மக்களாட்சி நடைபெறுகின்ற ஒரு நாட்டில் இன்று எது மிக முக்கியமான செயல்பாடு என்றால், சாதாரண குடிமகனுக்குப் பதிலளிக்க அரசு கடமைப்பட்டிருக்கிறது என்ற உணர்வை உருவாக்குவதுதான்.
ஏனென்றால் அரசு, அரசியல், ஆட்சி மற்றும் நிர்வாகம் பற்றிய குறைந்தபட்ச விழிப்புணர்வு இல்லாத மக்கள் பெரும்பான்மையாக வாழும், மக்களாட்சி நடைபெறும் ஒரு நாட்டில், தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டால் ஐந்தாண்டுகளுக்கு மக்களைக் குத்தகைக்கு எடுத்துவிட்டோம் என்ற மனோபாவம்தான் மேலோங்கி இருக்கும்.
ஆகையால்தான் மக்களாட்சி தரம் தாழ்கிறது. தரம் தாழ்ந்த மக்களாட்சி தரமான மக்கள் பணியையோ, நல்லாட்சியையோ தர இயலாது என்று கோட்பாட்டாளர்கள் விவரிக்கின்றார்கள்.
இந்த நிலைக்குக் காரணமே அரசுக்கும் மக்களுக்கும் உள்ள ஒப்பந்தம் என்ன என்று தெரியாத மக்களின் எண்ணிக்கை அந்த நாட்டில் அதிகமாக இருப்பதுதான். பொதுமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் ஓர் ஒப்பந்தம் இருக்கின்றது. அரசு என்பது மக்களிடமிருந்துதான் அதிகாரத்தைப் பெறுகிறது. அது தேவதூதனிடமிருந்து அதிகாரத்தைப் பெறவில்லை.
ஆனால், குடிமக்கள் பெரும்பான்மையினருக்கு தாங்கள்தான் இந்த அரசுக்கு அதிகாரம் தந்தவர்கள் என்ற உண்மை தெரிவதில்லை. ஏனென்றால், நம்மைப் போன்ற காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளில் மக்கள் விடுதலைக்காகப் போராடியிருக்கின்றார்கள். ஆனால், மக்களாட்சிக்காகப் போராடியது கிடையாது.
எதற்காக அரசாங்கம் மக்களிடமிருந்து அதிகாரத்தைப் பெறுகிறது என்றால் மக்களைப் பாதுகாப்பதற்கும் மக்களுக்குப் பணிகள் செய்வதற்காகவும், மக்கள் வளமாகவும் அமைதியாகவும் வாழ்வதற்காக எல்லாவித வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதற்காகவும் என்பதுதான் கோட்பாட்டுரீதியான அடிப்படை.
இந்தப் பணிகளைச் செய்வதற்குத்தான் அரசு அமைப்புகள் மற்றும் பணியாளர்கள். ஆனால், அரசும் அதனை நடத்துகின்றவர்களும் நடந்துகொள்ளும் விதம் இன்றைய சூழலில் மக்களுக்காக அரசா அல்லது அரசுக்காக மக்களா என்ற கேள்வியை அனைவர் மனத்திலும் எழ வைத்துள்ளது.
பொதுவாக, அரசை நடத்தவும் அதன்மூலம் மக்களுக்குப் பணிகள் செய்யவும் நிதி தேவை. அந்த நிதியை மக்கள்தான் தருகிறார்கள். ஏதோ அரசிற்கு பணக்காரர்கள்தான் தாங்கள் கட்டும் வரிகள் மூலம் தருகிறார்கள் என்று கருதக்கூடாது. சாதாரண மனிதனும் தான் வாங்கும் பொருள்கள் மூலம் வரியைச் செலுத்துகின்றான் என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, அரசிற்கு வரும் நிதி என்பது மக்களிடமிருந்து பெற்று அரசு செயல்படுகின்றபோது, அந்தப் பணம் எப்படி செலவழிக்கப்படுகிறது என்பதும் பொதுமக்களுக்குத் தெரிய வேண்டும்.
