நடுப்பக்கக் கட்டுரைகள்

புதிய சொற்களைக் கண்டறிவோம்

நாளும் மாறும் உலகில் மாறாத மனித மாண்புகளை விளக்கிடும் கருவியாக ஒருவர் பேசும் மொழி அமைந்துள்ளது.

பாறப்புறத் ராதாகிருஷ்ணன்

நாளும் மாறும் உலகில் மாறாத மனித மாண்புகளை விளக்கிடும் கருவியாக ஒருவர் பேசும் மொழி அமைந்துள்ளது. வாழ்வியல் கருத்துகளை நுண்மையாக ஆராய்ந்து, எளிமையாகச் சொல்ல ஒருவருக்கு மொழி அவசியமாகிறது. மொழியைப் பயன்படுத்தி மக்கள் தங்களுடைய சிந்தனைகள், உணர்வுகள், அறிவை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டுசெல்கிறார்கள்.

நம் மொழியின் கண்ணாடியாக நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் உள்ளன. இது நம்மை ஊக்கப்படுத்துவதோடு, அச்சொல்லின் பயன்பாட்டு கலாசாரத்தின் மூலம் நாம் எங்கே இருக்கிறோம் என்பதையும், தற்போது நாம் யார் என்பதை உணர்த்துவதாகவும் உள்ளன.

ஆங்கில மொழி வளர்ச்சிக்கு கவிஞர்களும், எழுத்தாளர்களும், வணிகர்களும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களும், பாடகர்களும், அகராதிகளும் பல புதிய புதிய சொற்களைக் கண்டறிந்து, அந்த மொழியின் வளர்ச்சிக்கு உரமிடுகின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் மக்கள் அதிகமாகப் பயன்படுத்திய சிறந்த வார்த்தைகளை ஆங்கில அகராதிகள் தெரிந்தெடுத்து வெளியிட்டு, அதை அகராதிகளிலும் சேர்த்து, அந்த மொழியின் செழுமைக்கு வளம் சேர்க்கின்றன.

அந்த வகையில், 2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த சொல்லாக 'பாராசோஷியல்' என்ற சொல்லை கேம்பிரிட்ஜ் அகராதி அறிவித்துள்ளது. இந்த சொல் ஒரு நபருக்கும், அவர்கள் அறியாத பிரபலமான ஒரு நபருக்கும் இடையேயான உணர்வுபூர்வமான தொடர்பைக் குறிக்கிறது.

நிகழாண்டு தொடக்கத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த பாப் நட்சத்திர பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் அமெரிக்க கால்பந்து வீரர் டிராவிஸ் கெல்ஸ் ஆகியோர் தங்களின் நிச்சயதார்த்தத்தை அறிவித்தபோது, அவர்களை நேரில் சந்திக்காத பல ரசிகர்கள் அவர்களுடன் வலுவான, உணர்வுபூர்வமான தொடர்பு தங்களுக்கும் இருப்பதாக உணர்ந்தனர். ஒருதலைப்பட்சமான, ஒருதலைப்பட்ச உறவை 'பாராசோஷியல்' என்ற சொல் குறிக்கிறது.

உங்களுக்கு அறிமுகமில்லாத ஒருவர், உங்களின் போக்கையும், நடத்தையையும் கண்காணித்துக் கொண்டே இருப்பார். ஒரு நாள், உங்களை அவர் திருமண நிகழ்ச்சிகளிலோ, விழாக்களின் போதோசந்தித்து, உங்களின் குணநலன்களை விளக்கி, தான் இன்னாரின் உறவினர், நண்பர்தான் என்று சொல்லி உங்களுடன் இணைந்து கொள்வார். பின்னர், அவர் உங்களின் உறவினராகவோ, நண்பராகவோ மாறிவிடுவார். உறவு முற்றிலும் ஒருதலைப்பட்சமானது. தனிநபர் ஆழமான தொடர்பை உணர்கிறார். ஆனால், பொது நபருக்கு அவரின் இருப்பு குறித்து தெரியாது.

'பாராசோஷியல்' என்பது ஆண்டின் மிகச் சிறந்த தெரிவு. பலர் சமூக ஊடகப் பயனர்களுடன் ஆரோக்கியமற்ற, தீவிரமான 'பாராசோஷியல்' தொடர்புகளை உருவாக்குகின்றனர். இது அவர்கள் அந்த நபரை 'அறிந்தவர்கள்' போல உணரச் செய்து நம்பிக்கை, விசுவாசம் போன்றவற்றையும் தூண்டும். ஆனால், இவை அனைத்தும் ஒருதரப்பை சார்ந்தது. இது உண்மையான உறவு அல்ல; வளரிளம் பருவத்தினர் இதில் அதிகமாக ஈர்க்கப்படலாம் என எச்சரிக்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சமூக உளவியல் பேராசிரியை சைமன் ஸ்னால்.

சமூகவியலாளர்கள் டொனால்ட் ஹார்டன் மற்றும் ஆர். ரிச்சர்ட்வோல் ஆகியோர் முதல்முதலில் 'பாரா சோஷியல்' என்ற வார்த்தையை 1956-ஆம் ஆண்டு 'வெகுஜன மற்றும் சமூக விரோத தொடர்பு' (மாஸ் கம்யூனிகேஷன் அண்ட் பாரா-சோஷியல் இன்ட்ராக்ஷன்) என்ற தங்கள் ஆய்வறிக்கையில் பயன்படுத்தியுள்ளனர். தொலைக்காட்சி, காணொலி, வலையொளியில் பார்க்கும் ஊடக ஆளுமைகளுடன் பார்வையாளர்கள் உருவாக்கும் ஒருதலைப்பட்ச உறவுகளை விவரிக்க அவர்கள் இந்த வார்த்தையை உருவாக்கினர்.

'கல்வியாளர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த 'பாராசோஷியல்' என்ற சொல் இப்போது அன்றாடப் பயன்பாட்டுக்கு மாறிவிட்டது. இது 2025-ஆம் ஆண்டின் இளம்தலைமுறையினரின் கால உணர்வைப் படம் பிடிக்கிறது' என்கிறார் கேம்பிரிட்ஜ் அகராதியின் தலைமை செய்தி ஆசிரியர் கோலின் மெக்கின்டோஷ்.

நிகழாண்டில் கேம்பிரிட்ஜ் அகராதி 'இசட்' தலைமுறையினர் அதிகமாகப் பயன்படுத்தும், கொச்சைவழக்கு சொற்களான ரிஸ் (கவர்ச்சி), ஸ்கிபிடி (அருமையானது அல்லது கெட்டது), டெலுலு (மாயை), ஸ்லாப் (குறைந்த தரம்), மீமிஃபை (ஒரு நிகழ்வு, படம் அல்லது நபரை நகைச்சுவையாக காணொலி மற்றும் உரை வடிவமாக விவரிப்பது) போன்ற ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட புதிய சொற்களைச் சேர்த்துள்ளது.

அதேபோன்று, டிக்ஷனரி.காம், '6-7' என்ற சொல்லை 2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த வார்த்தையாக அறிவித்துள்ளது.

நிகழாண்டு ஆல்ஃபா தலைமுறையினர் அதிகம் பயன்படுத்திய சொல்லாக இது அமைந்துள்ளது. இந்த சொல் 'டிக்டாக்' மற்றும் 'இன்ஸ்டாகிராம்' போன்ற சமூகவலைதளங்கள் மூலமாகப் பிரபலமாகியுள்ளது. இது சமூக ஊடகக் கலாசாரத்தின் அபத்தத்தையும், அர்த்தமற்ற தன்மையையும் குறிக்கிறது.

இந்தச் சொல், 'சிக்ஸ்-செவன்' என்று உச்சரிக்கப்படும்போது, 'அப்படி-இப்படி', 'ஒரு வேளை இது, ஒரு வேளை அது', 'குழப்பம்', 'நிச்சயமற்ற தன்மை' போன்ற இடைச்சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவிலுள்ள ஃபிலடெல்பியா நகரத்தைச் சேர்ந்த 'சொல்லிசைப் பாடகர்' (ராப் சிங்கர்) இந்தச் சொல்லை தனது 'டூட்டூட்' என்ற பாடலில் பயன்படுத்தியுள்ளார். இந்தச் சொல், அமெரிக்க கூடைப்பந்து வீரர் லாமெலோ பாலுடன் தொடர்புடையதாகவும் சொல்லப்படுகிறது. காரணம் அவர் ஆறு அடி உயரம் 7 அங்குல உயரமுடையவர்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகம் 2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த வார்த்தையாக 'ரேஜ் பெய்ட்'-ஐ தெரிவு செய்துள்ளது. சமூக வலைதளங்களில் ஒன்றைப் பார்க்கும் போதோ, படிக்கும் போதோ அது வேண்டுமென்றே நம்மை கோபப்படுத்துவது போல தோன்றியிருந்தால், அந்த உணர்வை வெளிப்படுத்துவதுதான் ஆங்கிலத்தில் 'ரேஜ் பெய்ட்' எனப்படுகிறது.

'கோப தூண்டில்' எனப் பொருள்படும் இந்த வார்த்தை முதல்முதலில், 2002-ஆம் ஆண்டில் ஆரம்பகால இணைய விவாத வலையமைப்பான 'யூஸ்நெட்டில்' ஒரு பதிவில் இருந்தது. மக்கள் 'இந்த வார்த்தையை இதற்கு முன்பு கேள்விப்பட்டிருக்காவிட்டாலும் கூட, அதன் பொருள் அவர்களுக்கு உடனடியாகத் தெரியும்' என்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் மற்றும் பதிப்பாளர் காஸ்பர் கிராத்வோஹி.

காலின்ஸ் அகராதி 'வைப் கோடிங்' என்னும் வார்த்தையை 2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த வார்த்தையாக அறிவித்துள்ளது. இயற்கை மொழி தூண்டுதல்களிலிருந்து கணினி குறியீட்டை உருவாக்க செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்தச் சொல் குறிக்கிறது. ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த கணினி விஞ்ஞானி ஆண்ட்ரேஜ் கர்பதி போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முன்னோடிகளால் இந்த வார்த்தை பிரபலப்படுத்தப்பட்டுள்ளது. 'வைப் கோடிங்' என்பது ஒரு மென்பொருள் மேம்பாட்டு அணுகுமுறையாகும். கணினி மொழி மேம்பாட்டாளர்கள் தாங்கள் விரும்பிய முடிவை ஒரு செயற்கை நுண்ணறிவாக விவரிக்க இயற்கையான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். பின்னர் அது குறியீட்டை உருவாக்குகிறது.

இவ்வாறு 2025-ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஆங்கில வார்த்தைகள், தொழில்நுட்பம், இணைய கலாசாரம் மற்றும் மனித உறவுகளைச் சுற்றி மொழி எவ்வாறு உருவாகுகிறது என்பதைப் பிரதிபலிக்கின்றன. அவை இன்றைய தலைமுறையினரின் எண்மமனநிலையையும் (டிஜிட்டல் மூட்),உணர்ச்சி மாற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த படைப்பாற்றலையும் படம் பிடித்துக் காட்டுகின்றன.

'கிடைத்த புல்லையும், தவிட்டையும் ஆங்கில மாட்டுக்கே போட்டு வந்தால், நம்முடைய பசு எவ்வாறு பால் கொடுக்கும்? கொஞ்சம் தடை தோன்றிய இடங்களில் எல்லாம் ஆங்கிலத்தைப் போட்டு நிரவிப் பேச்சை ஓட்டிக் கொண்டு போனால், தமிழ் எங்ஙனம் வளரும் ? என்றார் மூதறிஞர் ராஜாஜி.

முன்னைப் பழைமைக்கும் பழைமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்குவது தமிழ். தமிழ் மொழி, நடையாலும், கருத்துகளாலும், தொன்மையானது மட்டுமல்ல, தூய்மையானதும்கூட. எனவேதான், மகாகவி பாரதியாரும் 'சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொல் புதிது, தமிழ் எந்நாளும் அழியாதது' என்றார்.

'தினமணி' தமிழ்மணியில் கடந்த 2012, 2013-ஆம் ஆண்டுகளில் தற்போதைய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் வெ.ராமசுப்பிரமணியன் 'சொல்வேட்டை' என்னும் தலைப்பில் வாசகர்களுக்கு தமிழில் புதிய புதிய சொற்களை அறிமுகப்படுத்தினார். புதிய புதிய சொற்களைக் கண்டறிய வேறு வேறு மொழிகளைத் தேடி அலைய வேண்டாம். அவையனைத்தும், நம் சங்க இலக்கியங்களிலும், இலக்கணங்களிலும், சமய நூல்களிலும், பக்தி பனுவல்களிலும் விரவிக் கிடக்கின்றன. இது தமிழ் அறிவுலகத்துக்குப் பெரிய கொடை.

ஒரு நாடு சீர் பெற்று, மக்கள் மனவளம் படைத்து, தங்களின் கலாசாரத்திலும், நாகரிகத்திலும் சிறந்து விளங்க வேண்டுமெனில் அவர்கள் பேசும் மொழியும் முன்னேறியதாகவும் இருக்க வேண்டும். அந்த மொழி நாளுக்கு நாள்மெருகேறி நாளும் செழிக்க வேண்டுமெனில் புதிய புதிய சொற்களையும் கண்டறிந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT