கட்டுரைகள்

தத்தெடுப்பு அல்ல, முன்மாதிரி!

சமீபகாலமாக மத்திய அரசின் ஒரு திட்டத்தை ஊடகங்கள் தவறாகப் புரிந்துகொண்டு செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

க. பழனித்துரை

சமீபகாலமாக மத்திய அரசின் ஒரு திட்டத்தை ஊடகங்கள் தவறாகப் புரிந்துகொண்டு செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரிக் கிராம தத்தெடுப்புத் திட்டம் என வர்ணித்து செய்திகள் வெளிவருகின்றன. அந்தத் திட்டம் கிராமத் தத்தெடுப்புத் திட்டம் அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு கிராமத்தைத் தேர்வு செய்து முன்மாதிரிக் கிராமமாக மாற்றிட கிராமப் பஞ்சாயத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.

இந்தப் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கிராம அளவில் ஒரு மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கிராமத்தைத் தேர்வு செய்து கொடுத்துவிட்டனர்.

இந்தச் செய்திகள் ஊடகங்களில் வரும்போது நம் பஞ்சாயத்துத் தலைவர்கள் பலர், நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து, தங்கள் கிராமத்தை இந்த முன்மாதிரிக் கிராமத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுகோள் வைக்கின்றனர். ஏனென்றால், இந்தத் திட்டத்தின் மூலம் தங்கள் கிராமத்துக்கு நிதி உதவி கிடைக்கும் என்று எண்ணி இப்படிப்பட்ட வேண்டுகோளை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வைக்கின்றனர்.

அதேநேரத்தில், மத்திய அரசின் இந்தப் புதிய திட்டத்தின் வரையறைக்கு உள்பட்டு கிராமங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என மக்கள் பிரதிநிதிகளை அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அந்த அடிப்படையில்தான் கிராமங்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றன.

இந்தப் புதிய திட்டம்தான் என்ன? பொதுவாகவே கிராம மேம்பாடு, மாதிரி கிராமம் என்றாலே நம் நினைவுக்கு வருபவர் மகாத்மா காந்தி. அவரே கூறியிருக்கிறார்: ஒரு கிராமத்தை முன்மாதிரிக் கிராமமாக மாற்றுவது என்பது ஒரு வாழ்நாள் செயல்பாடு என்று.

கிராமத்தில் மாற்றம் கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. எனவே, ஒரு மாதிரிக் கிராமத்தை உருவாக்குவது என்பது ஒரு வித்தை அல்ல. மிகப் பெரிய கடின உழைப்புக்குப் பிறகு வருவது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்தப் புதிய மாதிரிக் கிராமங்கள் இன்று பல மாநிலங்களில் பஞ்சாயத்துத் தலைவர்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில்தான் இந்தத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை அளிப்பதால் அவர்தான் இந்த முன் மாதிரிக் கிராமத்தை உருவாக்கப் போகிறார் அல்லது உருவாக்க வேண்டும் என்று நினைப்பது முற்றிலும் தவறு.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணி என்பது மிகக் குறைவு. நாடாளுமன்ற உறுப்பினர்களை இத்திட்டத்தில் இணைத்திருப்பது பாராட்டுக்குரியது. ஏனென்றால், அவர்கள் நிதி முழுவதும் கட்டடங்களுக்கே ஒதுக்கப்படும் நிலையில், கிராமப் பணிக்கும் ஒதுக்கி கிராம மேம்பாட்டுக்காகச் செயல்பட வைத்தது பாராட்டுக்குரியதுதான்.

அதைவிட, ஒரு கிராமத்தை மாற்றுவதில், வளர்ச்சி மற்றும் மேம்பாடு கொண்டுவருவதில் எவ்வளவு இடர்பாடுகள் இருக்கின்றன என்பதை நம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் புரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாகும். இந்தத் திட்டத்தில் அதிகப் பணி கிராமப் பஞ்சாயத்துக்குத்தான் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தத் திட்டத்தின் மூலக்கூறு கிராமப் பஞ்சாயத்தும், கிராம மக்களும்தான் என்பதை இந்தத் திட்டத்துக்கான விளக்கக் கையேட்டை படித்தால் நாம் புரிந்து கொள்ளலாம். மக்களின் பங்கேற்புடன் வளர்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டம் ஒன்றை சிற்றூராட்சிகள் தயாரிக்க வேண்டும்.

இந்தத் தொலைநோக்கு முன்மாதிரிக் கிராம மேம்பாட்டுத் திட்டத்தை எப்படித் தயாரிக்க வேண்டும், இதற்கு யார் உதவ வேண்டும், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய எப்படி மத்திய, மாநில அரசின் திட்டங்களை இந்தக் கிராம மேம்பாட்டுத் திட்டத்தில் ஒன்றிணைப்பது, நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியை கிராமத் திட்டத்துக்கு எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற விளக்கங்கள் அனைத்தும் இந்தத் திட்டத்துக்கான விளக்கக் கையேட்டில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமே பஞ்சாயத்துகளை வலுப்படுத்துவதுதான். இதைவிட மிக முக்கியமாக, கிராம மக்களின் மனோபாவத்தில், நடத்தையில், வாழ்க்கை முறையில், செயல்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

