தெங்குமரஹாடா  வனத்தில்  தென்பட்ட  பாறுக்  கழுகுகள். 
நடுப்பக்கக் கட்டுரைகள்

அழிவின் விளிம்பில் கழுகுகள்!

பறவைகளின் அரசனான கழுகுகள் அழிந்து வருவது குறித்து..

தினமணி செய்திச் சேவை

-பறாபுறத் இராதாகிருஷ்ணன்

இயற்கையின் சுற்றுச்சூழலைக் காப்பதில் பறவைகளுக்கு தனி இடம் உண்டு. பறவைகளின் அரசனான கழுகுகள் சுற்றுச்சூழல் மாசடைதலைத் தடுக்கவும், இயற்கை விவசாயம், கிராமப்புற சூழல்களைத் தக்கவைக்கவும் மனிதர்களுக்கு உதவுகின்றன. குறிப்பாக, கரிமக் கழிவுகளை மறுசுழற்சி மூலம் அகற்றுவதில் அவை துப்புரவாளர்களாகச் செயல்படுகின்றன. அப்படிப்பட்ட அந்த இனம், உலகில் வேகமாக அழிந்து வருகிறது.

அசைவப் பறவையான கழுகு, பொது இடங்கள், காடுகளில் இறந்து கிடக்கும் விலங்குகளின் இறைச்சியை உண்டு, உலகின் தூய்மைப் பணியாளராக வானில் வலம் வந்து வனத்தையும், வனாந்திரத்தையும் தூய்மையாக வைத்து, ஆரோக்கியமான சுற்றுச்சூழலை ஏற்படுத்துகிறது. இறந்த கால்நடைகளை உண்டு, இதன் மூலம் மனிதர்களிடையே தொற்று நோய்கள் பரவுதலைத் தடுக்க உதவுகிறது. வெறிநாய்க்கடி மற்றும் ஆந்த்ராக்ஸ் போன்ற மிகவும் நச்சுத்தன்மையுள்ள நோய்க்

கிருமிகளின் பாதிப்புகளிடமிருந்து காத்துக் கொள்ளும் திறன் கழுகுக்கு உண்டு.

இந்தியா முழுவதும் மொத்தம் ஒன்பது வகையான கழுகு இனங்கள் உள்ளன. அதிகமாகக் காணப்படும் வெள்ளைத்தலை கழுகு முதல் காட்டில் வாழும் சிவப்புத் தலை கழுகு வரையிலான இனங்கள் ஒவ்வொன்றும் சுற்றுச்சூழலைக் காப்பதில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன. இமயமலை கிரிஃபோன் மற்றும் தாடியுள்ள கழுகு போன்றவை பொதுவாக இமயமலையின் உயரமான பகுதிகளில் காணப்படுகின்றன.

எகிப்திய கழுகு கிட்டத்தட்ட நாடு முழுவதும் காணப்படுகிறது. மெல்லிய அலகுள்ள கழுகுகள் வடக்கு சமவெளிகளிலும், அஸ்ஸôம் பள்ளத்தாக்கிலும் காணப்படுகின்றன. இந்தியக் கழுகுகள் இந்தியாவின் மத்திய மற்றும் தீபகற்ப பகுதிகளில் பரவியுள்ளது. சினீரியஸ் மற்றும் யூரேசியன் கிரிஃபான் இனக் கழுகுகள் இந்தியாவுக்கு குளிர்கால விருந்தினர்களாக வருகின்றன. அனைத்து வகையான கழுகுகளும் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இல் பட்டியலிடப்பட்டுள்ளன. விவசாய நிலங்களில் பயன்படுத்தப் படும் நச்சு மருந்துகளால் இறக்கும் எலிகள் மற்றும் கால்நடைகளை உண்பதால் இறத்தல், உயர் அழுத்த மின்கம்பிகளில் சிக்கி மடிதல், காடுகளின் அழிவு முதலியன கழுகு இனங்கள் அருகி வருவதற்குக் காரணங்களாக சொல்லப்படுகின்றன.

1990-களில், வெண்முதுகுக் கழுகு, இந்தியக் கழுகு, மற்றும் மெலிந்த அலகுடைய கழுகு இனங்கள் வேகமாக அழியத் தொடங்கின. 2003-ஆம் ஆண்டுவாக்கில் கழுகுகளின் எண்ணிக்கை 90% குறைந்தது. குறிப்பாக, சிவப்புத் தலை கழுகுகள் அழிவின் விளிம்பில் இருந்தன. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, நாடு முழுவதும் கால்நடைகளுக்குச் செலுத்தப்படும் அழற்சி எதிர்ப்பு மருந்துகளான (ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி டிரக்ஸ்) டைக்ளோஃபெனாக், டிக்ளோஃபெனாக், கீட்டோபுரோஃபென், அசெக்ளோஃபெனாக் மருந்துகள்தான் கழுகுகளின் அழிவுக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டன.

டைக்ளோஃபெனாக் மருந்துகள் செலுத்தப்பட்ட கால்நடைகளின் இறைச்சிகளை உண்ணும் கழுகுகள் சிறுநீரகச் செயலிழப்பால் இறந்தன. இதனால், கழுகுகளுக்கு மிகவும் ஆபத்தானவை என்று கண்டறியப்பட்ட கீட்டோபுரோஃபென் மற்றும் அசெக்ளோஃபெனாக் மருந்துகள் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டன. மெலோக்சிகாம் எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்து கழுகுகளுக்கு செலுத்தப்பட்டு கழுகுகள் காப்பாற்றப்பட்டன.

அருகி வரும் கழுகு இனங்களைப் பாதுகாக்க அமைப்பு சாரா நிறுவனங்கள், பறவையின ஆராய்ச்சி நிறுவனங்களின் துணையுடன் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. ஹரியாணாவின் பிஞ்சோரில் உள்ள கழுகு பாதுகாப்பு இனப்பெருக்க மையம், மேற்கு வங்கத்திலுள்ள ராஜ்பட்காவாவிலும், அஸ்ஸôமிலுள்ள ராணி என்னும் கிராமத்திலும்

கழுகுகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள வான் விஹார், ஒடிஸா மாநிலம், புவனேஸ்வரிலுள்ள நந்தன்கனன் மிருகக்காட்சி சாலை, தெலங்கானா மாநிலம், ஹைதராபாதிலுள்ள உள்ள நேரு விலங்கியல் பூங்கா, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியிலுள்ள முட்டா மிருகக்காட்சி சாலை மற்றும் குஜராத் மாநிலம், ஜுனாகாத்திலுள்ள சக்கர்பாக் உள்ளிட்ட பல்வேறு மாநில உயிரியல் பூங்காக்களுடன் இணைந்து மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தால் கழுகு பாதுகாப்பு கூடுதல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

2023-ஆம் ஆண்டைய நிலவரப்படி, இந்தியாவிலுள்ள மையங்கள் மொத்தமாக 811 கழுகுகளைக் கொண்டுள்ளன. இதில் 376 வெள்ளை நிற முதுகுடைய கழுகு, 315 இந்தியக் கழுகு, 120 மெல்லிய அலகுடைய கழுகுகளும் அடங்கும். எனினும், சிறைபிடிக்கப்பட்ட கழுகுகளை மீண்டும் காட்டுக்குள் சுதந்திரமாகப் பறக்கவிட, கழுகு பாதுகாப்பு மண்டலங்கள் மீண்டும் தொடங்கப்பட்டன.

தற்போது இந்தியா முழுவதும் தமிழ்நாடு, கேரளம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், அஸ்ஸாம், ஜார்க்கண்ட், குஜராத், மேற்கு வங்கம், ஹரியாணா ஆகிய ஒன்பது மாநிலங்களில் தற்காலிக கழுகுப் பாதுகாப்பு மண்டலங்கள் இயங்கி வருகின்றன. இங்குதான் சிறைபிடிக்கப்பட்ட இனப்பெருக்கக் கழுகுகளை விடுவிக்க முதலில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த சில ஆண்டுகளாக, ஹரியாணாவிலுள்ள பிஞ்சோர், மேற்கு வங்கத்திலுள்ள பக்ஸா புலிகள் காப்பகம் மற்றும் மகாராஷ்டிரத்திலுள்ள தடோபா

அந்தாரி புலி ஆராய்ச்சி மையம் ஆகிய இடங்களில் உள்ள வனவிலங்கு மண்டலங்களில் சிறைபிடிக்கப்பட்ட கழுகுகளை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் சில மட்டுமே தங்கள் இனங்களுடன் இணைந்து, ஜோடியாக வானத்தை வலம் வரத் தொடங்கியுள்ளன.

கால்நடைகளில் டைக்ளோஃபெனாக் பயன்படுத்துவதைத் தடுக்க, அதன் முக்கிய அளவு 3 மில்லியாக குறைக்கப்பட்டுள்ளது. கழுகுகளுக்கு நச்சுத்தன்மையைக் கண்டறிய பல்வேறு கால்நடை ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் மூலம் பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், வனவிலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கழுகுகளின் முக்கியத்துவத்தை எளிதில் விளக்கும் வகையில் "தி லாஸ்ட் ஃப்ளைட்' மற்றும் "வானிஷிங் வல்ச்சர்ஸ்' ஆகிய திரைப்படங்கள் அடிக்கடி ஒளிபரப்பப்படுகின்றன.

இந்தியாவிலுள்ள ஒன்பது கழுகு இனங்களில் நான்கு இனங்கள் நீலகிரி - ஈரோட்டுக்கு இடையேயான மோயாறுப் பள்ளத்தாக்கில் காணப்படுகின்றன.

சமீபத்திய கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 157 பிணந்தின்னிக் கழுகுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கையானது 2023-ஆம் ஆண்டில் 100-ஆக இருந்தது, 2024-ஆம் ஆண்டில் 152-ஆகவும் இருந்தது. தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கையை கண்காணிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 2025-ஆம் ஆண்டுக்கான ஒருங் கிணைந்த பிணந்தின்னி கழுகு கணக்கெடுப்பு தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் கணக்கெடுப்பை, தமிழ்நாடு அரசின் வனத் துறை முன்னெடுத்து நடத்தியது. மூன்று மாநிலங்களையும் சேர்த்து 106 இடங்களில் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் தரவுகளை ஆய்வு செய்ததில் மூன்று மாநிலங்களில் 390 பிணந்தின்னிக் கழுகுகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 157 பிணந்தின்னிக் கழுகுகள் கண்டறியப்பட்டன. தமிழ்நாடு அரசு பிணந்தின்னி கழுகுகளைப் பாதுகாப்பதற்காக டைக்ளோஃபெனாக் மற்றும் நிம்சுலைடு ஆகிய கால்நடை மருந்துகளைத் தடை செய்துள்ளது.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர்,நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கழுகுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதற்கு தடைசெய்யப்பட்ட நிம்சுலைடு, புளுநிக்ஸின் மற்றும் கார்புரோபென் ஆகிய மருந்துகளை கால்நடைகளுக்கும் மற்ற விலங்குகளுக்கும் செலுத்துவதால் அவை இறந்த பிறகு அவற்றின் மாமிசத்தை உண்ணும் கழுகுகள் அதிக அளவில் உயிரிழப்பதாக கழுகு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். வனம் பாதுகாக்கப்பட்டால்தான் உருவத்தில் பெரியதான வன விலங்குகளும் பெருகும். இந்த விலங்குகள் இறக்கும்போது மாமிச உண்ணிகளான கழுகுகளின் எண்ணிக்கையும் பெருகும்.

இந்தப் பூமி அனைத்து உயிரினங்களுக்கும் உரியது. ஓர் உயிரினத்தின் அழிவு நமது சுற்றுச்சூழல் சங்கிலியில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். வானத்தில் பறக்கும் பறவைகளையும், வனத்தில் சுற்றித் திரியும் விலங்குகளையும் பாதுகாத்தால்தான் சுற்றுச்சூழல் மேம்படும். இதன்மூலம், சுற்றுச்சூழல் பாதிப்பால் உலகில் ஏற்படும் கொடுந்நோய்கள், பேரழிவுகள் தடுக்கப்படும். இயற்கையைப் பாதுகாக்க வேண்டுமென்றால், அதன் தலைமைக் காவலரான கழுகுகளைப் பாதுகாக்க தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

(செப். 6-சர்வதேச கழுகு விழிப்புணர்வு தினம்)

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குட்டி வீரப்பன், லோக்கல் புஷ்பா... கவனம் ஈர்க்கும் பிருத்விராஜ் பட டீசர்!

மகளிர் உலகக் கோப்பை டிக்கெட் வெறும் ரூ. 100 மட்டுமே..!

நான் பிரதீப் ஜான் கிடையாது; செங்கோட்டையன் கெடு குறித்து டிடிவி தினகரன் பதில்

காஸா போர்: ஹமாஸுடன் தீவிர பேச்சுவார்த்தை! - டிரம்ப் தகவல்

திருமா மீது விமர்சனம் காரணமா? புரட்சித் தமிழகம் தலைவர் மீது தாக்குதல்!

SCROLL FOR NEXT