வரவேற்கத்தக்க மாற்றம்!
நாடு தழுவிய அளவில் நடத்தப்படும் தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பின் நான்காவது சுற்றின் முடிவுகள் சமீபத்தில் வெளி வந்துள்ளன.
நாடு தழுவிய அளவில் நடத்தப்படும் தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பின் நான்காவது சுற்றின் முடிவுகள் சமீபத்தில் வெளி வந்துள்ளன. இந்த தேசியக் கணக்கெடுப்பு, குழந்தைகளின் பிறப்பு-இறப்பு விகிதங்கள், மகளிரின் பேறுகால உடல்நலம், குழந்தைகளுக்கான தடுப்பூசி நிலவரம், குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு, குடும்பக் கட்டுப்பாடு, வீடுகளின் குடிநீர் மற்றும் கழிவு நீர் வசதிகள், பெண்கள் மற்றும் ஆண்களின் திருமண வயது, குடும்ப வன்முறைகள், எய்ட்ஸ் நோயைப் பற்றிய விழிப்புணர்வு, மதுப் பழக்கம் போன்ற பல்வேறு விஷயங்களைப் பற்றிய பயனுள்ள தகவல்களைச் சேகரித்துள்ளது.
2015-16ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்தக் கணக்கெடுப்பு, கடந்த பத்தாண்டு காலத்தில் நாட்டில் மகளிர் மற்றும் குழந்தைகளின் உடல் நிலையிலும், குடும்பங்களின் நலனிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பரிசீலிக்க வழிவகுக்கிறது.
மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்காக, மும்பையில் உள்ள சர்வதேச மக்கள்தொகை ஆய்வு நிறுவனத்தினால் நடத்தப்படும் இந்தக் கணக்கெடுப்பில், நாட்டிலுள்ள பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றன.
இந்தக் கணக்கெடுப்பில், சுமார் 5 லட்சத்து 68 ஆயிரம் குடும்பங்களிடமிருந்து, புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் 29 மாநிலங்களிலும், 6 யூனியன் பிரதேசங்களிலும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சுமார் ஆறு லட்சம் மகளிரும், 90 ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்களும் பங்குபெற்றனர். ஐந்து வயதிற்கு கீழ் உள்ள 2.65 லட்சம் குழந்தைகளைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக ஆந்திரம், பிகார், கோவா, ஹரியாணா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மேகாலயம், சிக்கிம், தமிழ் நாடு, தெலங்கானா, திரிபுரா, உத்தரகண்ட், மேற்கு வங்கம் ஆகிய 13 மாநிலங்களைப் பற்றியும், அந்தமான் - நிகோபார் தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகிய இரு யூனியன் பிரதேசங்களைப் பற்றியும் பல சுவாரசியமான புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மகளிர் நலனைப் பற்றிய புள்ளிவிவரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தக் கணக்கெடுப்பு, கடந்த பத்தாண்டு காலத்தில் பெரும்பாலான மாநிலங்களில் மகளிரின் நிலையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்கிறது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மகளிரின் கல்வி, திருமண வயது, மகப்பேறு சம்பந்தப்பட்ட உடல் நலம், பிரசவத்திற்காக மருத்துவமனைகளை நாடுவது, அவர்களின் நிதி நிலைமை போன்றவற்றில் முன்னேற்றம் கண்டுள்ள இந்த ஆய்வு, சிசு மரணங்கள், ஐந்து வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளின் இறப்பு விகிதம், தாய்மார்களின் பேறு கால இறப்பு விகிதம், ஊட்டச்சத்து குறைபாடு, இனப்பெருக்க விகிதம் ஆகியவை கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் எடுத்துரைக்கிறது.
நமது நாட்டில் குறைந்தபட்ச திருமண வயது பெண்ணிற்கு 18 என்றும், ஆணிற்கு 21 என்றும் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்டிருந்தும், குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
18 வயதிற்குள் திருமணம் செய்து கொண்டுள்ள பெண்களின் விழுக்காடு சென்ற பத்து ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது என்ற இந்தக் கணக்கெடுப்பின் கண்டுபிடிப்பு நமக்கு ஆறுதலளிக்கிறது. அதுவும் குழந்தைத் திருமணங்களுக்குப் பெயர் போன பிகார், ஹரியாணா போன்ற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. சென்ற முறை எடுத்த கணக்கெடுப்பில் பிகாரில், 20-24 வயதுடைய பெண்மணிகளில் 60% பேர் 18 வயதை அடைவதற்குள் மணம் முடித்திருந்தனர்.
இந்தக் கணக்கெடுப்பின்படி, இந்த விழுக்காடு 40 ஆகக் குறைந்துள்ளது என்பது ஆறுதலளித்தாலும், இன்னமும் குழந்தைத் திருமணம் என்ற கொடுமை ஒரு சில மாநிலங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதும் தெரிய வருகிறது.
சமூகத்தில் மகளிரின் நிலை மேம்பட வேண்டுமென்றால் அதற்கு அடிப்படைத் தேவை கல்வி. எழுதப் படிக்கத் தெரிந்த மகளிரின் சதவிகிதம் அனேகமாக எல்லா மாநிலங்களிலுமே கணிசமாக உயர்ந்திருக்கிறது. மிகவும் பின் தங்கியிருக்கும் பிகார் மாநிலத்தில் கூட 37 விழுக்காடாக இருந்த எழுத்தறிவுள்ள மகளிரின் சதவீதம் கடந்த பத்தாண்டுகளில் 50}ஆக உயர்ந்துள்ளது.
உலகிலேயே மிக அதிகமான ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளைக் கொண்ட நாடு என்ற அவப்பெயரைப் பெற்றுள்ளது இந்தியா. UNICEF எனும் குழந்தைகள் நலனுக்கான ஐக்கிய நாட்டு நிறுவனம் அளிக்கும் புள்ளிவிவரத்தின்படி, உலகிலுள்ள ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர்.
ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள் மூலம் சத்துணவு அளிப்பது, மதிய உணவுத் திட்டம் போன்ற இந்திய அரசின் பல் வேறு முயற்சிகளின் காரணமாக, குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடு பெரும் அளவில் குறைந்துள்ளது.
13 மாநிலங்களில், ஒன்பது மாநிலங்களில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளை விடக் குறைவான எண்ணிக்கை குழந்தைகள் மட்டுமே வளர்ச்சி குன்றியவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பிகார், மத்தியப் பிரதேசம், மேகாலய மாநிலங்களில், நாற்பது விழுக்காட்டிற்கும் அதிகமான குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர். பத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பாதி குழந்தைகளுக்கும் அதிகமான எண்ணிக்கையினர் ரத்த சோகை உள்ளவர்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்படி ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை அதிகமாகக் கொண்ட நாடு என்ற அவப் பெயர் ஒரு புறம் இருக்க,உடல் பருமன் அதிகமாக உள்ள குழந்தைகளைக் கொண்ட நாடாகவும் இந்தியா இருப்பது நமது நாட்டின் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைப் பிரதிபலிக்கின்றன. ÷மிகவும் முன்னேற்றமடைந்த நாடான அமெரிக்காவை (17.5 - 20.5) விடவும், நமது நாட்டில் அதிக விழுக்காடு குழந்தைகள் (22) பருமான உள்ளார்கள் என்ற தகவலை சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ளது.
தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களால் ஏற்படும் உடற்பருமன், குழந்தைகளின் கற்கும் திறனை பாதிப்பதுடன் பிற்காலத்தில் சர்க்கரை நோய், இதயக் கோளாறு போன்ற பிரச்னைகள் தோன்றுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது.
குழந்தைகளிடையே மட்டும் அல்லாமல் வயது வந்தவர்களிடையேயும் உடல் பருமன் பிரச்னை அதிகரித்துள்ளது.
கடந்த பத்தாண்டு காலத்தில் உடல் பருமனாக உள்ளவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆந்திரம், சிக்கிம், அந்தமான் - நிகோபார் மற்றும் புதுச்சேரியில் 30 விழுக்காட்டினர் உடல் பருமன் அதிகமாக உள்ளார்கள்.
கிராமப்புறங்களுடன் ஒப்பிடுகையில், நகரங்களில் வாழ்பவர்களே அதிகமாக உடல் பருமன் உள்ளவர்களாகக் காணப்படுகிறார்கள். இதற்கு நகரங்களின் வாழ்க்கை முறையே காரணம் என்பதும், வயது வந்தவர்களிடையே காணப்படும் இந்த உடல் பருமன் இரண்டாவது வகை நீரிழிவு நோய் (Type 2 diabetes) ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக விளங்குகிறது என்பதும் அனைவரும் அறிந்ததே.
மத்திய அரசின் ஜனனி சிசு சுரக்ஷô சேவை, தேசிய ஊரக சுகாதார பணித் திட்டம் போன்ற முயற்சிகளின் பயனாக எல்லா மாநிலங்களிலுமே அனேகமாக அனைத்து கர்ப்பிணிகளும் மருத்துவச் சோதனைகள், இரும்புச் சத்து மாத்திரைகள் போன்ற சேவைகளைப் பெற்றுள்ளார்கள் என்றும், பிரசவத்திற்காக மருத்துவமனைகளை நாடும் தாய்மார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாகவும் இந்தக் குடும்ப நலக் கணக்கெடுப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இப்படி கடந்த பத்தாண்டுகளில் நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களைக் கண்டு நாம் ஓரளவு திருப்தியடைந்தாலும், நாம் மெத்தனமாக இருந்து விடக் கூடாது. இரண்டு விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் எல்லா மாநிலங்களும் ஒரே மாதிரி முன்னேற்றம் அடையவில்லை. பல மாநிலங்கள் இன்னமும் வெகுவாகப் பின்தங்கியே உள்ளன.
வளர்ச்சியடைந்துள்ள நாடுகள் மட்டுமல்லாது நமது அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளை விடவும், பெரும்பாலான சமூக அறிகுறிகளில் (நர்ஸ்ரீண்ஹப் ஐய்க்ண்ஸ்ரீஹற்ர்ழ்ள்) நமது நாடு பின்தங்கியே இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
கடந்த பத்தாண்டுகளில் நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களைக் கண்டு நாம் ஓரளவு திருப்தியடைந்தாலும், நாம் மெத்தனமாக இருந்து விடக் கூடாது. இரண்டு விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் எல்லா மாநிலங்களும் ஒரே மாதிரி முன்னேற்றம் அடையவில்லை. பல மாநிலங்கள் இன்னமும் வெகுவாகப் பின்தங்கியே உள்ளன.