாஸ்கரன்

சேமிப்புக் கிடங்கு இல்லாததால் திறந்தவெளியில் கிடக்கும் நெல் மூட்டைகள்' எனும் தலைப்பில் அண்மையில் "தினமணி'யில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

நமது நாட்டில் பல்வேறு வகையான உணவுப் பொருள்கள், பெருமளவில் ஆங்காங்கே வீணாவது பற்றிய செய்திகள், ஊடகங்களில் வெளிவருவது என்பது ஒரு நெடுங்காலத் தொடர்கதையாக இருக்கிறது.

முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவுமின்றித் திறந்தவெளிகளில் கிடத்தப்படுகிற உணவுத் தானிய மூட்டைகள் எலிகளுக்கு இரையாகின்றன; கரையான்களால் அரிக்கப்படுகின்றன; நெருப்பினால் சாம்பலாகின்றன; நீரினால் மட்கிப் போகின்றன; வெயில் மற்றும் காற்றினால் வீரியமிழக்கின்றன; ஈரப்பதம் காரணமாக முளைத்து விடுகின்றன; பல இடங்களில் திருடப்படுகின்றன.

லட்சக்கணக்கான நமது விவசாயிகளின் வலியிலும் வேதனையிலும் வியர்வையிலும் கடனிலும் ஏழ்மையிலும் ஏமாற்றங்களிலும் பரிதவிப்பிலும் பதைபதைப்பிலும் விளைந்து கரையேறுகிற உணவுத் தானியங்கள் மீது நமது அரசுகளின் நிர்வாக அமைப்புகள் காட்டுகிற அலட்சியம் கண்கூடானவை, கவலைக்குரியவை.

தமிழ்நாட்டில் மட்டுமன்றி இந்திய அளவிலும் ஆங்காங்கே இப்படித்தான் நடக்கிறது. உணவுத் தானியங்களின் பாதுகாப்பு தொடர்பாக இன்று வரையிலும் ஓர் உறுதியான தீர்வை நமது அரசுகளால் எட்ட முடியவில்லை.

அழுகி விடுகின்ற வாய்ப்புள்ள ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் மற்றும் காய்கனி வகைகளுக்கு மின்சாரச் செலவு மிகுந்த குளிர்சாதனக் கிடங்குகள் ஆங்காங்கே நிறையவே வாய்த்திருக்கின்றன. ஆனால், அழுகாத தானிய வகைகளுக்கு பராமரிப்புச் செலவுகள் குறைவான சாதாரணக் கிடங்குகள்கூட இன்றளவும் சரியாக வாய்க்கவில்லை.

"பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு முறையாகப் பகிர்ந்து கொடுக்க முடியாத நிலையில், மத்திய, மாநில அரசுகளின் கிடங்குகளில் வீணாகிக் கொண்டிருக்கிற உணவுத் தானியங்களையும், பிற உணவுப் பொருள்களையும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யலாம்' என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்த தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகிய இருவரும் 2010-ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய அரசுக்கு ஆலோசனை வழங்கினர்.

"அது நடைமுறைச் சாத்தியமற்ற யோசனை. வீணாகிக் கொண்டிருக்கிற உணவுத் தானியங்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்வது குறித்து வேண்டுமானால் பரிசீலிக்கலாம்' என்று உடனடியாக ஒரு மாற்றுக் கருத்தைத் முன்வைத்தார் அப்போதைய மத்திய வேளாண் மற்றும் உணவுத் துறை அமைச்சராக இருந்த சரத் பவார்.

"நாங்கள் ஆலோசனை சொல்லவில்லை, அரசுக்குக் கட்டளையிட்டிருக்கிறோம்' என்று நீதிபதிகள் சொல்ல, "கட்டளையை ஏற்றுக் கொள்கிறோம்' என்றார் சரத் பவார். நாடாளுமன்றத்திலும் இதுதொடர்பான அமளி நடந்தது.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். மரபார்ந்த தங்களது விவசாய நிலங்களை விற்றுவிட்டு வேலை தேடி வெளியேறி எங்கெங்கோ சென்று வேரற்றுப் போகின்றனர். இந்திய அளவில் 1997 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் மட்டும் 1,50,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்குப் பிறகான புள்ளி விவரங்களில் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது.

இந்தியாவில் மொத்தத் தற்கொலையாளர்களில் பெரும்பான்மையினர் விவசாயிகள். மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில்தான் தற்கொலைகள் அதிகம் நிகழ்கின்றன.

காரணம், மேற்குறிப்பிட்ட மாநிலங்கள் யாவும் விவசாயம் செய்யும் மக்களும் வேளாண்மை நிலப்பரப்புகளும் மிகுந்தவை. தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை விவசாயத்தில் முதலீடு செய்து அதற்கு வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வோர் நம் நாட்டில் உண்டு.

ஆனால், விவசாயத்தையே தொழிலாகச் செய்து வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்கிற விவசாயிகள் இந்திய அளவில் சில ஆயிரம் பேர்கூடத் தேறமாட்டார்கள். அவர்கள் வருமான வரி செலுத்தி வாழ வேண்டாம், குறைந்தது வேட்டி கட்டிக் கொண்டு வாழ்ந்தாலே போதும் என்ற நிலையே மேலோங்கியிருக்கிறது.

இந்திய மக்கள் அனைவருக்கும் தரமான, போதுமான, உணவு தொய்வின்றித் தொடர்ந்து கிடைக்க வேண்டுமெனில், அவற்றை உற்பத்தி செய்கிற விவசாயிகள் அனைவரும் மிகக் கவனமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அது நடக்கவில்லை.

அவர்கள் விளைவித்த உணவுப் பொருள்களாவது முறையாகப் பாதுகாக்கப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை.

ஒருவேளை, பஞ்சமின்றியும் பசியின்றியும் ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் மூன்று வேளை உணவும் உத்தரவாதப்படுத்தப்பட்டு அபரிமிதமாகக் குவிந்து கிடப்பதால் அவற்றை ஏற்க ஆளின்றி உணவுத் தானியங்கள் வீணாகிப் போகின்றனவா என்றால் அப்படியும் இல்லை.

இங்கே பிரச்னை என்னவென்றால், உணவு தானிய உற்பத்தி, பாதுகாப்பு, முறையான விநியோகம் எனும் மூன்று நிலையில், முதல் நிலையில் இருக்கிற விவசாயிகள் மட்டுமே சரியாக இருக்கிறார்கள் என்பதுதான், தங்களது பிள்ளைகள் சாப்பிடும்போது ஒரு பருக்கையை வீணாக்கினாலும் தங்களது உழைப்பின் நிலையை விளக்கிக் கண்டிப்பவர்கள், வேர்க்கடலை பிடுங்கப்பட்டுவிட்ட பின்னரும் அந்த மண்ணில் தப்புக் கடலையை (பிடுங்கும்போது மண்ணிலேயே தங்கிவிட்ட கடலை) களை வெட்டியைக் கொண்டு தேடுகிறவர்கள், நெல் கட்டுகளை அடித்து நெல் உதிர்ந்த பின்னரும் நெல் தாள்களை அடுக்கி வைத்து ஒரு வாரம் கழித்து அந்தத் தாள்களிலும் மாடுகளை மிதிக்கவிட்டு நெல்மணிகளைச் சேகரித்து அவற்றைத் தங்களது உணவுக்காகப் பயன்படுத்திக் கொள்பவர்கள் விவசாயிகள்.

வைக்கோல்களைக் கொண்டே ஒரு குதிர் அமைத்து அதில் தங்களது நெல்லைக் கொட்டி வைத்து அந்த நெல்லின் பொன்னிறம் மாறாமல் ஆண்டுக்கணக்கில் பாதுகாக்கும் கலையும் விவசாயிகளுக்குத் தெரியும்.

ஆனால், நன்கு கற்றுத் தேர்ந்த நமது நிர்வாக அமைப்புகளுக்கு இவையெல்லாம் தெரியவில்லை என்பதையே திறந்தவெளிகளில் அடுக்கப்பட்டு வீணாகும் உணவுத் தானியங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

நெல் மூட்டைகளை திறந்தவெளியில் கிடத்துவதன் விளைவாகவும், பிற உணவுத் தானிய மூட்டைகளை வீணாக்குவதன் விளைவாகவும் நமது விவசாயிகள் மறைமுகமான வெளியில் சொல்லத் தெரியாத பல உளவியல் பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர் என்பதை மட்டும் நாம் உறுதியாகச் சொல்ல முடியும்.

மிகக் கடுமையான உழைப்பு, பூச்சி மருந்துகள், பணம், தண்ணீர், தேவையான காலம் போன்றவற்றால் பல கட்டங்களில் மதிப்புக் கூட்டப்பட்டு விளைகிற நெல்மணிகள், களத்து மேட்டிலோ, அறுவை இயந்திரத்தின் வாயிலாகவோ தூய்மையான குவியல்களாக மாறி கோணிகளில் அடைபடும் வரையிலும் விவசாயிகளின் பேருழைப்பைக் கோருகின்றன.

இவ்வாறாகப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து உழைத்து வளர்த்து மதிப்புக் கூட்டி அறுவடை செய்து, விற்பனை செய்யப்படுகிற நெல் மூட்டைகள் பாழாக்கப்படுகின்றன என்றால், அவற்றின் பொருட்டு செலவழிக்கப்பட்ட பணம், இடப்பட்ட பூச்சி மருந்து வகைகள், பாய்ச்சப்பட்ட தண்ணீர், நெல்மணிகளாக அவை முழுமையடையத் தேவைப்பட்ட காலம், அவற்றின் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட கடுமையான உழைப்பு என அனைத்துமே ஒரே நேரத்தில் பாழடிக்கப்பட்டுவிடுகின்றன என்றே பொருள் கொள்ள வேண்டும்.

ஒரு பொருளையோ, உணவையோ, உணவுத் தானியத்தையோ பாழாக்குவதற்கு முன்பாக, மாய்ந்து மாய்ந்து நாம் அவற்றுக்கு மதிப்புக் கூட்டிக் கொண்டிருக்கிறோம் என்றால் அது வேதனையானது மட்டுமல்ல, ஒரு வகையில் விபரீதமும் ஆகும். அதாவது, படாதபாடு பட்டு உருவாக்கியவற்றை பட்டென்று போட்டு உடைக்கிறோம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த நெல்லுக்குத் தண்ணீர் கேட்டுதான் கடையடைப்புகளும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடக்கின்றன. போராட்டங்கள் வெடிக்கின்றன. வழக்குகள் நடக்கின்றன. வட்டிக்குக் கடன்கள் வாங்கப்படுகின்றன. உரங்களும் இன்னபிற தளவாடங்களும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

ஆனால், இவ்வளவு களேபரங்களுக்கும் காரணமாக இருந்து நாயகனாக மலர்ந்த நெல்மணிகளின் மூட்டைகள் நடுத்தெருவில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.

எந்தவொரு பொருளுக்கும் மாய்ந்து மாய்ந்து மதிப்புக் கூட்டத் தெரிந்த நமக்கு, அந்தப் பொருளை மதிக்கத் தெரியவில்லை என்பதே கசப்பான உண்மை.

விவசாயிகள், விவசாயத் தொழில், விவசாய விளை பொருள்கள் ஆகிய இம்மூன்றையும் சிறப்பித்துப் பாதுகாப்பதற்குரிய எத்தகையத் தொலைநோக்குத் திட்டமும் நமது அரசுகளிடம் இல்லை. அதன் விளைவாகவே, இந்தியா முழுவதும் கிடங்குகளிலும் திறந்தவெளிகளிலும் பல லட்சம் டன் உணவுத் தானியப் பொருள்கள் வீணாகிக் கொண்டிருக்கின்றன.

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி' என்று தொடங்கி, "கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி' என்று முடியும் ஒரு சித்தர் பாடல், அரும்பாடுபட்டு நமது உழவர்கள் உருவாக்கிக் கொடுக்கிற தானிய மணிகளுக்கும் பொருந்துகிறது!

கட்டுரையாளர்: எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT