நடுப்பக்கக் கட்டுரைகள்

மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்!

தற்போது ஒரு பொதுவிவாதம் தமிழகத்தில் நடந்து வருகிறது. அதாவது பொதுமக்கள் மன நிலைக்கும் எதிர்பார்ப்புக்கும் ஏற்றவாறு மக்கள் பிரதிநிதிகள் செயல்பட வேண்டும்

க. பழனித்துரை

தற்போது ஒரு பொதுவிவாதம் தமிழகத்தில் நடந்து வருகிறது. அதாவது பொதுமக்கள் மன நிலைக்கும் எதிர்பார்ப்புக்கும் ஏற்றவாறு மக்கள் பிரதிநிதிகள் செயல்பட வேண்டும், அதுதான் மக்களாட்சியின் அடிப்படை என்று வாதிட்டு வருகின்றனர். அந்த அடிப்படை தகர்ந்துவிட்டது என்று தமிழக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திய முறையையும், அப்போது ஆட்சிக்கு ஆதரவாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் செயல்பட்டதையும் பின்னணியில் வைத்து விவாதித்து வருகின்றனர்.
இந்த விவாதம் அறிவுத்தளத்தில் நடைபெறவில்லை, மாறாக உணர்வுத்தளத்தில் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நடைபெறுகிறது. உலகில் இந்த பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கு நல்ல விளக்கங்களையும், அடிப்படைகளையும் பலரும் தந்திருக்கிறார்கள். அவர்களுள்
"எட்மண்ட் பர்க்' தலையானவர்.
இவர் இங்கிலாந்து தேசத்து சிந்தனையாளர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இவர் உறுப்பினராக இருந்தபோது இதேபோன்று ஒரு சர்ச்சை எழுந்தது. அவர் வெற்றி பெற்ற பிரிஸ்டோல் தொகுதி மக்களில் ஒரு சிலர் குழுவாக அவரை அணுகி, ஒரு சில தொகுதிப் பிரச்னைகளை முன்வைத்து இவற்றையெல்லாம் நீங்கள் நாடாளுமன்றத்தில் பேசி முடிவுகாண முயற்சியுங்கள் என்று கட்டளையிட்டார்கள்.
அதற்கு எட்மண்ட் பர்க், "நீங்கள் எனக்கு வாக்கு அளித்துத்தான் நான் உங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் இருக்கிறேன் என்பது உண்மைதான். அதே நேரத்தில் இந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறேன் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மக்கள் பிரதிநிதி என்று சொல்லக்கூடியவன் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும். அதே நேரத்தில் மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும்போது நாட்டின் நலம் என்பது பின்னணியில் இருக்க வேண்டும்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நாட்டு நலனைப்பற்றி எனக்குக் கவலையில்லை. என் தொகுதி மக்கள் பிரச்னைதான் மிகவும் முக்கியம். அவர்கள் எதிர்பார்ப்பதைத்தான் அந்தப் பிரதிநிதி பேச வேண்டும் என்று செயல்பட முடியாது. அடுத்த தேர்தலில் எனக்கு வாக்குவங்கியை உருவாக்குவது அடிப்படை அல்ல, நாட்டின் ஒட்டுமொத்த நலன் சார்ந்து நான்
செயல்பட வேண்டும்' என்ற விளக்கத்தைத் தந்தார்.
சட்டப்பேரவை உறுப்பினரானாலும், நாடாளுமன்ற உறுப்பினரானாலும் தொகுதி மக்கள் சொல்வதை கிளிப்பிள்ளைபோல் அப்படியே சொல்வது அல்ல மக்கள் பிரதிநிதிகளின் பணி. எதை நாடாளுமன்றத்தில் பேசலாம், எதைப் பேசக்கூடாது என்பதை தீர்மானிப்பது, அந்த உறுப்பினரின் தொகுதி மக்கள் அல்ல, அதைத் தீர்மானிப்பது மக்கள் பிரதிநிதிகள்தான்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பவர் சான்றாண்மை நிறைந்தவர், பக்குவமானவர், பகுப்பாய்வு கொண்டவர், நாட்டு நலனுக்குள் மக்கள் நலன் பேணுபவர், மக்களுக்கு எது நன்மை பயக்கும், எது தீமை பயக்கும் என்பதை உணர்ந்தவர்,
மக்களை நல்வழிப்படுத்துபவர். அப்படிப்பட்ட தகுதியுடைவர்தான் மக்கள் பிரதிநிதி.
எனவே பிரச்னைகளின் ஆழ அகலங்களை அளந்து செயல்படுபவரான அவர் மக்கள் மனோபாவத்தையும், உணர்வுகளையும் புரிந்து அவற்றைப் பிரதிபலிப்பவர் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர்களிடம் எடுத்துரைத்தார். அதுமட்டுமல்ல "நாங்கள்தான் வாக்களித்தோம். எனவே நாங்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என என்னை வலியுறுத்தினால் இந்த நிமிடமே இந்தப் பதவியை துறந்துவிடுவேன்"
என்றும் கூறினார்.
அதிலிருந்துதான் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு பணி பற்றிய விவாதம் உருவாக்கப்பட்டு, பணிகள் எல்லாம் வரையறை செய்யப்பட்டன. இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், மக்கள் எண்ண ஓட்டம் என்ன என்பதனைப் பார்த்து, அதன் அடிப்படையில்தான் மக்கள் பிரதிநிதிகள் சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் செயல்பட வேண்டும் என்பது அடிப்படை அல்ல.
ஒருவர் சட்டப்பேரவைக்கோ, நாடாளுமன்றத்திற்கோ உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் அவர்களுக்கு விதிக்கப்பட்ட பணிகளைச் சபைக்குள்ளும்
சமூகத்திலும் செய்கின்றார்களா, திறமையாகச் செய்கின்றார்களா என்பதுதான் அடிப்படையானது.
அவர்களுடைய சட்டப்பேரவைச் செயல்பாடுகள் நாடாளுமன்றச் செயல்பாடுகளைத் தீர்மானிப்பது கட்சிகள்தான் என்பதனையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். கட்சி பிறப்பிக்கின்ற உத்தரவினை மீற முடியாது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர், தனது தொகுதிப் பிரச்னைகளை மக்களிடமிருந்து திரட்டி சட்டப்பேரவையில் சேர்க்க வேண்டியதைச் சேர்த்து முடிவுகள் எடுக்க, கொள்கைகள் உருவாக்க செயல்படுகின்றாரா என்பதைப் பார்க்க வேண்டும். அதற்காக மக்களிடம் அவர் எப்படி தொடர்புகளை ஏற்படுத்தி மக்கள் பிரச்னைகளைத் திரட்டுகிறார் என்று பார்க்க வேண்டும்.
அதேபோல் சட்டப்பேரவைக்கு வெளியில் மக்கள் குறைகளைத் தீர்க்க அரசு அலுவலகங்களுக்கு பிரச்னைகளை எடுத்துச் சென்று அவற்றை நிவர்த்தி செய்ய பணியாற்றுகின்றாரா என்று பார்க்க வேண்டும். அத்துடன் சட்டப்பேரவையில் எடுத்த முடிவுகள், புதிய சட்டங்கள், அரசு கொண்டுவந்த புதுக்கொள்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் என அனைத்தையும் மக்களிடம் கொண்டுவந்து தெரிவிக்கின்றாரா என்று பார்க்க வேண்டும்.
ஏனென்றால் அவருக்கென தொகுதியில் அலுவலகம், அதற்கான அலுவலக உபகரணங்கள், தொகுதிக்குச் செல்லப் பயணப்படி என அத்தனை சலுகைகளையும் பெற்றிருப்பதால் அவர் தம் பங்கு பணியினை முறைப்படி நிறைவேற்ற வேண்டும்.
சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் யாரை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் நிர்ப்பந்திக்க முடியாது. அப்படி ஒரு முறைமையும் சட்டத்தில் கிடையாது. அது மட்டுமல்ல, மக்கள் பிரதிநிதிகளின் மேல் பொதுமக்கள் கருத்து என்ன என்பதை சட்டப்பூர்வமாக தெரிந்துகொண்டு செயல்படுவது என்பது நம் அமைப்புகளில் இல்லை.
ஒரு கட்சியின் தலைவரை அந்தக் கட்சியின் உறுப்பினர்கள்தான் தேர்வு செய்வார்கள். அதேபோல் யார் முதல்வர் என்பதை அந்தக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள்தான் தேர்வு செய்வார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் உணர்ச்சி வசப்பட்டு கருத்துகளை உருவாக்கிக்கொண்டு அதன் அடிப்படையில் கட்சி உறுப்பினர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் செயல்பட வேண்டும் என்று கூறுவது நாம் அறியாமையில் இருக்கின்றோம் என்பதைத்தான் உணர்த்துமேயன்றி, சட்டத்தின்படி செயல்படுவது ஆகாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பெரும் அரசியல் முடிவில் பொதுமக்களுக்கு பங்கேற்கக் கிடைக்கின்ற வாய்ப்பு என்பது தேர்தலின்போதுதான். அப்பொழுது நாம் நல்லவராக, கண்ணியமானவராக, அறிவுசார்ந்து செயல்படுபவராக இருக்கின்ற ஒருவரை நாம் தேர்ந்தெடுக்கின்றோமா என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
அந்த நேரத்தில் இவர் நம் சாதி, இவர் நமக்கு பணம் தருகிறார், இவர் நமது கட்சிக்காரர் என்ற அடிப்படையில் ஒருவரை தேர்ந்தெடுத்துவிட்டு அதன் பிறகு அவர் சரிவர செயல்படுவதில்லை என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? முதலில் சீர்திருத்தம் நம்மில் ஆரம்பிக்கட்டும்.
தேர்தல் வரும்போது நல்லவரைத்தான் தேர்ந்தெடுப்போம், காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட மாட்டோம்,
எந்தக் கட்சியாக இருந்தாலும் ஒழுக்கம் கெட்டவருக்கு ஓட்டுப்போட மாட்டோம், ஊழல் செய்தவருக்கு ஓட்டுப்போட மாட்டோம், சாதியைப் பார்த்து ஓட்டுப்போட மாட்டோம் என்று ஒரு முறை மாற்றி யோசித்துப் பார்த்து வாக்குகளை அளித்துப் பாருங்கள், நம் அரசியல் கட்சிகள் நல்ல மனிதரை தேடி அலையும் சூழல் வந்துவிடும்.
எல்லாச் சாதியிலும் நல்ல மனிதர்கள் உள்ளார்கள்; எல்லாக் கட்சியிலும்
நல்லவர்கள் உள்ளார்கள்; எல்லாக் கட்சியிலும் ஒழுக்கமானவர்கள் உள்ளார்கள். இருந்தபோதிலும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மக்கள் குறையுடையோரை ஏற்றுக்கொள்வார்கள், மக்களின் ஏழ்மையை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கட்சிகள் சிந்திப்பதால்
நல்லவர்கள் இன்று அரசியலுக்குள்
பிரவேசிக்க முடியவில்லை.
அதன் விளைவுதான் மக்களாட்சியின் மாண்புகள் அனைத்தும் சிதைக்கப்பட்டு, சமத்துவம், சகோதரத்துவம், நியாயம், நேர்மை, ஒழுக்கம் அத்தனை விழுமியங்களையும் இழந்தவர்கள் மட்டுமே அரசியலுக்குள் செல்ல முடிகிறது.
இந்த நிலை மாற வேண்டும் என எண்ணிணால் மாற்றம் விரும்பும் ஒவ்வொரு குடிமகனும் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். நாம் என்ன மாற்றத்தை
எதிர்பார்க்கின்றோமோ, அந்த மாற்றத்தை முதலில் நமக்குள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT