தனியார் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து தங்கம் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தங்கத்தை விரும்பும் பெண்கள் மற்றும் தங்க நகைகளை விரும்பாத இளம் பெண்கள்; மனைவியின் தங்க ஆசை, சேமிப்பு மற்றும் திணறும் கணவர்கள்; திருமணங்கள் தங்கத்தால் நிச்சயிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி } தங்கம் குறித்து நிறைய பேச வைக்கிறது. பெண்களுக்கு தங்கத்தின் மீது உள்ள மோகம் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை.
இளம் வயது பெண்களுக்கு தங்கத்தின் மீது அவ்வளவாக நாட்டம் இல்லையென்றாலும்கூட, அவர்களின் பெற்றோர் தங்களின் கெüரவத்தையும், செல்வச் செழிப்பையும் ஊருக்குக் காட்ட வேண்டி கிலோ கணக்கில் நகை போட்டு மற்றவர்களின் மனதில் பேராசையைத் தூண்டி விடுகின்றனர்.
இந்த நிலையில், ஏழை, நடுத்தரக் குடும்பத்துப் பெண்களின் திருமணம் எப்படி சாத்தியம்? பெண் குழந்தை இந்த மண்ணைத் தொட்ட நாளில் இருந்து தங்கத்தின் சேமிப்பைத் தொடங்கி விடுகிறாள் தாய். அந்தப் பெண்ணுக்குத் திருமண வயது வருவதற்குள் கணிசமான அளவு நகை வாங்கிவிட வேண்டும் என்பதே அவரின் விருப்பம். தன் பெண்ணின் படிப்பு, அழகு ஆளுமைத் திறன், வேலை, நற்பண்புகள் இவையெல்லாம் சிறப்பாக இருந்தாலும் தங்கத்தின் அளவைக் குறைத்துக்கொள்ள முடியாது. இது எங்கே போய் முடியப் போகுதோ? தெரியவில்லை.
ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண் சொல்கிறார், நான் எங்கள் உறவுக்காரர்களின் எந்த விசேஷத்துக்குப் போனாலும், என் அண்ணி என்ன அணிந்து வந்திருக்கிறார் என்றுதான் பார்ப்பேன். மறுநாளே அதைப்போல் வாங்கிவிடுவேன். இன்னொரு பெண், கழுத்து நிறைய நகை அணிந்து சென்றால்தான் எல்லோரும் நம்மை மதிப்பார்கள்; நகை மீது எனக்கு அதிக ஆசை என்றார். மற்றொருவர், நான் எப்போதும் என் பழைய மாடல் நகைகளைக் கொடுத்துவிட்டு புதிய டிசைனில் வாங்குவேன். என்னிடம் இருப்பதுபோல், வேறு யாராவது வைத்திருந்தால், எனக்குப் பிடிக்காது; உடனே மாற்றி விடுவேன் என்றார்.
அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அத்தனை பெண்களும், தங்களால் எவ்வளவு நகைகளை அணிய முடியுமோ, அவ்வளவு நகைகளை அணிந்துகொண்டு வந்திருந்தார்கள். நிகழ்ச்சியின் இடைவேளையின்போது வேறு நகைகளைப் பூட்டிக் கொண்டவர்களும் உண்டு.
அரிசி விலை ஏறுகிறதே என்று யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை; தினமும் தங்கத்தின் விலையைக் கவலையுடன் கவனிக்கிறார்கள். விலை குறைந்தாலும் கூட்டம்; ஏறினாலும் கூட்டம்; நகைக் கடைகளில் நிரம்பி வழியும் கூட்டம் நம் மக்களின் செல்வச் செழிப்பைக் காட்டுகிறதா?
பொருளாதார நிபுணர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து நிறைய அறிவுரை கூறியுள்ளார்கள். இது குறித்து நம் அனைத்துச் சந்தேகங்களுக்கும் அவர்களிடம் விடை இருக்கும். ஆனாலும், பெண்களைப் பொருத்தவரை நகைகளாக வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
தங்கம் அணிவது உடலுக்கு நல்லது என அறிவியல்பூர்வமாகக் கூறப்படுகிறது. தங்கம் அழற்சி எதிர் பண்புகள் கொண்டது. தோலின்ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதையெல்லாம் தெரிந்துகொண்டு ஒருவரும் நகை அணிவதில்லை.
கிலோ கணக்கில் தன் பெண்ணுக்கு தங்கம் சேர்த்து வைத்துள்ள செழுமை ஒருபுறம்; குன்றிமணி தங்கத்துக்குக்கூட வகையின்றி ஏங்கும் ஏழ்மை மறுபுறம். இந்த ஏழைகளால் அவர்கள் வாழ்நாளில் ஒரே ஒரு பவுன் தங்கம் வாங்க முடியுமா? சிலரின் அரைப் பவுன் தாலியே அடகுக் கடைக்குப் போய் விடுகிறது. இத்தகைய பெண்களுக்காக வந்தவைதான் கவரிங் நகைகள். அவை தங்க நகைகளைவிடவும் அழகாக இருக்கின்றன.
பெண்கள் தங்கம் வாங்கி சேமிப்பதிலும் நன்மை உள்ளது; அது பணவீக்கத்துக்கு எதிரான ஒரு நல்ல பாதுகாப்பு எனலாம். ஒரு நிலையான சொத்தாக அதன் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மேலும், இது நீண்டகால சேமிப்புக்கு ஒரு சிறந்த வழி. நிலம், வீடு என வாங்கிப் போட்டால் பாதுகாப்பது கடினம். எல்லோருக்கும் தெரிந்துவிடும். ஆகவே, தங்கம் பாதுகாப்பானது.
தங்கத்தை சேமிப்பதற்கு பல திட்டங்கள் உள்ளன. அவை எண்மமய தங்கம், தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள் மற்றும் தங்க சேமிப்புத் திட்டங்கள்.
பொருளாதார அல்லது புவிசார் அரசியல் கொந்தளிப்பான காலங்களில், பங்குச்சந்தைகள் சரிந்தால், நாணயங்கள் சரிந்தால் அல்லது அரசியலில் உறுதியற்ற தன்மை ஏற்பட்டால் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதுகிறார்கள். தங்கத்தில் சேமிப்பதன் மூலம் நவீன நிதிச் சந்தைகளை வகைப்படுத்தும் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் ஏற்ற இறக்கங்களில் இருந்து நம் செல்வத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
நாம் உலகில் எங்கிருந்தாலும், உலக அளவில் ஒரு மதிப்புமிக்க சொத்தாக தங்கம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும்போது விற்று நம் பணத்தேவையை நிறைவு செய்துகொள்ள முடியும். நம் ஏழை மக்களை நம்பி சந்துக்கு ஓர் அடகுக் கடை உள்ளது. நண்பர் ஒருவருக்கு நகை போடுவது பிடிக்காது; ஆனாலும், அவர் தன் விரலில் ஒரு பவுன் மோதிரம் அணிந்துள்ளார். காரணம் கேட்டபோது, எங்காவது வெளியூர் அல்லது வெளிமாநிலத்தில் பணத்தைத் தொலைத்துவிட்டால் அந்த மோதிரம் கைகொடுக்கும் என்பார்.
பாதுகாப்பு கருதி நகையை நாம் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கிறோம். வங்கி சேமிப்புப் பெட்டகங்கள் இயற்கைச் சீற்றங்கள் அல்லது வங்கிக் கொள்ளை போன்ற நிகழ்வுகளால் பாதிக்கப்படும் போது, நாமும் நம் பொருளை இழக்க நேரிடும். ஆனாலும், வீட்டில் வைத்திருப்பது பேராபத்து; நகைகளை வங்கியில் வைத்துவிட்டால் பயமின்றி வீட்டைப் பூட்டிவிட்டுப் போகலாம்.
பெண்களுக்கும் தங்கத்துக்கும் இடையே ஆழமான பிணைப்பு உள்ளது. பல நூற்றாண்டுகளாக வேரூன்றியிருக்கும் கலாசார, சமூக, பொருளாதார மற்றும் உணர்வுபூர்வமான காரணங்களின் கலவை அந்தப் பிணைப்பு என்று கூறலாம். இந்திய கலாசாரத்தில், திருமணங்கள், பண்டிகைகள் மற்றும் மதச் சடங்குகளில் தங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
தங்கம் செழுமையின், வளத்தின்அடையாளமாகக் கருதப்படுகிறது. மேலும், இரு குடும்பங்களின் பெருமை, வரலாறு மற்றும் உணர்வுபூர்வமான பிணைப்புகளைக் குறிக்கிறது. பெண்ணின் திருமணத்தின்போது வழங்கப்படும் தங்கம் அவசர காலங்களில் அவளுக்கு நிதிச் சுதந்திரத்தை அந்தக் காலத்தில் அளித்தது.
உலக தங்க கவுன்சில் போன்ற நிறுவனங்களின் ஆய்வுகளின்படி, இந்தியப் பெண்கள் சுமார் 24,000 முதல் 25,000 டன் தங்கம் வைத்திருக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது சுமார் 11சதவீதம் முதல் 12 சதவீதம் ஆகும். தங்கம் வைத்திருக்கும் முதல் ஐந்து நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ரஷியா ஆகியவற்றைவிட இது அதிகம். அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டுப் பெண்கள்தான் அதிக அளவில் தங்கம் வைத்திருக்கிறார்களாம்.
நம் பெண்களிடம் மட்டும் சுமார் 6,720 டன் தங்கம் இருக்கிறதாம்; இது இந்தியாவின் கையிருப்பில் 28சதவீதம் ஆகும். தங்கத்தின் மீதான ஈர்ப்பு பல சமயங்களில் கொடூரமான குற்றங்களுக்கும் கொலைகளுக்கும் வழி வகுக்கிறது.
கொள்ளையர்களின் முதல் இலக்கு தங்க நகைக் கடைகள், அடகுக் கடைகள் ஆகியவையே. மேலும், தனிநபர் வீட்டில் வைத்திருக்கும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. குறிப்பாக, முதியோர் தனியாக இருக்கும் வீடுகளைக் குறிவைத்து, அவர்களைக் கொலை செய்துவிட்டு நகைகளைக் கொள்ளையடிக்கின்றனர்.
நகைக் கடைகளுக்கு தங்கம் கொண்டு போகும்போதும், விற்கப்படும்போதும் நெடுஞ்சாலைகளில் வாகனங்களை வழிமறித்து கொள்ளையடிக்கிறார்கள்; கொலையும் செய்கிறார்கள்.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரிகள் அதிகமாக இருப்பதால் சட்டவிரோத தங்கக் கடத்தல் பெருகியுள்ளது. வான்வழி, கடல்வழி, தரைவழி எனப் பல வழிகளில் தங்கம் கடத்தப்படுகிறது. இந்தக் கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்படும் போட்டியால், பழிவாங்கும் நடவடிக்கையால் பல கொலைகள் நடக்கின்றன. சட்டவிரோதமாக தங்கம் வெட்டி எடுக்கப்படும் பகுதிகளில் மாஃபியா குழுக்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். வெட்டி எடுக்கப்படும் தங்கம் ரத்தம் குடித்திருக்கும்.
ஒரு உலோகத்தை வைத்து மனிதர்களை எடை போடுவது முறையா? நகைகளின் அடர்த்தியால்தான் ஒருவருக்கு இந்த சமுதாயத்தில் மதிப்பு இருக்கிறது என்று நினைப்பது பேதைமை அல்லவா? ஒருவர் தன் செல்வச் செழிப்பை ஊருக்குப் பறைசாற்ற நகைகள் அணிவது மட்டுமே வழியா? தற்போது ஆடவரில் சிலரும் தடிமனான நகைகளை அணிந்துகொண்டு வலம் வருகிறார்கள்.
பொட்டுத் தங்கம்கூட அணியாத அறிவுக்கும், உண்மைக்கும், நேர்மைக்கும் கிட்டும் மரியாதை வெறுமனே தங்க நகைகள் அணிந்து வருபவருக்கு கிடைக்காது.
பெண் குழந்தை பிறந்த உடனே கவலைப்பட்டு நகை சேர்ப்பதை பெண்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். பொன்னுக்காக வருபவருக்குப் பெண்ணைத் தரத் தேவையில்லை.
பெண் என்பவள் அடுக்கடுக்காக அணிகலன்களை மாட்டிக் கொண்டு அலங்காரமாக நிற்கும் பதுமை அல்ல; அவளுக்குள் உணர்வும், உணர்ச்சியும் உண்டு; தன்மானமும், சுயமரியாதையும் உண்டு; திருமணச் சந்தையில் பெண்ணை ஏலம்விட வேண்டாம்; அவள் கல்விக்கும், குணத்துக்கும், அழகுக்கும், அறிவுக்கும் ஏற்ற மணமகனைத் தேடுங்கள். அவளின் திருமணத்தில் தங்கம் ஒரு பேசுபொருளாக இருக்கக் கூடாது. அவளின் மதிப்பு அந்த உலோகத்தைவிட அதிகம்.
கட்டுரையாளர்: பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.