நடுப்பக்கக் கட்டுரைகள்

போரற்ற புதிய உலகம் காண்போம்!

இதுவரை உலகம் இரண்டு போர்களைக் கண்டுவிட்டது. அதனால் ஏற்பட்ட இழப்புகள் கொஞ்சமா? நஞ்சமா? மூன்றாவது உலகப் போர் வருமானால் அதனை உலகம் தாங்காது.

உதயை மு. வீரையன்

இதுவரை உலகம் இரண்டு போர்களைக் கண்டுவிட்டது. அதனால் ஏற்பட்ட இழப்புகள் கொஞ்சமா? நஞ்சமா? மூன்றாவது உலகப் போர் வருமானால் அதனை உலகம் தாங்காது. முரட்டுத்தனத்துக்குப் பேர் போன அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜோங் - உன் இருவரும் அறைகூவல் விடுக்கும்போதெல்லாம் உலகம் அச்சத்தின் பிடியில் சிக்கத் தவித்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இரு கொரிய நாடுகளுக்கும் இடையே கடந்த 1950 முதல் 1953-ஆம் ஆண்டு வரை போர் நடைபெற்றது. அதனால் கொரிய மக்கள் அடைந்த துன்பங்களும், துயரங்களும் சொல்ல முடியாதவை. தங்கள் உறவினர்களையே பார்க்க முடியாமல் இரு நாட்டு மக்களும் பிரிந்து கிடந்தனர்.
அதன்பின் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. ஆனால் அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவில்லை. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே இப்போது போர் நடைபெறவில்லை என்றாலும், அதிகாரபூர்வமாக போர் முடித்து வைக்கப்படவில்லை.
இந்தச் சூழ்நிலையில், வட கொரிய மற்றும் தென் கொரிய அதிபர்கள் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை 2018 ஏப்ரல் 27 அன்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பு, இருநாட்டு எல்லையில் உள்ள அமைதி கிராமமான பான்முன்ஜோமில் நடைபெற்றது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங், தென் கொரிய எல்லையில் கால் வைத்ததும் அதிபர் மூன் ஜே-இன் அவரை ஆரத்தழுவி வரவேற்றார். இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். 
பின்னர் தென் கொரியாவின் அணிவகுப்பு மரியாதையை வட கொரிய அதிபர் ஏற்றுக் கொண்டார். அதன் பின் 'அமைதி இல்ல'த்தில் மாநாடு தொடங்கியது. வட கொரிய அதிபர் ஒருவர் தென் கொரியாவுக்கு வந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அங்குள்ள வருகைப் பதிவேட்டில் தமது கருத்தைப் பதிவு செய்த வட கொரிய அதிபர் கிம் ஜோங், 'ஒரு புதிய வரலாறு தொடங்கியுள்ளது. இது அமைதிக்கான தொடக்கம்' என்று எழுதினார். அதுதான் உண்மை என்பதால் உலகம் அதனை ஆவலோடு எதிர்நோக்கி நின்றது.
கொரியப் போருக்குப் பிறகு நிரந்தர சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்துதல், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக்குதல் ஆகிய விவகாரங்களை முன்னிலைப்படுத்தி இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஐ.நா.வின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா ஏவுகணைச் சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வந்ததால், கடந்த ஆண்டின் இறுதி வரை கொரிய தீபகற்பத்தில் போர் மேகமே சூழ்ந்திருந்தது.
ஐ.நா. அமைப்பும், அமெரிக்க ஆதரவு நாடுகளும் வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடை விதித்தன. இதனால் பொருளாதார அடிப்படையில் வட கொரியா பின்னடைவைச் சந்தித்தது. எனினும், சீனாவும், ரஷியாவும் அதனை ஆதரித்து நின்றன.
இந்தச் சூழலில் தென் கொரியாவில் மார்ச் மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புவதற்குத் தயாராக இருப்பதாக வட கொரியா அறிவித்தது. அத்துடன் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு தமது தங்கை கிம் யோ-ஜோங்கை அனுப்பி வைத்தார் கிம்.
அதனைத் தொடர்ந்து வடகொரிய - தென் கொரிய நாடுகள் இடையே பிணக்கம் குறைந்து சுமுகச்சூழல் ஏற்பட்டது. வட கொரியாவுக்கு தனது நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் உய்-யோங் தலைமையிலான நல்லெண்ணத் தூதுக்குழுவை தென் கொரியா அனுப்பி வைத்தது.
இதன் தொடர்ச்சியாக வட கொரிய, தென் கொரிய அதிபர்களின் நேரடிச் சந்திப்பு பற்றி இரு தரப்பு அதிகாரிகளும் இரண்டு முறை சந்தித்து மாநாட்டுக்கான ஏற்பாடுகளைத் தயார் செய்தனர். 'கொரிய மாநாடு 2018' இப்படித்தான் தொடங்கியது.
கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிராந்தியமாக நிர்மாணிப்பதே இரு பெரிய நாடுகளின் பொதுவான இலக்கு என்பது இந்தப் பேச்சுவார்த்தை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரியப் போர் முடிந்து 65 ஆண்டுகள் ஆகியும் நிரந்தர போர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை.