"பொதுமக்களை பயனாளிகளாகப் பார்க்காமல், பொறுப்புள்ள குடிமக்கள் தங்கள் தலைவிதியை நிர்ணயிக்கும் பங்குதாரராகச் செயல்பட்டு காந்தியின் கனவுக் கிராமத்தை உருவாக்குவதற்காக ஒரு திட்டம் தயாரிப்பதுதான் இதன் நோக்கம்' என்று இந்தத் திட்டத்தின் நோக்கம் பற்றி விளக்கும்போது பிரதமர் நரேந்திர மோடி தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

அதேபோல், எல்லாத் தரப்பு மக்களின் பங்கேற்பு, ஆண் - பெண் சமத்துவம், சமூக நீதி, சுத்தம் - சுகாதாரம் பேணுதல், உடல் நலம் பேணுதல், உழைப்பை மதித்தல், இயற்கை வளம் பேணுதல் - பாதுகாத்தல், சமூக நல்லிணக்கம், கிராம அமைதி போன்றவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

இந்த மாதிரிக் கிராமம் ஒட்டுமொத்தமாக வளர்ச்சி அடைய வேண்டும், அனைவரும் மேம்பாடு அடைய வேண்டும், அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கை நிலை உயர வேண்டும், அடிப்படை வசதிகள் பெருக வேண்டும், வாழ்வாதாரம் பெருக வேண்டும், ஏற்றத்தாழ்வு குறைய வேண்டும், மக்களின் பங்கேற்பு அதிகரிக்கப்பட வேண்டும், அத்துடன் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான மக்கள் திரட்சி என்பது இந்தக் கிராமங்களில் ஏற்பட வேண்டும்.

இந்தத் திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு விதிக்கப்பட்டுள்ள கடமை மற்றும் பொறுப்புகள் என்பன கிராமப் பஞ்சாயத்தைத் தேர்ந்தெடுத்தல், இந்தத் திட்டத்தில் மக்களை இணைக்க ஊக்குவித்தல், மக்கள் திட்டமிடலுக்கு உதவுதல், நிதித் தேவையை நிறைவு செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய நிதியிலிருந்து தருதல் மற்றும் நன்கொடை தருவோரிடமிருந்து நிதியைப் பெற்றுத் தருதல், தொடர்ந்து கிராம மேம்பாட்டுச் செயல்பாடுகளைக் கண்காணித்து மேம்பாடு அடைய உதவுதல்.

மேற்கூறிய பணிகளைத் தவிர, மற்ற அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியது கிராமப் பஞ்சாயத்தும், அங்கு வாழும் மக்களும்தான். இதற்கு மிகப் பெரிய மக்கள் தயாரிப்பு கிராமங்களில் நடைபெற வேண்டும்.

இந்தத் திட்டத்தில் 31 செயல்பாடுகள் கிராமங்களில் நடைபெற வேண்டும் என இதன் விளக்கக் கையேட்டில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இந்தக் கையேடு பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு ஓர் அற்புதமான வழிகாட்டு நூல். அதில் கூறப்பட்டுள்ள பணிகளை கிராமங்களில் நிறைவேற்றினால் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது என்பதை நம் ஊராட்சித் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதில் உள்ள எல்லாப் பணிகளும் மக்களின் பங்கேற்புடன், அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு, கிராமத்தில் நடைபெற வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால், இவற்றை நம் ஊடகங்கள் சரியாகப் புரிந்துகொள்ளாமல் நாடாளுமன்ற உறுப்பினரின் கிராமத் தத்தெடுப்புத் திட்டம் என சித்திரித்து வருகின்றன.

அப்படிக் கிராமத் தத்தெடுப்பு என்ற வார்த்தை எங்காவது அந்தத் திட்ட விளக்கக் கையேட்டில் கையாளப்பட்டிருக்

கிறதா என்பதைத் தேடிப் பார்த்தேன். எந்த இடத்திலும் கிராமத் தத்தெடுப்பு என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை.

கிராமத்தில் உள்ள அனைவரும் அனாதைகள் அல்லர், அவர்களைத் தத்தெடுக்க. அவர்கள் அனைவரும் இந்த நாட்டின் மதிப்புமிக்க குடிமக்கள். இந்தத் தத்தெடுத்தல் என்ற வார்த்தை நம் கிராம மக்களை அவமானப்படுத்துவதாகும்.

எனவே, நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மையில் இந்தத் திட்டத்தில் பங்கேற்க முயலும்போது, மக்களுடன் சேர்ந்து பணி செய்கிறோம் என்றுதான் அவர்கள் கூற வேண்டுமே தவிர, அந்தக் கிராமத்தை நான் தத்தெடுத்துக் கொண்டேன் என்று கூறக் கூடாது. அப்படிக் கூறினால், அந்தக் கிராமம் நம் பாதுகாப்பில், நம் அரவணைப்பில், நம் ஆதிக்கத்தில் இருப்பதாகப் பொருள்.

இன்று உரிமைகள் சார்ந்து மேம்பாட்டுச் செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், நன்கொடை அடிப்படையில் மேம்பாட்டுச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தும் சொல்லாடலை நாம் பயன்படுத்துவதை தவிர்த்திடல் வேண்டும்.

கட்டுரையாளர்: பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT