சிறப்புக் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரை - போடுமலை பெருங் கற்படைச் சின்னங்கள் - த. பார்த்திபன்

‘போடுமலை பெருங் கற்படைச் சின்னங்கள்’ குறித்து செய்தி வெளியாகியுள்ளது. அச்சின்னங்கள் குறித்த விரிவான செய்திகளும் விளக்கங்களும் இதோ

த. பார்த்திபன்

இன்றைய தினமணி (25.12.2015) நாளிதழில், ‘போடுமலை பெருங் கற்படைச் சின்னங்கள்’ குறித்து செய்தி வெளியாகியுள்ளது. அச்சின்னங்கள் குறித்த விரிவான செய்திகளும் விளக்கங்களும் இதோ –

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில் உள்ள காப்புக்காட்டுப் பகுதியான போடுமலையில், அண்மையில் பல பெருங் கற்படைச் சின்னங்கள் இருப்பது, மாவட்ட வன அலுவலா் திரு. S. இராமசுப்பிரமணியன் IFS, மருத்துவா் பழனி, தங்கமணி ஆசிரியா், அரவிந்தன் மற்றும் வனத்துறை அலுவலா்களின் நடைப்பயணத்தின்போது அறியப்பட்டன. இவற்றின் குணங்களையும் தொல்லியல் முக்கியத்துவத்துவம் குறித்த விவரங்களை என்னிடம் கேட்டனர்.

இவற்றை ஆய்வு செய்யும்போது, போடுமலையில் மூன்று வகை பெருங் கற்படைச் சின்னங்கள் உள்ளதை அறியமுடிகின்றது. ஒன்று “கல்திட்டை” (Dolmen) வகையினத்தையும், மற்றொன்று “கல்திட்டை போன்ற கல்லறை” (Dolmenoid Cist) வகையினத்தையும், மூன்றாவது “கல்வட்டம்” (Cairn Circle) வகையினத்தையும் சார்ந்ததாகும். இவை தம்முள் பல சிறப்பு குணங்களைக் கொண்டுள்ளன. இங்கு, கல்வட்டம் என்று குறிப்பிடப்படும் “உருளை வடிவ கல்வட்ட வகையினம்” (Barrel Style Cairn Circle Megalithic structure), இந்தியாவில் இதுநாள் வரை அறியப்படாததாகும்.

பெருங் கற்படைச் சின்னங்கள்

பெருங் கற்படைச் சின்னங்கள் என்பவை, பெருங் கற்காலப் பண்பாட்டுக் காலத்தை சார்ந்த மக்கள் தம் முன்னோர்களுக்காக எழுப்பியச் சின்னங்கள் ஆகும். இதன் காரணமாக, இச் சின்னங்கள் ‘பெருங் கற்படைச் சின்னங்கள்’ என்றும் அழைப்படுகின்றன. பெரிய பெரிய கற்கள், சமயங்களில் 15 முதல் 20 டன்னுக்கும் மேற்பட்ட எடை கொண்ட கற்கள், இவ்வகைச் சின்னங்களுக்குப் பயன்படுத்தப்பட்டமையால், இவை ‘மெகாலிதிக் மானுமென்ட்ஸ்’ என்று குறிக்கப்படுகின்றன. இதன் தமிழ் மொழியாக்கமே “பெருங்கல் சின்னங்கள்” ஆகும். இச்சின்னங்கள், ஈமச்சின்னங்கள் என்பதால் “பெருங் கற்படைச் சின்னங்கள்” என்றும் அழைக்கப்படுகின்றன.

புதிய கற்காலத்தை அடுத்து நிலவிய தனிக்குணங்கள் நிறைந்த பண்பாடாக இருப்பது கொண்டு, இது “பெருங்கல் பண்பாடு” என்றும் “பெருங் கற்படைப் பண்பாடு” என்றும் குறிக்கப்படுகிறது. இப்பண்பாடு நிலவிய காலம் “பெருங் கற்காலம்” என்றும் “பெருங் கற்படைக் காலம்” என்றும் குறிக்கப்படுகின்றது.

தென்னிந்தியாவைப் பொருத்த அளவில், இப்பண்பாடு நிலவிய காலகட்டத்தில் இரும்பு உலோகத்தின் பயன்பாடு வெளிப்பட்டிருப்பதால், உலக வரலாற்று வழக்குப்படி இக்காலப் பண்பாடு “இரும்புக் காலப் பண்பாடு” என்றும் அழைக்கப்படுகிறது. உண்மையில், பெருங்கல் பண்பாடு என்று குறிப்பிடப்படும் இக்காலகட்டத்தில், சிறுசிறு கற்கள்கூட வகைவகையான ஈமச் சின்னங்கள் உருவாக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிறுசிறு கற்கள் கொண்டு அளவில் பெரிய சின்னங்களை உருவாக்கியுள்ளனர். பாறைகளை வெட்டி எடுக்கும்போது சிதறி விழும் துண்டுக்கற்கள்கூட இவர்களது கைகளின் ஈமச்சின்னம் ஆகியுள்ளது. பாறை, மலைகளைக் குடைந்து அறைகளாக்கியும் ஈமச்சின்னங்களை உருவாக்கியுள்ளனர். கற்கள் எந்த வடிவில், எந்த அளவில் கிடைத்தாலும், அவற்றை மூத்தோர் நினைவுச் சின்னங்கள் அமைக்கவே இக்கால மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

போடுமலை சின்னம் 1 - கல்திட்டை

(போடுமலை - கல்திட்டை)

கல்திட்டைகள் (Dolmens), முழுச் சின்னமும் தரையின் மேற்பகுதியில் இருக்கும்படி அமைக்கும் வகையாகும். நான்கு பலகைக் கற்களையும் மூடுகள் ஒன்றும் கொண்டு இக்கல்திட்டை அமைக்கப்பட்டுள்ளது. (படத்தில் காட்சியளிப்பதில், முன்பகுதி பலகைக்கல் சேதப்படுத்தப்பட்டுள்ளது). பக்க பலகைக் கற்களும், மூடுகல்லும் சமகணம் கொண்டவைகளாக சீர்படுத்தி பயன்படுத்தியுள்ளனர். பலகைக் கற்கள் சாயாமல், நேராக நிற்க நான்கு புறமும் பக்கவாட்டில், பல அளவுகளைக் கொண்ட கற்கள் கொண்டு தாங்கு சுவர் போன்று மூடுகல் வரை அடுக்கப்பட்டுள்ளது. மூடுகல்லின் மேற்பகுதியிலும் கற்கள் அடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மூடுகல்லின் மேலும் சிறு துண்டுக் கற்களை அடுக்கி வைப்பது அல்லது குவித்து வைப்பதை, திருவேலங்காடு (செங்கல்பட்டு மாவட்டம்) நீலிக்கோயில் என்று அழைக்கப்படும் கல்திட்டையிலும் காணமுடிகிறது. இப்படி, சின்னங்களின் மேற்பகுதியில் கற்களை அடுக்கி அல்லது குவித்து வைப்பது துவக்கக்கால குழிவடிவ (Pit burials) ஈமச்சின்னத்தில் காணமுடிவதாகும். அதன் தொடர்ச்சியாகவே, கல்திட்டைகளின் மீதும் கற்களை அடுக்கி அல்லது குவித்து வைத்துள்ளனர் எனலாம்.

இப்பக்கச் சுவர் அமைப்பில் கீழ்ப் பகுதியில் தடிமனாகவும் மேலே செல்லச்செல்ல தடிமன் குறைவாகவும், பலகைக்கல்லை ஒட்டி சாய்வாகவும் அடுக்கப்பட்டுள்ளது. இதுபோலவே, மூடுகல் மீதும் அடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இக்கல்திட்டை முக்கோணத்தின் தோற்றத்தைப் பெற்றுள்ளது.

போடுமலை சின்னம்  2 - கல்திட்டை போன்ற கல்லறை

கல்லறையின் பாதிப் பகுதி தரைமட்டத்துக்குக் கீழும், மீதிப் பகுதி தரையின் மேலும் அமைக்கப்படும் சின்னங்கள், “கல்திட்டை போன்ற கல்லறை” (Dolmenoid Cist) என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.

போடுமலையில் உள்ள இவ்வகையினத்தைச் சார்ந்த சின்னம், கிழக்குப்புற இடுதுளையுடன், வாயில் அமைப்பும் கொண்டதாக உள்ளது. (படத்தில், வாயில் அமைப்பின் பலகைக் கல் ஒருபுறம் சேதமடைந்துள்ளது). நான்கு பலகைக் கற்கள் மற்றும் மூடுகல் கொண்டு இச்சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. கிழக்குப்புற பலகைக் கல்லில் வட்டவடிவ இடுதுளை ஒன்று தரைமட்ட உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இடுதுளைக்கு முன்பாக இதுதுளை மையத்தில் இருக்கும்படி வாயில் அமைப்பை தரும் சிறிய பலகைக்கல் நடப்பட்டுள்ளது.

(போடுமலை - கல்திட்டை போன்ற கல்லறை)

போடுமலை சின்னம் 3 - உருளை வடிவ கல்வட்டம்

புதிய, அரிய உருளை வடிவ கல்வட்டங்கள்

போடுமலையில் கண்டுபிடிக்கப்பட்ட உருளை வடிவ கல்வட்டங்கள் (Barrel Style Cairn Circle Megalithic structure), இந்தியாவில் இதுவரை அறியப்படாத அரியவகை பெருங் கற்படைச் சின்னம் ஆகும். மேலும், இது 3000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமைவாய்ந்த கட்டடக் கலையைப் பறைசாற்றுவதாகவும் உள்ளது.

உலக அளவில் இதுவரை அறியப்பட்டதிலேயே, எகிப்து நாட்டில் மட்டும்தான் இதன் உருளைத் தோற்றத்துக்கு இணையான ஒற்றுமை கொண்ட சின்னம் அறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. எகிப்து நாட்டில், நைல் நதிக்கரையில் நூபியா என்னும் பகுதியில் டூமாஸ் கிராமத்தில் அமைந்துள்ள ஈமச்சின்னங்கள் நிறைந்த பகுதியில், “சி குழு மக்கள்” (“C” Group people = இவர்கள் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை. இவர்கள் எகிப்தை தாயகமாக அல்லது பூர்வீகமாகக் கொண்டிராதவர்கள் என கருத்து உண்டு) எழுப்பியதாகக் கருதப்படும் ஈமச்சின்னங்கள் மட்டுமே, போடுமலையின் சின்னங்களின் வடிவத்திலும் குணத்திலும் ஒற்றுமையைக் கொண்டுள்ளன. இதனை நூபியா அகழாய்வு முடிவுகளில் (Indian Archaeology A Review 1961-62, pp. 66-70) இருந்து நன்கு அறியலாம். இவ்வாய்வு, நூபியா - டூமாஸ் அகழாய்வு என்றும் குறிக்கப்படும்.

நூபியா - டூமாஸ் அகழாய்வு

இந்தியத் தொல்லியல் அறிஞர்கள் அரிதாக மேற்கொண்ட வெளிநாட்டு அகழாய்வுகளில், 1960-61-ம் ஆண்டு டூமாஸ் கிராமத்தில் மேற்கொண்ட அகழாய்வு குறிப்பிடத்தகுந்தது. இங்குள்ள ஈமக்காட்டில், 119 ஈமச்சின்னங்கள் அகழாய்வு செய்யப்பட்டன. அகழாய்வுக்கு முன்னரே இந்தச் சின்னங்கள் பெரும்பான்மையும் சேதப்பட்ட நிலையில் காணப்பட்டன.

இந்த அகழாய்வு முடிவின்படி,

“டூமாஸ் ஈமச்சின்னங்களில் அகழ்ந்தெடுக்கப்பட்ட இடுபொருட்களின் குணங்கள், தென்னிந்திய பெருங் கற்கால இடுபொருட்களின் குணத்தை ஒத்திருப்பவை. குறிப்பாக, முழு கருப்பு மற்றும் கருப்பு-சிவப்பு மட்கலன்கள் மற்றும் சிவப்பு நிற மட்கலத் தாங்கிகள். இவற்றில் சில கீறல் குறியீடுகளும் இடம்பெற்றுள்ளன. கருப்பு மற்றும் கருப்பு-சிவப்பு மட்கலன்கள், சிவப்பு நிற தாங்கிகள் தென்னிந்திய பெருங் கற்காலத்தில் வாழ்ந்த தமிழர் பண்பாட்டுக்குரிய அடையாளமாகக் கருதப்படுவதாகும். கீறல் குறியீடுகளும் தமிழக ஈமச்சின்னங்களில் காணப்படுபவை போன்றே உள்ளன என்பதும் குறிப்பிட வேண்டியதாகும்.

மேலும், இந்த மட்கலன்களில் தீட்டப்பட்ட ஓவியங்களும் தென்னிந்திய குணங்களைக் கொண்டுள்ளன. (கருப்பு-சிவப்பு மட்கலம் ஒன்றில் தீட்டப்பட்ட பெண்களின் நாட்டியமாடும் ஓவியக் காட்சியானது, தென்னிந்தியப் பாறை ஓவியக் காட்சிகளின் குணத்துடன் உள்ளது கவனிக்கத்தக்கது. நூபியா சின்னங்களின் காலம் மு.பொ.ஆ. 1500 (கி.மு. 1500) என கணிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஒப்புமைகள் இருந்தாலும், தென்னிந்திய பெருங் கற்காலத்துடன் நூபியாவை ஒப்பிட மேலும் அகழாய்வுகள் மேற்கொண்டு சான்றுகள் திரட்டப்பட வேண்டியது அவசியம் உள்ளது என்றும், அதே சமயத்தில் தொடர்பு இல்லை என்று ஒதுக்கவும் முடியாது.

மேலும் அந்த அறிக்கை,

தென்னிந்தியாவில் காணப்படும் பெருங் கற்காலச் சின்னங்கள் மு.பொ.ஆ. 1000-க்கு முற்படாதவை (இக்காலக் குறிப்பு அன்றைய நிலையில் அறியப்பட்டதைக் கொண்டு குறிக்கப்பட்டதாகும்). ஆனால், நூபியாவின் சின்னங்கள் மு.பொ.ஆ. 1500 என்பதால், அப்பண்பாடு அங்கிருந்து மெல்ல மு.பொ.ஆ. 1000 அளவில் தென்னிந்தியாவுக்குப் பரவியது” என்ற கருத்தை முன்வைக்கிறது.

இந்நிலையில், போடுமலைப் பகுதியில் நூபியாவை ஒத்த குணமுடைய ஈமச்சின்னம் அறிய முடிவது ஆச்சரியங்களை அளிப்பதுடன், மேலும் ஆய்வுகளை வேண்டுகின்றது. தொடர்ந்து இங்கு மேற்கொள்ளப்படும் அகழாய்வே, இவற்றுக்கு இடையிலான ஒற்றுமை வேற்றுமைகள் குறித்து கூடுதல் தரவுகளை வழங்கும் எனலாம்.

வடிவ ஒற்றுமை

நூபியா மற்றும் போடுமலை பெருங் கற்படைச் சின்னங்கள், சிறுசிறு செவ்வகத் துண்டுக்கற்களைப் பாறைகளில் இருந்து வெட்டி எடுத்து, அவற்றை எந்தவித இணைப்புச் சாந்து இன்றி ஒன்றன் மீது ஒன்றாக உருளை வடிவில் உயரமாக அடுக்கிவைத்து உருவாக்கப்படுவதாகும். இந்த உருளை வடிவம், ஈமக்குழியைச் சுற்றி அமைக்கப்படுவதாகும். மூடுகற்களும் கொண்டிருப்பதாகும்.

3000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டடக் கலை

துண்டுக்கற்கள் கொண்டு வட்டவடிவில் ஒன்றின் மீது ஒன்று அடுக்கிவைத்து உருளைபோல் உருவாக்கப்பட்டிருக்கும் இவ்வடிவம், அரிய கட்டக் கலையின் தொழில்நுட்பத்தை அடையாளப்படுத்துகிறது. போடுமலையில் சுமார் ஐந்து அடி முதல் ஆறு அடி உயரம் கொண்ட இவ்வகை உருளை வடிவ கல்வட்டச் சுவர் அமைப்பு கொண்டவை அடையாளம் காணப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. கற்களின் கரடுமுரடான மேற்பரப்புக் குணத்தையே பிடிமானமாகக் கொண்டு, இணைப்புச் சாந்துக் கலவை பயன்படுத்தாமல், ஒன்றின் மீது ஒன்று வைத்து உருளை அமைப்பில் எழுப்பியுள்ள நம்மூதாதையரின் தொழில்நுட்பம் குறித்து வியப்படையாமல் இருக்க முடியாது.

நூபியா - டூமாஸ் அகழாய்வு ஒரு பார்வை

நூபியா – டூமாஸில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு, தென்னிந்திய குணங்களுடன் நெருங்கிய தொடர்புள்ளமை குறித்து மேலே விவரிக்கப்பட்டது. அகழாய்வின் மூலம் வெளிப்பட்ட அதன் குணங்களைக் காண்போம்.

அமைப்பு

(டூமாஸ் – உருளை கல்வட்டச் சின்னம்)

நூபியா - டூமாஸில் மொத்தம் 119 சின்னங்கள், அகழாய்வு செய்து வெளிக்கொணரப்பட்டன. இவற்றின் புதைக்குழிகள், தரையில் 1.5 மீட்டர் முதல் 2.0 மீட்டர் விட்டத்தில் 1 முதல் 1.5 மீட்டர் ஆழத்தில் தோண்டப்பட்டிருக்கின்றன. இந்த ஈமக்குழியைச் சுற்றி செவ்வகமான துண்டுக்கற்கள் கொண்டு வட்ட வடிவில் சுற்றுச்சுவர்போல் இணைப்புச் சாந்துக் கலவை ஏதுமின்றி உயரமாக எழுப்பப்பட்டுள்ளன. இந்த அமைப்பு இதற்கு உருளை வடிவத்தைத் தருகிறது. ஈமக் குழியில் நீத்தோரின் முழு உடல் மற்றும் இடுபொருட்கள் வைத்து, தோண்டிய மண்ணுடன் நைல் நதிக் கரை மண்கொண்டு நிரவப்பட்டு, மூடுகல் அல்லது கற்கள் கொண்டு மேல்பகுதி மூடப்பட்டதாக அமைக்கப்பட்டுள்ளன. தரைமட்டத்தில் இருந்து இவற்றின் உயரம் சாராசரியாக 0.50 மீட்டர் ஆகும்.

பிற வகைகள்

நூபியா – டூமாஸில், பெரும்பான்மையாக உருளை வடிவச் சின்னங்கள் உள்ளன. வேறு இருவகைச் சின்னங்களும் அங்கு அறிப்பட்டுள்ளன. அவை வருமாறு –

(டூமாஸ் - கற்குவை ஈமச்சின்னம்)

(டூமாஸ் - செவ்வக கல்பதுக்கை)

முன்னர் விவரித்த உருளை வடிவச் சின்னங்கள் தவிர, மேற்கண்டவாறு ஈமக்குழி மீது கற்களை குவித்து வைக்கும் கற்குவை வகைச் சின்னம் சிலவும், மூடுகல்லுடன் செவ்வக வடிவிலான கல்பதுக்கை வகைச் சின்னம் ஒன்றும் காணப்படுகின்றன.

இடுபொருட்கள்

டூமாஸ் கல்லறைகளில், இடுபொருட்களாக அகழ்ந்தெடுக்கப்பட்டவை பெரும்பான்மையும் தென்னிந்திய குணத்துடன் இருப்பது முன்னர் கூறப்பட்டது.

முதல் மட்கல கிண்ணத்தில் இடம் பெற்றுள்ள நாட்டியக்காட்சி, தமிழகத்தில் உள்ள பாறை ஓவியத்தின் குணத்துடன் உள்ளது. இதனைப் போன்ற மனித வடிவச் சித்தரிப்பை, இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த மயிலாடும்பாறை என்ற இடத்தில் உள்ள பாறை ஓவியத்திலும் காணமுடிகிறது.

ஒற்றுமை வேற்றுமைகள்

நூபியா / டூமாஸ் உருளை வகைச் சின்னங்களுக்கும் போடுமலை சின்னத்துக்கும் உள்ள ஒற்றுமை வேறுமைகளையும் அறியவேண்டியது அவசியமாகிறது.

1. டூமாஸ் உருளை வடிவச் சின்னங்கள், செதுக்கப்பட்ட செவ்வக துண்டுக் கற்கள் (Dressed – rubble Stones) கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. போடுமலைச் சின்னங்கள், கரடுமுரடான குறிப்பிட்ட வடிவம் கொண்டிராத கற்கள் (rough and undressed Stones) கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

2. டூமாஸ் உருளை வடிவச் சின்னங்கள் சராசரியாக 0.50 மீட்டர் வரை மட்டுமே உயரம் கொண்டவை. 0.5 மீட்டருக்கும் கூடிய உயரம் கொண்டவையும் அளவிடப்படுள்ளன. (பெரும்பான்மையான சின்னங்கள், அகழாய்வுக்கு முன் சேதப்பட்ட நிலையில் காணப்படுவதால், உயரம் கூடிய சின்னங்களும் இருந்திருக்கும் எனக் கருதலாம்). ஒப்பிடுகையில், போடுமலை சின்னங்கள் உயரம் கூடியவை. இவை 5, 6 அடிகள் வரை உயர்த்தப்பட்டுள்ளன.

3. டூமாஸ் சின்னங்களில் இரும்புப் பொருட்கள் கண்டெடுக்கப்படவில்லை. ஆனால், தென்னிந்திய பெருங் கற்காலச் சின்னங்கள் பொதுவாக இரும்புப் பொருட்களைக் கொண்டிருப்பவை. இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்துபவை.

4. டூமாஸில் முழு உடலும் புதைக்கப்பட்ட தன்மையைக் காண்கிறோம். தென்னிந்திய ஈமச்சின்னங்களில், சில எலும்புத் துண்டுகள் மட்டும் காணப்படும்.

5. மட்கல இடுபொருட்களில் முழு கருப்பு, கருப்பு-சிவப்பு நிறங்கள் கொண்டிருப்பதை, இரு இடங்களின் பொதுத்தன்மை எனலாம்.

6. டூமாஸ் மட்கலன்கள் சில பெற்றிருக்கும் கீறல் குறியீடுகள், தமிழகக் கீறல் குறியீடுகள் போன்றே உள்ளன. (டூமாஸ் கீறல் ஐரோப்பிய / ஆப்பிரிக்க எழுத்து வடிவங்களுடன் தொடர்புடையதாகக் கருதமுடியாதவை எனலாம்).

பிரம்மகிரி கல்பதுக்கை வடிவம்

(பிரம்மகிரி கல்பதுக்கையில் உருளை வடிவ பக்கத்துணை சுவர் அமைப்பு)

கர்நாடகாவில் உள்ள பிரம்மகிரியில் அகழப்பட்ட கல்பதுக்கை (கல்பதுக்கை என்பது நிலமட்டத்துக்குக் கீழ் அமைக்கப்படும் கல்லறை என்பது அறிந்ததே) ஒன்றில், நான்கு பலகைக் கற்கள் கொண்டு ஸ்வஸ்திக் வடிவில் இடுதுளை கொண்டு அமைக்கப்பட்ட கல்லறையைச் சுற்றி பலகைக் கற்கள் சரிந்து விழாமல் இருக்க அமைக்கப்பட்ட வட்ட வடிவ சுற்றுச்சுவர் அமைப்பு, நமக்கு நூபியாவை நினைவுபடுத்தும் அமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால், இங்கு எழுப்பப்பட்ட நோக்கம், நூபியா மற்றும் போடுமலையின் நோக்கத்தில் இருந்து முற்றிலும் மாறுபாடு கொண்டதாகும். மேலும், பிரம்மகிரி கட்டுமானம் நிலத்தில் கீழ் அமைக்கப்பட்டிருப்பதால், அது பார்வைக்குப் புலனாகாது. அகழாய்வில் மட்டுமே வெளிப்படும். நூபியா மற்றும் போடுமலை சின்னங்கள் தரைக்கு மேல், யாவரும் எளிதில் காணத்தக்கவாறு அமைப்பட்டிருப்பவை ஆகும்.

நீலகிரி சேந்து கிணறு வடிவம்

1837-ம் ஆண்டு நீலகிரி மலைத்தொடரில் பிரிக்ஸ் (Breeks. J.W) என்பவர், தாம் கண்ட வித்தியாசமான சேந்து கிணறு (Draw well structure) வடிவப் பெருங் கற்படைச் சின்னம் குறித்து விவரிக்கிறார். அந்த அமைப்பும் கற்துண்டுகள் கொண்டு அமைக்கப்பெற்ற வட்டவடிவிலான கட்டுமானத்தைக் கொண்டது. நீலகிரி சின்னமானது, மூடுகள் கொண்டிராத மேற்புறம் திறந்த அமைப்பை உடையது என அவரது விவரிப்பில் இருந்து அறியமுடிகிறது.

பெருங் கற்படைச் சின்னங்களைப் பொருத்த அளவில், தென்னிந்தியா மற்றும் ஐரோப்பிய, மேற்கு ஆசிய நாடுகளின் உள்ள சின்னங்களின் தோற்றம் மற்றும் கட்டடக் கலையின் ஒப்புமைகள் குறித்து மட்டும்தான் விவாதித்து வருகின்றோம். அகச் சான்றாக, இடுபொருட்களின் ஒப்புமை டூபியாவில் இருந்து மட்டும்தான் நாம் அறியக் கிடைத்துள்ளது. இந்த அகச்சான்று ஒப்புமை குறித்து நாம் அறியவந்து ஏறத்தாழ 55 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால், மேலாய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இத்திசையில் நமது ஆய்வுகள் விரியும்போது, தென்னிந்தியாவின் குறைந்தது 3500 - 4000 வருடங்களின் பண்பாட்டு வரலாற்றின் இன்றியமையாத பக்கங்களை அவை வழங்கும் எனத் துணியலாம்.

தகடூர் நாட்டின் பெருமைக்குரிய சின்னங்கள்

பண்டைய தகடூர் நாட்டுப் பகுதிக்குள், உலகளவு கொண்டு பார்க்கும்போது, ஸ்டோன்ஹென்ஞ் (Stonehenge) வகை பெருங் கற்கால ஈமச்சின்னம் மட்டுமே அறியமுடியாதுள்ளது. மற்றபடி, கேரளாவின் குடைவறைக் கல்லறை, தொப்பிக்கல், குடைக்கல் வகைகள் தவிர, தென்னிந்தியாவில் காணப்படும் பிற அனைத்து பெருங் கற்படை வகையினங்களும் இங்கு காணப்படுவதுடன், வேறு எங்கும் காணப்படாத “மல்லச்சந்திரம் வகை கல்திட்டை”, “ஆதனூர் வகை கல்வட்டம்” வகைகள் மற்றும் “கீழ்செப்புலி வகை கல்திட்டை” (இன்றைய திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம்) ஆகியவை இப்பகுதியில்தான் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றுடன், தற்போது போடுமலைச் உருளை வடிவச் சின்னத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

