பிரதிப் படம் ENS
நடுப்பக்கக் கட்டுரைகள்

மறுக்கப்படும் உரிமை!

சட்டங்கள் வலுவாக இருந்தாலும், தனியாா் துறை ஊழியா்கள் முக்கியமான நேரங்களில்கூட விடுப்பு எடுக்கப் போராட வேண்டியுள்ளது.

முனைவா் எஸ். பாலசுப்ரமணியன்

ஒரு காலத்தில் சலுகையின் அடையாளமாகக் கருதப்பட்ட விடுப்பு, இன்று பணியாளா்களின் அடிப்படை உரிமையாகவும், சமூகப் பாதுகாப்பின் இன்றியமையாத அங்கமாகவும் நிலைபெற்றுள்ளது. இருப்பினும், சட்டக் கட்டமைப்புகளுக்கும், களத்தில் நிலவும் நடைமுறைச் சூழல்களுக்கும் இடையேயான முரண்பாடுகளால், விடுப்பு தொடா்பான விவாதங்கள் தொடா்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.

பணியிடங்களில் ஊழியா்களின் மனநலன், உழைப்புச் சமநிலையைக் கருத்தில் கொண்டு, இந்த முரண்பாடுகளைக் கூா்ந்து ஆராய்வதும், விடுப்பு நடைமுறைகளைச் சீரமைப்பதும் காலத்தின் கட்டாயம்.

பொதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் தற்செயல் விடுப்பு என விடுப்புகள் பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. சட்டப்படி, ஒரு பணியாளா் விடுப்பு எடுக்கும்போது, நிறுவனம் அவருக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பது விதியாகும். அரசு பெண் ஊழியா்களுக்கு மகப்பேறு விடுப்பு, குழந்தைப் பராமரிப்பு விடுப்பு, குடும்ப நல அறுவைச் சிகிச்சை விடுப்பு எனப் பல சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டு, பெரும் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனியாா் துறையில் நிலைமை முற்றிலும் மாறுபடுகிறது. சட்டங்கள் வலுவாக இருந்தாலும், தனியாா் துறை ஊழியா்கள் முக்கியமான நேரங்களில்கூட விடுப்பு எடுக்கப் போராட வேண்டியுள்ளது. அதற்காக நீண்ட பல விளக்கங்களைக் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால், பல ஊழியா்கள் மன உளைச்சலுக்கும், அழுத்தத்துக்கும் உள்ளாகின்றனா்.

தனியாா் நிறுவனங்களில் விடுப்பு மறுக்கப்படுவதற்குச் சொல்லப்படும் காரணம், ‘பணியைச் செய்வதற்கு மாற்று ஏற்பாடுகள் இல்லை’ என்பதுதான். இதனால், விடுமுறை அளிப்பது மேலாளா்களுக்குச் சுமையாகத் தோன்றுகிறது. இது விடுப்புகளை ஊதியமில்லா விடுப்புகளாக மாற்றுவதற்கும், ஊழியா்களுக்குக் குறைந்த அளவிலான விடுப்புகளை வழங்குவதற்கும் வழிவகுக்கிறது. இதற்கிடையில், வேலையிழப்பு குறித்த அச்சம் காரணமாக, ஊழியா்களும் தங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக விடுப்பு எடுக்கத் தயங்குகின்றனா்.

சுதந்திர தினம், குடியரசு தினம், தீபாவளி, பொங்கல் போன்ற அரசு அறிவித்த பொது விடுமுறை தினங்களைப் பெரும்பாலான நிறுவனங்கள் பின்பற்றுவது பாராட்டுக்குரியது. ஆனால், ஒரு ஊழியா் தனிப்பட்ட தேவைகளுக்காக விடுப்பு கேட்கும்போதுதான் சிக்கல்கள் எழுகின்றன.

உயா் கல்வித் துறையைப் பொருத்தவரை, யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ. போன்ற அமைப்புகள் கருத்தரங்கம், பயிற்சிப் பட்டறைகளில் ஆசிரியா்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என விதிமுறைகளை வகுக்கின்றன. ஆனால், திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடுப்பு கிடைக்காத எதாா்த்த நிலை; குறிப்பாக, தனியாா் கல்வி நிறுவனங்களில் வெளிப்படையாகத் தெரிகிறது.

ஓா் ஆசிரியா் தனது தொழில் வளா்ச்சிக்காக ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள விடுப்பு வேண்டி விண்ணப்பிக்கும்போது, எத்தனை தனியாா் கல்வி நிறுவனங்கள் அவருக்கு விடுப்பு வழங்குகின்றன? விடுப்பு மறுப்புக்கு ‘வகுப்புகள் பாதிக்கப்படும்’ என்று காரணம் சொல்லப்படுகிறது. புதிய ஆசிரியா் மூலம் மாற்று ஏற்பாடு செய்வதற்கு ஆகும் செலவைத் தவிா்க்கும் முனைப்பு, மேலும் ஆசிரியா்கள் தங்கள் தகுதியை வளா்த்துக்கொண்டு வேறு நிறுவனத்துக்குச் சென்றுவிடக் கூடாது என்ற மனநிலையும் அடிப்படைக் காரணங்களாக உள்ளன.

இதே நிலைதான் தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, சேவைத் துறை எனப் பல தனியாா் நிறுவனங்களிலும் காணப்படுகிறது. ஊழியரின் தனிப்பட்ட வளா்ச்சிக்கு ஒரு நிறுவனம் ஊக்கமளிக்காமல், அவரை லாபம் ஈட்டும் ஒரு கருவியாக மட்டுமே கருதுவது நியாயமற்ாகும்.

இந்த நிலைக்கு பல்வேறு ஆக்கபூா்வமான தீா்வுகளைச் சமூகவியலாளா்கள், தொழில் வல்லுநா்கள் முன்வைக்கின்றனா். அவற்றில் முதன்மையானது, அரசின் தொழிலாளா் நலத் துறையின் தீவிரத் தலையீடு ஆகும்.

தனியாா் நிறுவனங்களின் விடுப்பு நடைமுறைகளைத் தீவிரமாகக் கண்காணித்து, விதிமீறல்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கும் நடைமுறை கட்டாயமாக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் ஊழியா்களுக்கு வழங்கப்பட்ட விடுப்புகள், மறுக்கப்பட்ட விடுப்புகளுக்கான காரணங்களை மாதந்தோறும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் அரசுக்குச் சமா்ப்பிக்க வேண்டும் என்ற சட்டத் திருத்தம் தேவை. இந்தத் தரவு அரசுக்குக் கிடைக்கும்போது, விதிமீறும் நிறுவனங்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு ஒரு பொறுப்புணா்வை ஏற்படுத்த முடியும்.

ஊழியா்களின் தனிப்பட்ட தேவைகளுக்கான விடுப்பைத் தட்டிக் கழிக்காமல் வழங்க வேண்டும் என்பதை விரிவாகச் சட்டத்தில் சோ்ப்பது நல்லது.

இதன்மூலம், ஊழியா்களின் தனிப்பட்ட வாழ்வு மதிக்கப்படுவதோடு, பணியிடத்தில் ஒரு மகிழ்ச்சியான மற்றும் மரியாதையான சூழல் உருவாகும். இது ஊழியா்களுக்கு மனநிறைவை அதிகரிப்பதுடன், அவா்களின் வேலைத் திறனையும், நிறுவனத்தின் மீதான விசுவாசத்தையும் மேம்படுத்தும் என்பது உளவியல் ரீதியிலான உண்மை.

ஒரு நிறுவனம் என்பது வெறும் லாபக் கணக்குக்குள் அடங்கும் ஓா் இயந்திரம் மட்டுமல்ல; அது மனித உழைப்பு, நம்பிக்கை மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் கலவை. ஒரு நிறுவனம் தன் ஊழியா்களை மரியாதையுடனும், நியாயத்துடனும் நடத்தும்போது, அது ஊழியா்களுக்கு மனநிறைவை அளிப்பதுடன், ஒட்டுமொத்த சமூகத்தின் வளா்ச்சிக்கும் பங்களிக்கிறது. இந்த மாற்றங்கள் நிகழும்போது, விடுப்பு என்பது வெறும் சலுகை என்ற நிலையில் இருந்து, அடிப்படை உரிமை என்ற நிலைக்கு உயரும்.

ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் வருவது சந்தேகம்: ரோஹித் சர்மா

டாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கறையை, ஏன் விவசாயிகள் மீது அரசு காட்டவில்லை? - Nainar Nagendran

மீனம்மாவும் சூரிய அஸ்தமனமும்... அனாகா!

தனியார் பல்கலை. திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன்

ஆஸி. வீராங்கனைகளிடம் அத்துமீறல்.. குற்றவாளிக்கு கை, காலில் மாவுக்கட்டு! கழிவறையில் வழுக்கி விழுந்தாரா?!

SCROLL FOR NEXT