இயற்கையே கருணை காட்டு
'உழவன் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் அனைவரும் சோற்றில் கையை வைக்க முடியும்' என்ற வசனம் திரைப்படங்களிலும், ஊடகங்களிலும் படாத பாடு படுவதைக் காண்கிறோம். அதே உழவன் சேற்றுடன் மழை நீரும் தேங்கியிருக்கும் தன்னுடைய நிலத்தில் கால் வைக்க நேர்வது எத்தகைய வலியைக் கொடுக்கும் என்பதை இந்தப் பெருமழைப் பருவச் செய்திகள் நமக்கு உணர்த்தி வருகின்றன.
ஏர் உழுது, நாற்று நட்டு, களை பறித்து, நீர் பாய்ச்சி, உரம் போட்டு அருமையாக வளர்த்த பயிர்கள் நாள் கணக்கில் மழை நீர் தேங்கிய அந்த நிலத்திலேயே அழுகிப்போவது அந்த விவசாயியின் நெஞ்சைப் பிளப்பதாகும்.
மழைச் சேதத்தைப் பார்வையிட வரும் அதிகாரிகளுக்கும், ஊடகப் புகைப்படக்காரர்களுக்கும் அந்தச் சேற்றிலேயே அழுகி உயிரை விட்ட நாற்றுகளை எடுத்து உயர்த்திக்காட்டுவது எத்தனை கஷ்டமான விஷயம்.
கடந்த சில வருடங்களாக நல்ல மழை பெய்து வருகின்றது. இதனால் அணைகளின் நீர் ஆதாரம் அதிகரித்துள்ளதாகவும், மாநிலம் முழுவதிலும் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் செய்திகள் பறைசாற்றக்கூடும். ஆனால், அழுகிய பயிர்களுக்காகத் தன் விலா நோகப் பாடுபட்ட விவசாயியின் நெஞ்சம் என்னவோ இந்தக் கடும் மழையிலும் எரிமலையாகக் குமுறிக்கொண்டுதான் இருக்கும்.
பருவநிலை மாற்றங்களின் காரணமாகச் சில வருடங்கள் போதுமான மழையின்றிக் கடந்து செல்வதும் உண்டு. இன்று அழுகிய நாற்றுக்களைக் கையில் ஏந்தி நிற்கும் விவசாயி, அந்தக் கருணையில்லாக் கோடைகளில் தரிசாகிக் கிடக்கும் தன் நிலத்தைக் கண்டு வெம்புவதும் உண்டு.
எல்லாம் சரி, பெருமழை, கடும் வெயில் ஆகிய இவை இரண்டும்தான் நம் விவசாயிகளைச் சோதிக்கின்றனவா என்ன? அவர்களை வாட்டி வதைக்க இன்னும் எத்தனையோ விஷயங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
தேவையான சமயத்தில் பயிர்க்கடன் கிடைக்காதது, விவசாயக் கூலி வேலைகளுக்கு ஆள் கிடைக்காதது, உரங்களின் விலை உயர்வு, தொடர்ச்சியாகக் கிடைக்காத மின்சாரம் என்று ஒவ்வொரு நாளும் அவர்களுடைய விளைநிலமே போராட்டக்களமா விசுவரூபம் எடுக்கும்.
மழையில்லாக் காலங்களில் போதிய தண்ணீர் இல்லாமல் நீராதாரங்கள் வறண்டு விடுவதால் வரும் பிரச்னைகள் ஒருபுறம்.போதுமான மழை பொழிந்தும் சரியான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தாலும், வாய்க்கால் வரப்புச் சண்டைகளாலும் பயிர்களுக்கு வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் போவது இன்னொரு புறம்.
எல்லாத் தடைகளையும் தாண்டி, நன்றாகப் பயிரும் வளர்ந்து, வெற்றிகரமாக அறுவடை செய்துவிட்டாலும் கூட, அதனை விற்றுக் காசாக்குவதற்கு அந்த விவசாயி படும் பாடு சொல்லி முடியாதது.
ஒவ்வோர் அறுவடைக் காலத்தைத் தொடர்ந்தும், அறுவடையான நெல் மூட்டைகளை ஏகப்பட்ட செலவு செய்து கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் சென்றால் அங்கே படும் பாடு ஒரு தனிரகம்.
கொள்முதல் நிலையங்களின் வெட்டவெளிகளில் குவிக்கப்படும் தானிய மூட்டைகள் எதிர்பாரா மழையில் நனைந்து வீணாவதுண்டு. கொள்முதல் செய்வதில் தாமதம், தெரிந்தும் தெரியாமலும் நடக்கும் கையூட்டு பிரச்னை போன்றவற்றால் விற்ற நெல்லுக்கான பணம் வந்து சேருவதற்குள் விவசாயிகளுக்கு போதும் போதுமென்று ஆகிவிடும்.
நெல் பயிரிடும் விவசாயிகளின் நிலைமை இப்படி என்றால், கரும்பு பயிரிடுபவர்களின் கதை வேறுவிதம். தழைத்து வளர்ந்து நிற்கும் கரும்புகளை வெட்டி, அவற்றை டன் கணக்கில் டிராக்டர்களிலும் லாரிகளிலும் ஏற்றிச் சென்று அருகிலுள்ள சர்க்கரை ஆலைகளுக்குக் கொடுத்துவிட்டு நடையைக் கட்டிவிட வேண்டும். கொடுத்த கரும்பிற்கான பணம் எப்போது வரும் என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம்.
குறிப்பாக, தனியார் சர்க்கரை ஆலைகள் சிலவற்றுக்குக் கொடுத்த கரும்பிற்கான நிலுவைத்தொகை கிடைப்பதற்கு அந்த விவசாயிகள் வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும்.
அரசாங்க அதிகாரிகள், ஆலை நிர்வாகம், விவசாயிகள் ஆகியோர் அடங்கிய முத்தரப்புப் பேச்சு வார்த்தை தோல்வி, கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டம் என்றெல்லாம் ஊடகங்களில் அவ்வப்போது தலைகாட்டும் செய்திகளை நம்மில் பலரும் எளிதாகக் கடந்து சென்று விடுவோம்.
ஆனால், கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு அதுவே வாழ்வா-சாவா போராட்டம் ஆகும்.
இதற்கெல்லாம் மேலாக இருக்கவே இருக்கிறது பயிர்க்கடன், டிராக்டர் கடன் வசூல் கெடுபிடிகள். தேசிய வங்கிகள் சில மேற்படி கடன்களைத் திரும்பப் பெறுவதற்காக புகைப்படத்துடன் விளம்பரம் செய்வது உட்பட பலவித உத்திகளைக் கையாளுகின்றன.
தனியார் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அடியாட்களோடு வந்து பொதுவெளியில் அவமானப்படுத்துவதைப் பொறுக்க முடியாத விவசாயிகள் சிலர் தற்கொலை செய்து கொள்வதும் அரங்கேறத்தான் செய்கிறது.
மாதச் சம்பளம் பெறுபவர்களைப் போலவே நம்முடைய விவசாயிகளுக்கும் குடும்பம் இருக்கிறது. குழந்தைகளின் படிப்பு, திருமணச் செலவு, மருத்துவச் செலவு என்று பலப்பல செலவினங்கள் அவர்கள் முன்பு வரிசைகட்டி நிற்கின்றன.
அவங்களுக்கு என்னப்பா, விடிஞ்சா பயிர்க்கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் என்று எகத்தாளம் பேசுபவர்களின் கேலிப்பார்வையையும் நம் விவசாயிகள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ள நேர்கின்றது.
இத்தனை இன்னல்களையும் எதிர்கொண்டபின்பும் தங்களது விவசாயத் தொழிலை விட்டு விடாமல், இதோ இந்தக் கொட்டும் மழையில் அழுகிக்கொண்டிருக்கும் பயிர்களை வேருடன் எடுத்து ஊடகப் புகைப்படக்காரர் முன்பு காட்டுகின்ற நம் விவசாயிகளைப் பார்க்கையில், இயற்கையே, இனியாவது இந்தப் பாவப்பட்ட விவசாயிகளிடம் கொஞ்சம் கருணை காட்டு என்றுதான்வேண்டிக்கொள்ளத் தோன்றுகின்றது.