நடுப்பக்கக் கட்டுரைகள்

கல்வி சமத்துவமே தேவை!

கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பத்து வயதுமுதல் ஐம்பது வயது வரையிலான

கோதை ஜோதிலட்சுமி

கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பத்து வயதுமுதல் ஐம்பது வயது வரையிலான பெண்கள்அனுமதிக்கப்படுவதில்லை என்பது தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கம். இந்த வழக்கத்தை எதிர்த்து இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த மனுக்களை அரசியல் சாசனஅமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது. இந்த மனுக்கள்மீது ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, தொடர்ச்சியாக எட்டு நாள்கள் விசாரணை நடத்தி, அதன் மீதான தீர்ப்பினை அண்மையில் அளித்துள்ளது. 
பெண்களை வழிபாட்டுத்தலங்களில் அனுமதிக்க மறுப்பதுஅரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், குறிப்பிட்ட வயதுப் பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது பெண்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாரபட்சம் என்றும், இது ஹிந்துப் பெண்களுக்கான உரிமை மறுப்பு என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஐந்து நீதிபதிகளில் நான்கு பேர்அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனுமதிக்கவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்த போதிலும், அதில் இடம் பெற்றிருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார். அவர், உடன்கட்டைஏறுதல் போன்ற சமூகத் தீங்கான பிரச்னைகளில்தான் நீதிமன்றம் முடிவு எடுக்கலாமே தவிர, மற்ற மத நடைமுறைகளில் நீதிமன்றம் முடிவு எடுக்கக்கூடாது. மதநம்பிக்கை சார்ந்த விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவது கூடாது என்று தீர்ப்பு வழங்கினார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள்அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரலாற்றுச்சிறப்பு மிக்கத் தீர்ப்பு என்று ஒரு சாரார் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் இந்தத் தீர்ப்புக்கு எதிராகவும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இப்படி பெண்களுக்கும் சமமான வழிபாட்டு உரிமை தேவை என்ற கருத்து முன் வைக்கப்படும் நிலையில், கோயில் நடைமுறைகள் ஒவ்வொரு கோயிலுக்கும் இடையே மாறுபட்டுக் காணப்படுகின்றன. 
சில கோயில்கள் பெண்களுக்கானது அல்ல என்று கூறி அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதேபோல, சில கோயில்களில் பூஜைகள் கூட பெண்களாலேயே நடத்தப்படுகின்றன. உடை முதல் விரதம் காப்பதுவரை எத்தனையோ மாறுபாடுகள் இங்கே மரபாக பின்பற்றப்பட்டு வருகின்றன. பெண்கள் மட்டுமே செய்யும் பூஜைகள் நாட்டுப்புறத்தில் இன்றும் வழக்கத்தில் உள்ளன. அதிலே படைக்கப்படும் பண்டங்கள்கூட ஆண்களின் கண்களில் பட்டுவிடக்கூடாது என்றஅளவுக்கு அதுமுற்றிலும் பெண்களுக்கானதாகவே இருக்கிறது. 
சில அம்மன் கோயில்களில் பெண்களும் இருமுடி கட்டி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துகின்றனர். குலதெய்வக் கோயில்கள் என்று வழங்கப்படும் சில சமூகக் கோயில்களில் திருமணமாகிப் போன பெண்கள், தங்கள் தகப்பன்வழி குலதெய்வக் கோயில்களில் அனுமதிக்கப்படுவதில்லை. சில கோயில்களில் பெண்கள் எல்லா நாள்களிலும் எந்தத் தடையுமில்லாமல் பூஜை செய்கிறார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடையணிவதில் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பல கோயில்களில் ஆண்கள் மேலுடை எதுவும் இன்றி வேட்டி மட்டுமே கட்டிக்கொண்டு வர வேண்டும் எனும் மரபுகூட பின்பற்றப்படுகிறது. எல்லா இடங்களிலும் சமமான உரிமை கோருவது இது போன்ற சந்தர்ப்பங்களில், இடங்களில் அறிவுடைமை ஆகாது. காலம்அறுதியிட்டுச் சொல்லமுடியாத அளவுக்கு காலங்காலமாகப் பின்பற்றப்படும் வழக்கங்களும் மரபுகளும் இப்படிப் பல்வேறுபட்டதாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. காலத்திற்கேற்ப மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. சபரிமலை விஷயத்தைப் பொருத்தவரை நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு சமத்துவம் மற்றும் அரசியல் சாசனம் வழங்கும் உரிமை இவற்றை நிலைநாட்டுவதாகப் பெருமிதம் கொள்கிறார்கள்.
