முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

கோவா: என்ன செய்யப் போகிறது பாஜக?

கடந்த சில மாதங்களாக கோவா மாநில அரசியல் களம் நாள்தோறும் புதிய திருப்பத்தை சந்தித்து வருகிறது. மாநில முதல்வரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான மனோகர்

Updated On : 23 அக்டோபர், 2018 at 1:18 AM
பகிர்:

கடந்த சில மாதங்களாக கோவா மாநில அரசியல் களம் நாள்தோறும் புதிய திருப்பத்தை சந்தித்து வருகிறது. மாநில முதல்வரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான மனோகர் பாரிக்கர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சியைத் தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்கும் நோக்கில் காங்கிரஸும் முனைப்புடன் செயல்படுகின்றன.
40 உறுப்பினர்கள் கொண்ட கோவாவின் முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதையடுத்து சில காலம் காங்கிரஸும் மாநிலக் கட்சிகளும் மாறி மாறி ஆட்சியில் இருந்தன. 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் முதல் முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றி கோவா அரசியலில் திருப்பத்தை கொண்டு வந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பில் சிறப்பாக செயல்பட்டு பின்பு பாஜவில் இணைந்த மனோகர் பாரிக்கர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
அதற்கடுத்த தேர்தல்களில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. கோவா மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்த பாரிக்கர் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். எனினும், மத்தியில் 2014-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைந்தபோது பாரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதனால் பாரிக்கரால் கோவா மாநில முதல்வராகத் தொடர முடியவில்லை. கோவா மாநில முதல்வர் பதவிக்கு எம்எல்ஏ-க்கள் அனைவராலும் ஒருமனதாக லட்சுமிகாந்த் பார்சேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், கோவா சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் லட்சுமிகாந்த் பார்சேகரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி பாஜக தேர்தல் களம் கண்டது. பாரிக்கருக்கு மக்களிடையே இருந்த செல்வாக்கு பார்சேகருக்கு இல்லாத காரணத்தால், வெறும் 14 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 16 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் இல்லாத காரணத்தால் மாநிலத்தில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தது. அந்த சமயத்தில் பாஜகவும், காங்கிரஸும் மற்ற கட்சிகளின் ஆதரவை தேடின. 
அப்போது, பாரிக்கர் முதல்வராக பதவியேற்றால் பாஜகவுக்கு ஆதரவு அளிப்போம் என்று மகாராஷ்டிர கோமந்தக் கட்சி கூறியது. எனவே, பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த பாரிக்கர் பதவி விலகி கோவா அரசியலுக்குத் திரும்பினார். பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு நடுவே கோவாவில் மீண்டும் பாஜக ஆட்சியமைத்தது. 
கோவா பார்வர்டு கட்சி மூன்று இடங்களிலும், மகாராஷ்டிர கோமந்தக் கட்சி மூன்று இடங்களிலும் வெற்றி பெற, சுயேச்சை எம்எல்ஏ-க்கள் மூவரும், தேசியவாத காங்கிரஸின் ஒரு எம்எல்ஏ-வும் பாஜகவுக்கு ஆதரவு அளித்ததால் கோவாவில் பாஜக ஆட்சியமைத்தது.
அதை ஏற்றுக் கொள்ள முடியாத காங்கிரஸ், ஆட்சி அமைக்க எங்களுக்கு வாய்ப்பு தந்தால் பெரும்பான்மையை நிரூபித்து காட்ட முடியும். ஆனால் ஆளுநர் எங்களை அழைக்கவில்லை என்றும், குதிரை பேரத்தில் ஈடுபட்டே பாஜக ஆட்சியை பிடித்தது என்றும் குற்றம்சாட்டி வந்தது. 
இந்நிலையில், மார்ச் மாதம் மனோகர் பாரிக்கர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று மூன்று மாதம் கழித்து திரும்பி வந்தார். அதன் பின்னரும் இருமுறை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வந்தார்.
முதல்வர் இல்லாததால் மாநிலத்தில் நிர்வாக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியது. மேலும், முதல்வர் பதவியில் இருந்து பாரிக்கரை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. 
இந்நிலையில் உடல்நலக்குறைவால் செப்டம்பர் 15-ஆம் தேதி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பாரிக்கர் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சூழலில், தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு காங்கிரஸ் கட்சியினர் மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் மனு அளித்தனர்.
மாநில அரசியலில் குழப்பம் நிறைந்த இந்த சூழலை தனக்கு சாதமாக காங்கிரஸ் பயன்படுத்த நினைத்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த இரு எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்துள்ளனர். அதனால் சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 14-ஆகக் குறைந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இந்த இரு எம்எல்ஏக்களின் ராஜிநாமா பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 
தற்போது கோவா சட்டப்பேரவையில் காங்கிரஸும் பாஜகவும் சரிசமமான எம்எல்ஏ-க்களை கொண்டுள்ள நிலையில், பாரிக்கர் மீண்டு வந்துஆட்சியில் தொடர்வார் எனக் கூறிய பாஜகவே, பாரிக்கருக்கு அடுத்து யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
இந்த பரபரப்பான சூழலில், கோவாவில் பாஜக தனது ஆட்சியை எவ்வித பிரச்னையும் இன்றி தொடர வேண்டுமெனில், பாரிக்கர் மீண்டும் வந்து முதல்வர் இருக்கையில் அமர வேண்டும். அல்லது அவருக்கு ஒப்பான ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டும். இரண்டில் எது நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.