அரசுக்கு நிதியை உருவாக்குவதற்கும், அதைச் செலவு செய்வதற்கும் அதிகாரத்தை மக்கள்தான் வழங்குகின்றார்கள். எனவே, அரசாங்கம் எப்படி வருவாயை உருவாக்கி, பெருக்கிப் பாதுகாத்து அதனை பிரித்துத் திட்டங்களாக மக்கள் பயன் அடைய செலவழிக்கின்றது என்பதுதான் ஆட்சியாக விளக்கப்படுகிறது.
பொதுமக்களிடமிருந்து வரும் நிதி என்பது மக்களின் ஒவ்வொரு சொட்டு ரத்தம் எனக் கருதி அதைப் பாதுகாத்து, யாருக்குத் தேவையோ அவர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அந்த நிதி விரயமானால் அது மக்களை அவமானப்படுத்துவதாகும்.
ஆண்டுதோறும் நிதி உருவாக்கி, பிரித்து, செலவழித்து மக்களுக்குப் பணியாற்றுவதைச் சட்டப் பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் உறுதி செய்வதுதான் நிதிநிலை அறிக்கை என்று நாம் அழைக்கிறோம். இது மக்கள் தரும் பணம், இது எப்படிச் செயல்படுகிறது என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். இன்று இந்தச் செயல்பாடு என்பதுதான் மக்களுக்கு விளங்காத ஒரு நிகழ்வாக இருக்கிறது.
ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அனுமதியளிக்கப்படுகிறது. எப்படி வரி விதிப்பது, எந்த வரியை உயர்த்துவது, எதைக் குறைப்பது, எந்தத் திட்டத்திற்கு அதிகம் செலவழிப்பது, எந்தத் திட்டத்திற்கு நிதியைக் குறைப்பது, நிர்வாகத்திற்கு எவ்வளவு செலவு செய்வது, அவற்றில் எதைக் குறைப்பது, எதைக் கூட்டுவது இவற்றின் தொகுப்புதான் அந்த அறிக்கை.
இதைச் சுருக்கமாகவும், விளக்கமாகவும் புத்தகமாக சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் வைத்து விவாதித்து அனுமதியளிப்பார்கள். இதனை வைத்து வரிச்சுமை யாருக்குக் கூடியது, யாருக்குக் குறைந்தது, இந்த வரிவிதிப்பால் விலைவாசி உயருமா, குறையுமா என்பதைப் பற்றியெல்லாம் ஒரு பெரும் விவாதம் சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும், ஊடகங்களிலும் நடத்தப்படும்.
இவை அனைத்தும் காகிதப் புலிகள். நடைமுறை ஆரம்பிப்பதே இதற்குப் பிறகுதான். மத்திய, மாநில அரசுகள் இரண்டும் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்து அனுமதி பெற்று நிதியை மக்களுக்காக செலவழிக்கின்றன.
ஒதுக்கிய நிதி எங்கிருந்து புறப்படுகிறது, யார் மூலம் புறப்படுகிறது, யார் மூலம் எவ்வளவு, யாருக்காக வருகிறது, அதை எப்போது யார் எங்கே, யாருக்காக, எவ்வளவு செலவழித்தார்கள் என்பதை கண்டுபிடிக்க முடிந்துவிட்டால் மக்களுக்கான திட்டங்களில் நடைபெறுகின்ற ஊழல்களை நாம் ஒழித்துவிடலாம்.
அதைக் கண்டுபிடிப்பதுதான் இன்று உள்ள மிகப்பெரிய சவால். இதைத்தான் ராஜீவ் காந்தி தில்லியில் 1 ரூபாய் அனுப்பினால் கிராமத்தில் உள்ள மக்களுக்குச் சென்று சேரும்போது அது 15 பைசாவாக உள்ளது என்று குறிப்பிட்டார். இந்த 85 பைசா என்னவானது என்றால், அது முழுமையான லஞ்சமா அல்லது முழுமையான நிர்வாகச் செலவா என்பதை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்பொழுது அது முடியும்.
இந்த விஞ்ஞான தொழில்நுட்ப உலகில் இது கண்டுபிடிக்க முடியாத ஒன்று அல்ல. அவ்வளவு தொழில்நுட்பங்கள் இருக்கின்றன; இருந்தும் ஏன் அவைகள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றால் அதை நடைமுறைப்படுத்திவிட்டால் ஒரு பைசா கூட யாரும் தொடமுடியாது, பொதுமக்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். இதற்கு சிறந்த உதாரணம் மக்களுக்குத் தரவேண்டிய பணம் அனைத்தும் இன்று அப்படியே அவர்களின் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடுகிறது.
ஒரு வங்கிக் கணக்கு ஆரம்பித்தவுடன் ஒருவர் தரவேண்டிய லஞ்சம் தவிர்க்கப்பட்டுவிட்டது. இந்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த நிதி நிர்வாகத்தைச் செப்பனிட வேண்டும்.
உண்மையிலேயே ஓர் அரசு வெளிப்படையான ஒரு நிர்வாகத்தைத் தரவேண்டும் என்று நினைத்தால், அது செய்ய வேண்டிய முதல் வேலை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது எவ்வளவு சென்ற ஆண்டு பணம் வந்தது, எந்தெந்தத் துறைகளுக்கு எவ்வளவு எந்தெந்தத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது, அதன்
அடிப்படையில் எந்தெந்த மாவட்டங்களுக்கு எந்தெந்தத் திட்டங்கள் வழியாகப் பணம் சென்றது, எவ்வளவு செலவழிக்
கப்பட்டது என்பதனைத் தெரிவிக்க வேண்டும்.
அடுத்ததாக, இந்த ஆண்டு எப்படி நிதி திரட்ட உள்ளோம், அதை எவ்வளவு எந்தெந்தத் துறைகளுக்கு, எந்தெந்தத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குகின்றோம், அதில் நிர்வாகச் செலவு எவ்வளவு, திட்டச் செலவு எவ்வளவு என்பதனைத் தெரிவித்து, இந்த நிதி எந்த மாதத்திலிருந்து துறைவாரியாக மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படும், அது மாவட்டங்களில் எந்த அதிகாரிகள் மூலம் செலவு செய்யப்பட இருக்கிறது என்பதை சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் அறிவிக்க வேண்டும்.
அப்பொழுதுதான் பொதுமக்கள் தங்கள் நிதி எப்படி செலவழிக்கப்படுகிறது என்பதை கண்காணிக்க முடியும். யாரைக் கேள்வி கேட்க வேண்டும், எப்பொழுது கேட்க வேண்டும் என்பதை தெரிந்து கேள்வி கேட்டு தங்கள் நிதி முறையாக செயல்பட மக்கள் முயலுவார்கள்.
இல்லை என்றால் தங்கள் பணத்தை தாங்கள் பெற்றுக்கொள்ள அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் பிச்சை கேட்க நிற்பதுபோல் நின்று சுயமரியாதை இழந்து ஒரு நாட்டில் வாழ வேண்டிய சூழலுக்கு குடிமக்கள் தள்ளப்படுவார்கள். அதுதான் இன்றைய நிலை.
இதை மாற்ற எந்த அரசுக்காவது கடமைப்பாடு இருந்தால் நிதிநிலை அறிக்கையை மக்கள் கேள்வி கேட்க தகுந்தவாறு எளிமைப்படுத்தி உங்கள் பணம் இதோ, இப்படி சென்ற ஆண்டு வேலை செய்தது, இந்த ஆண்டு இப்படி வேலை செய்யப் போகிறது, இந்த நிதி இந்த மாதத்திலிருந்து இந்த அதிகாரிகள் வழியாக மக்களுக்குச் செலவிடப்பட உள்ளது என்பதை எடுத்துக்கூற வேண்டும். அதுதான் இன்றைய ஆளுகையில் நிதி நிர்வாகத்தில் செய்ய வேண்டிய மிகப்பெரிய மாறுதல்.
இதைச் செய்ய யாருக்குத் துணிவு உள்ளது? மக்களை கேள்வி கேட்கத் தூண்டும் வகையில் ஓர் அரசு தன் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்தால் அதுதான் புதுமையான அரசு.
பொதுவாக, அரசை நடத்தவும் அதன்மூலம் மக்களுக்குப் பணிகள் செய்யவும் நிதி தேவை. அந்த நிதியை மக்கள்தான் தருகிறார்கள். ஏதோ அரசிற்கு பணக்காரர்கள்தான் தாங்கள் கட்டும் வரிகள் மூலம் தருகிறார்கள் என்று கருதக்கூடாது. சாதாரண மனிதனும் தான் வாங்கும் பொருள்கள் மூலம் வரியைச் செலுத்துகின்றான் என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.