மதம் என்பது ஒருவாழ்வியல் முறை. எத்தனையோ காலமாகத் தொன்றுதொட்டு வழங்கி வரும் நடைமுறைகளைக் கேள்விக்குள்ளாக்குவது அர்த்தமற்றதும் அவசியமற்றதும் ஆகும். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான கொத்தடிமைத்தனம் போன்ற மனித உரிமை மீறல்கள் நாட்டில் நடந்துகொண்டிருக்கின்றன.அதுபோன்ற விஷயங்களில் நீதித்துறையும் அரசும் கவனம் செலுத்தி மக்களின் வாழ்வு மேம்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதே நாட்டின் வளர்ச்சிக்கும் இறையாண்மைக்கும் அவசியமானது. அதைவிடுத்து, இதுபோன்ற சமய நம்பிக்கைகளை, நடைமுறைகளை மாற்றி அமைப்பது எவ்விதத்திலும் தேசத்தின் வளர்ச்சிக்கோ தனிமனித வளர்ச்சிக்கோ உதவப் போவதில்லை.
சமத்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எல்லாருக்கும் உடன்பாடுதான். ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்ற கருத்து ஏற்புடையதுதான். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்த உரிமைக்காகப் போராடியவர்களை நினைக்கும்போது நமக்கு வேறு சில கேள்விகளும், அதற்கான விடைகளைத் தேடும் மனநிலையும் ஏற்படுகிறது. 
சபரிமலைக் கோயிலிலோஅல்லது வேறு ஏதோ ஒரு கோயிலிலோ வழிபடுவதற்கு உரிமை கிடைத்து விட்டால் பெண்கள் சமத்துவம் உறுதிப்படுத்தப்பட்டுவிடுமா? பெண்களுக்கு
எதிரான எத்தனையோ நடைமுறைகள் நாட்டில் அன்றாடம் வீடுகளில் தொடங்கி சமூக அமைப்பின் அத்தனை நிலைகளிலும் இருக்கத்தானே செய்கின்றன? அவற்றைக் களையாமல் பெண்களுக்கு சமஉரிமை உறுதிப்படுத்தப்படுமா? இந்த தேசம் பெண்களுக்கு வாக்குரிமைஅளித்து இருக்கிறது. நமது வாக்குரிமை கொண்டு நம்மை ஆள்வோரைத் தேர்வு செய்யும் உரிமை பெற்றிருக்கிறோம். ஆனாலும் இத்தனை ஆண்டுகளில் நமக்கு சமத்துவம் ஏன் சாத்தியப்படவில்லை? அரசியலமைப்பு வழங்கியிருக்கும் சமஉரிமை பற்றிய தகவல் நம் நாட்டின் எல்லாப் பெண்களுக்கும் தெரிந்து இருக்கிறதா? 
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்கு எந்தத் தடையும் இனி பெண்களுக்கு இல்லை என்ற தீர்ப்பினை செய்தித்தாள்களில் படித்துத் தெரிந்துகொள்ளும் வாய்ப்புஎத்தனை பெண்களுக்கு இருக்கிறது? நாட்டில் எத்தனை விழுக்காட்டுப் பெண்கள் இந்தத் தீர்ப்பைப் படித்துப் புரிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள்? இத்தகைய கேள்விகள் மனத்தில் வேதனையை ஏற்படுத்துகின்றன. ஏனெனில், கல்வி இன்னும் எல்லாப் பெண்களுக்கும் சென்று சேரவில்லை. பெரும்பான்மையான பெண்களை அறியாமை இருளில் அடைத்து விட்டு சமத்துவம் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. 
மேலும், நமக்கு தற்போதைய முதன்மைத் தேவை வழிபாட்டு உரிமை அல்ல. அறிவுச் சமத்துவம் கிடைப்பதற்கான வழிகள் மட்டுமே முதன்மைத் தேவையாக இருக்க முடியும். நமது அறியாமை இருள் நீக்கும் கல்விதான் தேசத்தின் பெண்களின் அடிப்படையான அத்தியாவசியத் தேவை. அதனை நோக்கிய தெளிவு பிறக்காதவரை மற்றவை முழுமையான வெற்றியை எட்டாது.
நம் நாட்டில் வழிபாட்டுத்தலங்கள் இருக்கும்அளவுக்கு, பள்ளிக் கூடங்கள் இருக்கின்றனவா எனும் கேள்வியை முன்வைக்க வேண்டியது அவசியம். இந்தியாவில் இன்று கல்விஅறிவு பெற்ற பெண்கள் வெறும் 54 விழுக்காட்டினர்தான். கிராமப்புறம், நகர்ப்புறம் என வேறுபாடு இல்லாமல், பெண்களுக்கான கல்வி குறைவாகவே இருக்கிறது. இந்த 54 விழுக்காட்டிலும் ஏறத்தாழ 20 விழுக்காட்டுப் பெண்கள் வெறும் கையெழுத்து மட்டுமே போடத் தெரிந்த பெண்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். 
ஆரம்பக்கல்வி மட்டுமே கிடைக்கப் பெற்றவர்கள் இந்த 54 விழுக்காட்டில் மிகப் பெரும் அளவில் அடங்கி இருக்கிறார்கள் என்கின்றன புள்ளிவிவரங்கள். நமது சமூக அமைப்பு, கல்வியை மையப்படுத்துவதும் இல்லை; ஊக்குவிப்பதும் இல்லை. தேவையான அளவுக்குப் பள்ளிகள் இல்லாமை, இருக்கும் பள்ளிகளிலும் போதிய வசதிகள் இல்லாமல் இருத்தல், கிராமப்புறப்,பகுதிகளில் அவர்களுக்குத் தேவையான அளவுக்கு ஆரம்பப் பாடசாலைகள் கூட இல்லாத அவலம் போன்றவை இன்றும் தொடர்கின்றன. 
27 விழுக்காட்டுப் பள்ளிகளில்தான் மின்சார வசதி உள்ளது. ஆறு விழுக்காட்டுப் பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி இருப்பதாக 2009-ஆம்ஆண்டில் மாவட்ட கல்வித் தகவல் அமைப்பு உறுதி செய்துள்ளது. உலகத் தொழிலாளர் நிறுவனம் இந்தியாவில் 20 விழுக்காட்டுக்கும் குறைவான பெண்கள் மட்டுமே மாத வருமானம் பெறும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்கிறது. உயர் பதவிகளில் ஒரு விழுக்காடு கூடப் பெண்கள் இல்லை என்ற நிலைதான் இந்தியாவில் இன்றும் நிலவுகிறது.
சமமான கல்வி வழங்கப்படும்போதுதான்ஆண்-பெண் பேதமற்ற அறிவுச்சமத்துவம் தோன்றும்; நாட்டின் அனைத்துப் பெண்களும் தங்கள் ஆற்றலை அறிவாற்றலை முற்றாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். அப்போது இந்த தேசம் உற்பத்திப் பெருக்கம், மனித ஆற்றல் வளம் என்று,நேர்மறை,வளர்ச்சியை,நோக்கி நகர்ந்து, உலக நாடுகளையே அதிரச் செய்யும். கல்வி, வேலை, சமூக நிர்வாகம் என்ற மூன்று நிலைகளிலும் பெண்கள் இருக்க வேண்டும். அடுத்த தலைமுறை இந்த சமதர்ம சமுதாயத்தைக் காண வேண்டுமானால் கல்வியில் கவனம் செலுத்தியாக வேண்டும். பெண் என்பவள் மனித இனத்தின் மிகச்சிறந்த பாதி எனும் மகாத்மா காந்தியின் வாசகம் மெய்யாக நமக்குத் தேவை. 
எல்லாப் பெண்களுக்கும் சமமாகக் கல்வி கிடைத்து விடுமேயானால் அது கொண்டு பொருளாதார சுதந்திரத்தை, சமத்துவத்தை அடைவது சாத்தியம். அப்போது, சார்ந்து வாழும் நிலை நீங்கி, சுயமாய் வாழ்வதற்கான நம்பிக்கை தோன்றும். சுயமாய் வாழப்பழகிக் கொண்ட பெண் மீதுஅடக்கு முறை, வன்முறை சாத்தியமற்றுப் போகக்கூடும். தனக்கான உரிமைகள், கடமைகள் இவற்றை ஒரு பெண் தெளிவாக உணர்ந்து கொள்ளும் திறன் கொண்டவளாய் சமூகத்தில் தன் பங்களிப்பைச் செய்யும்போது, ஏற்றத்தாழ்வுகள் மறைந்து சமத்துவம் வளரத் தொடங்கும். அதற்கு அவர்களுக்கு அவசியமான கல்வியை, கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் சிறுமிக்கும் கொண்டு சேர்க்கப்படுவதைத்தான் அரசு நிர்வாகமும் நீதித்துறையும் உறுதி செய்யவேண்டும். அதில்தான் பெண்ணுக்கானஉரிமையும் கெளரவமும் அடங்கியிருக்கிறது.
கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT