கோப்புப்படம் 
நடுப்பக்கக் கட்டுரைகள்

பொய்யகலத் தொழில் செய்வோர்

வ.மு. முரளி

இரவு உணவு முடித்துவிட்டு, சாலையோரத் தள்ளுவண்டிக் கடையில் வாழைப்பழம் வாங்கப் போனேன். தள்ளுவண்டிக்காரர் 'இரண்டு வாழைப்பழங்கள் எட்டு ரூபாய்' என்றார். நான் பத்து ரூபாய் நோட்டை நீட்டினேன். 'சில்லறை இல்லைங்களா தம்பி' என்றார். 'இல்லைங்கய்யா, பரவாயில்லை, இருக்கட்டும்' என்றேன். 

உடனே அந்த தள்ளுவண்டிக் கடைக்காரர், மேலும் ஒரு வாழைப்பழத்தை எடுத்துக் கொடுத்து, 'உங்கள் காசு எனக்கெதுக்கு? நீங்கள் எப்போதாவது இந்த வழியில் வந்தால் மீதி இரண்டு ரூபாய் கொடுங்கள்' என்றார். இப்போது நான் கடன்காரன் ஆகியிருந்தேன். இந்தச் சம்பவம் நிகழ்ந்தது தருமபுரியில்.

இதற்கு நேரெதிரான சம்பவம், சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் மறுவாரம் நடந்தது. 

சேலம் பேருந்து நிலையத்திலிருந்த கடை ஒன்றில் பொட்டலமிடப்பட்ட கேக் வாங்கினேன். அதில் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 35 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், கடைக்காரப் பையன் விலை 40 ரூபாய் என்றான்.  அவனிடம் 'எம்ஆர்பி விலை ரூ. 35 என்று உள்ளதே' என்று கேட்டேன். அதற்கு அவன் 'சார், 40 ரூபாய் தான். எம்ஆர்பி விலை எங்களுக்குத் தெரியாதா? பஸ் ஸ்டாண்டில் கடை நடத்திப் பார்த்தால்தான் எங்கள் கஷ்டம் தெரியும்' என்றான்.

நான் அந்தக் கடையிலிருந்து நகர்ந்து அருகிலிருந்த மற்றொரு கடைக்குச் சென்றேன். அங்கும் விலை 40 ரூபாய்தான். பேருந்து நிலையத்திலிருந்த கடைகள் அனைத்தும் சொல்லி வைத்தாற்போல, எந்தப் பொருளானாலும் அதிக விலைக்கே விற்கின்றன. தவிர, தரமான பொருள்களும் கிடைப்பதில்லை.

அந்த பேருந்துநிலையக் கடைப்பையன் சொன்னதிலும் அர்த்தம் இருக்கிறது. பேருந்து நிலையத்தில் கடை வைப்பவருக்கு  தனியே புஜபல பராக்கிரமம் தேவையாக இருக்கிறது. 

முதலில் அவருக்கு அரசியல் தொடர்பு குறிப்பாக ஆளுங்கட்சியினருடன் நல்லுறவு இருந்தாக வேண்டும். இரண்டாவதாக, யாரோ வாடகைக்கு எடுத்த கடையில் கூடுதல் உள்வாடகை கொடுத்து வியாபாரம் செய்யும் தந்திரம் தெரிந்திருக்க வேண்டும். மூன்றாவதாக, அவ்வப்போது கடைக்கு வந்து மிரட்டும் மாநகராட்சி, காவல்துறை, உணவு பாதுகாப்புத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சேவகம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். இத்தனையும் செய்த பிறகு கிடைக்கும் வருவாயில் கடையை நடத்த வேண்டும். 

மக்கள் குவியும் இடம் பேருந்து நிலையம் என்பதால், இந்த அட்சய பாத்திரத்தை எவ்விலை கொடுத்தும் கைப்பற்ற பலர் போட்டியிடுகின்றனர். இந்தப் போட்டியில் பல லட்சங்கள் யார் யாருக்கோ கைமாறுகின்றன. மாநகராட்சிக்கு வாடகையாகக் கிடைக்கும் சொற்பத்தொகையில், மாநகர வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

இவ்வளவு தொகை செலவு செய்து கடை நடத்துபவரிடம் ஐந்து ரூபாய்க்கு நியாயம் பேசுவதில் பலனில்லை. பேருந்து நிலையம் வரும் மக்களோ, காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடும் நிலையில் இருப்பவர்கள். அவசரத் தேவைக்குக் கிடைக்கும் பொருளின் குறைந்த தரம் குறித்தோ, அதிக விலை குறித்தோ கவலைப்பட அவர்களுக்கு நேரமில்லை. இந்தக் கடைகளைக் கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டிய அரசுத் துறையினரோ கண்டுகொள்வதில்லை.

தருமபுரியில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்யும் அந்தப் பெரியவருக்கும் இதுபோன்ற சிக்கல் இருக்காதா? இதனை விசாரிப்பதற்காகவே அவரது கடைக்கு அண்மையில் சென்றேன். எனது இரண்டு ரூபாய் கடனையும் திருப்பி அடைத்தேன். சேலம் பேருந்து நிலையக் கதையைச் சொல்லி, 'உங்களுக்கு இப்படி சிரமம் வருவதில்லையா' என்று கேட்டேன்.

'இங்கேயும் சிரமம் இருக்குது தம்பி. போலீஸ்காரங்களும், நகராட்சிக்காரங்களும் எப்போதாவது வந்து பழம் வாங்குவாங்க. சிலர் காசு தராமப் போயிடுவாங்க. அதனாலென்ன, ஒரு சீப்பு பழம் அழுகிப்போச்சுன்னு விட்டிடுவேன். நமக்கு எது கிடைக்கணுமோ அது கிடைக்கும்' என்று அவர் சொன்னார்.

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து இந்தியா வந்த ஆங்கிலேய வியாபாரிகள் இந்த நாட்டை காலனி ஆதிக்க நாடாக மாற்றியதுடன், இந்நாட்டுச் செல்வங்களைச் சுரண்டி பிரிட்டனுக்குக் கொண்டுசென்றனர். அதை எதிர்த்து பல்லாயிரம் தேசபக்தர்கள் போராடி இருக்கின்றனர். அதனால்தான் நமக்கு அடிமைத்தளையிலிருந்து விடுதலை கிடைத்தது. 

அவ்வாறு போராடிய தலைவர்களில் இரு மகான்களின் நினைவு இப்போது வருகிறது. அவர்கள் மகாத்மா காந்தியும் மகாகவி பாரதியும்.

'ஒழுக்கம் இல்லாத கல்வி, கொள்கை இல்லாத அரசியல்,  உழைப்பு இல்லாத ஊதியம், நேர்மை இல்லாத வணிகம், மனசாட்சி இல்லாத மகிழ்ச்சி, மனிதாபிமானம் இல்லாத விஞ்ஞானம், தியாகம் இல்லாத வழிபாடு ஆகியவை ஏழு பாவங்கள்' என்று சொன்னார் மகாத்மா காந்தி.

உண்மைதானே? நேர்மை இல்லாத வணிகமும், உழைப்புக்கு மிஞ்சிய ஊதியமும், மனசாட்சி இல்லாத மகிழ்ச்சியும்தானே சேலம் பேருந்து நிலையக் கடையில் நாம் காண்பது? இதற்கு காரணம் ஒழுக்கமில்லாத கல்வியா, கொள்கையில்லாத அரசியலா? 

இதுதானே தருமமில்லாத வாழ்க்கை? இதையேதான் மகாகவி பாரதியும் எளிய  வரிகளில் கவிதையாகக் கூறி அரசியல் விழிப்புணர்வூட்டுகிறார்.

'வையகம் காப்பவரேனும் சிறு வாழைப்பழக் கடை வைப்பவரேனும் - பொய்யகலத் தொழில் செய்வோர் பூமியில் எங்கணும் மேலோர்' என்ற பாடல் வரிகளில் வையகம் காப்பவரையும் சிறு வாழைப்பழக் கடைக்காரரையும் சமமான தட்டில் நிறுத்துகிறார் பாரதியார். ஏனெனில் அவருக்கு நாட்டை ஆள்வது சட்டமல்ல, தருமம் என்பது  தெரிந்திருந்தது. சட்டம் கண்களை மூடிக்கொண்டு நீதித் தராசை நிறுத்தும். அதனாலேயே பல நிகழ்வுகள் அதன் கண்களுக்குப் புலப்படாது போய்விடும்.

மாறாக, தனக்கு எது கிடைக்க வேண்டுமோ அது கிடைக்கும் என்ற மனநிறைவுடன், பிறருடைய இரண்டு ரூபாய் கூட தனக்கு வேண்டாம் என்று மறுக்கும் சாதாரண வாழைப்பழ தள்ளுவண்டிக் கடைக்காரரிடம்தான் நீதி நிலைத்திருக்கிறது. ஏனெனில் இங்கே தருமம் வாழ்கிறது. இத்தகையோரால்தான் மழை பொழிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT