இன்று ஒரு பொது விவாதம் தேர்தல் நேரத்தில் வைக்கப்படுகிறது. பொதுமக்கள் உணர்வு ரீதியாக மொழியின் மீதும், கலாசாரத்தின் மீதும், மதத்தின் மீதும், தலைவர்கள் மீதும் பற்றுக்கொண்டு அரசியல் முடிவுகளை எடுக்கின்றார்கள். இவர்கள் அறிவுப்பூர்வமாக ஆக்கப்பூர்வமாக ஓர் அரசாங்கத்தை சீர்தூக்கிப் பார்த்து, அது தீட்டிய திட்டங்கள், கொண்டுவந்த சட்டங்கள், எடுத்த கொள்கை முடிவுகள் அவைகள் அனைத்தையும் எப்படி நிறைவேற்றப்பட்டன என்பதனை பரிசீலனை செய்து தங்கள் முடிவுகளை எடுப்பதில்லை என்று அறிவுஜீவிகள் எழுதுகின்றனர், பேசுகின்றனர்.
ஒருபோதும் பொதுமக்கள் தம் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் திட்டங்களை யார் போடுகிறார்கள் என்று சிந்திப்பதில்லை என்று ஹிட்லரே கூறியுள்ளார் என்பதை மேற்கோள்காட்டி எழுதுகின்றனர். இது ஒரு நிலையில் பொருந்துவதாக இருக்கலாம், ஆனால், அது முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து அல்ல.
மக்கள் அறியாமையில் இருக்கும் வரை கோஷங்களில் லயித்துப்போய் உணர்வு ரீதியாக முடிவெடுத்து செயல்படுவது மற்றும் வாக்களிப்பது வழக்கம். ஆனால், எப்போதும் பொதுமக்கள் அப்படி உணர்வு நிலையில் இருந்து செயல்படுவதோ அல்லது ஓட்டுபோடுவதோ இல்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் மனநிலையில், பார்வையில் தொடர்ந்து மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கின்றன என்பதை யாரும் மறுக்க இயலாது. அதற்குச் சிறந்த உதாரணம் தமிழகம்தான்.
இன்றைய சூழலில் அ.தி.மு.க-வும் வேண்டாம், தி.மு.க-வும் வேண்டாம் என்ற முடிவில் சிறிய கட்சிகள் அனைத்தும் முடிவுக்கு வந்து புதிய கூட்டணிகளை உருவாக்கிக் கொண்டுள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் உணர்வு நிலையில் மக்களைப் பயன்படுத்தி மொழி, இனம், கலாசாரம் இவைகளைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவைதான். இந்த இரண்டு கட்சிகளும் இன்னும் அதிகப்படியான ஏழைகளின் வாக்கு வங்கிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன.
இதற்குக் காரணம் மொழியோ, இனமோ, கலாசாரமோ மட்டும் அல்ல. ஆரம்ப காலத்தில் இவற்றைப் பற்றிய ஓர் உணர்வை திராவிட இயக்கம் உருவாக்கின. அதன் பிறகு இந்தக் கட்சிகள் அதைப் பயன்படுத்தின.
ஆனால், அவற்றை மட்டுமே வைத்து அரசியலை மேலே எடுத்துச் செல்லவில்லை இந்த இரண்டு கட்சிகளும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு கட்சிகளும் தொடர்ந்து ஏழைகள் நலம் சார்ந்து எண்ணற்றத் திட்டங்களை ஆட்சியில் இருந்தபோது நடத்திய கட்சிகள் என்பதை உலக வங்கியில் தொடங்கி ஐ.நா. அமைப்பு வரை பாராட்டியுள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்தியதில் ஊழல்கள் நடந்துள்ளன என்பதையும் யாரும் மறுக்க இயலாது.
இந்த ஏழைகளுக்கான திட்டங்களைப் பாராட்டவும் செய்யலாம், கொச்சைப்படுத்தியும் பேசலாம். அது பேசுவோரின் பார்வையைப் பொறுத்தே உள்ளது. உண்மை என்னவென்றால், எம்.ஜி.ஆர். தன் வசீகரத்தன்மையால் வாக்குகளை அள்ளியவர். ஆனால், தன் வசீகரத்தன்மை வாக்குகளாகத் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும் என்று எண்ணி அமைதியாக அவர் இருந்து விடவில்லை.
ஏழைகளின் மத்தியில் திட்டங்கள் செயல்படவில்லை என்றால் நம்மையும் ஏழைகள் நிராகரித்துவிடுவார்கள் என்பதையறிந்துதான் எண்ணற்றத் திட்டங்களை ஏழைகளுக்குச் செயல்படுத்தினார் எம்.ஜி.ஆர். அது சத்துணவாக இருக்கட்டும், முதியோர் ஓய்வு ஊதியமாக இருக்கட்டும், அனைத்தும் ஏழைகளுக்கான திட்டங்களை அவர் நடைமுறைப்படுத்தியது அவர்கள்பால் அவர் கொண்டிருந்த பார்வை.
அதேபோல்தான், தி.மு.க-வும் போட்டி போட்டுக்கொண்டு இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. தி.மு.க. ஆரம்பகாலத்தில் ஆட்சியில் நடைமுறைப்படுத்திய சமூகநலத் திட்டங்கள் என்பது நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் சமூக மேம்பாடு பற்றி எழுவதற்கு முன் கொண்டு வந்தவைகளாகும். இது வரலாற்று உண்மை.
இந்த இரண்டு கட்சிகளிடமும் தொடர்ந்து ஏழைகளுக்கான திட்டங்கள் இருந்ததால்தான் ஏழைகள் பெருமளவில் இந்தக் கட்சிகளுக்கு வாக்களித்தனர். சட்டப் பேரவைப் பேச்சுக்களையோ, பொதுக் கூட்ட பேச்சுக்களை வைத்தோ அவர்கள் ஏமாந்து விடுவதில்லை.
தேர்தல் முடிந்து எனக்கு எந்தக் கட்சியின்மூலம் என்ன கிடைக்கும் என்பதை அலசிப் பார்த்துதான் தங்களின் வாக்குகளை அளிக்கின்றனர். அவர்களின் வாக்கு ஆட்சியை மாற்றும் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த இரண்டு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு இந்தத் திட்டங்களை ஏழைகளுக்காக அறிவித்து வாக்குகளைச் சேகரிக்கின்றன. ஊழல், அரசுக்கு உள்ள கடன், மாநில நிதிநிலை மேலாண்மை போன்றவைகள் அனைத்தும் பொதுமக்களுக்குப் புரியாதவைகள்.
இன்றைய சூழலில் ஆளுகை, நிர்வாகம், நிதி மேலாண்மை இதெல்லாம் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையோருக்கு தெரியாத விஷயங்கள்தான். அதே நேரத்தில், அரசிடமிருந்து தங்களுக்கு என்ன வேண்டும் என்பது ஏழை மக்களுக்குத் தெரியும். அவர்கள் மொழி, மதம், ஜாதியை மட்டும் வைத்து வாக்களிப்பது இல்லை.
ஒரு சிறிய உதாரணம்: இலங்கைப் போர் நடந்தபோது காங்கிரஸ், தி.மு.க. இரண்டும் வீழ்ந்தன என நினைத்தனர். அந்த நேரத்தில் ஏன் அந்த இன உணர்வு செயல்படவில்லை என்றுதான் நினைத்தனர். அதை நினைத்து அணி மாறியவர்கள்கூட உண்டு.
அந்தப் பொதுத்தேர்தலில் 100 நாள் வேலைத் திட்டமும், ஏழைகளின் நலன் சார்ந்த திட்டங்களும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்குக் கை கொடுத்தன. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அறிஞர்கள் வாதத்தின்படி தலா ஒரு முறை நல்ல ஆரோக்கியமான ஆட்சியைத் தந்தார்கள். இந்த இரண்டு கட்சிகளுமே நல்லாட்சி தந்த நேரத்தில் தோற்றும் போனார்கள். அதேபோல், இந்த இரண்டு கட்சிகளும் தலா ஒரு முறை சுய உதவிக்குழு பெண்களை நம்பி ஆட்சி வாய்ப்பை இழந்துள்ளனர்.
எனவே, இந்தக் கட்சிகள் பேசுவதைக் கேட்டுவிட்டோ, தலைவர்களைப் பார்த்து மயங்கியோ வாக்களிப்பதில்லை. இந்தக் கட்சிகள்மூலம் நமக்கு என்ன கிடைக்கும் என்பதைத் தெளிவாக யூகித்துதான் வாக்குகளை அளிக்கின்றனர் பொதுமக்கள்.
எனவே, பொதுமக்கள் மாயையில் சிக்க மாட்டார்கள். இந்திய மக்களாட்சிக்கு வலுச்சேர்ப்பது இந்தத் தேர்தலில் மக்கள் பங்களிப்பதுதான். மிக உயர்ந்த மக்களாட்சிச் செயல்பாடுகள் நிறைந்த நாடுகளில்கூட இந்த அளவிற்கு வாக்களிப்பது கிடையாது. ஆனால், இந்தியாவில் பொதுத் தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கின்றனர்.
அதுதான் அறிஞர்கள் மத்தியில் இந்தியாவைப் பற்றிய சிறந்த பார்வையை உருவாக்கியுள்ளது.
இன்றைக்கு மாற்றம் வேண்டும் என்று சொல்லுபவர்கள் மாற்றுத் திட்டத்தை வைக்க வேண்டும். அது வெற்று உறுதிமொழிகளாக இருக்கக் கூடாது.
இந்த இரண்டு கட்சிகளையும் நிராகரிக்க வேண்டும் என்றால் அரசியலில் என்ன அடிப்படை மாற்றம் தேவை? இன்றைய சூழலில் அடிப்படை மாற்றங்களை அரசியலில், சமூகத்தில், ஆளுகையில், தேர்தலில், பொருளாதாரத்தில் என எல்லாத் துறைகளிலும் என்ன செய்யப் போகிறோம் என்பதற்கான பதில் இன்று எந்தக் கட்சியிடமிருந்தும் வரவில்லை. இன்றையத் தேவை ஆட்சி மாற்றம் மட்டும் இல்லை, அத்துடன் அடிப்படை மாற்றமும் வேண்டும்.
அடிப்படை மாற்றத்தை நோக்கி நம் தேர்தல் அரசியல் நகர்வதாகத் தெரியவில்லை. ஊழலை, நிர்வாகத்தில் அடிப்படை மாற்றம் செய்யாமல் ஒழிக்க இயலாது. இந்த அடிப்படை மாற்றத்திற்கான ஒரு வரைவு எந்தக் கட்சியிடமும் இல்லை. அந்த வரைவு என்பதை ஒரு பெரிய அறிவுஜீவிகளின் கூட்டத்தின் உதவி இல்லாமல் செய்ய இயலாது.
இன்றைய சூழலில் நம் அரசியல் கட்சிகளின் அறிவுஜீவிகளாக பவனி வருவோர் அனைவரும் அந்தப் பணியைச் செய்ய இயலாது. இடதுசாரி இயக்கங்களில் உள்ள அறிவுஜீவிகளும் இன்றைய சூழலுக்கு இந்த அரசியல் இயக்கங்களை நவீனப்படுத்த முடியவில்லை.
இருந்தபோதும், இன்றைக்கு நமக்குத் தேவை ஒரு மாற்றுப்பாதை. அந்த மாற்றுப்பாதை என்ன என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதுவும் அவர்கள் மனதில் பதியும் வண்ணம் எளிதாக விளக்கி மக்களுக்குக் கூற வேண்டும்.
மக்கள் வாக்கு வங்கிகளாகவே அரசியல் கட்சிகளுக்குள் இருப்பார்கள் என்று அரசியல் கட்சிகள் கனவு காண முடியாது. நம்பிக்கை ஒளிக்கீற்று எங்கேயாவது தென்பட்டால் அங்கு மக்கள் நகர்ந்து விடுவார்கள். அந்த ஒளிக்கீற்று அவர்களுக்குத் தென்பட்டால் அலையெனக் குவியத் தயாராக உள்ளனர்.
ஆனால், இந்தச் சூழலில் எந்த அணி அந்த நம்பிக்கை ஒளியை அவர்களுக்குக் காட்டப்போகிறது என்பதைத்தான் வரும் வாரங்களில் நாம் பார்க்க வேண்டும்.
கட்டுரையாளர்:
பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.