தலைமை என்பது ஒரு மனிதரிடம் இருக்கும் மக்களை வசீகரிக்கும் ஒருங்கிணைக்கும் குணங்கள், திறன்கள், ஆற்றல்களாகும். தலைமை என்பது அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.
ஒவ்வொருவரும் தாங்கள் பொறுப்பில் இருக்கும் அமைப்பில், நிறுவனத்தில் தங்கள் குணங்களையும், திறன்களையும், ஆற்றல்களையும் எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு அவற்றின் தாக்கங்களை அவர் செயல்படுகிற நிறுவனத்தில், அமைப்பில் நம்மால் பார்க்க இயலும்.
இந்தக் குணங்களும், திறன்களும், ஆற்றல்களும் தாமாகவே எவருக்கும் வந்துவிடாது. வலிந்து முயற்சி செய்யும் தொடர் பயிற்சிகளின் மூலமே அவற்றைப் பெற முடியும். இவை அனைத்தும் வளர்ந்தால், உயர்ந்தால் செயல்படுகின்ற இடத்தில் வியாபிப்பதும், தளர்ந்தால் தளர்வதையும் நாம் பார்த்து வருகிறோம்.
இதில் மூன்று இடத்தில் தலைமைத்துவம் என்பது பெரும் ஆய்வுப் பொருளாக மாறியுள்ளது. ஒன்று, அரசுத் தலைமை; இரண்டு, சமூகத் தலைமை; மூன்று, சந்தைத் தலைமை.
இந்த மூன்றில் சந்தைத் தலைமையை வளர்க்கத்தான் உலகத்தில் பெரும் நிதி செலவழிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாகத்தான் இன்று சந்தையில் வளர்ந்த, மேம்பட்ட உச்சம் பெற்ற தலைமையைப் பார்க்க முடிகிறது. ஆகையால்தான், சந்தை வலுவடைந்து அரசாங்கத்தையும், சமூகத்தையும் வயப்படுத்தி வைத்துக் கொண்டுள்ளது.
உலகம் வியக்கக்ககூடிய அளவில் தலைமைத்துவக் குணங்கள், திறன்கள், ஆற்றல்கள் வளர்த்தெடுக்கப்படுவதை சந்தையில் நாம் பார்க்கிறோம். அதற்கான தொடர் ஆய்வுத் திட்டங்கள் வகுக்கப்பட்டு பெரும் நிதி செலவு செய்து நிறைவேற்றப்பட்டு அதன் விளைவுகளைப் பதிவு செய்து புத்தகங்களாக வெளியிட்டு வருகின்றனர்.
ஒரு நல்ல அரசியலை, ஆட்சியை, நல்ல நிர்வாகத்தைக் கட்டமைக்கத் தேவையான தலைமைத்துவக் கல்வி சந்தையில் இருக்கும் தலைமைக் கல்விபோல் இருக்கிறதா என்றால், "ஆம்' என்று கூற முடியாது.
அரசியல் அறிவியல், பொது நிர்வாகம் எனக் கல்வித் திட்டங்கள் இருக்கிறதே என்று பலர் எண்ணக்கூடும். இது நம் அரசியல் எது சார்ந்தது, எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும். ஓர் அறம் சார்ந்த அரசியலை எப்படிக் கட்டமைப்பது என்பதற்கான கல்வி இல்லை. அதே போன்றுதான் பொது நிர்வாகத்திலும். அரசியலுக்கும், நிர்வாகத்துக்கும் தேவையான தலைமைத்துவக் கல்வி நம்மிடம் இல்லை. இதன் விளைவுதான் மக்களாட்சி அரசியலுக்கும் பொது நிர்வாகத்துக்கும் தேவையான கல்வியை பெறாமலேயே இந்த இரண்டு தளத்திலும் செயல்பாடுகள் நடைபெறுகின்றன.
அடுத்து, சமூகம் தன்னைக் கட்டமைத்து ஓர் இடத்தில் வாழும்போது} அது கிராமமாக இருக்கலாம், நகரமாக இருக்கலாம்} அங்கு மக்களுக்கு வழிகாட்டும் குணங்கள், திறன்கள், ஆற்றல்கள் கொண்ட மனிதர்களை எப்படி உருவாக்குவது என்பதற்கான கல்வித்திட்டம், சமூகவியல் அல்லது சமூகப்பணித் துறையில் இல்லை.
ஒரு சமூகம் அமைதியாக எல்லாருடனும் ஒருங்கிணைந்து ஒரு லட்சிய வாழ்க்கையை வாழத் தேவையான வழிகாட்டும் கல்வியை நம் கல்வித் திட்டத்தில் பார்க்க முடியவில்லை. சந்தைக்கான தலைமையை மேலாண்மைத்துறை தனித்த நிலையில் உருவாக்கித் தந்து விடுகிறது. பிரத்யேகமாக அதற்கான பாடத்திட்டங்களை பெரும் பொருள் செலவில் உருவாக்கி, தரமான ஆசிரியர்களைக் கொண்டு அந்தக் கல்வியை சந்தைக்கான அமைப்புகள் நிறுவனங்கள் என அனைத்துக்குமான தலைவர்களுக்குத் தந்து விடுகின்றன. அந்தக் கல்வியைக் கற்க வருகின்றவர்களும் பெரும் தொகையை செலவிடுகின்றனர். காரணம், அவர்கள் அந்தக் கல்வியைப் படித்துவிட்டு பணியில் பெரும் பணம் ஈட்டலாம் என்ற அடிப்படை இருக்கிறது.
அரசியல் கட்சிகளில் ஒருசில குடும்பங்களிலிருந்து படித்த இளைஞர்கள் வெளிநாடு சென்று பிரத்யேகமாக அமெரிக்காவிலுள்ள கென்னடி ஸ்கூல் போன்ற கல்வி நிலையங்களுக்குச் சென்று பெருந்தொகை செலவழித்து படித்து வருகின்றனர். ஆனால் அவர்களும்கூட உலகத்தில் நடந்து வருகின்ற மாற்றங்கள், நம் நாட்டில் உருவாக்கப்படுகின்ற அரசுக் கொள்கைகள், மற்ற நாட்டில் நடைபெறும் மாற்றங்கள் அனைத்தைப் பற்றியும் புரிந்து கொண்டு பேசுகிறார்கள். ஆனால் அவர்களால் மக்களை ஈர்க்க முடியவில்லை. நல்ல கொள்கையை எப்படி உருவாக்க வேண்டும் என்று கேட்டால் பதிலளிப்பார்கள். ஒரு நல்ல திட்டத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்று கேட்டால் உடனே நல்ல பதில் தருவார்கள். அவற்றை எப்படி நிறைவேற்றுவது, அவற்றை மக்களிடம் எப்படிக் கொண்டு சேர்ப்பது என்று கேட்டால் தெளிவாகப் பதில் கூறமாட்டார்கள். காரணம், மக்களைப் புரிந்து கொள்வதற்கும், மக்களை ஒருங்கிணைப்பதற்கும், மக்களுடன் இணைந்து செயல்படுவதற்கும் தேவையான தலைமைத்துவத்தை கற்றுக் கொடுக்கும் கல்வி, கல்வி நிறுவனங்களில் கற்றுத் தரப்படுவதில்லை.
இன்று இந்தியாவுக்குத் தேவை மேடைத்தலைமையும் அல்ல; மேதாவித் தலைமையும் அல்ல; மேய்க்கும் தலைமையும் அல்ல; இந்தியாவுக்குத் தேவை ஆயிரக்கணக்கில் மக்களுக்கு வழிகாட்டும் தலைமை. காந்தி நூறு ஆண்டுகளுக்கு முன்பே, நிர்மாண ஊழியர்களைத் தயார் செய்ய வேண்டும் என்றார்.
நமக்குத் தேவையான தலைமை என்பது நிறுவனத் தலைமை அல்ல. மக்களுக்கு வழிகாட்டும் செயல்பாட்டுத் தலைமை. அந்தத் தலைமை மக்களின் மீது நம்பிக்கையும், அன்பும் கொண்டிருக்க வேண்டும். அப்படி மக்களிடம் மாறா அன்பும், நம்பிக்கையும் கொண்டு மக்களை ஒருங்கிணைக்க வேண்டும்.
மக்களைப் பிளவுபடுத்தி வாக்குகளைப் பெற்று அதிகாரத்தைக் கைப்பற்ற அரசியல் கட்சிகள் எடுத்த முயற்சியில் சமூகம் பிரிந்து கிடக்கிறது. எதோ ஓர் அடிப்படையில், பிரிந்தும் அந்நியப்பட்டும் கிடக்கிறது. எனவே இந்த புதிய தலைமை மக்களை பொது நலத்துக்காக ஒருங்கிணைக்க வேண்டும். காரணம், ஒரு சிலரின் சுயநலத்துக்காக பொதுநலம் காவு கொடுக்கப்படுவதைத்தான் நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். பொதுநலத்தில்தான் தனிநலன் அடங்கியிருக்கிறது என்ற புரிதலை மக்களிடம் ஏற்படுத்துவதுதான் இன்று சிக்கலான பணி.
தலைமைத்துவப் பண்புடன் திறனும் இணையும்போது செயலுக்கான சக்தி கிடைத்துவிடும். அதுதான் ஆற்றல். அதைச் செயல்களின் மூலம் வளர்த்தெடுக்க வேண்டும். இந்த மூன்றும்தான் இன்று மக்களுக்குத் தேவைப்படும் வழிகாட்டும் தலைமை. அது ஒரு பள்ளியாக இருந்தாலும் சரி, கிராமப் பஞ்சாயத்தாக இருந்தாலும் சரி, ஒரு மருத்துவமனையாக இருந்தாலும் சரி, இந்த மூன்று காரணிகளும் இணைக்கப்பட்டு தலைமைப் பொறுப்பில் இருப்போர் செயல்பட்டால் மிகப்பெரிய சாதனைகளைச் செய்ய முடியும்.
இந்தத் தலைமைக்குப் படிப்போ, வசதியோ, தேவை இல்லை. சமுதாயம் மீது அக்கறை இருந்தால் போதுமானது. அடுத்து தன்மீது நம்பிக்கையும் தியாகக் குணமும் எளிய வாழ்க்கைக்கு தயார் நிலையில் இருந்தால் அடுத்த இரண்டும் பயிற்சியின் மூலம் நாம் பெற்றுக் கொள்ளலாம். ஒரு பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று பதவியைப் பிடித்தாலும் மேற்கூறிய பயிற்சி இல்லை என்றால் பஞ்சாயத்தில் காலத்தை கழிக்கலாமே தவிர, சாதனைகள் புரிய இயலாது. மக்களின் உளவியலை அறிந்து மக்களுடன் பணியாற்றும் உளவியலை அவர் உருவாக்கிக் கொள்ளவில்லை என்றால் பஞ்சாயத்திலும் மக்களை மேய்க்கும் தலைவராகத்தான் அவர் இருப்பார். மக்களுடன் பணியாற்றுவது என்பது மக்களை எல்லா பொது மேம்பாட்டுச் செயல்பாடுகளிலும் பொறுப்பேற்கச் செய்து பங்காற்றும் உளவியலை உருவாக்குவது. அந்த உளவியலை முதலில் நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
மக்களை ஒன்று திரட்டுவது அல்லது ஒருங்கிணைப்புச் செய்வது என்பது கூட்டம் கூட்டுவது அல்ல, செயல்பாட்டுக்குத் தயார் செய்வது. மக்களின் பொறுப்புகளை அவர்களுக்குத் தெளிவுபடுத்தி, அவற்றில் பங்கேற்பதைக் கடமையென அவர்களை உணரச் செய்வதுதான் ஒருங்கிணைப்புப் பணியாகும். இந்தத் தெளிவு தலைமைக்கு வேண்டும். இந்த இரண்டும் இருந்துவிட்டால் மூன்றாவது ஆற்றல் என்பது தானும் தன்னைச் சார்ந்து பணி செய்யத் தயார் செய்யப்பட்டவர்களும் செயல்பட களத்துக்கு வரும்போது அங்கு வேறு சிந்தனையற்ற ஒட்டு மொத்தச் செயல்பாடே நடைபெறும். இந்தப் பயிற்சிதான் புதிய தலைமைக்கு இன்று வேண்டும்.
தலைமை என்பது பதவி அல்ல, மற்றவர்களால் அழைக்கப்படும் சொல் அல்ல, மதிப்பு அல்ல. தலைமை என்பது செயலால் அறியப்படுவது. சாதனையால் அறியப்படுவது. இன்று சமூகத்தில் இருக்கும் பிரச்னைகளுக்கு இன்னும் ஆயிரம் திட்டங்களைக் கொண்டு வந்தாலும், சட்டங்களைக் கொண்டு வந்தாலும், கோடி கோடியாக நிதியைக் கொட்டினாலும், தீர்வு காணமுடியாது. மக்களைத் தயார் செய்து, அவர்கள் மூலமாக செயல்பட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.
அரசு சமூகத்துடன் இணைந்தால் மட்டுமே தீர்வு காண முடியும். அந்நியப்பட்டு நிற்கும் மக்களை அரசுடன் இணைக்க தேவை, இணைப்புப்பாலமான புதிய தலைமை. அதுதான் வழிகாட்டும் தலைமை. அதற்கான பயிற்சியை எந்த கல்வி நிறுவனமும் கற்றுத் தரவில்லை. எந்தப் பயிற்சி நிறுவனமும் கற்றுத் தரவில்லை. தன்னம்பிக்கையற்று தனக்கிருக்கும் பொறுப்பு, கடமை இவை அனைத்தும் தெரியாமல், அரசையே எதிர்பார்த்து சாய்ந்து கிடக்கும் மக்களைத் தயார் செய்வதுதான் சவாலான பணி. அந்தப் பணிதான் முன்னேற்றத்துக்காக மக்களைத் தயார் செய்யும் பணி. அதற்குத்தான் புதிய தலைமை தேவைப்படுகிறது. அந்தத் தலைமையை உருவாக்குவதற்கான அறிவியல் கல்விதான் இன்று நமக்குத் தேவைப்படுகிறது.
கட்டுரையாளர்:
பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.