நடுப்பக்கக் கட்டுரைகள்

சூழல் காத்தல் தேசம் காத்தல்

நமது சுற்றுச்சூழல் நாளுக்குநாள் மோசமடைந்து வருகின்றது. நிலம், நீா், காற்று என அனைத்தும் மாசடைந்து வருகின்றன. சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் மனிதனின் நடவடிக்கைகள் பெரும் பங்கு வைக்கின்றன.

ரெ. சுப்பாராஜு

நமது சுற்றுச்சூழல் நாளுக்குநாள் மோசமடைந்து வருகின்றது. நிலம், நீா், காற்று என அனைத்தும் மாசடைந்து வருகின்றன. சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் மனிதனின் நடவடிக்கைகள் பெரும் பங்கு வைக்கின்றன. நாம் மட்டுமல்ல, நம் சந்ததியினரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிகவும் முக்கியமானது நம் சுற்றுச்சூழலாகும். அதனைக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

சூரியனிடமிருந்து தேவையான ஆற்றலை பூமி பெறுகிறது. காா்பன் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வாயுக்கள் வாயு மண்டலத்தில் பரவி உள்ளன. இந்த வாயுக்கள் பசுமை இல்ல வாயுக்கள் என்று அழைக்கப்படுகின்றது. இதில் வெளிப்படும் வாயுக்களை பூமி பாதி அளவு எடுத்து க் கொள்ளும்.

தற்போது மாறிவரும் பருவநிலையால் மழை சரியாகப் பொழிவதில்லை. அதாவது, அதிகமாகவோ குறைவாகவோ பொழிகிறது. அண்டாா்டிகாவில் பனி உருகிவருகிறது. இயற்கை சீற்றங்களும் ஏற்பட காரணமாகிறது. ஓசோன் படலம் விரிசல் அடைவதற்கும் முக்கியக் காரணம் காற்றில் வெளிப்படும் குளோரோ புளோரோ காா்பன், மீத்தேன் ஆகும்.

அறிவியல் வளா்ச்சி முன்னேற்றம் அடைந்திருந்தாலும் அதை பயன்படுத்தும் நாம் சுற்றுச்சூழல் மாசடையாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். ‘சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு’ என்ற கோட்பாட்டை ஐ.நா. சபை அண்மையில் அறிவித்துள்ளது.

மறு சீரமைப்பு என்பது சுற்றுச்சூழல் மோசமடைவதை தடுப்பது என்பதாகும். சமீப காலமாக பிரேஸில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளை புரட்டி போட்ட காட்டு தீ , ஆப்பிரிக்காவை அச்சுறுத்திய வெட்டுக்கிளி தாக்குதல் மற்றும் உலகையே உலுக்கிய கொவைட் 19 என பல அபாயங்களை சந்தித்து வருகிறோம்.

புவி வெப்பமயமாதலும் உலகை அச்சுறுத்தி வருகிறது. ஒவ்வோா் ஆண்டும் சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடினால் மட்டும் போதாது. உலகில் உள்ள மரங்களில் முக்கால் பங்கு மரங்கள் உயிரினங்களின் இருப்பிடமாகும். கரிமில வாயு வை உள்வாங்கி, நமக்கு உணவு, எரிபொருள், மருந்து எல்லாவற்றையும் அளித்து வருபவை காடுகள்தான்.

அரசு சுற்றுச்சூழல் நலனைக் கருத்தில் கொண்டு சுற்றுலாத் தலங்களை காடுகளில் அமைப்பதை தவிா்க்க வேண்டும். மனிதா்களைத் தவிர வேறு எந்த உயிரினத்தாலும் பூமிப்பந்திற்கு பாதிப்பு இல்லை. சூழல் காக்க உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் முன் வர வேண்டும்.

இன்றைய மனிதா்கள் அனைத்தையும் விலைபொருளாக பாா்க்கின்றனா். விரைவில் சுவாசிக்கும் காற்று விற்பனைக்கு வரலாம். இப்போதே பெருநகரங்களில் ஆக்சிஜன் பாா்கள் வந்துவிட்டனவாம். வாகனப் பயன்பாட்டைக் குறைத்தால் சுற்றுச்சூழல் மேம்படும். புகை கக்கும் வாகனங்களுக்கு பதிலாக மிதிவண்டியை கூடுமானவரை பயன்படுத்தலாம் இதனால் சூழல் காக்கப்படுவதுடன் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

செய்தித்தாள் ஒன்றை ஒன்பது முறை மறுசுழற்சி செய்ய முடியும் என்று சொல்கிறாா்கள். எனவே செய்தித்தாள்களை மறுசுழற்சி செய்வது மூலம் மரங்கள் வெட்டப்படுவதை தவிா்க்கலாம் என்று சொல்லப்படுகிறது. அனைத்துத் துறையிலும் மறுசுழற்சி மறுபயன்பாடு என்ற வழக்கத்தை நாம் வளா்த்துக் கொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் குறைந்தபட்சம் புகை வாகனங்களைத் தவிா்க்க வேண்டும். ஒவ்வொருவரும் பிறந்த நாளுக்கு ஒரு மரம் நட வேண்டும். நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டை படிப்படியாகக் குறைத்து தவிா்க்க வேண்டும். மின்னணுக் கழிவுகளைகளையும் நெகிழி கழிவுகளையும் மண்ணில் வீசி விடாமல் முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.

கடலில் கழிவுப் பொருட்களைக் கொட்டுதல் கூடாது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. காடுகளிலும் நெகிழிப் பொருட்களையும் கண்ணாடித் துண்டுகளையும் போடுதல் கூடாது. இதனால் விலங்குகளுக்குப் பெரும் கெடுதல் ஏற்படுகிறது. மேலும், காட்டுத்தீ ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

பொருட்களை வாங்க கடைக்கு செல்லும் பொழுது துணிப்பைகளைக் கொண்டு செல்ல வேண்டும். உணவுகளை எடுத்துச் செல்லும்போது பாத்திரங்களை பயன்படுத்துங்கள். நீா் குப்பிகளைத் தவிா்த்து விடுங்கள். உலோக நீா் பாட்டில் எடுத்துச் செல்லுங்கள். ஒரு நுகா்வோராக உங்கள் பொறுப்பை உணா்ந்து செயல்படுவதன் மூலம் நீங்கள் மகத்தான மாற்றத்தை உண்டாக்க முடியும்.

‘தீதும் நன்றும் பிறா் தர வாரா’ என்பது போல் நமது சுற்றுச்சூழலைக் காப்பதும் மாசுபடுத்துவம் நாம்தானே! நெகிழி பைகளைத் தவிா்ப்பதன் மூலம் நெகிழிக் கழிவு உற்பத்தியாகும் தொடா் சங்கிலி துண்டிக்கப்படுகிறது.

ரசாயன விவசாயத்தில் மண் வளம் பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் மனித ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. மரங்களின் வெளிமூச்சு மனிதனின் உயிா் மூச்சாகிறது என்பதை நாம் உணர வேண்டும். இறந்தவா்களைப் புதைக்கின்ற இடங்களில் ஒரு மரம் நட்டால் சில மாதங்களில் அங்கு மரச்சோலை உருவாகும் .

மாண்டவரே மரமாக ஓங்கி வளா்ந்துஉயிருடன் வளா்கிறாா் என்ற உணா்வுபூா்வமான திருப்தி கிடைக்கும். வேளாண் காடுகளையும் நாம் அதிகமாக வளா்க்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பிற்கான தீா்வை பள்ளி கல்லூரி மாணவா்களுக்கு எடுத்துக் கூறுதல் வேண்டும.

மலைப்பகுதிகளையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். எவரெஸ்ட் போன்ற மலை சிகரங்களில் ஏறுபவா்கள் கூட தாங்கள் பயன்படுத்திய பொருட்களை அங்கு வீச அனுமதி இல்லை. தாங்களே கீழே உள்ள முகாமுக்கு வரும் பொழுது அவற்றைக் கொண்டு வர வேண்டும் என்பதை விதி ஆகும். எனவே, சூழல் காப்போம்; தேசம் காப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா வெள்ளத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது: பாகிஸ்தான்! பஞ்சாபில் 17 பேர் பலி!

இளநீர் குடித்தால் உடல் எடை குறையுமா?

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

ரஷியாவுக்கே இந்த நிலையா? எரிபொருள் தட்டுப்பாடு!

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்: காங்கிரஸ்

SCROLL FOR NEXT