ஆா்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் - ‘ஏஐ’  கோப்புப்படம்
நடுப்பக்கக் கட்டுரைகள்

இயந்திரங்களால் ஆனது உலகு!

இந்த கர்ப்ப ரோபோக்களை மனித உருவ ரோபோக்களாக, அதாவது பெண் போலவே சீன விஞ்ஞானிகள் உருவாக்கி வருவதாக தகவல்.

முனைவர் பவித்ரா நந்தகுமார்

இன்றைய உலகம் இயந்திரங்களால் ஆனது. பெண்கள் செய்த கடினமான வீட்டு வேலைகள் பலவும் பல்வேறு நவீன இயந்திரங்களால் இன்று மிகச் சுலபமாகிவிட்டன. அம்மி அரைப்பதிலிருந்தும் உரலில் இட்லிக்கு மாவு அரைப்பதிலிருந்தும் பெண்கள் பெரிய விடுதலையை எப்போதோ அடைந்தாகிவிட்டது. வீட்டைச் சுத்தமாக துடைத்து எடுக்க, பாத்திரங்களைக் கழுவி காயவைத்துக் கொடுக்கக்கூட இயந்திரங்கள் வந்துவிட்டன. பொத்தானை அழுத்தினால்போதும், கூடை நிறைய துணியை துவைத்து தள்ளி விடுகிறது. காபி போட்டு எடுக்க, தோசை வார்க்க, சப்பாத்தி சுட என எல்லாவற்றுக்கும் நவீன சாதனங்கள் வந்துவிட்டன.

எல்லாத் துறைகளிலும் இயந்திரங்களால் ஏற்பட்ட மறுமலர்ச்சிபோல்தான் சமையலறையிலும் இது பார்க்கப்பட்டது. பெண்கள் இவ்வரவுகளால் அடைந்த நன்மைகள் ஏராளம் ஏராளம். சமையலறை வேலைகளின் சிரமங்கள் குறைவதால், பெண்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் இது உதவுகிறது. வீடு, அலுவலகம் என மாறி மாறி உழன்ற பெண்களுக்கு இதுபோன்ற கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய வரப்பிரசாதங்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை.

சமையல் இயந்திரங்களைத் தாண்டி மருத்துவத் துறையில் வெளிவர இருக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பு பெண்கள் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது. பெண்கள் மட்டுமல்லாது அனைவரின் புருவத்தையும் உயரச் செய்திருப்பது சமீபத்திய குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்கள்தான். குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண்களுக்கு இதுவரை வாடகைத்தாய் முறை ஒரு வரமாக இருந்த நிலையில், அதற்கு மாற்றாக செயற்கை கருப்பை சுமக்கும் ரோபோக்கள் சலசலக்கத் தொடங்கிவிட்டன.

ஆம், கர்ப்பம் தரித்து பத்து மாதங்கள் சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இது அனைவரும் அறிந்ததே. இந்த வகை ரோபோக்கள் நவீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் 'இன்குபேட்டர்' சார்ந்த வடிவமைப்பு இல்லை. மாறாக, கருத்தரித்தல்முதல் 10 மாதங்கள் கழித்து பிரசவித்தல் வரையான அனைத்துச் செயல்முறைகளும் ரோபோவின் கருப்பையில் நடைபெறும். இந்த கர்ப்ப ரோபோக்களை மனித உருவ ரோபோக்களாக, அதாவது பெண் போலவே சீன விஞ்ஞானிகள் உருவாக்கி வருவதாக தகவல்.

'நான் யாங்' தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜாங் கெஃபெங் தலைமையிலான குழு உலகின் முதல் கர்ப்ப ரோபோக்களை உருவாக்கி வருகிறது. இந்த கர்ப்ப ரோபோக்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட கருப்பைகளைக் கொண்டுள்ளன. செயற்கை அம்னோடிக் திரவத்தால் நிரப்பப்பட்ட இந்த செயற்கை கருப்பை, மனித கருப்பைப் போலவே செயல்படுமாம்.

கருப்பையில் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் குழாய்கள் மூலம் வழங்கப்படுகின்றன.

