போதைப் பொருளுக்கு மறுப்பு சொல்லுங்கள்! 
நடுப்பக்கக் கட்டுரைகள்

நல்வழிப் பயணம் - சமூகமும் பொறுப்பு!

பள்ளி, கல்லூரியில் இருந்து வெளிவரும் அத்தனை மாணவர்களும் அறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதைப் பற்றி....

வெ. இன்சுவை

நான் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கட்டுரைப் போட்டி, விளம்பரச் சிற்றேடு தயாரிப்பு மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. அந்தப் போட்டிகளுக்கு நடுவராக என்னை அழைத்திருந்தார்கள்.

நிறைய மாணவர்கள் கலந்து கொண்டார்கள். தமிழிலும், ஆங்கிலத்திலும் கட்டுரை எழுதியிருந்தார்கள். ஏறக்குறைய அனைவருமே சிறப்பாக எழுதியிருந்தார்கள். அவர்களின் வயதுக்கு மீறிய சிந்தனைகளையும், கருத்துகளையும் கண்டு மகிழ்ச்சி ஏற்பட்டது. எத்தனை விதமான போதைப் பொருள்கள் கிடைக்கின்றன என்று அவர்கள் எழுதியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியும், வேதனையும் ஏற்பட்டது. போதைப் பொருள் பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாகிவிடக் கூடாது என்று எல்லோருமே வலியுறுத்தியிருந்தார்கள்.

மாணவர்களுக்கு சுயக் கட்டுப்பாடும், சுய ஒழுக்கமும் அவசியம்; எனவே, சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடித்திருந்தது சிறப்பு. விளம்பரச் சிற்றேடு தயாரிக்கும் போட்டியிலும், ஓவியப் போட்டியிலும் கலக்கியிருந்தார்கள். வார்த்தைகளால் சொல்வதைவிட வண்ணங்கள் அதிகம் பேசின. தலைப்பு - "போதைப் பொருளுக்கு மறுப்பு சொல்லுங்கள்' போதைப் பொருள் உபயோகத்தால் நம் நாடு கலங்கிப் போய், கருத்துப் போயிருப்பதாக ஒரு படம்; எதிர்காலம் இருண்டு போகும் என்ற எச்சரிக்கை படம் - என அருமையாக வரைந்திருந்தார்கள். அவர்களின் உள்ளத்தில் இருந்துவந்த உணர்வு; நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட தெளிவு; போதைப் பொருள் கூடாது என்ற மன உறுதி அவற்றில் வெளிப்பட்டன.

இந்தப் பிள்ளைகள் எந்தக் காரணம் கொண்டும் அதைத் தொட மாட்டார்கள் என்ற நம்பிக்கை தோன்றியது. பதின்பருவ பிள்ளைகளின் மனதில் இந்த எண்ணத்தை விதைத்துவிட்டோம் என்றால், அவர்களைக் காப்பாற்றி விட்டோம் என்று மனநிறைவு கொள்ளலாம். இந்தக் காலப் பிள்ளைகள் மிகவும் கெட்டிக்காரர்கள். அவர்கள் கடலில் ஒரு துளி அன்று, ஒரு துளியில் அடங்கியுள்ள கடல்.

எதற்குப் பரிசு கொடுப்பது என்று முடிவு செய்வதில் சிரமமாகிவிட்டது. சரியான மேய்ப்பர் இருந்து விட்டால் மந்தை ஆடுகள் வழிதவறிப் போகாது என்பதுபோல், சரியான வழிகாட்டுதல் இருந்தால் இளம் தலைமுறை திசைமாறிப் போகாது. ஆகவே, இந்த மாதிரி போட்டிகளை நடத்தினால் அவர்களை யோசிக்க வைக்க முடியும்.

பெரியவர்களைவிட குழந்தைகள் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பள்ளிப் படிப்புடன் எவ்வளவு வகுப்புகளுக்கு போகிறார்கள்! அறிவுக் கூர்மையுடனும், துடிப்புடனும் இயங்குகிறார்கள். இணையம் மூலம் உலகெங்கிலும் உள்ள தகவல்களை எளிதில் பெறுகிறார்கள். தங்கள் அறிவை வளர்த்துக் கொள்கிறார்கள்.

இளைஞர்கள், புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகளை, கலை வடிவங்கள் மற்றும் சமூக மாற்றங்கள் என எல்லாவற்றிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். பாலின சமத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி உரிமை போன்ற பல சமூக பிரச்னைகளுக்காக அவர்கள் குரல் கொடுக்கிறார்கள்.

இக்கால இளைஞர்கள் குறித்து பலருக்கும் பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம்; சிலரின் போக்கைக் கண்டு கொதித்துப் போய் இருக்கலாம்.

விதிவிலக்குகள் எடுத்துக்காட்டுகள் அல்ல. ஒரு ஃபேஸ்புக் பதிவு பெரும் மகிழ்வைத் தந்தது: "உறவினர் மகளின் திருமணம்... இரவு விருந்து.. விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஒரு சிறு சலசலப்பு.. எளிமையான பெரியவர் ஒருவர் தவறுதலாக இந்த மண்டபத்துக்கு வந்துவிட்டார். அவர் உணவு அருந்த அமர்ந்தபோது அங்கிருந்த மேலாளர் யார் நீங்கள் என்று கேள்வி கேட்கப்போய், பெரியவர் வருத்தத்தோடு மன்னிப்புக் கோரி இலையை விட்டு வெளியே புறப்பட்டார். அருகில் இருந்த என் நண்பருக்கு மனது கேட்கவில்லை. பின்னாலேயே ஓடிப்போய் உணவருந்தி விட்டுச் செல்லுங்கள் என்றார்.

அவர் வருத்தத்துடன் மறுத்து விட்டு வெளியே செல்ல முயன்றார். பக்கத்தில் மணமகள் அறை இருந்தது. வெளியே வந்த மணப்பெண் நிலைமையை சட்டென்று புரிந்து கொண்டார். உடனே பெரியவர் அருகில் சென்று, அப்பா, நீங்கள் உணவு அருந்திவிட்டு எங்களை ஆசீர்வாதம்

செய்துவிட்டுச் செல்லுங்கள். இல்லையேல், என் வாழ்நாள் முழுவதும் இந்நிகழ்ச்சி என்னை உறுத்திக்கொண்டே இருக்கும் என்றார். அந்தப்பக்கம் வந்த மணமகனையும் துணைக்கு அழைத்தார். பெரியவரின் அருகில் வந்த மணமகள் சட்டென்று அவர் கையைப் பிடித்து வாங்கப்பா என்று கூற, மணமகன் மற்றொரு கையைப் பிடித்துக்கொண்டு அழைத்துப்போய், இலையைப் போட்டு, இருவரும் அவருக்கு உணவு பரிமாறிவிட்டு உண்ணும்படி வேண்டினர். பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் உணர்ச்சிவசப்பட்டுப் போனார்கள். பெரியவர் இசைவுடன் சாப்பிட்டார்'.

இளைய தலைமுறை தெளிவான சிந்தனையும், பல்நோக்கு பார்வையும் கொண்டவர்கள் என்று மகிழ்வாகவும், மனநிறைவாகவும் இருந்தது. இந்தப் பதிவை வாசித்தவுடன் காரிருள் அகன்றதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.

50 மாணவர்களிடம் போதைப் பொருள் தீமையை எடுத்துச் சென்றதைப்போல் அனைத்து மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் கொண்டு செல்ல வேண்டும். குழந்தைகள் வளர, வளர அவர்களை அறவழியில் நடத்திச் செல்வதில் சமூகம் அக்கறை காட்ட வேண்டும். இது நம் ஒவ்வொருவரின் பொறுப்பும், கடமையுமாகும். பிள்ளைகளுக்கு நல்வழி காட்ட வேண்டியவர் யார்? பெற்றோரா ஆசிரியரா? சமுதாயமா? என்று பட்டிமன்றம் நடத்தினால், அதனால் பயன் ஏதும் விளையப் போவதில்லை. பெற்றோர், பள்ளி, சமூகம் - இந்த மூன்றும் ஒன்றிணைந்து இதை முன்னெடுக்க வேண்டும். வீட்டுச் சூழல் இனிமையானதாக இருந்தால் குழந்தைகளின் உள்ளமும், உடலும் நலமாக இருக்கும். அவர்களின் குழந்தைப் பிராயமும் மகிழ்வான ஒன்றாக இருக்கும்.

அவர்கள் பள்ளியில் காலடி எடுத்து வைக்கும்போது பள்ளி அவர்களது கரம் பற்றி நல் வழியில் இட்டுச் செல்ல வேண்டும். ஒவ்வோர் ஆசிரியரும் அவர்களைச் செதுக்கும், உருவாக்கும் சிற்பிக்கு ஒப்பானவர். அந்தப் பிஞ்சு உள்ளங்களில் பாடங்களுடன் சேர்த்து, ஒழுக்கத்தையும், ஒழுங்கையும் உள்ளே புகுத்திவிட வேண்டும். குழந்தைகளின் வீட்டுச் சூழலைத் தெரிந்துகொண்டு அவர்களை வழி நடத்த வேண்டும். 100% தேர்ச்சி மட்டுமே ஒரு பள்ளியின் குறிக்கோளாக இருக்கக் கூடாது.

அந்தப் பள்ளி, கல்லூரியில் இருந்து வெளிவரும் அத்தனை மாணவர்களும் அறிவிலும், ஆற்றலிலும், ஒழுக்கத்திலும், உயர் பண்பிலும் சிறந்து விளங்க வேண்டும். தொடர் ஓட்டம்போல் சமூகமும் இவர்களுடன் இணைய வேண்டும். இளைஞர்களை நல்வழிப்படுத்துவது என்பது, ஒருவரின் தனிப்பட்ட பொறுப்பு

மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும்.

சமூக ஊடகங்கள், இணையம் மற்றும் அறிதிறன் பேசிகள் இளைஞர்களுக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டுகின்றன. இந்தத் தொழில்நுட்பம் இவர்களைத் தவறான பாதையிலும் இட்டுச் செல்கிறது. வன்முறை நிறைந்த விளையாட்டுகள், ஆபாசக் காட்சிகள், எதிர்மறைக் கருத்துகள் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவர்களின் மன நலத்தையும், சமூகப் பார்வையையும் பாதிக்கின்றன.

வேலைவாய்ப்பின்மை, வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகள், சமூக அழுத்தம் போன்ற காரணங்களால் சிலர் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள். போதைப் பொருள் தயாரிப்பவர்கள், விற்பவர்கள், இடைத்தரகர்கள் என இது ஓர் உலகளாவிய பிரச்னை. பணத்துக்காக இத்தகைய இழிசெயலைச் செய்யும் கயவர்கள் மனம் மாற வேண்டும். எவ்வளவு கண்காணிப்பு இருந்தாலும் போதைப்பொருள் உள்ளே நுழைந்து விடுகிறது. நம் பிள்ளைகளின் திடமான மன உறுதியால் மட்டுமே அதன் விற்பனை சரியும். அதேபோல, இணையத்தில் ஆபாசக் காட்சிகளைப் பதிவேற்றி இளைய சமுதாயத்தின் மனதைக் கெடுக்கும் அற்பர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

"வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை' என்கிறது கொன்றை வேந்தன். தண்டனை ஒன்றுதான் இந்நிலையை மாற்றும். பள்ளிகளின் அருகில் உள்ள கடைகளில் போதைப் பொருள் விற்பனை செய்கிறார்கள் என்று படிக்கும்போது அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருக்கிறது. அதன் கோரமான விளைவை அறிந்து கொள்ளாதவர்கள் அதனைப் பழகிக் கொள்கிறார்கள்.

இன்னொரு கூட்டம் "ரீல்ஸ்' போடுகிறோம் என்று அலைந்து கொண்டிருக்கிறது. "ரீல்ஸ்' மூலம் பயனுள்ள, நல்ல செய்திகளைத் தரலாம். ஆனால், இவர்களோ முகம் சுளிக்க வைக்கும் அளவுக்குப் போகிறார்கள்! விபரீதத்தில் முடிகின்றன சில "ரீல்ஸ்'கள். இந்த மோகமும் எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கும் ஒருகடிவாளம் தேவை.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்போல், நல்ல உள்ளங்களில் இந்த சமுதாயம் நஞ்சை விதைத்து விடுகிறது. தங்களைச் சுற்றி நடக்கும் அக்கிரமங்களையும், அநாகரிகச் செயல்களையும் பார்க்கும் இளைஞர்களிள் ஒரு சிலர் சமநிலை தவறிவிடுகிறார்கள்.

ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்ட மணமக்கள்போல் நம் இளைய சமுதாயம் இருந்தால், புறப்பொருள்களால் அவர்களின் அக ஒழுக்கத்தைச் சிதைக்க முடியாது. நம் மண்ணுக்கே உரிய கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் அடியொற்றி அவர்கள் வாழ்ந்தால் நம் மண்ணுக்குப் பெருமை.

கட்டுரையாளர்: பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாய்ப்புகள் தேடிவரும் விருச்சிக ராசிக்கு: தினப்பலன்கள்!

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

SCROLL FOR NEXT