குடும்ப வன்முறைகள்
நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்தால் அது பாதுகாப்பு என்று நாம் நம்பினால் அதைவிட முட்டாள்தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.
நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்தால் அது பாதுகாப்பு என்று நாம் நம்பினால் அதைவிட முட்டாள்தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. குடும்பத்துக்குள் நிகழும் வன்முறைகளைத் தடுக்க சட்டம் இயற்றும் அளவுக்கு நாட்டில் அத்தகைய வன்முறைகள் பெருகி உள்ளன என்பதுதான் நிதர்சனம்.
நெருங்கிய குடும்ப உறவுகளில் பலவீனமான ஒருவரை, மற்றொருவர் அல்லது மற்றவர்கள் மன உளைச்சல் ஏற்படுத்தியோ, வன்முறைகளினால் துன்புறுத்தியோ அல்லது அச்சுறுத்தியோ தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயல்வதை குடும்ப வன்முறை எனலாம்.
சேர்ந்து வாழும் இருவரில், பெரும்பாலும் தாம்பத்திய உறவில், மனைவிக்கு கணவர் இழைக்கும் கொடுமை குடும்ப வன்முறை, நெருங்கிய துணைக்குள் வன்முறை (இன்டிமேட் பார்ட்னர் வயலென்ஸ்) என்றும் சொல்லப்படுகிறது.
குடும்ப வன்முறை என்றதும், பெரும்பாலும் மகளிர் படும் இன்னல்களைப் பற்றி மட்டுமே அதிகமாகப் பேசப்படுகின்றன என்றாலும், குடும்ப வன்முறைக்கு வீட்டிலுள்ள குழந்தைகளும், முதியோர்களும்கூட இலக்காகிறார்கள் என்பதுதான் உண்மை.
வீட்டில் பெற்றோர்கள் போடும் சண்டையினால் குழந்தைகள் உளரீதியாகப் பெரிதும் பாதிக்கப்படுவதோடல்லாமல், பல குடும்பங்களில் குழந்தைகளே வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
சொன்ன பேச்சைக் கேட்கவில்லை, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறவில்லை, நேரத்துக்கு வீடு திரும்பவில்லை போன்ற பல காரணங்களுக்காக குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தும் பெற்றோர்கள் பலர்.
கண்டித்து வளர்க்கிறோம் என்ற பெயரில் குழந்தைகளைக் கட்டிப் போடுவது, இருட்டு அறையில் பூட்டி வைத்து பயமுறுத்துவது அல்லது பட்டினி போடுவது போன்ற கொடுமைகளைச் செய்யும் பெற்றோர்களுக்கும் குறைவில்லை.
அமெரிக்கா போன்ற நாடுகளில் பெற்றோர்கள் குழந்தைகளை அடிப்பது சட்டப்படி குற்றம். நமது நாட்டில் பொருளாதார அடிமட்டத்தில் உள்ள குடும்பங்களில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டு வேலைகளில் அல்லது தொழில்களில் அவர்களைப் பலவந்தமாக ஈடுபடச் செய்வதும் கொடுமையே. ஆண் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், பெண் குழந்தைகள் குடும்ப வன்முறைகளுக்கு அதிகமாக ஆளாகிறார்கள்.
உணவு, கல்வி போன்றவற்றில் பெற்றோர்கள் பாகுபாடு காட்டுவது போதாதென்று, பெண் குழந்தைகள் குடும்ப உறவினர்களினாலேயே பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதும், அதை வெளியே சொல்ல முடியாமல் அவர்கள் படும் மன உளைச்சலும் சொல்லி முடியாது. ஆண் குழந்தைகளும் வக்கிர புத்தியுடைய உறவினர்களின் பிடிக்குள் சிக்கி இயற்கைக்கு மாறான வன்புணர்ச்சிக்குப் பலியாவதும் உண்டு.
அதிகப் பரிவுடன் நடத்தப்பட வேண்டிய மனவளர்ச்சி குன்றிய அல்லது வேறு குறைபாடுகள் உள்ள குழந்தைகள்கூட சில குடும்பங்களில் பெற்றோர்களாலேயே பல விதங்களிலும் துன்புறுத்தப்படுவது கொடுமையிலும் கொடுமை.
வீடுகளில் வயதான பெற்றோர், குடும்பத் தலைவராக மதிக்கப்பட்டு வந்த காலம் மலையேறிப்போய், இன்று முதியோர் இல்லங்கள் பெருகி வருவது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால், குடும்பத்துக்குள் வாழும் முதியோர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் வெளியே தெரிவதில்லை.
வயதான காலத்தில் பொருளாதார ரீதியாகப் பிள்ளைகளைச் சார்ந்து வாழும் பெற்றோர்களுக்கு சரியான உணவு, மருத்துவ உதவி போன்றவை கிடைப்பதில்லை. பணம் காசு இல்லாத முதியோர்களின் நிலைமை இப்படி என்றால், ஓரளவு சொத்து உள்ள முதியோர்களையோ அவர்கள் பிள்ளைகள் தங்களுக்கு சொத்தை எழுதிக் கொடுக்குமாறு துன்புறுத்திக் கொண்டிருப்பார்கள். கதியற்ற பெற்றோர்களை அடித்துத் துன்புறுத்தும் குடும்பங்களும் நமது நாட்டில் உள்ளன.
அலாகாபாதில் 2013-இல் நடந்த கும்பமேளாவில் சிலர் தங்களது வயதான தாய், தந்தையரை வேண்டுமென்றே கூட்டத்தில் தொலைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள் போன்ற செய்திகள், முதியோர்களின் அவல நிலையை எடுத்துக் காட்டுகின்றன.
ஆண் ஆதிக்கத்தினால் குடும்பங்களில் உளரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவதோடல்லாமல் அடி, உதை போன்ற தாக்குதல்களுக்கும், பாலியல் வன்கொடுமைகளுக்கும் அதிகமாக ஆளாவது மகளிரே என்பது அனைவரும் அறிந்ததே.
இதில் மிக அதிகமாகப் பேசப்படுவது, எதிர்பார்த்த வரதட்சிணை கொண்டு வராத பெண்ணுக்கு அவள் புகுந்த வீட்டினர் இழைக்கும் கொடுமை. அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதும், அவளைக் கொலை செய்யும் அளவுக்கு அவளது கணவர் அல்லது புகுந்த வீட்டினர் துணிவதும் பரபரப்பாக ஊடகங்களிலும், காவல் நிலையங்களிலும் அவ்வப்போது பதிவாகிற கொடுமை.
வரதட்சிணை கொடுமையைத் தடுக்கும் விதத்தில் நமது நாட்டில் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. வரதட்சிணை கேட்பதும் கொடுப்பதும் குற்றம் என்ற வரதட்சிணை தடைச் சட்டம் 1961-ஆம் ஆண்டே அமலுக்கு வந்தது.
1986-இல் நுழைக்கப்பட்ட சட்டப் பிரிவு 304B-யின்படி, திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குள் இயற்கைக்குப் புறம்பான விதத்தில் ஏற்படும் மருமகள்களின் மரணங்கள், வரதட்சிணைக் கொடுமையின் காரணமாக ஏற்பட்டதா என்று விசாரிக்கப்படுகிறது. 1983-இல் கொண்டு வரப்பட்ட சட்டப் பிரிவு 498A-இன்படி வரதட்சிணை கேட்டுக் கொடுமைப்படுத்தும் கணவர் மற்றும் கணவரைச் சார்ந்தவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.
ஆனால், இத்தனை சட்டங்கள் அமலில் இருந்தும், இந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தேசிய குற்றப் பதிவு அலுவலகம் அளிக்கும் 2013-க்கான புள்ளிவிவரங்களின்படி, வரதட்சிணை தடுப்புச் சட்டத்தின் கீழ் பத்தாயிரத்துக்கும் அதிகமான குற்றங்கள் நடைபெற்றுள்ளன.
சட்டப் பிரிவு 302, 304-இன் கீழ், வரதட்சிணைக் கொடுமையின் காரணமாக எட்டாயிரத்துக்கும் அதிகமான மகளிர் உயிர் இழந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது. ஒரு பெண்ணை அவளது கணவரும் அவரது உறவினர்களும் கொடுமைக்கு ஆளாக்கின குற்றங்கள் லட்சத்துக்கும் அதிகமாக, சட்டப் பிரிவு 498A-இன் கீழ் பதிவாகி உள்ளன.
காவல் நிலையங்களைச் சென்றடையாத வரதட்சிணைக் கொடுமைகள் இன்னும் எத்தனையோ என்ற கருத்து ஒருபுறம் இருந்தாலும், வரதட்சிணை தடுப்புச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்தச் சட்டங்களின் கீழ் பதிவாகிய குற்றங்களில் 15 சதவீதக் குற்றங்களில்கூட தண்டனை அளிக்கப்படவில்லை, குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
திருமண வாழ்க்கை சம்பந்தமான வேறு பிரச்னைகள் அல்லது பழி வாங்கும் நோக்கங்கள் போன்ற காரணங்களால் பொய்யாக வழக்குத் தொடுக்கப்பட்டு வயதான மாமியார், மாமனார்கள் சிறைக்குச் சென்ற கதைகளும் ஏராளம். உச்சநீதிமன்றம் சட்டத் தீவிரவாதம் (Legal Terrorismம்) என்று குறிப்பிடும் அளவுக்கு வரதட்சிணை தடுப்புச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, குடும்ப வன்முறைகளிலிருந்து மகளிருக்குப் பாதுகாப்பு அளிக்கும் சட்டம் 2005, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு தற்பொழுது அமலில் உள்ளது. இந்தச் சட்டத்தில் வரதட்சிணை கொடுமையும் அடக்கம் என்றாலும், இது குடும்பத்திலுள்ள எல்லா மகளிருக்கும் ஆண்களிடமிருந்து உளரீதியான அல்லது பொருளாதார ரீதியான துன்புறுத்தல்கள், அடி, உதை போன்ற தாக்குதல்கள், பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
இந்தச் சட்டம் 2006-லேயே நிறைவேற்றப்பட்டாலும், மகளிரிடையே, குறிப்பாக கிராமப்புறங்களில், இந்தச் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை. வீட்டில் உள்ள எல்லா பெண்மணிகளும் அதாவது, மனைவி, சகோதரிகள், தாயார் உள்ளிட்ட அனைவரும் இந்தச் சட்டத்தின் கீழ் ஆண்களினால் இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்துப் போராடலாம் என்றாலும், இதில் ஆண் குழந்தைகளைச் சேர்க்காதது ஒரு குறையே என்று சிலர் வாதாடுகிறார்கள்.
ஏற்கெனவே சொன்னபடி, ஆண் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உறவினர்களாலேயே ஆளாகுகிறார்கள் என்பது இவர்களின் வாதம். மேலும், இந்தச் சட்டம் பெண்களுக்கே சாதகமாக உள்ளது என்று ஆண்கள் கருதுகிறார்கள். இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதிலும் சில நடைமுறைப் பிரச்னைகள் உள்ளன.
திருமணமான தம்பதிகளில்கூட, மனைவியின் விருப்பமின்றி அவரை கணவர் அடித்துத் துன்புறுத்தி பலவந்தமாக உறவுகொள்வதும் (marital rape) குடும்ப வன்முறையில் ஒரு வகையாகக் கருதப்படுகிறது. தாம்பத்திய உறவுக்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை சட்டத்தின்படி குற்றமாகக் கருத வேண்டுமா என்பது குறித்து இன்று சர்ச்சைகள் எழுந்துள்ளன.
உலகின் பல நாடுகளிலும் திருமண பந்தத்துக்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள்கூட குற்றமாகக் கருதப்படுகின்றன. உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த தில்லி நிர்பயா துயரச் சம்பவத்துக்குப் பிறகு, நீதியரசர் வர்மா தலைமையில் அமர்த்தப்பட்ட குழு, மனைவியின் சம்மதமின்றி பலவந்தமாக பாலியல் வன்புணர்வு கொள்ளுதலும் பாலியல் கொடுமையே என்றும், அதையும் பாலியல் குற்றமாகக் கருத வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது.
ஆனால், நமது நாட்டில் திருமணம் என்பது புனிதமான பந்தமாகக் கருதப்படுகிறது என்றும், திருமணத்தில் பாலியல் வன்கொடுமை போன்ற கருத்துகள் மேல் நாடுகளின் பாதிப்பு, அது நமது நாட்டுக்கு சரிப்பட்டு வராது என்றும், அப்படி ஒரு சட்டம் வந்தால் அது திருமணம் என்ற அமைப்பையே சீர்குலைத்துவிடும் என்றும் எடுத்துரைத்து மத்திய உள்துறை அமைச்சகம் அந்தப் பரிந்துரையை நிராகரித்துவிட்டது. அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால் அது தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்ற வாதமும் முன் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வாதங்களை ஏற்றுக் கொள்ளாத மகளிர் நல ஆர்வலர்கள், மதுகுடித்து விட்டு போதையில் அடித்து உதைத்து உடலுறவு கொள்வது, மனைவி நிறைமாத கர்ப்பிணி அல்லது பிரசவித்து சில நாள்களே ஆகி உள்ளன என்றும் பாராமல் வன்புணர்வு கொள்ளுதல் போன்ற வன்முறைகளில் ஈடுபடும் ஆண்களிடமிருந்து பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகத் தொடர்ந்து போராடுவோம் என்று சவால் விடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
கட்டுரையாளர்: பொருளாதார நிபுணர்.