மல்லச்சந்திரம் கல்திட்டைகள்

தகடூர் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பவை, மல்லச்சந்திரம் வகை கல்திட்டைகள் ஆகும். இங்கு ஐந்து வகையான கல்திட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் சிறப்பான கட்டடக் கலையைக் கொண்டிருக்கின்றன.

(மல்லச்சந்திரம் வகை கல்திட்டைகள்)

ஆதனூர் கல்வட்டங்கள்

சங்க இலக்கியம் சிறப்பித்துக்கூறும் “பரல் உயர் பதுக்கை” வடிவம் இது எனலாம். இதன் புற அமைப்பு கொண்டு, இதனை “கற்குவி கல்வட்டம் எனலாம்”. வட்ட வடிவில் கற்கள் கொண்டு அமைக்கப்படும் எல்லா வகையினமும் “கல்வட்டம்” என்னும் ஒரு பொதுப் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது என்பது முன்னர் குறிப்பிடப்பட்டது.

ஆதனூர் வகை கல்வட்டம் மற்றொரு அரிய கட்டுமானத்தை வெளிப்படுத்துவதாகும். இவ்வடிவத்தில் இயற்கையாகக் கிடைக்கும் பெரிய பெரிய உருளை அல்லது நீளுருளைக் கற்களை வட்டவடிவில் நட்டு, அதன்மேல் உட்புறம் நிரவலாகவும் அடர்த்தியாகவும் சிறுசிறு கற்கள், மணல், மண் கொண்டு உயரமாக அடுக்கிவைத்து உருவாக்குவதாகும். பொதுவாக, குவியலாகக் கொட்டி ஈமச்சின்னங்களை உருவாக்கி இருப்பதை பல இடங்களில் காணமுடிகிறது. ஆனால், வெளிப்புறத்தில் நேர்த்தியாக கீழ்ப்புறத்தில் பெரிய கற்கள், மேலே செல்லச்செல்ல கனத்தில் சிறிய கற்கள் பயன்படுத்தி ஆதனூர் கல்வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.

(ஆதனூர் வகை கல்வட்டங்கள்)

கீழ்செப்புலி வகை கல்திட்டை

செங்கம் வட்டத்தில், கீழ்செப்புலி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்பதுக்கைகள் அதன் சிறப்பான வடிவமைப்பாலும், தொழில்நுட்பத்துக்காகவும் புகழ்பெற்றவை. கீழ்செப்புலி வகை கல்திட்டைகள், செவ்வக வடிவ துண்டுக் கற்களை ”கோட்டை மதில்” போன்று அடுக்கி அமைப்பதாகும். கீழ்செப்புலி வகையினத்தில், கல்திட்டைகளுக்கு மதிலாக மூன்று புறங்களில் முழுமையாகவும், நான்காவது புறம் திறப்புகள் கொண்டும், புறங்களில் மட்டுமல்லாது, மூடுகலின் மேல்பகுதியிலும் துண்டுக்கற்கள் அடுக்கிவைத்து இவ்வடிவம் உருவாக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. பார்வைக்கு இவை ஒரு அறை அமைப்பை அல்லது காவல் மாடத்தின் அமைப்பை நினைவுபடுத்துவதாக உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கத்தாகுறிச்சியில் காசநோய் எதிா்ப்பு வார உறுதிமொழி

நகை திருட்டு வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

பண மோசடி வழக்கு: 3 ஆண்டுகள் சிறை தண்டனை

அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை மாா்ச் 3-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT