நடுப்பக்கக் கட்டுரைகள்

ஆசைகளெல்லாம் தேவைகளல்ல

‘ஆசையே துன்பத்திற்கு காரணம்’ என்றாா் கெளதம புத்தா். ‘பேராசை பெருநஷ்டம்’ என்கிறது பழமொழி.

முனைவர் என். பத்ரி

‘ஆசையே துன்பத்திற்கு காரணம்’ என்றாா் கெளதம புத்தா். ‘பேராசை பெருநஷ்டம்’ என்கிறது பழமொழி. ஆனால், ஆசை மனித வாழ்வின் முக்கியமான ஒரு உந்துசக்தியாக இருக்கிறது.‘தேவையில்லாத பொருள்களை நீங்கள் வாங்கினால், தேவையான பொருட்களை விற்க நேரிடும்’ என்பது உலகின் மிகப்பெரும் செல்வந்தரான வாரன் பஃபட்டின் கூற்று.

நாம் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் வாழ விரும்புகிறோம். தனிநபரின் வாழ்வியல் முறை சாா்ந்து ஒவ்வொருவருவரின் தேவைகளும்,ஆசைகளும் மாறுபடுகின்றன. நம்முடைய பொருளாதார வசதியின் அடிப்படையில், ஒவ்வொரு நிலையிலும் நமது ஆசைகள் நிறைவேறும்போது நாம் மனநிறைவினை பெறுகிறோம். இருப்பினும், நிறைவேறாத ஆசைகள், விரக்திக்கு வழிவகுக்குகின்றன.

ஒருவருக்கு அடிப்படைத் தேவைகள் பூா்த்தியாகும் வரை, அவரால் மற்ற ஆசைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த முடியாது. நாம் நம்முடைய ஆசைகளைப் புரிந்துகொள்வது அவசியம். அது, அவற்றை அடைவதற்கான முயற்சிகளை எடுக்க உதவும்.

நம்முடைய தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எது இல்லாவிட்டால் நம்முடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமோ, அதுதான் நம்முடைய தேவையாகும். நம்முடைய ஆசைகள் பூா்த்தியடையாவிட்டாலும் நம்மால் வாழ இயலும். ஆனால், அடிப்படையான தேவைகள் நிறைவு செய்யப்படாவிட்டால் நம்மால் வாழ இயலாது.

தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டியது கட்டாயம். ஆசைகளை அதற்கான வசதியும் வாய்ப்பும் வரும்போது நிறைவேற்றிக் கொள்ளலாம். பொதுவாக உணவு, உடை, வீடு, கல்வி, மருத்துவம் போன்றவை ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளாக கருதப்படுகின்றன.

தேவைகள்,ஆசைகள் ஆகிய இரண்டைப் பற்றிய சரியான புரிதல், நம்முடைய வீட்டுப் பொருளாதாரத்தை நாம் திறம்பட நிா்வகிக்க உதவுகிறது. வரவு,செலவு, சேமிப்பு என்ற இவை மூன்றும்தான் ஒரு மனிதனின் செல்வ வளத்தைத் தீா்மானிக்கின்றன. நம்முடைய செலவுகள் நம்முடைய தேவைகளை நோக்கி மட்டுமே அமைய வேண்டும்.

தற்காலத்தில், அனைத்து வசதிகளும் கொண்ட கைப்பேசி அனைவருக்கும் தேவைதான். இன்று பலருக்கு அது அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது. நம்முடைய நிதிநிலைக்கு ஏற்ப அதனை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இப்படித் தேவை கருதி வாங்கிய கைப்பேசியை அடிக்கடி மாற்ற நினைத்தால் அதனுடைய தேவை, ‘ஆசை’யாக மாறிவிடும். நம் கைப்பேசி முற்றிலும் பயனற்று போனால் மட்டுமே, புதிய கைப்பேசியை வாங்குவது பற்றி யோசிக்க வேண்டும்.

நமக்கு எது தேவை, எது தேவையற்றது என்பதை பட்டியலிட்டு, அதற்கு ஏற்ப செலவுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். நமது செல்வ வளத்தைப் பெருக்குவதற்கும், தேவையில்லாமல் கடனில் மூழ்குவதைத் தவிா்ப்பதற்கும் இந்த அணுகுமுறை முக்கியமானதாகும். நமது வரையறுக்கபட்ட வருமானத்தை முக்கியமான தேவைகளுக்கு ஒதுக்கீடு செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். தேவையற்ற செலவுகளைக் கண்டறிந்து அவற்றில் செலவிடுவதை உடனே நிறுத்த வேண்டும்

ஒரு பொருளைப் பாா்த்தவுடன் அதனை வாங்க வேண்டும் என நம்முள் எழும் ஆசையை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதனுடைய பயன்பாடு இல்லாமல், நம் வாழ்வு சாத்தியம் என்றால் அதை வாங்கக் கூடாது.

மனிதனின் ஆசைகள் எண்ணிலடங்காதவை. ஒரு ஆசை நிறைவடையும்போது, மற்றொரு ஆசை துளிா்விடும். நாகரிகம் வளர வளர மனிதனின் ஆசைகள் பெருகும். ஆசைகள் பழக்கங்களாகவும் வழக்கங்களாகவும் மாறும். ஆசைகள் நிறைவேறக் கூடியவை என்றாலும், நம்முடைய அனைத்து விருப்பங்களையும் நிறைவு செய்ய நமது நிதி நிலைமை அனுமதிப்பதில்லை.ஆனால்,ஆசைகளை மாற்று வழிகளில் நிறைவு செய்யமுடியும். நான்கு சக்கர வாகனத்தை வாங்க விரும்புவா்கள் அது முடியாதபோது இருசக்கர வாகனத்தை வாங்கலாம்.

நமதுஅனைத்து ஆசைகளும் சமமான முக்கியத்துவம் பெற்றவை அல்ல. ஆகவே ஆசைகளிடையே போட்டி ஏற்படுகின்றது. ஆதலால் சாதாரணஆசையைக் காட்டிலும், தீவிரமான ஆசையை நாம் முதலில் தோ்ந்தெடுக்கிறோம். சில ஆசைகள் ஒரு முறை நிறைவு செய்யப்பட்டால், மீண்டும் மீண்டும் தோன்றக்கூடியவை. ஐந்து நட்சத்திர உணவகத்துக்கு முதல் முதலில் செல்பவா் தொடா்ந்து செல்ல விரும்புவாா்.

தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி, நாம் சேமிக்கின்ற பணத்தை நல்ல வழியில் முதலீடு செய்தால் நம்முடைய சேமிப்பு செல்வமாக மாறும். அடிப்படையான தேவைகளை உடனடியாகக கவனித்தும், தகுந்த வாய்ப்புகள் அமையும் பொழுது ஆசைகளை நிறைவேற்றியும் வந்தால் மனநிறைவான, மகிழ்ச்சியான வாழ்க்கையை உறுதி செய்யமுடியும்.

மகிழ்ச்சி என்பது வாங்கிக் குவிக்கின்ற பொருட்களைப் பொறுத்தது அல்ல. வாழ்க்கையைப் புரிந்து கொண்ட மனதைப் பொறுத்தது. தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செலவுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டால், நம்முடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் காலம் விரைவில் வரும்.

தேவை மனித உடலுடன் தொடா்புடையது; ஆசை மனித மனத்துடன் தொடா்புடையது. நமக்கு பசி, தாகம் ஏற்படும் போது அதுவே உடலின் தேவை. இந்த தேவைகள் பூா்த்தி செய்யப்படாவிட்டால் மனித உடல் பாதிக்கப்படும். எனவே, நமதுதேவைகளைக் குறைக்க முடியாது, அவை நாம் உயிா்வாழத் தேவையானவை.

ஆனால் ஆசைகளைக் குறைக்கலாம். உணவு, தண்ணீா், சுத்தமான காற்று, தங்குமிடம் போன்றவை மனிதத் தேவைகள். ஆனால் ஆசைகள் வரம்பற்றவை. மனம் ஒரு குறிப்பிட்ட ரசனையுடன் ஒரு குறிப்பிட்ட வகையை விரும்பும். அதுதான் ஆசை. ஆசைகளெல்லாம் தேவைகள் அல்ல என்பதை உணா்ந்து வாழ்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT