குழந்தைகளைக் காப்போம்!
கடந்த ஆண்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடுக்கடுக்காக ஏற்பட்ட பச்சிளம் குழந்தைகளின்
கடந்த ஆண்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடுக்கடுக்காக ஏற்பட்ட பச்சிளம் குழந்தைகளின் மரணம் நம் எல்லோரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. இந்தக் குழந்தைகளின் மரணம் நமது நாட்டின் சுகாதார நிலையை, குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தின் அவல நிலையை எடுத்துக் காட்டுகிறது.
ஐய்ச்ஹய்ற் ஙர்ழ்ற்ஹப்ண்ற்ஹ் தஹற்ங் என்று சொல்லப்படும் சிசு இறப்பு விகிதம், ஒரு நாட்டின் வளர்ச்சியை, குறிப்பாக நாட்டு மக்களின் உடல் நலனை எடைபோடும் அளவுகோலாகக் கருதப்படுகிறது. சிசு இறப்பு விகிதம் என்பது, பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் ஒரு வயது நிறைவடைவதற்குள் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
ஜப்பான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் ஒற்றை இலக்க எண்ணாக உள்ள இந்த இறப்பு விகிதம், இந்தியாவில் 42 விழுக்காடாக உள்ளது. அதாவது, பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 42 குழந்தைகள் ஒரு வயது நிறைவடைவதற்குள் இவ்வுலகை விட்டு மறைந்து விடுகின்றனர்.
இந்த விஷயத்தில், பாகிஸ்தான், வங்க தேசம் போன்ற ஒரு சில தெற்காசிய நாடுகளும், ஆப்பிரிக்க நாடுகளுமே நம்மை விட பின்தங்கிய நிலையில் உள்ளன. வளைகுடா நாடுகளிலும் சிசுக்களின் இறப்பு விகிதம் நமது நாட்டைவிட குறைவாகவே உள்ளது.
நமது நாட்டில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைப் பிரதிபலிக்கும் விதமாக, சிசுக்களின் இறப்பு விகிதமும் நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையே வேறுபடுகிறது. அது மட்டுமல்ல, ஆண், பெண் இரு பாலரிலும், ஏழை, பணக்காரர்களிலும், வெவ்வேறு சமூகப் பிரிவினர்களிடையேயும், மாநிலங்கள் வாரியாகவும் இது பெரிதும் வேறுபடுகின்றது.
நகரங்களில் 28 விழுக்காடாக உள்ள சிசு இறப்பு விகிதம், கிராமப்புறங்களில் 46 விழுக்காடாக உள்ளது. நகரங்களுடன் ஒப்பிடுகையில் கிராமங்களில் மருத்துவ வசதி குறைவாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணம். அதேபோன்று, ஆண் சிசுக்களின் இறப்பு விகிதம் 41 விழுக்காடாகவும், பெண் சிசுக்களின் இறப்பு விகிதம் 44 விழுக்காடாகவும் உள்ளது.
பிறப்பதற்கு முன்பே வயிற்றில் வளரும் சிசு பெண் என்று தெரிந்தால், கருவையே கலைக்க முற்படுபவர்களும், பெண் சிசுக் கொலைகளும் நிறைந்த நமது சமூகத்தில் பெண் சிசுக்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதில் வியப்படைய ஒன்றும் இல்லை.
பல குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அலட்சியம் காட்டப்படுவதையும், அவர்களுக்கு சத்தான உணவு வழங்குவதில் பாரபட்சம் காண்பிக்கப்படுவதையும் நாம் காண முடியும்.
மாநிலங்கள் வாரியாகப் பார்த்தால், அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சிசு இறப்பு விகிதம் 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளது.
ஏனைய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மணிப்பூர் (11 விழுக்காடு), கோவா (11 விழுக்காடு), கேரளா (12 விழுக்காடு) ஆகிய மாநிலங்களில் சிசுக்களின் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது.
ஆயினும், இந்த மாநிலங்களாலும் சிசு இறப்பு விகிதத்தை ஒற்றை இலக்க எண்ணுக்குக் குறைக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் சிசு இறப்பு விகிதம் 22 விழுக்காடாக உள்ளது (ஆயிரம் குழந்தைகளில் 22 குழந்தைகள் ஒரு வயது நிறைவடைவதற்குள் உயிரிழக்கின்றன).
இந்திய அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் விளைவாக, நாட்டின் சிசு இறப்பு விகிதம் கடந்த 40 வருடங்களில் படிப்படியாகக் குறைந்து கொண்டிருக்கிறது. 1972-ஆம் ஆண்டில் 139 விழுக்காடாக இருந்த சிசு இறப்பு விகிதம், அதற்கடுத்த பத்து ஆண்டுகளில் (1982-இல்) 105-ஆகக் குறைந்தது.
