அறிவு பெற, மற்றவர்களின் அனுபவங்களைத் தெரிந்து கொள்ள, மேடைகளில் ஏறி சொற்பொழிவாற்ற, பட்டிமன்றங்களில் நகைச்சுவை துணுக்குகளை வீச, பொழுதுபோக்க, தன்னைத்தானே அறிந்துகொள்ள படிக்கிறார்கள். சொல்லப்பட்டக் காரணங்கள் இல்லாமல் - சொல்லப்படாத காரணங்களுக்காகவும் பலர் படிக்கிறார்கள்.
பல நூற்றாண்டுகளாக மனிதர்கள் படிக்கிறார்கள் என்றாலும், ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கூடன்பர்க், காகிதத்தில் மை கொண்டு புத்தகம் அச்சிடும் முறையைக் கண்டுபிடித்ததும், படிப்பது அதிகமாகிவிட்டது.
படிப்பதற்காகவே புத்தகங்கள் எழுதப்படுகின்றன. கூகுள் கணக்கெடுப்பின்படி உலகத்தில் பதிமூன்று கோடி புத்தகங்கள் ஆண்டுதோறும் அச்சிடப்படுகின்றன. அதில் பழைய புத்தகங்கள், புது புத்தகங்கள் எல்லாம் அடங்கும். புத்தகம் என்பது ஒன்றுதான் என்றாலும், எல்லாப் புத்தகங்களும் ஒன்றில்லை.
கதைகள், காப்பியங்கள், புராண, இதிகாசங்கள், அரசியல் தொடர்பானவை, நாடகங்கள், தத்துவ நூற்கள், கட்டுரைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், வரலாற்று நூற்கள், சுய சரித்திரங்கள், வீர தீர சாகசங்கள், தன் நம்பிக்கை நூற்கள் என்று பலவிதமான நூற்கள் இருக்கின்றன.
சிலர் தங்களுக்கு விருப்பமான துறைகள் பற்றிய புத்தகங்களைப் படிக்கிறார்கள். வேறு சிலர் நாவல், நாடகம், சினிமா பற்றிய நூற்களை எடுத்துப் படிக்கிறார்கள். அரசியல் ஈடுபாடு கொண்டவர்கள் சட்டம், நீதி, சமூகம் பற்றிய புத்தகங்களைப் படிக்கிறார்கள். படிப்பு அறிவைத் தூண்டிவிடுகிறது என்பதை அறிந்து கொண்டவர்கள் மேன்மேலும் படிக்க ஆரம்பிக்கிறார்கள்.
அவர்களுக்குப் படிக்க உகந்த இடமென்று ஒன்று கிடையாது. புத்தகத்தை எல்லா இடங்களிலும் படிக்கிறார்கள். ரயில், பேருந்து, கப்பல், விமானப் பயணங்களில் சிலர் படிக்கிறார்கள். பூங்காக்களில் மரத்தடியில் உட்கார்ந்து படிக்கிறவர்கள் இருக்கிறார்கள். சிறைச்சாலையிலும் படிக்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சமூகத்தை அறிந்து கொள்ளவே படிக்கிறார்கள். ஒருவர் ஒரு நிமிடத்திற்கு 240 சொற்கள் படிக்க முடியுமென்று கணக்கிட்டிருக்கிறார்கள்.
1964-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சென்னை சென்ட்ரல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அண்ணா, 'கைதி எண் 6342' என்ற நூலில் தான் படித்தத் தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் பற்றி எழுதி இருக்கிறார்.
அதில், ராகுல சாங்கிருத்தியாயனின் 'வால்காவில் இருந்து கங்கை வரை', மா. சண்முக சுப்பிரமணியம் எழுதி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட 'தீங்கியல் சட்டம்', டி.ஹெச். லாரன்ஸ் எழுதிய 'லேடி சார்ட்டரிலீ காதலன்', 'ஆபாச புத்தகம்' என்னும் வழக்குத் தொகுப்பு, அப்டன் சிங்கள் மரணம் பற்றிய குறிப்புகள் பற்றி எல்லாம் எழுதியுள்ளார்.
சிறை நூலகத்தில் இருந்த ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகளை எடுத்துப் படித்துவிட்டு நெடுஞ்செழியனின் மன்றம் இதழில் கட்டுரை எழுதியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சில் இருந்துதான் புத்தகங்கள் உருவாகின்றன. ஆனால், புத்தகங்கள்தான் பேச்சை வாழ வைக்கின்றன. புத்தர், சாக்ரடீஸ், ஏசு எல்லாம் புத்தகங்கள் எழுதவில்லை. பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் பேச்சு பின்னால் எழுதப்பட்டு புத்தகங்களாயின. அவை காலம் காலமாகப் படிக்கப்படுகின்றன. அப்படித்தான் ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றோரும்.
படிப்பு என்பது பயிற்சி இல்லை. அது சத்தமாகப் படித்தாலும் சரி, மெளனமாகப் படித்தாலும் சரி மனிதர்களின் மனத்திற்குள் ஆழப் பதிந்து விடுகிறது. சில நேரங்களில் தவறுகள் செய்வதை, குற்றம் இழைப்பதைப் படித்த நூல் தடுத்து விடுகிறது. கருத்துகள் ஒருவனின் ஆழ்மனத்திற்குள் நுழைந்து அவனை புதிய மனிதனாக மாற்றிவிடுகிறது. அதுதான் புத்தகம் என்பதின் மகத்துவம்.
படிப்பு என்பது கருத்து என்பதோடு மொழியின் வசீகரமும், ஆளுமையும் கொண்டது. ஒவ்வொரு தலைமுறையிலும் நிரகற்றப் புலவர்கள், கவிஞர்கள் எழுதித் தங்கள் மொழியைப் படிக்க வைக்கிறார்கள். அவை பின்னால் மொழிபெயர்க்கப்பட்டு உலக மக்கள் அனைவர்க்கும் சொந்தமாகி விடுகிறது. எந்த மொழியில் ஒரு புத்தகம் எழுதப்பட்டிருந்தாலும் - எக்காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் அது அந்த ஒரு மொழிக்கே உரியது இல்லை. மானிட சமூகம் முழுவதற்குமானது.
அறிவு, மொழியையும், காலத்தையும் கடந்துவிடுகிறது. படிப்பின் வழியாக எல்லோர்க்கும் உரியதாகி விடுகிறது. அதுதான் படிப்பு என்பதின் அடிப்படை. எனவேதான் நெடுங்காலமாக புத்தகங்கள் எழுதினார்கள்; எளிதாகப் புத்தகங்கள் படிக்க நூலகங்களை அமைத்தார்கள்.
எகிப்தின் பேரரசி கிளியோபாட்ரா சொந்தமாகப் பெரிய நூலகம் வைத்துக் கொண்டிருந்தாள். அவள் நூலகத்தில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருந்தன. அவளைக் காண சென்ற மன்னர்களும், வெளிநாட்டு தூதுவர்களும் புத்தகங்களைப் பரிசாக வழங்கினார்கள்.
மகா அலெக்சாண்டர், உலகத்தை வென்று ஆள வேண்டுமென்று பெரும்படையோடு புறப்பட்டபோது தான் படிப்பதற்கென்று ஹோமரின் இலியத் காப்பியத்தை உடன் எடுத்துச் சென்றான். இன்றும் பலர் செல்லும் இடம்தோறும் புத்தகங்களை எடுத்துச் சென்று படிக்கிறார்கள்.
புத்தகங்கள் படித்து மக்கள் பயன் அடைய வேண்டும் என்பதற்காகப் பலரும் படாதபாடு பட்டிருக்கிறார்கள். எழுத்தையும், அதையெழுத கருவியையும் கண்டுபிடித்து, களிமண் சிலேட்டுகள், மரப் பட்டைகள், கற்பாறைகள், விலங்குகளின் தோல்கள், பட்டுத் துணிவகைகள், பனைவோலைகள், செம்பு, தங்கத் தகடுகள், காகிதங்கள் என்று பலவற்றிலும் எழுதிப் படித்தார்கள்.
அசோக சக்ரவர்த்தி பெளத்த அறம் பற்றி கற்பாறைகளிலும், ஸ்தூபிகளிலும் பிராமி எழுத்துகளில் எழுதி வைத்துள்ளதைத் தேடிச் சென்று படித்தார்கள்.
சோழ மாமன்னன் ராஜராஜன் தஞ்சைப் பெருவுடையார் கோயில் சுவர்களில் தமிழில் எழுதியுள்ள கல்வெட்டு வரலாற்றை தஞ்சாவூர் சென்று படித்தார்கள். தற்போது கணினி, புத்தகம் என்பதை இல்லத்திற்கே கொண்டு வந்துவிட்டது.
மகாபாரதம், இராமாயணம், பிளாட்டோவின் அரசியல், புத்தரின் தம்ம பதம், கன்பூஷியஸ் போதனைகள், பகவத் கீதை, திருவள்ளுவரின் குறள் ஆகியவை என்றும் வாழும் புத்தகங்களாக இருக்கின்றன.
டார்வின் பரிணாம வளர்ச்சி, காரல்மார்க்ஸ் கம்யூனிஸ்டு அறிக்கை, மூலதனம், சிக்மன் பிராய்டு கனவுகளின் விளக்கம் - இவை படித்தவர்களை அதிகமாகப் பாதித்துள்ளது போல - படிக்காதவர்களையும் பாதித்திருக்கிறது.
புத்தகப் படிப்பு என்பது மனக் கசடுகளை அகற்றி மனத்தை நெகிழ வைக்கிறது. உண்மையை உணரவும், பேசவும், எழுதவும் தைரியம் அளிக்கிறது.
மகாத்மா காந்தி மேற்கொண்ட அகிம்சை, சத்தியாகிரகம், ஒத்துழையாமை- எல்லாம் அவர் புத்தகப் படிப்பு வழியாகப் பெற்றவைதான். மூன்று புத்தகங்களை அவரே குறிப்பிடுகிறார்.
ஒன்று, ஆங்கிலேயரான ஜான்ரஸ்கின் எழுதி கடையனுக்கும் கடைத்தேற்றம். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஜான் ரஸ்கின் புத்தகத்தை 1908-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி குஜராத்தி மொழியில் சர்வோதயா என்ற பெயரில் மொழி பெயர்த்தார்.
இரண்டாவது, ஹென்றி டேவிட் தோரோ என்ற அமெரிக்கர் ஆங்கிலத்தில் எழுதியது. ஒத்துழையாமை கோட்பாட்டைச் சொல்வது. அநியாயத்திற்குக் கீழ் பணியாததுதான் ஒத்துழையாமை.
மூன்றாவது, ரஷிய ஞானி லியோ டால்ஸ்டாய், ரஷிய மொழியில் எழுதிய 'இறைவன் சாம்ராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறது'. இது ரஷியாவில் தடை செய்யப்பட்டது. 1894-ஆம் ஆண்டில் ஜெர்மனியில் வெளியாகியது. ஆங்கில மொழிபெயர்ப்பில் 1,22,491 சொற்கள் கொண்டது என்று கணக்கெடுத்திருக்கிறார்கள்.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜெர்மனியில் யூதர்கள் இருக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஓட்டா பிராங் என்ற யூதர் தன் குடும்பத்தோடு நெதர்லாந்து சென்று தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்தார்.
அவர் மகள் ஆனிபிராங் பதினான்காவது வயதில் நாட்குறிப்புகள் எழுதி வந்தாள். இரண்டு ஆண்டுகள் எழுதினாள். ஜெர்மனி நாஸி படையினர் ஓட்டா பிராங் குடும்பத்தினரைப் பிடித்துக் கொண்டு போய் வதை முகாமில் போட்டுவிட்டார்கள். வதை முகாமில் ஓட்டா பிராங் மனைவி ஆனி பிராங், அவள் சகோதரி எல்லாம் இறந்து போய்விட்டார்கள்.
உயிர் பிழைத்து வந்த ஓட்டா பிராங்கிற்கு அவர் மகள் எழுதி வைத்திருந்த நாட்குறிப்பு கிடைத்தது. டச்சு மொழியில் எழுதப்பட்டதை முதலில் வெளியிட்டார். பின்னர் ஆங்கிலம், தமிழ் உள்பட 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு படிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் அறிஞர் உ.வே. சாமிநாதையர். அதாவது அவர் தமிழ் மட்டுமே அறிந்தார். வாழ்நாள் முழுவதும் ஓலைச்சுவடிகளைத் தேடி எடுத்து பழந்தமிழ் நூற்களைப் பதிப்பித்தவர். அவர் தன் 'எண்பத்தைந்தாவது வயதில் 'என் சரித்திரம்' என்று சுய சரித்திரம் எழுதினார். 1940-ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு ஆண்டுகள் எழுத முடிந்தது. இருபத்தைந்து சதவீதம் எழுதியபோது காலமாகி விட்டார். ஆயினும் என் சரித்திரம் படிக்கத்தக்கதாவே இருக்கிறது.
மனிதர்கள் ஏன் படிக்கிறார்கள் என்று கேள்வி கேட்டு நூறு பதில்கள் கூறுகிறார்கள். அந்த நூறு பதில்களில் அடங்காத ஒரு பதிலுக்காகவே மனிதர்கள் புத்தகங்கள் படித்துக் கொண்டு வருகிறார்கள். அதுதான் படிப்பின் சரித்திரமாக இருந்து வருகிறது.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.