உண்மையில் இந்த செயற்கை கருப்பை என்பது தற்போது புதிதாக வந்த முறை அல்ல என்றும், இது 'பயோ பேக்' மூலம் ஆடுகள் கருவில் இருந்து வளர்க்கப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டது. இந்த 'பயோ பேக்' தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதன் மூலம் கர்ப்ப ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த தொழில்நுட்பம் பல நெறிமுறைகள் மற்றும் உளவியல் சார்ந்த கேள்விகளை முன்னெடுத்துள்ளன. மனித இனப்பெருக்கத்தை ஓர் இயந்திரத்தின் மூலம் வளரச் செய்வதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனால், பெண்கள் மத்தியில் வரவேற்கப்படும் கண்டுபிடிப்பாக உள்ளது.

இந்த தொழில்நுட்பம் வெற்றி பெற்றால் குழந்தை பெற வாய்ப்பு இல்லாத தம்பதிகள் அல்லது உயிரியல் கர்ப்பத்தை விரும்பாதவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, மருத்துவ உலகம் இன்னும் பல மைல்கல்களை எட்ட இருக்கிறது. பெண்கள் விரும்பி அணியும் 'டிசைனர் சாரீஸ்'போல் 'டிசைனர் பேபீஸ்'-

ஐயும் உருவாக்கிக் கொள்ளலாம் என்ற நிலை வரும் என்கின்றனர். தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை எந்த நிறத்தில் இருக்க வேண்டும், சுருட்டை முடி வேண்டுமா அல்லது கோரை முடி வேண்டுமா, குழந்தையின் உயரம் எந்த அளவில் இருக்க வேண்டும், தாய் தந்தை இருவரில் யாருடைய முக அமைப்பு தேவை என சகலத்தையும் தனிப்பயனாக்கம் (கஸ்டமைஸ்) செய்து கொள்ள இயலுமாம். ஒரு கடைக்குச் சென்று அலசி ஆராய்ந்து நமக்குத் தேவையான பொருள்களை வாங்குவதுபோல், ஒரு சிற்பி பார்த்துப் பார்த்து சிலையைச் செதுக்குவதுபோல் குழந்தையை நாமே வடிவமைத்துக் கொள்ள இயலும். நினைக்கவே வியப்பாக இருக்கிறது!

இது மட்டுமல்ல, மருத்துவ உலகம் இன்று எண்ணற்ற புதுமைகளைக் கண்டு வருகிறது. ஒருவருடைய சிறுநீரகம் பழுதாகி விட்டால், இது நாள்வரை பழுதான நோயாளிக்கு பொருந்தக்கூடிய நபரிடம் இருந்து தானம் பெற்றுத் தருவார்கள். இனிவரும் காலங்களில் நம் திசுக்களை வைத்தே அதை வளர்த்து நமக்கான சிறுநீரகத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என்கிறார்கள். இப்படி பல உறுப்புகளும் புது வடிவம் எடுக்க ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அதன் உச்சகட்ட நிலை மிகப் பெரிய மருத்துவப் புரட்சியில் முடியும் என்கின்றனர். உதாரணமாக ஒருவருடைய கணையத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால், திசு வளர்ப்பு மூலம் 2, 3 கணையங்களை உருவாக்கி அதில் அவ்வகை புற்று நோய் பாதிப்பை ஏற்படுத்தி, ஒரே நேரத்தில் மூன்று விதமான மருந்துகளை தனித்தனியே செலுத்தி, எதில் பூரண குணம் பெறலாம் என்ற தெளிவை மிக மிக குறுகிய கால நேரத்தில் பெறலாம். இதனால், நோயாளியின் உயிர் காக்கப்படும் வாய்ப்புகள் 100 சதவீதம் அதிகமாம். இதுபோன்ற பல முன்னெடுப்புகள் வரிசைகட்டி நின்று கொண்டிருக்கின்றன.

நம்மிடம் யாராவது வேலைகளைத் திணித்துக் கொண்டே இருந்தால், எனக்கு என்ன 10 கைகளா இருக்கு? ரெண்டு தானே இருக்கு!; பொறுமையா செய்றேன் இருங்க எனப் பேசிய பேச்சுகள்கூட இனி மலை ஏறிப் போகலாம். நம்முடைய கைகள் போலவே நமக்கே நமக்கென ஒரு நான்கு கைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். அது, இறைவன் திருவுருவத்தில் இருப்பதுபோல் நம் உடலுடன் ஒட்டிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

நம்முடைய கைகள் போலவே நம் வீட்டு நாற்காலிகளின் மேல் இரண்டு கைகளை கிடத்தி வைக்கலாம். நாம் அவற்றுக்கு என்ன உத்தரவிடுகிறோமோ அதை அவை செய்யும். நாம் தரையில் உட்கார்ந்து குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருக்கும்போது ஒரு செயற்கை கை குழந்தைக்கு கிலுகிலுப்பை ஆட்டிக் காட்டும். மற்றொரு செயற்கை கை குழந்தைக்குத் தேவையான தண்ணீரை சமையலறையில் இருந்து கொண்டுவந்து கொடுக்கும். இப்படி அந்த செயற்கை கைகளுக்கு நம்மால் உத்தரவிட இயலும். அவை நம்முடைய உத்தரவுக்கு கட்டுப்பட்டவை.

'பிரைன் கம்ப்யூட்டர் இன்டர்பேஸ்' எனும் செயல் திறன் மூலம் நம் மூளையில் இருந்து மின் அலைகளாக உருவாகி செயற்கை உறுப்புகளுக்கு உத்தரவு பிறப்பிக்கும். இராவணனுக்கு 10 கைகள் இருந்ததைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு மனிதனுக்கு எத்தனை எத்தனை செயற்கை கைகளை வேண்டுமானாலும் உருவாக்கி நம் இல்லத்தில் நமக்குத் தேவையான இடத்தில் வைத்துக்கொள்ள இயலும். பணியாட்களை நம்பியே இருக்க வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கும் வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களுக்கும் இது நற்பலன்களை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மனிதனுக்குச் சவாலானது இரு காரணிகள். ஒன்று நோய், மற்றொன்று இறப்பு. இந்த இரண்டிலுமிருந்து மனிதனைப் பாதுகாக்கத்தான் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கண்டுபிடிப்புகள் எல்லாம் மக்களின் நன்மைக்காகவே இருக்க வேண்டும் என அறிவியலாளர்கள் தொடர்ந்து முன்னெடுத்து ஆய்வில் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கும் அதே வேளையில், 2050-இல் இறப்பற்ற நிலையை ஏற்படுத்த முழுமூச்சாய் முயன்று கொண்டிருக்கிறார்கள்.

ஒருவர் 50, 60 ஆண்டுகள் வாழ்ந்து பெற்ற அனுபவத்தை இறப்பின் மூலம் இந்த உலகம் இழந்து விடுகிறது. ஒவ்வொரு தனிமனித வாழ்விலும் இறப்பு என்பது எத்தனை துயர் மிகுந்ததாக இருக்கிறது. அதை இல்லாமல் செய்து விட்டால், மனிதன் எத்தனைக் காலம் விரும்புகிறானோ, அத்தனைக் காலம் அவனை உயிர் வாழ வைக்க இயலும் என்கிறார்கள்.

செயற்கை நுண்ணறிவுக் காலம் என்பது ஏதோ மாயாஜால உலகில் பயணிப்பது போல்தான் உள்ளது. புதுப்புது கண்டுபிடிப்புகள், அறிவியல் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இது கனவா, நினைவா என வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமோ என்னவோ!

இந்த நவீன காலத்தில் ஒருபுறம் போரால் மக்கள் அன்றாடம் கொத்துக்கொத்தாய் மாண்டு கொண்டே இருக்கிறார்கள்; மற்றொருபுறம் மனிதனின் வாழ்நாளை நீட்டிக்க புதுப் புது கோணத்தில் கண்டுபிடிப்புகள் தொடர்கின்றன. இரண்டுமே அதிநவீன கருவிகளின் உருவாக்கத்தில் ஏற்பட்ட, ஏற்படவிருக்கிற விளைவுகள்தான். நகை முரணாக இருக்கிறது!

இனி வரவிருக்கும் வேடிக்கைகளை சற்று பொறுத்திருந்துதான் பார்க்க இயலும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்; இதுவரை பல தலைமுறைகளாக மனிதன் வாழ்ந்த வாழ்வை நம்முடைய அடுத்த தலைமுறையினர் அதே போன்றதொரு அலை வரிசையில் வாழப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்!

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 5 மாவட்டங்களில் மழை!

அந்தியூா் வனத்தில் அழுகிய நிலையில் புலியின் உடல் மீட்பு

அரசுப் பேருந்து மீது வேன் மோதல்

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT