சுமார் 37 லட்சம் மூத்த குடிமக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) சட்டம் 1952-இன்கீழ் 1995-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் ரூ.1,000 அல்லது அதற்குக் குறைவான ஓய்வூதியம் பெற்று வாழ்கின்றனர். இது மிகவும் குறைவான ஓய்வூதியத் தொகை.
உணவு, உடை, மருந்து உள்ளிட்டவற்றை இந்தக் குறைந்த தொகையை வைத்து எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவர்களுக்கு ஒரு முறையான குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். அவர்கள் உழைப்பதற்கு தகுதியுடன் இருந்த வாழ்நாளில் பெரும்பகுதியை செல்வத்தைப் பெருக்குவதற்கு செலவிட்டுள்ளனர்.
உழைக்கும் காலகட்டத்தில் பெரிய அளவில் பங்களிப்பைச் செலுத்தாமலும், உழைப்பின் பங்களிப்பு இல்லாமலும்கூட நாட்டின் பல இடங்களில் ஏழை மக்கள் இந்த 1,000 ரூபாயைவிட அதிகமான ஓய்வூதியத்தை சில இடங்களில் பெருகின்றனர். உதாரணமாக ஆந்திரம், தெலங்கானா அரசுகள் முதியோருக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.4,000 வழங்குகின்றன. மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வெகுசிறப்பான ஓய்வூதியத்தைப் பெற்று வருகின்றனர். இவர்கள் தவிர எம்.பி., எம்எல்ஏக்களும் ஓய்வூதியம் பெறுகின்றனர்.
சிலர் வெவ்வேறு பதவிகளை வகித்து அவை இரண்டிலும் இருந்தும் ஓய்வூதியம் பெறுகின்றனர். இந்த ஓய்வூதியங்கள் அனைத்துமே தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் இருப்பதைவிட அதிகமான குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உறுதி செய்கின்றன.
எனவே, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் ஓய்வூதியம் பெறுவோரும் ஒரு நியாயமான குறைந்தபட்ச ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு உரிமை உள்ளது. இந்தக் கோரிக்கையை எக்காரணம் கொண்டு நிராகரிக்க முடியாது. அவ்வாறு காரணம் தேடினால் அது நியாயமானதாகவும் இருக்காது.
இந்தத் திட்டத்தில் 5.39 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 81 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். எனவே, ஓய்வூதியத்தை உயர்த்தாமல் காரணங்கள் கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. அரசு நிர்வாகத்தின் இயலாமைதான் இதற்கு முதல் காரணமாக உள்ளது.
இந்த விஷயத்தில் மூன்று முக்கியத் தடைகள் உள்ளன. இந்த இபிஎஃப் ஓய்வூதியத் திட்டம் எந்த அளவுக்கு நிதிப் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதும், எந்த அளவுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்பதும் வரையறுக்கப்பட்டதாக உள்ளது. இந்த முறையில் ஓய்வூதியம் அதிகரிப்பதற்கான வாய்ப்பே இல்லை. இது மாற்றப்பட வேண்டிய அம்சமாகும்.
இரண்டாவது காரணம் ஒரு கணக்கியல் மதிப்பீட்டின் அடிப்படையில் உள்ளது. தற்போதைய இபிஎஃப் நிதித் தொகுப்பு மற்றும் எதிர்காலத்துக்கான நிதி திரட்டல் நடவடிக்கைகள் எதிர்காலத்துக்கும் போதுமானதாக இருக்குமா என்பது இபிஎஃப் விதிகளின்படி அவ்வப்போது மதிப்பீடு செய்யப்படுகிறது. 2019 மார்ச் 31 நிலவரப்படி பற்றாக்குறை இருப்பது தெரிய வந்தது.
மூன்றாவது ஓய்வூதியத் திட்டத்தைப் பொருத்தவரை, இப்போது ஒருவர் பங்களிப்பாக செலுத்தும் தொகை மற்றொருவருக்கு ஓய்வூதியமாக அளிக்கப்படுகிறது. கூடுதல் நிதி உதவி ஏதும் தேவையில்லாமல், இது ஒரு சுழற்சிபோல செயல்பட்டு வருகிறது. ஆனால், வேறு நிதியாதாரம் இல்லாமல் இது எந்த அளவுக்கு வெற்றிகரமாகச் செயல்பட முடியும் என்ற அச்சமும் உள்ளது.
இந்த மூன்றையும் வைத்துப் பார்க்கும்போது முதியோருக்கான சமூக பாதுகாப்பை வழங்குவது அரசின் பொறுப்பு என்பது, இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அவர்களின் ஊதியத்தில் பாதி அளவாவது ஓய்வூதியமாக அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களை குறைந்தபட்ச அடிப்படை வசதிகளுடன் வாழ வழி செய்ய முடியும். இது அரசு தவிர்க்கக் கூடாத கடமையாகும்.
நிதிப் பற்றாக்குறை, போதிய சாத்தியக்கூறு இல்லை போன்ற காரணங்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் ரூ.1,000-இல் இருந்து உயர்த்தப்படாததற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
மத்திய தொழிலாளர் நலத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே நாடாளுமன்றத்தில் தெரிவித்த தகவலின்படி, 2025 மார்ச் 31-இவ் இபிஎஃப் ஓய்வூதியத் திட்டத்தில் மொத்த முதலீட்டுத்தொகை ரூ. 9,92,689.56 கோடியாகும். இத்துடன் ஒப்பிடும்போது ஒவ்வோர் ஆண்டும் ஓய்வூதியமாக விடுவிக்கப்படும் தொகை மிகக் குறைவாகும்.
உதாரணமாக 2023-24-ஆம் ஆண்டில் ரூ.23,027.93 கோடி ஓய்வூதியமாக வழங்கப்பட்டுள்ளது. இது அந்த ஆண்டின் மொத்த முதலீட்டுத் தொகையில் 2.59% மட்டுமே ஆகும். இதுதவிர ஓய்வூதியமாக வழங்கிய தொகையைவிட இரு மடங்கு அதிகமாக ரூ.58,668.73 கோடி வட்டியாக கிடைத்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையான 5.39 கோடியில், தற்போதைய ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை 15% (சுமார் 81 லட்சம்) மட்டும்தான். அதே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் அதிகமாக புதிய ஓய்வூதியதாரர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
இது ஓய்வூதியமாக அளிக்க வேண்டிய தொகையை அதிகரிக்கும். ஆனால், நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் பெருமளவிலான தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தில் புதிதாக இணையவும் செய்கிறார்கள். எனவே, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆதாரமும் அதிகரிக்கவே செய்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் ஓய்வூதியச் செலவைவிட தொழிலாளர்கள் பங்களிப்பாக அளிக்கும் நிதி அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு மொத்த பங்களிப்புத் தொகை ரூ.71,780.41 கோடியாக இருந்தது. ஆனால், ஓய்வூதியமாக அளிக்கப்பட்ட தொகை ரூ.23,410.17 கோடி மட்டுமே. இதன் மூலம் ரூ.48,370.24 கோடி நிதி கூடுதலாகவே திரட்டப்பட்டுள்ளது.
இதில் கணக்கீட்டுப் பற்றாக்குறை என்று ஏதுமில்லை. ஒருவர் பங்களிப்பாக செலுத்தும் தொகை மற்றொருவருக்கு ஓய்வூதியமாக அளிக்க முடியும் என்பது தெளிவாகிறது. மற்றபடி ஓய்வூதியத்தை அதிகரித்தால் சிக்கல் எழும் என்பது தவறான கணிப்புதான் என்பது தெளிவாகிறது.
மூத்த குடிமக்களின் நலன்களைக் காக்கவும், தனது சமூகப் பொறுப்பை நிறைவேற்றவும் அரசு முன்வர வேண்டும். தேவையற்ற அச்சம் காரணமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியாளர்களுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் என்ற மிகக் குறைவான தொகையை மாற்றியமைக்க வேண்டும். அரசு ஊழியர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஓய்வூதியத்துக்கு அதிக நிதியைச் செலவிடும் அரசு, சாமானிய மக்களின் ஓய்வூதிய விஷயத்தில் மட்டும் தவறான கொள்கைகளைத் தொடர்வது ஜனநாயக விரோத, தன்னிச்சையான செயல்பாடாகவே உள்ளது.
குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிப்பது என்பது அரசுக்கு எந்த வகையிலும் பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்திவிடாது. தற்போது, மொத்தமுள்ள 81 லட்சம் ஓய்வூதியதாரர்களில் 78 லட்சத்துக்கும் அதிகமானோர் மாதம் ரூ.5,000-க்கும் குறைவாகவும், 58 லட்சம் பேர் ரூ.2,000-க்கும் குறைவாகவும் பெறுகின்றனர்.
குறைந்தபட்ச ஓய்வூதியத்தை தற்போதைய ரூ.1,000-லிருந்து ரூ.5,000-ஆக உயர்த்த, ரூ.46,918 கோடி தேவை. தற்போது வழங்கப்படும் மொத்த ஓய்வூதியமான ரூ.14,329 கோடியுடன் கூடுதலாக ரூ.32,589 கோடி தேவைப்படும். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூ.10,000 எனும் மிக நியாயமான தொகையாக உயர்த்த இதைவிட இரு மடங்கு தொகை தேவை. அரசு மனதுவைத்தால் இது ஒன்றும் மிகப் பெரிய தொகையல்ல.
இந்த உண்மைகளுக்கு அரசு உடன்படவில்லையென்றால், நீதிபதி தலைமையில் ஆணையத்தை நியமிக்கலாம். அவர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அடிப்படையில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ஆய்வு செய்து அதை எவ்வாறு சிறப்பாக மறுசீரமைப்பது என்பதைப் பரிந்துரைப்பார்கள். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு நியாயமான ஓய்வூதியம் நிர்ணயம் செய்யப்படும்.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி நாட்டின் மக்கள்தொகையில் 8.6% பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆவர். 2050-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை மக்கள்தொகையில் 20.8 சதவீதமாக அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அனைத்து தனியார் துறை தொழிலாளர்களும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் வருகின்றனர். எனவே, அரசு ஊழியர்களுக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தையும், பொறுப்புணர்வையும் இபிஎஃப் ஓய்வூதியதாரர்கள் விஷயத்திலும் காட்ட வேண்டும்.
அரசு தயவுசெய்து குறைந்தபட்ச ஓய்வூதியத்தைப் போதுமான அளவுக்கு உயர்த்த வேண்டும். கடைசியாக வாங்கிய ஊதியத்தில் பாதி அளவாவது ஓய்வூதியம் இருக்க வேண்டும். இது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்பதால் நிறுவனங்கள், அரசின் பங்களிப்பை திருத்தியமைக்க வேண்டும்.
இதை அரசு நிச்சயமாக செய்ய முடியும். அதற்கான அதிகாரமும், திறனும் அரசுக்கு உள்ளது. மேலும், நீங்கள் எதைச் செய்ய வேண்டுமோ அதைத் செய்துதான் ஆக வேண்டும். ஏனெனில் மூத்த குடிமக்களின் நலன் சார்ந்தது. மேலும் அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் முதன்மையான பொறுப்பு அரசுடையதுதான்.
கட்டுரையாளர்:
பொருளாதார நிபுணர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.