1992-ஆம் ஆண்டில் 79 விழுக்காடு, 2002-ஆம் ஆண்டில் 63 விழுக்காடு என்று படிப்படியாகக் குறைந்து, 2012-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி 42 விழுக்காடாக உள்ளது.
பிறந்து ஒரு ஆண்டுக்குள் உயிரிழக்கும் குழந்தைகளின் விகிதம் ஓரளவு குறைந்துவிட்ட போதிலும், நமது நாட்டில், பிறந்த அன்றே இறந்து போகும், அதாவது பிறந்து 24 மணி நேரத்திற்குள் இறந்து போகும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. உலக அளவில், பிறந்த அன்றே உயிரிழக்கும் குழந்தைகளில் 29 விழுக்காட்டினர் இந்தியக் குழந்தைகளே என்பது வேதனையளிக்கக் கூடிய செய்தி.
2012-ஆம் ஆண்டில், இந்தியாவில் மட்டும் சுமார் 10.13 லட்சம் குழந்தைகள் பிறந்த 24 மணி நேரத்திற்குள் உயிரிழந்துள்ளன. நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்களின் உதவியுடன் குழந்தை பெறுவதன் மூலமும், பேறு காலத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு உடனடிச் சிகிச்சை பெறுவதன் மூலமும் இப்படிப்பட்ட சிசு மரணங்களின் அளவை பாதியாகக் குறைக்க முடியும் என்கிறது ஓர் ஆய்வு.
சங்ர் ய்ஹற்ஹப் க்ங்ஹற்ட் என்று சொல்லப்படும், பிறந்து ஒரு மாதத்திற்குள் ஏற்படும் இறப்புகளும் இந்தியாவில் மிக அதிகம்தான். பொருளாதார ரீதியில் மேம்பட்ட குடும்பங்களில் 1,000 குழந்தைகளில் 26 குழந்தைகளும், கீழ்மட்டக் குடும்பங்களில் 1,000 குழந்தைகளில் 56 குழந்தைகளும் பிறந்த ஒரு மாதத்திற்குள் உயிரிழக்கின்றன.
நாட்டின் செழிப்பான மனித வளமாக உருவாக வேண்டிய சிசுக்களின் மரணம், உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு கொடுமை. குழந்தை குறைவான எடையுடன் பிறப்பது, கிருமிகளினால் தாக்கப்படுவது, பிராணவாயு குறைவால் ஏற்படும் மூச்சுத்திணறல் ஆகிய மூன்றுமே பிறந்த சில மணி நேரத்திற்குள் அல்லது சில நாள்களுக்குள் ஏற்படும்.
பெரும்பாலான பச்சிளம் குழந்தைகளின் மரணத்திற்கு முக்கிய காரணங்கள் என்று ஆய்வுகள் குறிப்பிடுபவை: தாயின் ஊட்டச்சத்துக் குறைபாடு, குறிப்பிட்ட கால இடைவெளியின்றி பிள்ளைகள் பெறுவது, மிகவும் இள வயதில் திருமணம் செய்துகொள்வது, இளம் வயதில் கருத்தரிப்பது போன்றவை.
இந்தக் காரணங்களினால், குழந்தை குறைந்த எடையுடன் பிறப்பதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. நமது நாட்டில் கருவுற்றிருக்கும் பெண்களில் சுமார் 75 விழுக்காட்டினருக்கு ரத்தசோகை இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பெண்கள் கருவுற்றிருக்கும்போது அவர்களின் எடை சுமார் 10 கிலோ அதிகரிக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் கருவுற்றிருக்கும் பெண்களின் எடை சராசரியாக ஐந்து கிலோகூட அதிகரிப்பதில்லை. ஊட்டச்சத்து இல்லாத தாய்மார்கள் பெற்றெடுக்கும் சிசுக்கள் எடை குறைவாகப் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சிசுக்களின் மரணத்துடன் நெருங்கிய தொடர்புடைய மற்றொரு அவலம், பேறு காலத்தில் ஏற்படும் கர்ப்பிணிகளின் மரணம். ஒவ்வொரு நாளும் நமது நாட்டில் 160 பெண்கள் பிரசவ நேரத்தில் உயிரிழக்கின்றார்கள் என்கிறது ஒரு கணிப்பு.
ஙஹற்ங்ழ்ய்ஹப் ஙர்ழ்ற்ஹப்ண்ற்ஹ் தஹற்ங் என்று கணிக்கப்படும் தாய்மார்களின் பேறுகால இறப்பு விகிதம், ஒரு லட்சம் பிரசவங்களில் எத்தனை பெண்கள் கருவுற்றிருக்கும்போது அல்லது பிரசவ சமயத்தில் அல்லது பிரசவித்து 42 மணி நேரத்திற்குள் உயிரிழக்கின்றனர் என்பதைக் குறிக்கிறது. இந்த பேறுகால இறப்பு விகிதம் இந்தியாவில் 20 விழுக்காடாக உள்ளது.
இந்த விகிதம், வளர்ச்சி அடைந்த நாடுகளில் மட்டுமல்லாமல், சீனா, இலங்கை, ஈரான் போன்ற நாடுகளில்கூட நமது நாட்டை விட மிகவும் குறைவாகவே உள்ளது.
பிரசவித்த சில மணி நேரத்தில் தாய் அல்லது சேய் இறப்பதற்கான மற்றுமொரு முக்கியக் காரணம், அவர்கள் "டெடனஸ்' போன்ற கொடிய கிருமிகளினால் தாக்கப்பட்டிருப்பது. இன்றைக்கும்கூட நமது நாட்டில் பல இடங்களில், குறிப்பாக, கிராமப்புறங்களில் வீட்டிலேயே பிரசவம் நடைபெறும் வழக்கம் இருக்கிறது.
கிராமப்புறங்களில் நடக்கும் பிரசவங்களில் மூன்றில் ஒரு பிரசவம் பயிற்சி பெறாத மருத்துவரின் உதவியுடன் நடைபெறுகின்றது. தொப்புள்கொடியைத் துண்டிக்கும் கருவி மூலமாகவும், வேறு பல வழிகளிலும் கிருமிகள் தாயையும் சேயையும் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பிரசவ சமயத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு உடனடிச் சிகிச்சை பெறமுடியாததால் தாயோ, சேயோ மரணமடைய நேரிடுகிறது. தகுந்த மருத்துவர்கள் உதவியுடன் பிரசவம் நடந்தால் இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்கலாம்.
நமது நாட்டிலுள்ள எல்லா மருத்துவமனைகளிலும் பச்சிளம் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்கான கருவிகளும் வசதிகளும் இல்லாமலிருப்பது மிகப்பெரிய குறை.
குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதற்கு தூய்மையற்ற சுற்றுப்புறச்சூழலும் முக்கிய காரணம். ஏற்கனவே ஊட்டச்சத்துக் குறைவால் பலவீனமாக உள்ள குழந்தைகள், அசுத்தமான சுற்றுச்சூழலின் காரணமாக வயிற்றுப் போக்கு, வாந்தி பேதி போன்ற நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
ஒரு வயதிற்குள் ஏற்படும் பெரும்பாலான சிசு மரணங்களுக்கு வயிற்றுப் போக்கும் அதன் விளைவாக உடலின் நீர் வற்றிப்போவதுமே முக்கிய காரணங்களாகும்.
தாய் - சேய் நலனைப் பாதுகாக்கவும், சிசு மரணங்களைத் தடுக்கவும் மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவது, கருவுற்றிருக்கும் தாய்க்கு இரும்புச்சத்து மாத்திரைகள் கொடுப்புது, சத்துணவு பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல், குழந்தைகளின் வயிற்றுப் போக்கு, பேதி போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அங்கன்வாடி ஊழியர்களும் தேசிய ஊரக சுகாதாரப் பணித்திட்டத்தின் ஆஷா ஊழியர்களும் கருவுற்ற தாய்மார்களையும், பிறந்த குழந்தைகளையும் தொடர்ந்து கண்காணித்து தாய்-சேய் நலனைப் பாதுகாக்கிறார்கள். 2005-ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசு "ஜனனி சுரக்ஷô' என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் நோக்கம், பச்சிளம் குழந்தைகளின் மரணத்தையும், பேறுகாலத்தில் ஏற்படும் தாய்மார்களின் மரணத்தையும் தடுப்பதும், பேறு காலத்தில் மருத்துவமனைகளை நாடும்படி மகளிரை அறிவுறுத்துவதும் ஆகும்.
இப்படி அரசு எடுத்துள்ள பல்வேறு முயற்சிகளினால், சிசு இறப்பு விகிதமும், பெண்களின் பேறு கால இறப்பு விகிதமும் குறைந்துள்ளது.
ஆயினும், நாட்டின் பின்தங்கிய மாநிலங்கள் பலவற்றிலும், வளர்ச்சியடைந்த மாநிலங்களில் சில பின்தங்கிய மாவட்டங்களிலும் இந்த விகிதங்கள் இன்றைக்கும் அதிகமாகவே உள்ளன.
பெண் கல்வி, பெண்களுக்கு சம உரிமை, சிறப்பான மருத்துவ வசதிகள், தூய்மையான சுற்றுச் சூழல் போன்றவற்றில் வளர்ச்சி காண்பதன் மூலமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
கட்டுரையாளர்: பொருளாதார நிபுணர் (ஓய்வு).