அந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, கொரியப் போரை முறைப்படி முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. கூடிய விரைவில் தென் கொரிய அதிபர் வட கொரியத் தலைநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பை உலக அமைதியை நாடும் அனைத்து நாடுகளும் வரவேற்றுள்ளன. ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெளி, “'வட கொரிய மற்றும் தென் கொரிய அதிபர்கள் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். இரு தலைவர்களும் தங்களது வாக்குறுதிகளுக்கு விரைவில் செயல் வடிவம் தரவேண்டும்'என்று கூறியுள்ளார்.
இந்த மாதத்திற்குள் தமது அணு ஆயுத சோதனை மையத்தை முழுவதுமாக மூட, வட கொரியா வாக்குறுதி அளித்துள்ளது. மேலும், சோதனை மையம் முழுவதுமாக மூடப்பட்டதை நேரில் ஆய்வு செய்து உறுதிப்படுத்த அமெரிக்க வல்லுநர்கள் மற்றும் செய்தியாளர்கள் அந்தப் பகுதிக்கு வந்து பார்வையிடலாம் என்றும் அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது.
நீண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்புக்கு முன்னதாக, இந்த வாக்குறுதியை தென் கொரிய அதிபரிடம் அளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'பேச்சுவார்த்தைக்கு முன்பாக ஏவுகணைச் சோதனைகள் எதையும் வட கொரியா நடத்தாது என்ற வாக்குறுதியை அந்த நாடு காப்பாற்றும்' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 நவம்பர் 28-க்குப் பிறகு வட கொரியா ஏவுகணை சோதனை எதையும் நடத்தவில்லை என்பதை தெளிவாகத் தெரிவித்துள்ளது. 'வட கொரியா இப்போது சரியான பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. இதுவே நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. எதிர்கால நல்லெண்ண நடவடிக்கைகள் நிச்சயம் வெற்றி பெறும்' என்றும் அவர் கூறியுள்ளார்.
'வட கொரியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்று அமெரிக்கக் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்' என்றும் சூசகமாகத் தெரிவித்துள்ளார். வட கொரிய அதிபருடன் நடக்கவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு விரைவில் நடைபெறும் நிலையில் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.
வட கொரியாவில் பிணைக் கைதிகளாகச் சிறை வைக்கப்பட்டுள்ள மூன்று அமெரிக்கர்களையும் விடுவிக்குமாறு முந்தைய ஒபாமா அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்கர்களான கிம் சாங்-டக், கிம் ஹாக்-சாங், கிம் டாங்-சுல் ஆகிய மூவரும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் வட கொரியாவில் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பை முன்னிட்டு அவர்கள் மூவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்களை விடுதலை செய்வதற்கு வசதியாக அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு தலைநகர் பியாங்கியோங்குக்கு வெளியே ஒரு இரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த அளவுக்கு வட கொரியா இறங்கி வந்திருப்பதற்கு சீனாவின் வற்புறுத்தலே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. வட கொரியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சீன வெளியுறவுத் துறையமைச்சர் வாங் யீ, கொரிய தீபகற்பத்தில் போரை நிரந்தரமாக முடித்து வைக்கும் சமாதான முயற்சிகளுக்கு சீனா தமது முழு ஆதரவை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அமொக்க அதிபரும், வட கொரிய அதிபரும் சந்திக்கும் இடமும், நாளும் இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் 12-ஆம் நாள் சிங்கப்பூரில் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நடக்கும் என்று நம்புவோம்.
இந்நிலையில், வட கொரியாவில் அணு ஆயுத சோதனை மையம் இருப்பது அமெரிக்கர்களுக்கு அச்சுறுத்தல் என்றும், தங்கள் நாட்டிலுள்ள அணு ஆயுத சோதனை மையத்தை 10 முதல் 12 நாட்களுக்குள் தகர்க்கப்போவதாகவும் வட கொரியா அறிவித்திருப்பது, அமெரிக்கர்களுக்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் நல்ல செய்தி என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ கூறியுள்ளார்.
இப்போது அமெரிக்காவும், தென் கொரியாவும் நடத்தப்போகிற கூட்டு போர் பயிற்சி தொடர்பாக தென் கொரியாவுடன் நடத்தவிருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வட கொரியா ரத்து செய்து விட்டது. இது அமெரிக்காவுக்கு விடுத்த எச்சரிக்கையாகப் பன்னாட்டு அரங்கில் பார்க்கப்படுகிறது.
அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் போரை வெறுத்தார். 'போர் அநாவசியமானது. நல்லவர் பலரது உயிரைக் குடிக்கும் போர் அநாகரிகத்தின் உருவேயாகும்' என்றார்.
கீரியும், பாம்புமாக இருந்த இரண்டு நாடுகள் சந்திப்பதும், சமாதானம் பேசுவதும் மனித நாகரிகத்தின் அடுத்த கட்டமாகும். போர் என்பது சிந்திக்கத் தெரிந்த மனிதர்களின் செயல் அல்ல. விலங்குகளின் செயல். அதனை அறிவுலகம் ஏற்றுக் கொள்ளாது. போரற்ற புதிய உலகம் காண்போம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT