நடுப்பக்கக் கட்டுரைகள்

சாதனை படைக்கும் இளைஞர்கள்!

படித்த இளைஞகள் ஒரு மாநாடு நடத்தினர். நானும் அங்கு பேசுவதற்காக சென்றிருந்தேன்.

க. பழனித்துரை

படித்த இளைஞகள் ஒரு மாநாடு நடத்தினர். நானும் அங்கு பேசுவதற்காக சென்றிருந்தேன். அவர்களிடம் உரையாடுவதற்கு முன் இளைஞர் என்றால் யார் என்று கேட்டேன். சிலர் ஐக்கிய நாடுகள் சபை வரையறுத்திருந்த வயதினைக் கூறினார்கள். சிலர் இந்திய அரசாங்கம் கொண்டு வந்த கொள்கையில் இருந்த வயதைக் குறிப்பிட்டார்கள். 

நான் இளைஞர்களின் குணங்களைக் கூறுங்கள் என்றேன். ஒரு பெண் எழுந்து, "இளைஞர் என்றால் அவர் அநியாயத்தைக் கண்டு ரௌத்திரம் கொள்ள வேண்டும், விளைவுகளைப் பற்றி கவலை கொள்ளாமல் சாகசம் செய்ய வேண்டும், நியாயத்திற்காகப் போராடும் குணம் வேண்டும், பொறுப்புக்களை தட்டிக் கழிக்காமல் நிறைவேற்ற வேண்டும், மாற்றங்களுக்கான கனவுடன் இருக்க வேண்டும், அறிவுபூர்வமாக முடிவு எடுத்தபின் உணர்வு பூர்வமாக செயல்பட வேண்டும் என்று மளமளவென சரவெடி வெடிப்பதுபோல் கொட்டினார். 

நீங்கள் கூறிய குணாதிசயங்கள் அனைத்தையும் அப்படியே ஒரு வெள்ளைத்தாளில் எழுதித் தாருங்கள் என்றேன். மதிய உணவுக்கு வெளியேறியபோது ஒரு வெள்ளைத்தாளுடன் அந்தப் பெண் நின்றிருந்தார். அவரிடம் எப்படி நீங்கள் சிறப்பாக பதில் தந்தீர்கள் என்று கேட்டேன். 

இங்கு வருவதற்கு முன் ஹார்ட்வேர்டு பல்கலைக்கழக வளைதளத்தில் இருந்த அறிக்கையை படித்துவிட்டுத்தான் வந்தேன். அது பல்வேறு நாடுகளில் இளைஞர்களிடத்தில் சேகரித்த கருத்துக்கள் அடிப்படையில் அமைந்த அறிக்கை என்றார் அவர். 

அந்த தாளை வாங்கிக்கொண்டு, இங்கு நீங்கள் சந்திக்கும் இளைஞர்களிடம் இந்த குணங்கள் இருக்கிறதா என்று அவர்களையே கேட்டு மதிப்பீடு செய்து எனக்கு அதை அனுப்ப முடியுமா எனக் கேட்டேன். அந்தப்பெண் கட்டாயம் செய்கிறேன் எனக் கூறினார். 

நான் என் உரையை முடித்துவிட்டு ஊருக்கு வந்துவிட்டேன். இரண்டு நாட்கள் கழித்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சார், நீங்கள் கொடுத்த பணியை முடித்துவிட்டேன். அதை அனுப்பி விடுகிறேன் என்றார். 

எனக்கு ஒரே ஆச்சரியம். ஊதியம் தந்து செய்யச் சொன்னால்கூட இந்த அளவுக்கு ஆர்வத்துடன் செய்வார்களா என்ற ஐயம் இருக்கும்போது பார்த்த இடத்தில் சொன்ன வேலையை இவ்வளவு சிரத்தையோடும் மகிழ்ச்சியோடும் செய்திருப்பதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி. 

அத்துடன் அவர் நிற்கவில்லை. சார் இரண்டு அறிக்கைகள் உலக வங்கியின் வலைதளத்திலிருந்து படிப்பதற்காக எடுத்தேன். அதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அதை நீங்கள் படித்துவிட்டு எனக்கு சில விளக்கங்கள் தரவேண்டும் எனக் கேட்டார். சரி எனக் கூறி அந்த அறிக்கைகளை படிக்க ஆரம்பித்தேன். 

அப்பொழுதுதான் தெரிந்தது, அந்த அறிக்கை கணிதப் பின்னணி கொண்டவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடியது. ஆதலால்தான் இதை நம்மிடம் கேட்டிருக்கிறார் என்று புரிந்தது. 

அதைப்படித்துவிட்டு அந்த மாணவியிடம் நான் விளங்கிக் கொண்ட கருத்துகளை தொலைபேசியில் விளக்கினேன். அது எனக்கு ஒரு மிகப்பெரிய பணியாக இருந்தது. அந்த மாணவிக்கு நான் கொடுத்த பணியைவிட எனக்கு அந்த மாணவி கொடுத்த பணிதான் அதிக பாரமான பணி. இருந்தும் அது எனக்கு பாடமாகவும் இருந்தது. 

அந்த மாணவியிடம் நீங்கள் எடுத்த சர்வேயின் முடிவுகளைக் கூறுங்கள் என்றேன். சார் நான் பார்த்த மாணவர்கள் சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள் அல்ல. நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்த பெண்களும் ஆண்களும்தான். எனவே நிச்சயமாக அவர்களிடம் இளைஞர்களுக்குரிய குணங்களில் பெரும்பாலானவை இருக்கும் என்றுதான் எண்ணியிருந்தேன். 

ஆனால் அதற்கு மாறாக 80% மாணவர்களுக்கு எப்படியாவது எங்காவது வேலை வேண்டும் அவ்வளவுதான். அவர்கள் சமூகம் பற்றியோ, அரசியல் பற்றியோ, சுற்றுச்சூழல் பற்றியோ, வறுமை பற்றியோ எந்த பார்வையும் உணர்வும் அற்றவர்களாக இருக்கின்றார்கள். 

இந்த முடிவுகளை வைத்துக் கொண்டு உலக வங்கி அறிக்கைகளை மீண்டும் கவனித்துப் பார்த்தேன். இந்த முடிவுகளுக்கு விளக்கம் அந்த அறிக்கைகளில் கிடைத்தது. நாம் "இந்தியா பழைமையான நாடு ஆனால் இளமையான நாடு' என்று பாராட்டிக் கொள்கிறோம். இந்த இளமைதான் பெரும் செல்வத்தை நமக்கு கொண்டுவந்து தரப் போகிறது என்று நம்புகிறோம். ஆனால் கள நிலவரம் வேறாக இருக்கிறது. 

எந்த நாட்டில் கல்வியின் தரமும், கடுமையாக உழைக்கும் தன்மையும் எல்லா நிலைகளிலும் உருவாக்கப்பட்டுள்ளதோ அங்கு இளைஞர்களால் பெரும் நன்மைகளை சமூகமும் நாடும் பெறும். தரமற்ற கல்வியைத் தந்தால் எழுதப் படிக்கத் தெரிந்தவர் எண்ணிக்கையைக் கூட்ட முடியுமே தவிர திறன் கூட்டப்பட்ட இளைஞர்களை உருவாக்க முடியாது. 

இதன் விளைவுதான் நம் உயர்கல்வி நிலையங்களிலிருந்து வெளியேறுகின்ற மாணவர்களில் பெரும்பாலோர் வேலைக்கு தகுதியற்றவர்களாக இருக்கின்றார்கள் என்று மாணவர்களை  பணிக்குத் தேர்வு செய்யும் நிறுவன அறிக்கை குறிப்பிடுவதாகஅந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

அமெரிக்கா உற்பத்தி பொருளாதாரத்தை கைவிட்டு அறிவுப் பொருளாதாரத்திற்குள் சென்றபொழுது ஒட்டுமொத்த உற்பத்திப் பொருளாதாரத்தையும் சீனா கைப்பற்றியது. அதற்கு மிக முக்கியக் காரணம் கடினமாக உழைக்கும் ஆற்றலையும், உழைக்க வேண்டும் என்ற மனநிலையையும் அந்த நாட்டு இளைஞர்களிடம் வளர்த்து வைத்திருக்கிறது. அந்த நாட்டு ஆளுகை அமைப்புக்களின் மேல் அந்த இளைஞர்கள்  நம்பிக்கை வைத்திருந்தது இந்த பொருளாதார மேம்பாட்டுப் பணிக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கிறது. 

கல்வியை தாய்மொழியில் படித்து ஆற்றல் மிகுந்தவர்களாக தங்களை ஆக்கிக் கொண்டது அடுத்த முக்கியமான காரணியாகும். அரசாங்கம், அரசியல், மக்கள் அனைவரும் ஒரே நேர்கோட்டில் பயணித்தது,  புதிய வாய்ப்பை பயன்படுத்த மிகவும் உதவியது. காந்திய பொருளாதார அறிஞர் ஜே.சி.குமரப்பா 65 ஆண்டுகளுக்கு முன் சீனா சென்று வந்து சிறு புத்தகம் எழுதினார். 

அதில் அவர் "நான் சீனாவில் குக்கிராமங்களுக்குச் சென்றேன். அங்கு ஏழ்மை இருந்தது. அதே நேரத்தில் துப்புரவாக வசிப்பிடங்கள் இருந்தன. மக்கள் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்படி கடினமாக உழைக்கின்ற மக்கள் அந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். இந்த அரசாங்கம் நம்மை பாதுகாக்கும் என்று மக்கள் நம்புகின்றார்கள். மக்களுக்கு நாட்டுப்பற்று மிகுந்து இருப்பதை பார்க்க முடிந்தது. 

இதன் விளைவு சீனா மிகப்பெரிய வலுவான நாடாகவும், பொருளாதார வளமிக்க நாடாகவும் மாறிவிடும் என்பதில் எந்த ஐயமுமில்லை. அதே நேரத்தில் அது இன்றுபோல் கம்யூனிச நாடாக இருக்குமா என்பதுதான் கேள்வி' என்று கூறியிருந்தார். அவர் கூறியதை இன்று சிந்தித்துப் பார்க்கும்போது எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி அவர் என்பது புரிகிறது.

இந்த மாணவியின் சிறு ஆய்வு, உலக வங்கி அறிக்கைகள், ஜே.சி. குமரப்பாவின் சீனப் பயணம் பற்றிய புத்தகம் அனைத்தையும் அசைபோடும்போது என் கண்முன் வந்து நிற்கும் ஒரு சிறு நூல் "வாழ்க்கையின் அடிப்படை'. இதை எழுதியவர் தலைசிறந்த காந்தியவாதி அவிநாசிலிங்கம் செட்டியார். அவர் "கலைமகள்' பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அது இளைஞர்களுக்காக எழுதப்பட்டது. அதில் அவர் கோடிட்டுக் காட்டியவற்றைத்தான் அதிக செலவு செய்து ஆய்வு நடத்தி அறிக்கையாக வெளியிட்டுள்ளது உலக வங்கி. 
அவிநாசிலிங்கம் செட்டியார் "நாட்டுப் பற்றும், நல்லொழுக்கமும், கடுமையான உழைப்பும், ஊக்கமும், தன்னம்பிக்கையும், துணிவும், தெய்வ பக்தியும் நம் இளைஞர்களுக்கு வந்தாக வேண்டும். இந்தியர்களாகிய நாம் பெரிய காரியம் செய்ய உலகுக்கு வந்தவர்கள் என்பதைத்தான் நமக்கு வழிகாட்டிய மகான்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். 
அது மட்டுமல்ல, நாம் உலகுக்கு வழிகாட்டும் வல்லமை படைத்தவர்கள். எனவே அதற்கு நம்மை தயார் செய்து கொண்டு நம்மை நாம் நன்னெறிப்படுத்திக் கொண்டு கடுமையாக உழைத்து பெரிய காரியம் செய்ய வேண்டும்' என்றும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 
அவர் குறிப்பிட்டுள்ளபடி நம் இளைஞர்கள் செயல்படுவார்களேயானால் இந்திய நாடு உலகுக்கு வழிகாட்டும். இன்று கல்வி இருக்கிறது, பணம் இருக்கிறது, அறிவியல் வளர்ந்திருக்கிறது, தொழில் நுட்பம் பெருகியிருக்கிறது. ஆனால் நாட்டுப்பற்றும், நாட்டை மேம்படுத்துவோம் என்ற நம்பிக்கையும் இல்லை. வாழ்வியலில் அறம் அற்றவர்களாக இருப்பதால்தான் நம்மால் உலகம் வியக்கும் பெரிய காரியங்களைச் செய்ய முடியவில்லை. 
நம் இளைஞர்களுக்கு வழிகாட்ட விவேகானந்தர்போல், காந்திபோல் இன்று தலைவர்கள் இல்லை. எனவே, தலைமைக்கு ஏங்காமல் நம் இளைஞர்கள் நாமே தலைவராவோம் என முழங்க வேண்டும். அதற்கு வழிகாட்ட கிரேகோரி பூயி எனும் அமெரிக்க இளைஞர் ஒருவர் மூன்று நூல்களை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். 
அது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. அவை உள்ளூர் மற்றும் உலகளாவிய பிரச்னைகள், மனித உரிமைகளும் குடியுரிமையும், தலைமைத்துவமும் வாழ்க்கைத் திறன்களும் ஆகியவை. அந்த மூன்று நூல்களும் நாம் யாருக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை, நாமே தலைவராவோம், நம் குடும்பத்திற்கு, நம் சமூகத்திற்கு, நம் நிறுவனத்திற்கு, நம் தேசத்திற்கு என்று கூறுகின்றன. 
இன்றைய இளைஞர்கள் அந்த நூல்களைப் படித்து தங்கள் வாழ்க்கையில் அந்த நூல்களில் கூறப்பட்டுள்ளவைகளை தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்தாலே மிகப் பெரிய சாதனைகளையும், சாகசங்களையும் செய்து இந்த நாட்டையும், சமூகத்தையும் தங்கள் குடும்பங்களையும் மேம்படுத்தி தாங்களும் மேன்மையடைவார்கள். இந்தப் பணிதான் இன்றைக்கு நமக்குத் தேவையான பணி.

கட்டுரையாளர்: பேராசிரியர் (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT