முகப்பு
கட்டுரைகள்

வியக்க வைக்கும் சுயேச்சைகள்

தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால், தொண்டர்களின் கருத்துக் கணிப்புக்கு

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:56 PM
பகிர்:

தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால், தொண்டர்களின் கருத்துக் கணிப்புக்கு ஏற்ப வேட்பாளர் பட்டியல் இருக்குமா என்றால் இல்லை. இதுவரையிலான தேர்தல்களில் பெரும்பாலான தொகுதிகளில் இந்த கட்சியின் சார்பில் இவர் தான் போட்டியிடக்கூடும் என அறுதியிட்டுக் கூறும் நிலை இருந்தது.
 ஆனால், இம்முறை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே தேர்தலில் புதியவர்கள் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகளவில் வாய்ப்பளிக்கப்படும் என முக்கியமான அரசியல் கட்சிகள் தெரிவித்ததால் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்பதை தெளிவாகக் கூற முடியவில்லை.
 அரசியல் களமும், அறிவிக்கப்படும் வேட்பாளர்களின் நிலையும் இப்படி இருக்கையில் சுயேச்சை வேட்பாளர்களும் சளைக்காமல் களமிறங்க உள்ளனர். அரசியல் கட்சிகளின் சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் கட்சி மற்றும் தங்களின் செல்வாக்கு, பணபலம், படைபலம் போன்றவற்றை தேர்தலுக்கான தகுதிகளாகக் கொண்டு தேர்தலைச் சந்திக்கின்றனர்.
 ஆனால், சுயேச்சை வேட்பாளர்களோ வைப்புத் தொகையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு எவ்வித பின்புலமுமின்றி தேர்தலை எதிர்கொள்கின்றனர்.
 வேட்பு மனு தாக்கலுக்கான வைப்புத் தொகை அதிகரிக்கப்பட்ட போதும் சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தேர்தல் களம் வேண்டுமானால் பரபரப்பாகலாம்.
 ஆனால், அவர்களுக்கான சின்னங்களை ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகிறது. மேலும் சுயேச்சை வேட்பாளர்கள் மூலம் அரசியல் கட்சிகள் முறைகேடான செயல்களில் ஈடுபடக்கூடும் என்ற அச்சமும் இருக்கவே செய்கிறது.
 அண்மையில் தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பல்வேறு விஷயங்களில் சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வைப்புத் தொகையை அதிகரிக்கலாமா என்பதும் ஒன்றாகும்.
 கடந்த கால தேர்தல்களோடு ஒப்பிடுகையில் இன்றைய தேர்தல் களம் சவால் நிறைந்த ஒன்று என்றபோதும், தேர்தலுக்குத் தேர்தல் சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
 தமிழக சட்டப் பேரவைக்கு 1971 முதல் 2006 வரை நடைபெற்ற தேர்தலில் 1 முதல் 8 சுயேச்சை வேட்பாளர்கள் வரை வெற்றி பெற்றனர். ஆனால், 2011 தேர்தலில் அனைத்து தொகுதிகளில் போட்டியிட்டும் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 போட்டி நிலவுவதும், வெற்றி பெறுவதும் அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடையே தான் என்பதை அறிந்த போதும் அதிக எண்ணிக்கையிலான சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
 வேட்பு மனு தாக்கலோடு தனது உற்றார், உறவினர்களோடு தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு ஒற்றை அல்லது இரட்டை இலக்க எண்ணிக்கையில் வாக்குகள் பெறுபவர்களும் உண்டு.
 அதேபோன்று, வேட்பு மனு தாக்கலின் போதும் இவர்கள் வித்தியாசத்தைக் காட்டுவதுண்டு. குதிரை வண்டி, மாட்டு வண்டி, ரிக்ஷாவில் வருவது, வேட்பு மனு தாக்கலுக்கான வைப்புத் தொகையை சில்லரை நாணயங்களாக செலுத்துவது போன்ற வித்தியாசமான நிகழ்வுகளில் ஈடுபடுவதுண்டு. இவர்களது தேர்தல் வாக்குறுதிகளும் வித்தியாசமானதாகவே இருக்கும்.
 தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களில் அதிகப்படியானோர் அதற்கடுத்த தேர்தல்களில் போட்டியிடுவதிலிருந்து விலகிவிடுகின்றனர். ஆனால், தேர்தலில் போட்டியிடுவதை சாதனையாகக் கருதி களமிறங்குவோரும் உண்டு.
 தமிழகத்தைச் சேர்ந்த பத்மராஜன் என்பவர் சட்டப்பேரவை, நாடாளுமன்றம், குடியரசுத் தலைவருக்கான தேர்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.
 இவரைப் போன்றவர்கள் பிரபலமானவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற நிரந்தர சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளனர்.
 சுயேச்சை வேட்பாளர்கள் தாங்கள் விருப்பத்தின் பேரில் போட்டியிடுவது ஒருபுறமிருக்க மற்ற சில காரணங்களாலும் போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சியைச் சார்ந்த ஒருவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாய்ப்புகள் மறுக்கப்படும் போது சுயேச்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவதும் உண்டு.
 இத்தகைய நடவடிக்கையால் அக்கட்சியில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டாலும் தேர்தலில் வெற்றி பெறும்பட்சத்தில் மீண்டும் அக்கட்சியிலேயே தன்னை இணைத்துக் கொண்ட சம்பவங்களும் உண்டு.
 மேலும், ஒரு தொகுதியில் ஒருவருக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாக இருக்கும் போது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளரின் பெயரைக் கொண்ட மற்றொரு நபரை சுயேச்சை வேட்பாளராக அடுத்த நிலையில் உள்ள அரசியல் கட்சியினர் களமிறக்குவதும் உண்டு. இதனால், எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்றபோதும் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் மேற்கொள்ளப்படும் உத்தி இது.
 இவ்வகையில், சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வந்தாலும் தமிழகத்தில் சற்று அதிகமாகவே உள்ளது.
 ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேசிய சராசரி 14 எனும் பட்சத்தில் தமிழகத்தில் ஒரு தொகுதியில் 21 பேர் போட்டியிடுவதாகவும், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், பிகார், மத்திய பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிகமானோர் போட்டியிடுவதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
 சட்டப் பேரவைத் தேர்தலில் மட்டும் தான் அதிக சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்களோ என்று எண்ணத் தோன்றும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலிலும் சுயேச்சை வேட்பாளர்கள் அதிகளவில் போட்டியிடுகின்றனர்.
 1951-52இல் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாக 533 பேர் போட்டியிட்டு 37 பேர் வெற்றி பெற்றனர். ஆனால், 2014 தேர்தலில் 3,234 பேர் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட்டு 3 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். இதற்கு அன்றைய தேர்தலுடன் ஒப்பிடுகையில் இன்றைய தேர்தல் களம் முற்றிலும் வேறுபட்டதாகும்.
 இதே நிலை சட்டப் பேரவைத் தேர்தலுக்கும் பொருந்தும். அதனாலேயே கடந்த காலங்களைப் போன்று இன்று சுயேச்சை வேட்பாளர்கள் ஒற்றை இலக்கத்தில் வெற்றி பெறுவதே ஆச்சர்யமான விஷயமாக உள்ளது.
 தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்சிகளிடையே கடும் போட்டியும் நிலவுகிறது. வேட்பு மனு தாக்கலுக்கான வைப்புத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.
 இருப்பினும் ஒவ்வொரு தேர்தலின்போதும் அதிகரித்துவரும் சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளை மட்டுமன்றி அனைத்துத் தரப்பினரையும் வியக்க வைக்கிறது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.