கட்டுரைகள்

போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம்...

மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் மருந்துகள் விற்பனை செய்யக் கூடாது என்ற விதி நடைமுறையில் உள்ளது

எம். அருண்குமார்

மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் மருந்துகள் விற்பனை செய்யக் கூடாது என்ற விதி நடைமுறையில் உள்ளது. ஆனால், பெரும்பாலான மருந்தகங்களில் நடைபெறும் விற்பனையில், பெரும்பாலானவை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல்தான் நடைபெறுகிறது என்பது வருத்தத்துக்குரியது.
 அதேநேரத்தில், அந்த மருந்து விற்பனைக்கான ரசீது மருந்தகங்களால் வழங்கப்படுவதில்லை. அதனால், அந்த மருந்தைப் பயன்படுத்தும் நபருக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டாலோ அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலோ அந்த நபர் சட்டபடி மருந்தகத்தின் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
 தற்போது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், உடல் பருமனாக இருப்பவர்களை இளைக்கச் செய்வதற்கும், ரத்த அழுத்தம், மதுவுக்கு அடிமையாகி இருப்பவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்கும், ஆண்மைக் குறைவை சரி செய்வதற்கும் என பலதரப்பட்ட உடல் கோளாறுகளுக்கான மருந்துகளின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
 குறிப்பாக, சர்க்கரை நோய், உடல் பருமனைக் குறைத்தல், ஆண்மைக் குறைவை சரி செய்தல் ஆகியவற்றுக்கான மருந்துகளின் விளம்பரங்கள் அதிக அளவு தொலைக்காட்சி, இணையதளங்கள் வாயிலாக செய்யப்படுகின்றன.
 அந்த மருந்து உண்மையான தரத்துடன் தயாரிக்கப்பட்டதா, போலியானதா என்பதை எவரும் அறிவதில்லை.
 பொதுவாக முன்பெல்லாம் ஒரு பொருளை வாங்குவது என்றால் நேரடியாக கடைக்குச் சென்று பொருளின் தரம், விலை ஆகியவற்றை மற்ற கடைகளோடு ஒப்பிட்டுப் பார்த்துதான் வாங்கி வந்தனர். ஆனால், இப்போது இணையவழி வர்த்தகத்தால் பொருளின் தரம், விலை ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்க்க முடியாத நிலை உள்ளது.
 இருந்தாலும், இணைய முறையில் வீட்டில் இருந்தபடியே வாங்குவதைத்தான் பலரும் விரும்புகின்றனர். அவ்வாறு வாங்கி பயன்படுத்தும்போது, அந்த மருந்துகளால் நோய் கட்டுப்படுகிறதா அல்லது அதிகப்படுகிறதா என்பது அதனை வாங்கி பயன்படுத்துவோருக்கு தெரிவதில்லை.
 மருந்தின் தரம் குறித்து தெரியாமல் வாங்கி பயன்படுத்துவோருக்கு நோய் கட்டுப்படாததுடன் பக்க விளைவுகள் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
 மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் தரமில்லாத, போலியான, காலாவதியான மருந்துகளை உள்கொள்ளும் நோயாளிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வயிற்றில் எரிச்சல், வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், தோலில் கொப்பளங்கள் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.
 ஆனால், சர்க்கரை நோய், இருதய நோய், எய்ட்ஸ், புற்றுநோய் உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்களுக்கு வழங்கப்படும் உயிர் காக்கும் மருந்துகளுக்குப் பதில், போலி மருந்துகளை உள்கொண்டால் நோய் கட்டுக்குள் இருக்காது. நோயின் தீவிரம் அதிகரித்து உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
 இத்தகைய நிலையில், போலியான மருந்துகளின் விற்பனையைக் கட்டுப்படுத்த பல்வேறு நடைமுறைகளை அரசு மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பத்திரிகைகள், இதழ்களில் வெளியாகும் போலி விளம்பரங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், தொலைக்காட்சி, இணையதளம் ஆகியவற்றில் வெளியாகும் போலி விளம்பரங்களை வரையறைப்படுத்தவோ, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவோ முடியுமா என்பது தெரியவில்லை.
 மருந்துகள் கட்டுப்பாட்டு சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு பரிந்துரைகளை தமிழக அரசு அவ்வப்போது அனுப்பி வருகிறது.
 போலியான, தரமில்லாத, காலாவதியான மருந்துகள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் அதற்கென தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது. ஆனாலும், அவ்வாறு புகார் தெரிவிக்க எவரும் முன்வருவதில்லை.
 தமிழகத்தில் போலி மருந்துகள் குறித்து மருந்தகங்கள், மருந்து சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றில் ஆய்வு செய்ய 146 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, மருந்துகள் உற்பத்திக் கூடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள 15 மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், எய்ட்ஸ், ஆஸ்துமா உள்ளிட்ட முழுவதும் குணமளிக்க முடியாத, ஆனால், மருந்துகளின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே வைக்க முடியும் என்ற வகையில் 54 நோய்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
 அந்தப் பட்டியலில் உள்ள நோய்களை சில மருந்துகளின் மூலம் குணமாக்க முடியும் என்று வெளியிடப்படும் போலி விளம்பரங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, போலி விளம்பரங்களை வெளியிட்டவர்கள் மீது கடந்த ஆண்டில் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 தமிழகத்தில் கடந்த ஆண்டில் 10,001 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 8,756 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 ஆனாலும், போலி மருந்துகளின் உற்பத்தி, விற்பனை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
 போலி மருந்துகள், தரமில்லாத மருந்துகள், கொள்முதல் ரசீது இல்லாத மருந்துகள், ரசீது இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட மருந்துகள், தரமில்லாத அல்லது போலி மருந்துகள் தயாரிக்கும் மருந்து உற்பத்திக் கூடங்கள், உரிமம் இல்லாத மருந்தகங்கள், நாளிதழ், இதழ்களில் வெளியிடும் மருந்து தொடர்பான போலி விளம்பரங்கள் ஆகியவற்றின் மீது கடும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகையோருக்கு வழங்கப்படும் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
 போலி மருந்துகள் குறித்து விளம்பரங்களைத் தடை செய்வதற்குத் தேவையான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
 அதேநேரத்தில், போலி மருந்தை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும். போலிகளைத் தவிர்ப்போம், உயிர்களைக் காப்போம்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT