வெளிநாட்டு வேலை: விழிப்புணர்வு தேவை
உலகெங்கும் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை சுமார் 3 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகெங்கும் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை சுமார் 3 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சித் திட்டத்தின் 2010-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, சீனாவுக்கு அடுத்ததாக உலகின் மிகப் பெரிய விரிந்து பரவிய புலம்பெயர்ந்தவர்கள் இந்தியர்களாவர்.
மேலும், ஆசியாவிலேயே "புலம் பெயர்வதை' கூடுதலாக 0.8 சதவீதம் கொண்டுள்ள நாடு இந்தியா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்கள் ஒவ்வோர் ஆண்டும் வேலைவாய்ப்பு, படிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
இவர்கள் வெளிநாடுகளில் படிப்புக்காகச் செல்லும் முன் பெரும்பாலும் அங்குள்ள கல்லூரிகளின் தரம், அங்கு படிப்பதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை இணையதளம், அந்நாட்டில் உள்ள தெரிந்த நபர்களின் மூலம் விசாரித்து நன்கு அறிந்துகொண்டு செல்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே விவரம் தெரியாமல் மாட்டிக் கொள்கின்றனர்.
ஆனால், வேலை தேடிச் செல்பவர்கள் இதேபோல் அங்குள்ள நிறுவனங்களின் தரத்தினை தெரிந்துகொண்டுதான் செல்கின்றனரா என்றால் இல்லை.
இளநிலை பட்டப் படிப்பு, பொறியியல் படிப்புகளைப் படித்து முடித்து உள்நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்துவிட்டு, பின்னர் வெளிநாட்டிலுள்ள அதே நிறுவனத்தில் பணிக்காக இங்கிருந்து அனுப்பப்பட்டார்களேயானால் அதில் எந்தச் சிக்கலும் வரப் வாய்ப்பில்லை.
அதேசமயம், படித்து முடித்தவுடன் எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் வெளிநாடு செல்வோரின் வேலைவாய்ப்புகள் கேள்விக்குறியாக ஆகிவிடுகின்றன.
குறைந்த அளவிலான கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு தையல், கட்டுமானம், மீன் பிடித்தல், தோட்டத் தொழில், தொழிற்சாலைகள் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவோரின் நிலைமை பரிதாபத்துக்குரியது.
மலேசிய கட்டுமான நிறுவனத்துக்காக ஒடிஸôவின் கஞ்சம் மாவட்டத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு அங்கு முறையான ஊதியம், உணவு இல்லாமல் 28 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருந்தது. இதேபோல், பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்னல்பட்டு வருகின்றனர்.
அதிக ஊதியம் வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி இங்கிருந்து அழைத்துச் செல்லப்படும் தொழிலாளர்கள், அங்கு கொத்தடிமைகளாகவும், வேறு பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவதன் மூலம் படும் இன்னல்கள் அவ்வப்போது பத்திரிகைகளில் செய்திகளாக வெளிவந்தாலும், இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் வெளி உலகுக்கு தெரியாமலே போய்விடுகின்றன.
இதேபோல், படிப்பறிவு இல்லாமல் சாதாரண கூலி வேலைக்காக வெளிநாடு செல்வோரை, மத்திய - மாநில அரசுகளிடம் முறையான பதிவு பெறாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் ஏமாற்றி வருவதும் தொடர் கதையாகத்தான் உள்ளது.
தமிழக அரசின் சார்பில் வெளிநாட்டில் வேலை தேடுவோருக்காக ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனம் சென்னை கிண்டியில் இயங்கி வருகிறது.
இதன் இணையதள முகவரி www.omcmanpower.com ஆகும். நாம் வெளிநாடுகளில் எவ்வளவு ஊதியத்தில், என்ன வேலை தேடுகிறோம் என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
நமது தகுதிக்கான பணிக்கு வெளிநாட்டு நிறுவனங்கள், தமிழ்நாட்டில் நேர்முகத் தேர்வு நடத்தும்போது மேலே குறிப்பிட்ட அந்த இணையதளம் மூலமாக நமது மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதன்மூலம், அயல்நாட்டு நுழைவு இசைவு (விசா) இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், இதுபோன்ற ஓர் அமைப்பு இயங்கி வருவதுகூட பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை.
சிங்கப்பூர் வேலைவாய்ப்பு நிறுவனத்துடன் இணைந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை சார்பில் கடந்த ஜூன் 15, 16-ஆம் தேதிகளில் அந்நாட்டிலுள்ள பள்ளிகளுக்கான தமிழ் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.
இதில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் 80 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதேபோல, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பாக, படிக்கும் இளைஞர்களுக்கு கல்லூரிகளே விழிப்புணர்வு அளிப்பதுடன், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலேயே துறை சார்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த முன்வர வேண்டும்.
அதேபோல, தமிழக அரசும் வெளிநாடுகளுக்கு ஆள்களை அனுப்பும் தனியார் நிறுவனங்களின் அனுமதி, தரத்தைப் பரிசோதனை செய்து முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படிப்பறிவில்லாத, தொழில் சார்ந்த பணிகளுக்காக வெளிநாடு செல்வோருக்கு மாவட்டம்தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி தேடுவோரும் தங்கள் பணியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு சென்றால், அறிமுகமில்லாத அன்னிய நாட்டில் அவதிப்படுவதைத் தவிர்க்கலாம்.