முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

மின்னணு வாக்கு இயந்திரமா? தந்திரமா?

காங்கிரஸ் கட்சியின் 84-ஆவது தேசிய மாநாடு முக்கியமான சில தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

Updated On : 30 மார்ச், 2018 at 1:20 AM
பகிர்:

காங்கிரஸ் கட்சியின் 84-ஆவது தேசிய மாநாடு முக்கியமான சில தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அந்தக் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவரான இளம் தலைவர் ராகுல்காந்தி தலைமையேற்ற முதல் மாநாடு இது. மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸை பாண்டவர்களாகவும், பாஜகவை கெளரவர்களாகவும் ஒப்பிட்ட உதாரணம் மாநாட்டில் கலந்துகொண்ட காங்கிரஸ்காரர்களை உற்சாகப்படுத்தியது.
அவருடைய ஆவேசமான பேச்சைக்கேட்டுச் சொக்கிப்போன அவருடைய தாயார் சோனியா காந்தி, மகனை அங்கேயே கட்டித்தழுவிப் பாராட்டிய காட்சி, காங்கிரஸ்காரர் ஒவ்வொருவரின் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர் பொங்கும்படிச் செய்தது.
காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆலோசனைப்படி இளைய தலைமுறைக்கு வழிகாட்டப் போவதாக ராகுல் காந்தி அறிவித்தது, மூத்த தலைமுறைக்கும், இளைய தலைமுறைக்கும் அவர் பாலமாக இருக்கப் போவதை அழகாகச் சுட்டிக் காட்டியது.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மத்தியிலுள்ள ஆட்சியின் குறைகளை எடுத்துக்காட்டுவதாக இருந்தன. அடுத்த ஆண்டு வரப்போகும் தேர்தலில் ஆளும் கட்சியை ஜனநாயக முறையில் அப்புறப்படுத்திவிட்டு, காங்கிரஸ் பதவியேற்றால், பலமும், வளமும் மிக்க நாடாக இந்தியாவை உருவாக்கும் என தீர்மானங்கள் உறுதியளித்தன.
ஒரு தீர்மானம், 2019-இல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகள் ஒரு பொதுத் திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து பாஜக & ஆர்.எஸ்.எஸ். கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
2004-ஆம் ஆண்டு இடதுசாரிகளின் ஆதரவைப் பெற்றதைப்போலவே, இந்தப் பொதுத் திட்டத்திற்கு இப்போதும் முயற்சி செய்யலாம் என்று இன்னொரு தீர்மானம் கூறுகிறது. 
இவ்வாறெல்லாம் பல தீர்மானங்களை நிறைவேற்றிய காங்கிரஸ் கட்சி, விஞ்ஞானத்துக்கு விரோதமான இன்னொரு தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது.
தற்போது தேர்தல்களை மின்னணு இயந்திரங்களின் மூலம் பதிவு செய்து, அதன்படி தேர்தல் ஆணையம் இறுதி முடிவுகளை அறிவிக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒரு நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்பு. இதற்கு முன்பு வாக்குச்சீட்டுகளை வழங்கி, அதிலுள்ள கட்சி அல்லது சுயேச்சை வேட்பாளர்களில் விரும்புகிற ஒருவருக்கு, அவருடைய தேர்தல் சின்னமுள்ள கட்டத்திற்குள் முத்திரை பதித்து வாக்காளர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வந்தனர். இந்த வாக்குச் சீட்டுகள் சீல் வைத்த பெட்டியிலிடப்பட்டன. பிறகு இந்தப் பெட்டிகளில் உள்ள வாக்குச்சீட்டுகளை ஒன்றாகக் கலக்கி, கட்சிவாரியாக அந்த வாக்குகளைப் பிரித்து அடுக்கி, வாக்குகள் எண்ணப்பட்டன. இது சற்றுக் கடினமான முறை; கால தாமதமாகக் கூடியது. இதற்காக ஒரு தேர்தலுக்கு வாக்குச்சீட்டுக்கு மட்டும் டன் கணக்கில் காகிதம் செலவாகிறது.
இந்த வாக்குச்சீட்டு முறையை மாற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பெங்களூரிலுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும், ஹைதராபாதிலுள்ள இந்திய எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து உருவாக்கின. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பல கோணங்களில் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. மிகுந்த பாதுகாப்புகள், பராமரிப்புகள், தொழில்நுட்ப வசதிகளோடும் சிறு பிழைகூட வராத எச்சரிக்கைகளோடும் இரண்டு பெரிய நிறுவனங்கள் இந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கித் தந்துள்ளது விஞ்ஞானத்தின் சாதனையாகும்.
பூமியிலிருந்து சுமார் 3.84 லட்சம் கி.மீ. தொலைவிலுள்ள நிலவில் ஆராய்ச்சி செய்வதற்கான 'சந்திரயான்-1' என்னும் விண்கலத்தை இந்தியா ஏவியபோது, உலகமே வியந்தது. 
பல நாடுகளுக்குச் சொந்தமான 104 செயற்கைக்கோள்களை ஒரே விண்கலம் மூலம் ஏவிய வரலாற்றையும் இந்தியா படைத்துள்ளது. இதேபோலத்தான் இந்த வாக்கு இயந்திரத்தையும் இப்போது உலகத்தில் நாம் உருவாக்கிக் காட்டியிருக்கிறோம். 
சுமார் 118 ஜனநாயக நாடுகளில் நடைபெறும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இந்தியாவிலும், இன்னும் ஒருசில நாடுகளிலும்தான் புழக்கத்தில் உள்ளன. மற்ற நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறைக்கு முழுமையாக இன்னும் மாறவில்லை. அதனாலேயே இந்த இயந்திரம் சரியானதல்ல என்று வாதம் செய்யலாமா?
விண்ணில் பறக்கும் ஆய்வு மையங்களை உருவாக்கியுள்ளோம். பூமியிலிருந்து செயற்கைக்கோள்களை சரி செய்து இயக்குகிறோம். தானியங்கி விமானங்கள், ஆளில்லா விமானங்கள் உருவாக்கினோம். இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சியும், கடந்த ஒரு நூறாண்டுக் காலத்தில்தான் நிகழ்ந்திருக்கின்றன. விநாடிப் பொழுதில் அமெரிக்காவில் இருக்கிற ஒருவரோடு தொலைபேசியில் பேச முடிகிறது. தகவல் சாதனத்தின் இப்புரட்சியை என்னவென்று சொல்வது? இப்படி நிறையச் சொல்லலாம். இந்தப் பட்டியலில்தானே இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும் இடம்பெறுகிறது. 
இயந்திரத்தில் சந்தேகம் வருகிறதென்றால், அந்தச் சந்தேகத்தை நிவர்த்தி செய்து விடலாம். எதிர்ப்பதற்காகவே சந்தேகப்படுகிறார்கள் என்றால், அவர்கள் மீதுதான் நமக்கு சந்தேகம் வருகிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியானது அல்ல என்று ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் யாரும் சொல்வது இல்லை. அதாவது, வெற்றி பெற்றவர்கள் சொல்வதில்லை. ஆனால், வெற்றி பெறத் தவறிய - தோற்றுப்போன - தோல்வியை ஒப்புக்கொள்ள மனம் ஒப்பாத நபர்கள்தான், மக்கள் தங்களைத் தோற்கடித்து விட்டார்கள் என்று சொல்ல விரும்பாமல், இயந்திரத்திலே கோளாறு என்று சொல்கிறார்கள்.
இயந்திரத்தின் கோளாறைச் சரி செய்யச் சொல்லாமல், இயந்திரத்தையே தூக்கி எறியுங்கள் என்கிறார்கள். விமானத்தில் கோளாறு என்றால், உடனடியாகத் தரையிறக்கி அது சரி செய்யப்பட்டு மீண்டும் பறக்கிறது. பேருந்தில் கோளாறு என்றால், அது நிறுத்தப்பட்டுச் சரிசெய்யப்பட்டு மீண்டும் புறப்படுகிறது. ஆனால், வாக்கு இயந்திரத்தில் கோளாறு என்றால், வாக்கு இயந்திரத்தையே கைவிடுமாறு சொல்லப்படுகிறது.
தேர்தலை முன்பிருந்தபடி வாக்குச்சீட்டுகளின் மூலமே நடத்த வேண்டும் என்றும் அப்படி நடத்தினால், இந்தத் தோல்வி தங்களுக்கு வராது என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள். கட்சி மாநாட்டில் தீர்மானமே நிறைவேற்றுகிறார்கள். 
கட்சிக்காரர்கள் வேண்டுமானால் இதை நம்பலாம். ஆனால், இவர்களைத் தோற்கடித்த மக்கள், இன்னொரு கட்சிக்கு வெற்றி தேடித் தந்த மக்கள், பழைய வாக்குச்சீட்டு முறையைத் திரும்பக் கொண்டு வந்தால் இவர்களுக்கு வாக்களித்துவிடுவார்களா? இதைக் கலப்படமில்லாத பைத்தியக்காரத்தனம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?
ஒரு கட்சியின் ஆட்சியை விமர்சனம் செய்வதும், அதை வீழ்த்துவதும் இன்னொரு அரசியல் கட்சிக்கு அவசியம்தான். ஆனால், ஒப்புக்கொண்ட தேர்தல் முறையில், இயந்திரத்தால் எளிமையாக்கப்பட்ட ஒரு காரியத்தை, ஏளனம் செய்வதும், திட்டமிட்டு ஏமாற்றிவிட்டார்கள் என்பதும் அரசியல் அநாகரிகமாகும்.
ஒவ்வொரு எதிர்க்கட்சியும் நாளைய ஆளும் கட்சிதான். ஒவ்வொரு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியாகவும் மாறலாம். இதுதான் ஜனநாயகம். இதற்கு இந்த வாக்குப்பதிவு இயந்திரம் என்ன செய்ய முடியும்?
அண்மையில் நடந்த குஜராத் தேர்தலில் தம் சாதிக்கு இட ஒதுக்கீடு தரப்படுமானால், தங்கள் ஆதரவைத் தெரிவிப்பதாக அந்தச் சாதி அமைப்பு அறிவித்தது. பாரம்பரியமுள்ள ஒரு பெரிய அரசியல் கட்சி, அவ்வாறு இட ஒதுக்கீடு தருவதற்கு முன்வந்தது. குஜராத்திலுள்ள இன்னொரு அரசியல் கட்சி, சாதிக்கு இட ஒதுக்கீடு தர மாட்டோம் என்று உறுதியாக நின்றது.
சாதி இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தந்தும்கூடத் தோற்றுப்போன கட்சி 2019-இல் வரவுள்ள தேர்தலிலும் ஒருவேளை தோற்றுப்போவோமோ என்ற பீதியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் குறைகூறுகிறது. 
இதே கட்சித் தலைவர்தான் சென்ற ஆண்டு அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு மத்தியில் பேசியபோது, இந்தியாவில் அரசியல் என்பதே வாரிசு அரசியலாகத்தான் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டது மட்டுமல்லாமல், அந்த வாரிசும் தான்தான் என்று சுட்டிக்காட்டியும் பேசியது நினைவுகூரத் தக்கது. 
விஞ்ஞானத்திற்கு இது விரோதமானது. இது, ஆளும் தலைமையை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்ள முடியாத பலவீனமே தவிர, வேறல்ல. 
வஞ்சகமாக வாக்கு இயந்திரத்தால் ஜெயித்திருந்தால், ஜெயித்த கட்சி இந்த வாக்கு முறையை மட்டுமே சிறந்தது எனக் கூறிவரும். அப்படிச் சொல்லாமல் வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றிக் கொள்வதாக மற்ற கட்சிகளும் கூறுமானால், அதற்கும் தயார் என்றுதான் கூறியுள்ளது. இதுவே அக்கட்சியின் நாணயத்தையும், நம்பகத்தன்மையையும் விளக்கப் போதுமானதாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.