நடுப்பக்கக் கட்டுரைகள்

அதிகரிக்கும் மணமுறிவுகள்

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் என்றால் ஊர்கூடித் தேர் இழுப்பது போல. மிகவும் நெருங்கிய உறவினர்கள் சில நாள்களுக்கு முன் திருமண வீடுகளுக்குச் சென்று அனைத்து வேலைகளையும் இழுத்துப்

ஆர். வேல்முருகன்

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் என்றால் ஊர்கூடித் தேர் இழுப்பது போல. மிகவும் நெருங்கிய உறவினர்கள் சில நாள்களுக்கு முன் திருமண வீடுகளுக்குச் சென்று அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்கள். ஆனால் இப்போது திருமணத்துக்கு முந்தைய நாள் வந்து சென்றால் போதும் என்ற நினைப்பு வந்து விட்டது.
பெற்றோரின் கனவு தங்கள் குழந்தைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்ய வேண்டும். மருமகள் அல்லது மருமகன் பிரச்னையில்லாமல் இருக்க வேண்டும்.
மகனுக்குத் திருமணம் என்றால் மருமகளின் தந்தை அதிக சீர் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர், மகளுக்குத் திருமணம் என்றால் உறவுகளே இல்லாமல் இருந்தால் பரவாயில்லை என்றுதான் நினைக்கிறார்கள்.
எனக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவருக்கு ஆசிரியையான பெண்ணுடன் திருமணமானது. அவர் கிராமத்துக்காரர். படித்து முடிந்து அரசுப் பள்ளியில் சேர்ந்தார். திருமணத்தின்போது அவருக்குக் கொஞ்சம் கடன் இருந்தது. அந்தக் கடனை மனைவியின் ஊதியத்தை வாங்கியும் மாமனாரிடம் வாங்கியும் அடைத்துவிட்டார்.
அதன்பின் அவருடைய கிராமத்துக்கு அருகே உள்ள பள்ளிக்கு மாறுதல் கிடைக்கும் வாய்ப்பு இருந்தது.
மனைவியிடம் சொல்ல, அவருடைய மனைவியோ தனது தந்தையிடம் சொன்னார். கிராமத்துக்கு அருகே உள்ள பள்ளிக்கு வந்தால் உன்னுடைய மாமனார் குடும்பத்துடன் அடிக்கடி வந்துவிடுவார். அதனால் உனது கணவரிடம் மாறுதல் வேண்டாம் என்று சொல் என்றார். ஆசிரியை கணவரிடம் சொல்ல அவர் மாறுதல் பெறவில்லை.
இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் அவருக்கும் ஆசிரியைக்கும் இடையில் எந்நேரமும் தகராறுதான். ஆசிரியையின் தாயும் மகளுக்குத்தான் பரிந்து பேசுவார்.
ஆசிரியத் தம்பதியினர் வட்டாரத்தில் இருவரின் சண்டையும் மிகப் பிரபலம். இப்போது அந்த ஆசிரியரிடம் அவருடைய மனைவியோ மாமனாரோ எதையும் பேசுவதில்லையாம்.
ஒரு கட்டத்தில் விவாகரத்துச் செய்ய முடிவெடுத்து கணவன், மனைவி இருவரும் தனித்தனியாக வழக்கறிஞர்களைப் பார்த்தார்கள். இன்னும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. எப்போது வேண்டுமானாலும் பிரிந்து செல்லும் நிலை உள்ளது.
அந்த ஆசிரியையால் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த அவருடைய தந்தை, தாய், சகோதரன், அண்ணி ஆகியோர் இப்போது இரு குடும்பமாகப் பிரிந்துவிட்டனர்.
தனது அண்ணியைப்பற்றி தந்தையிடம் சொன்னதைக் கேட்டதால்தான் பிரச்னை. அவரைப் பொறுத்தவரையில் எப்போதும் மகளுக்குத்தான் முதலிடம், தவறு என்று தெரிந்தாலும்.
திருமணத்துக்குப் பின்னும் பிறந்தவீட்டில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் மன வியாதி சில பெண்களுக்கு அதிகமாக இருக்கிறது. அவர்களின் பெற்றோரும் இதை ஆதரிக்கிறார்கள் என்பது வருத்தம் தரும் செய்தி.
தங்களுக்கு வரும் மருமகள் தங்களுக்கு அடங்கி இருக்க வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் நியாயம்? இது போல பலரது வாழ்க்கை ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் இந்தியாவின் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை பெருமையாகப் பேசப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இப்போது மணமுறிவுகள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 5000 முதல் 6000 வரை மணமுறிவு வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதாகத் தெரிகிறது.
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம், தான் செய்வதுதான் சரியென்னும் அகம்பாவம், இருதரப்புக்கும் விருப்பமில்லாத் திருமணங்கள், திருமணத்துக்கு வெளியேயான உறவு, ஒரு குடும்பத்தில் அளவுக்கு அதிகமான பெண்ணின் தாய், தந்தையரின் தலையீடு, வேடிக்கையை அதிகம் விரும்பும் இளைய தலைமுறையின் நடவடிக்கைகள் ஆகிய காரணங்களால்தான் மணமுறிவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, தகவல் தொழில் நுட்பத்துறையில்தான் காதல் திருமணங்களும், மணமுறிவுகளும் அதிகமாக உள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணங்களில் பிரச்னைகளைச் சரி செய்ய யாராவது முன்வருவார்கள். ஆனால் காதல் திருமணங்களில்?
பொருளாதாரப் பிரச்னை இல்லாவிட்டால் மணமுறிவுதான். சந்தேகம் வந்தால் அந்த வாழ்க்கை முடிந்துவிடுகிறது.
பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்களிலும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நண்பரின் மகளுக்கு நல்ல இடமென்று சொல்லுமிடத்தில் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்குப் பின் மகள் வீட்டுக்குத் தந்தை செல்ல வேண்டுமென்றாலும் முன்கூட்டியே மாப்பிள்ளையின் பெற்றோரிடம் சம்மதம் பெற வேண்டும்.
மருமகள் வீட்டுக்கு வந்தபின் அங்கிருந்த வேலையாள்களை நிறுத்திவிட்டார்களாம், சம்பளமில்லாத வேலைக்காரி வந்துவிட்டதாக எண்ணி. அந்தப் பெண் பிறந்த வீட்டுக்குச் சென்று வரும்போது பெண் போலீஸார் குற்றவாளியைச் சோதனையிடுவது போல மாமியார் சோதனையிடுவாராம்.
படித்த பெண் இப்போது மணமுறிவுக்காக நீதிமன்றத்தின் படிகளைத் தட்டிக் கொண்டிருக்கிறார்.
மாமியார்கள் தாங்களும் மருமகளாக இருந்தோம் என்பதையும் தங்கள் மகனின் வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்பதையும் மறந்துவிடுகிறார்கள். மணமுறிவு கிடைத்தபின் வரும் இரண்டாவது மருமகள், மாமியாரைப் படுத்தும்பாடு சொல்லி மாளாது.
தங்கள் மகனின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று மருமகளை மகள் போலப் பார்க்கும் மாமியாரும் உண்டு. அவர்களின் வாழ்க்கையில் கண்டிப்பாக வசந்தம் வீசும்.
உறவுகளும் நட்புகளும் முக்கியமானவை. அவற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைத் தந்தால் வாழ்க்கை இனிக்கும். சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் அவை உறவுக்கும் நட்புக்கும் வலுசேர்க்கும். மணமுறிவுகள் குறைந்து மனமொத்த மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT