கல்கத்தாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு 1875-ஆம் ஆண்டு ஒரு நாள் ஓர் இளைஞன் இரயில் பயணம் மேற்கொள்ளுகிறான். ஓடும் இரயிலில் உட்கார்ந்து கொண்டு, இருமருங்கும் பார்க்கிறான். பசுமையான வயல்கள், உயர்ந்த மலைகள், ஓங்கி வளர்ந்த மரங்களில் தொங்கும் காய்கள், கனிகள், ஓடும் ஆறுகள், பாயும் அருவிகள், வீசும் தென்றல் - இவற்றின் அழகில் மயங்குகிறான். அந்த இனிய மயக்கத்தில் பாடுகிறான்.
வந்தே மாதரம்
சுஜலாம் சுபலாம் மலயஜ ஷீத்தளாம்!
சஸ்ய ஷ்யாமளாம் மாதரம்...
தாய்த் திருநாடே! உன்னை
வணங்குகிறேன்!
உன் அழகை ஆராதிக்கிறேன்! உனக்காக என் உயிரையும் தருவேன்!
உன் பாத கமலங்களை முத்தமிடுகிறேன் தாயே!
-என்று உணர்ச்சி பொங்க உள்ளம் உருகிப் பாடுகிறான்.
பாடிய கவிஞன் பங்கிம் சந்திர சட்டர்ஜி (1838 - 1894). அன்று அவர் பாடிய பாடல் இரண்டு பத்திகளை மட்டுமே கொண்டது. அன்று அப்பாடல் பிரசுரமாகவில்லை. வெளியில் எவருக்கும் தெரியவும் இல்லை. இதுதான் "வந்தே மாதரம்' பாடல் பிறந்த வரலாற்றின் முதல் கட்டம்.
ஆறு ஆண்டுகள் கழித்து, 1881-ஆம் ஆண்டில் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி "ஆனந்த மடம்' என்ற நாவலை எழுதுகிறார். அதில் வந்தே மாதரம் பாடலைச் சேர்க்கிறார். அத்துடன் புதிதாக நான்கு பத்திகளை எழுதி ஆறு பத்திகளைக் கொண்ட பாடலாக வந்தே மாதரம் "ஆனந்த மடத்தில்' இடம் பெறுகிறது. புதிதாகச் சேர்த்த பகுதியில், தாய்த்திருநாட்டை "துர்க்கை'யின் உருவமாகப் பார்க்கிறார்.
"அன்னையே! துர்க்கை அம்மனே!
அன்பும், அறிவும், ஆற்றலும், பலமும் அனைத்தும் அருள்பவள் நீயே!
உன் ஆன்ம பலம் யார் அறிவார்?
உன்னை எதிர்த்தவர்கள் அழிவார்கள்!
இது சத்தியம்!
அன்னையே உன்னை வணங்குகிறேன்!
- என்ற பொருள் பொதிந்த வரிகள் புதிய பகுதியில் இடம் பெற்றன. அதிலும் குறிப்பாக 18-ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் (1763-1800) நவாப் கால ஆட்சிக்கு எதிரான பின்னணியை மையமாக வைத்து எழுந்த பெரும் போராட்டத்தை, புரட்சியை அடிப்படையாக வைத்து கற்பனை வடிவில் எழுதப்பட்டதுதான் "ஆனந்த மடம்' நாவல்.
அந்நாவல் பிரபலமானபோது வந்தே மாதரம் பாடலும் பிரபலமாயிற்று. இது வந்தே மாதரம் பாடலின் இரண்டாவது கால கட்டம்.
1906-ஆம் ஆண்டில் வங்கப் பிரிவினைக்கு வித்திட்டார் கர்சான் பிரபு. வங்கப் பெருமக்கள் பொங்கி எழுந்தார்கள். 1906 ஏப்ரல் 14-ஆம் நாள் வங்க மாநில காங்கிரஸ் கூட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மாநாட்டிற்கு முன்பே "வந்தே மாதரம்' பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தருகிறார் அரவிந்த் கோஷ். அப்பாடலுக்கு இசை அமைத்துத் தருகிறார் ரவீந்திரநாத் தாகூர்.
மக்கள் ஊர்வலமாகச் செல்லுகிறார்கள். தாகூர், வந்தே மாதரம் பாடலை இசையோடு பாடுகிறார்: அரவிந்த் கோஷ் தலைமை தாங்குகிறார். அனைவரும் விபின்சந்திரபால், சுரேந்திரநாத் பானர்ஜி உட்பட - வந்தே மாதரம் என்று முழங்குகிறார்கள்! உணர்ச்சி பொங்குகிறது!
கூட்டத்தினர் மத்தியில் கோபம் கொந்தளிக்கிறது. கர்சான் பிரபுவின் உருவ பொம்மையை தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். தடியடியும், துப்பாக்கிச் சூடும் தொடர்கிறது! "வந்தே மாதரம்' என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூடாது என்று ஆங்கிலேயஅரசு தடை விதிக்கிறது. இதுதான் வந்தே மாதரத்தின் மூன்றாவது கால கட்டம்.
இதற்குப் பின்பு "வந்தே மாதரம்' என்ற சொல் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் மந்திரச் சொல் ஆகிவிட்டது. இந்தியர் ஒவ்வொருவரும் "வந்தே மாதரம்' என முழங்கத் தொடங்கினார்கள். இந்த முழக்கம் இலண்டன் மாநகரத் தெருக்களில் ஒலித்தது.
கோகலே 1912-ல் ஆப்பிரிக்கா சென்றபோது அவரை இந்தியர்கள் "வந்தே
மாதரம்' என்று முழங்கியே வரவேற்றார்கள். லாலா லஜபதிராய், வந்தே மாதரம் என்ற பெயரில் ஓர் பத்திரிகை தொடங்கினார்.
தமிழ்நாட்டில் பாரதி, "வந்தே மாதரம் என்போம்: எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்' - என்ற உணர்ச்சி ததும்பும் பாடலை எழுதி, தெருவெல்லாம் முழங்கச் செய்தார். வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் "வந்தே மாதரம்' முழக்கம் ஊரெங்கும் ஒலிக்கச் செய்தனர்.
"வந்தே மாதரம்' - என்ற சொல்லை உச்சரித்ததற்காக தூக்குக்கயிற்றை முத்தமிட்டவர்கள் ஆயிரக்கணக்கில்! துப்பாக்கிக் குண்டுக்கு இரையானவர்கள் பல்லாயிரக்கணக்கில்.
இதுதான் வந்தே மாதரத்தின் நான்காவது கால கட்டம்.
1937-ஆம் ஆண்டில் பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. அப்பொழுது சட்ட மன்றங்களில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கையை, காங்கிரஸ் காரிய கமிட்டி அனுப்பியது.
அது சமயம் முகமது அலி ஜின்னா, முஸ்லிம் லீக்கின் இதர தலைவர்களின் கருத்தை அறிந்த பின்பு, பண்டித நேருவுக்கு கடிதம் வாயிலாக கீழ்க்காணும் கருத்தினைச் சொன்னார்.
"வந்தே மாதரம்' பாடலில் துர்க்கை வழிபாடு முன்னிறுத்தப்படுகிறது. இப்பாடல் இடம் பெற்றுள்ள "ஆனந்த மடம்' நாவலில், நவாப் மன்னரின் ஆட்சி தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணங்களால் வந்தே மாதரம் பாடலை நாங்கள் ஏற்றுக் கொள்வதற்கில்லை. உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்றார்.
ஜின்னாவின் இக்கருத்தின் மீது தாகூரின், முடிவை, தீர்ப்பை - அபிப்பிராயத்தை அல்ல - வேண்டுகிறார் பண்டித நேரு, அதற்கு தாகூர் தந்த தீர்வு:
வந்தே மாதரம் பாடலின் இரண்டு பத்திகளை ஏற்கலாம்: பின் உள்ள 4 பத்திகள் மத உணர்வுகளைப் பாதிக்கும் என்பதால், 4 பத்திகளைத் தவிர்த்து விடலாம் - என்பதாகும்.
தாகூர் தந்த தீர்ப்பும் தனக்கு ஏற்புடையதல்ல - என்று ஜின்னா கூறினார். அதன் பின்பு 1937-ல் காங்கிரஸ் காரிய கமிட்டியை கல்கத்தாவில் கூட்டி, விவாதித்த பின்பு, நேரு, சிறிது மாற்றியமைத்த தீர்மானத்தை நிறைவேற்றச் செய்தார். அந்த தீர்மானம் "வந்தே மாதரம்' பாடலின் முதல் இரண்டு பத்திகளைப் பாடலாம்; அது கட்டாயமல்ல; விருப்பமில்லாதவர்கள் தவிர்த்து விடலாம் என்பதாகும். இது வந்தே மாதரம் வரலாற்றின் ஐந்தாவது பகுதி.
இந்தியா விடுதலை பெற்ற பின்பு, இந்திய அரசியல் நிர்ணய சபை கூடி, அரசியல் அமைப்பை, நன்கு விவாதித்து, முடிவு செய்தது. ஆனால் தேசிய கீதம் எது என்பதை முடிவு செய்வது, உணர்வு பூர்வமான பிரச்னை என்பதால், அதனைப் பகிரங்கமாக விவாதிக்காமல் உறுப்பினர்ளுக்கு மத்தியிலே விவாதித்து, கருத்தறிந்து, இறுதியில் "ஜனகணமன' பாடல்தான் இந்தியாவின் தேசிய கீதம். ஆனால் வந்தே மாதரம் பாடலுக்கும், ஜனகணமன பாடலுக்கு இணையான அங்கீகாரம் கொடுக்கப்படலாம்' என்று 24.01.1950 அன்று முடிவு செய்யப்பட்டது. இது வந்தே மாதரம் வரலாற்றின் ஆறாவது பகுதி ஆகும்.
தேசிய எழுச்சிக்குத் தாரக மந்திரமாக விளங்கிய அந்த அற்புதப் பாடலுக்கு எதிர்ப்புக் கிளம்பிய போது அண்ணல் மனம் வெதும்பினார். தன் ஆதங்கத்தை "யங் இந்தியா'வில் (1937) கீழ்க்கண்டவாறு எழுதினார்.
"வந்தே மாதரம்' பாடலின் மூலம் என்ன? அது எப்போது இயற்றப்பட்டது என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல; ஒன்று மட்டுமே நிதர்சனம். வங்கப் பிரிவினையை எதிர்த்து இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து எழுப்பிய வலிமை வாய்ந்த போர் முழக்கமாகவே (யுத்த கோஷ
மாகவே) அது தலை எடுத்தது. அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்க்
குரல் அது.
வந்தே மாதரம் என் உள்ளத்தை ஈர்த்தது. நான் முதல் முதலாக அந்த கீதத்தைக் கேட்டபோது, அதன் வசீகரத்தில் சிலிர்த்தேன். அது இந்துக்களுக்காக மட்டுமே இயற்றப்பட்டது என்பதாக எனக்கு தோன்றவில்லை.
அதன்பின் 01.07.1939-ல் வெளிவந்த "அரிஜன்' இதழில் அண்ணல் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.
"வெவ்வேறு வகுப்பினர் நிரம்பிய கூட்டத்தில் வந்தே மாதரம் பாடி, அதன் காரணமாக சர்ச்கையை கிளப்புவானேன்? அப்பாடலை இசைக்கவில்லை என்றால், அந்த தேசிய கீதத்திற்கு ஒரு போதும் இழப்பு இல்லை.
அந்த கீதம் கோடானு கோடி மக்களின் இதயத்தில் வீற்றிருக்கிறது. வங்கத்தில் மட்டுமன்றி, ஏனைய மாநிலங்களிலும் அது தேசப்பற்றை கிளர்ந்தெழச் செய்கிறது. நமது நாடு உள்ள வரை அக்கீதமும் கீர்த்தியுடன் இருந்து வரும்'.
"வந்தே மாதரம்' பாடல் பாடத் தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனாலும் ஆரம்பம் முதல் இன்று வரை சர்ச்சைகள் தொடர்கின்றன.
இப்பிரச்னையில் மாகவிஞன் தாகூர் தந்த தீர்ப்பை மதிப்போம்.
பண்டித ஜவாஹர்லால் நேருவின் சமரச அறிவிப்பை ஏற்போம்.
அண்ணல் காந்தியின் அறிவுரையை அப்படியே ஏற்று நடப்போம்! சர்ச்சை
களைத் தவிர்ப்போம்.
அதுவே நமது தேச நலனுக்கு உகந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.