ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் செய்வது மலிவு அரசியல்!
இன்று உலகளவில் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு விஷயம் “ரஃபேல் ஒப்பந்தம்”. இந்த ஒப்பந்தத்தில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது என்பது போன்ற தோற்றத்தை காங்கிரஸ் கட்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இன்று உலகளவில் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு விஷயம் “ரஃபேல் ஒப்பந்தம்”. இந்த ஒப்பந்தத்தில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது என்பது போன்ற தோற்றத்தை காங்கிரஸ் கட்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் போர் விமானம் வாங்குவது தொடர்பாக 2007ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக 2012ஆம் ஆண்டு பிரான்ஸிடமிருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பேச்சுவார்தை நடைபெற்றது. பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனத்திடமிருந்து 18 பறக்கும் நிலையிலான விமானங்களை வாங்குவது என்றும், 108 விமானங்களை டஸால்ட் நிறுவன உதவியுடன் இந்திய எச்ஏஎல் நிறுவனத்தில் தயாரிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், எந்த முடிவும் எட்டப்படவில்லை.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 2016ல் பாஜக அரசு புதிய ஒப்பந்தம் செய்தது. அதன்படி 36 விமானங்களை பறக்கும் நிலையில், வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து உதிரி பாகங்கள் தயாரிப்பது தொடர்பாக அனில் அம்பானியின் நிறுவனத்துடன் டஸால்ட் நிறுவனம் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்பந்தமிட்டது. அம்பானி என்ற பெயரைக் கேட்டவுடனேயே ஒப்பந்தத்தில் முறைகேடு, விலை விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூக்குரல் எழுப்பியது. ‘காங்கிரஸ் பேசியதைவிட குறைந்த விலைக்கே ஒப்பந்தமிடப்பட்டுள்ளதாகவும் நாட்டின் பாதுகாப்பு கருதி விலையை வெளியிடவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் இந்தியாவிற்கு வந்த போது, “ரஃபேல் ஒப்பந்தத்தில் ஏதாவது ரகசிய விதி ஏதாவது இருக்கிறதா என்று ராகுல் காந்தி கேட்டாராம். “அது போல எதுவும் இல்லை. இந்திய அரசு வெளியிட வேண்டுமென்றால், வெளியிடலம்” என்றாராம் பிரான்ஸ் அதிபர். ராகுல் காந்தி இதோடு நிற்கவில்லை. நாடாளுமன்றத்தில் ரஃபேல் பற்றி பெரிய சொற்பொழிவே நடத்தினார்.
ஜுலை 20 அன்று பிரான்ஸ் அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டது. “ராகுல் காந்தி அவர்களின் நாடாளுமன்ற உரையை கேட்டோம். பிரான்ஸும் இந்தியாவும் 2008ல் ரகசிய ஒப்பந்தம் தொடர்பாக ஒரு முடிவெடுத்தோம். அதன்படி இரு தரப்பும் ஒப்பந்தங்களில் உள்ள வரையறுக்கப்பட்ட விவரங்களை (Classified Information) வெளியிடக் கூடாது என்றும் அது பாதுகாப்பு மற்றும் உபகரணங்களை இயக்குவதிலும் பல சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த விதி 23 செப்டம்பர் 2016ல் ஒப்பந்தம் செய்யப்பட்ட 36 விமானங்கள் மற்றும் அதில் பொறுத்தப்பட்டிருக்கும் ஆயுதங்கள் வாங்குதல் தொடர்பான ஒப்பந்தத்திற்கும் பொருந்தும்', என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.
ஒரு பொறுப்பான கட்சி அடுத்த நாட்டு அதிபரிடம் இப்படி கேள்வி எழுப்பலாமா? இந்திய மானத்தை மட்டுமல்ல பிரான்ஸ் அதிபரின் நம்பகத்தன்மையையும் கேள்விக் குறியாக்கிவிட்டது. ஏதாவது சொல்லி ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே ராகுல் காந்தியின் குறிக்கோளாக இருந்திருக்கிறது. இதை உறுதி செய்திருக்கிறது அவருடைய பின்வரும் பேச்சுக்கள்.
அரசு மீது ராகுல் காந்தி சுமத்தும் குற்றச்சாட்டு 560 கோடி ரூபாய் விமானம் எப்படி 1600 கோடியானது என்பதுதான். அவர் சொல்லும் இந்த கணக்கு சரியானதா? இதை யாரிடம் கேட்பது? அவரிடமே கேட்போமே!
ஏப்ரல் 29ல் டெல்லியில் நடந்த ‘ஜன் ஆக்ரோஷ்' ஊர்வலத்தில், ‘மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் ரஃபேல் விமானத்தின் விலை 700 கோடி ரூபாய். ஆனால், தற்போது மோடி அதை 1500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமிட்டிருக்கிறார், அதாவது இரண்டு மடங்காக', என்றார். கிட்டத்தட்ட இதே ஒப்பந்த தொகையை அடுத்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களில் குறிப்பிட்டார். மே 3ம் தேதி, கர்நாடகா, பீதர் நகரில் நடைபெற்ற ஊர்வலத்திலும் இதையே குறிப்பிட்டார்.
ஜுலை 20 அன்று நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பேசிய ராகுல் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியில் 520 கோடி ரூபாய்க்கு பேசப்பட்ட விலை, மோடியின் பிரான்ஸ் பயணத்திற்கு பிறகு 1600 கோடியாக உயர்ந்துவிட்டதாக பேசினார்.
அடுத்த சில நாட்களில் ராய்பூரில் நடந்த ஊர்வலத்தில் பேசும் போது, காங்கிரஸ் ஆட்சியில் 540 கோடிக்கு பேசப்பட்டதாக தெரிவித்தார்.
அதுநாள் வரை ஒரு கூட்டத்திற்கும் மற்றொரு கூட்டத்திற்கும் இடையே விலையை மாற்றிப் பேசிய ராகுல், ஆகஸ்ட் 11ம் தேதியன்று ஒரே கூட்டத்தில் இரண்டு வேறுபட்ட விலையை தெரிவித்தார். முதலில் 520 கோடி என்றார். அடுத்த இரண்டு நிமிடங்களில் 540 கோடி என்றார்.
ஐயா ராகுல் அவர்களே! உங்களுக்கு பாஜக அரசு செய்த ஒப்பந்த விலைதான் தெரியாது. பரவாயில்லை, காங்கிரஸ் அரசு என்ன விலைக்கு ஒப்பந்தம் பேசியது என்று கூடவா தெரியவில்லை? இது அரசு மீது சேற்றை வாறி இறைக்கும் உங்கள் சிந்தனையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அதுமட்டுமல்ல, மக்களிடம் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், அவர்கள் நம்பி விடுவார்கள் என்று நினைப்பு உங்களுக்கு அதிகம் இருக்கிறது.
இந்த நிலையில் டிசம்பர் 14 அன்று ரஃபேல் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. “ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான். மேலும், ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட முடியாது”, என்று சொல்லி யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி, பிரசாந்த் பூஷன் ஆகியோர் தொடர்ந்த மனுக்களையும் தள்ளுபடி செய்தது. யஷ்வந்த் சின்ஹாவும், அருண்ஷோரியும் மோடி தலைமையை பிடிக்காமல் வெளிவந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிடிக்காதவர்கள் எதைச் செய்தாலும் “ஈரை பேனாக்குவேன், பேனை பெருச்சாளியாக்குவேன்” என்று சொல்வது சரியல்ல.
காங்கிரஸ் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. சில தவறுகளை சுட்டிக்காட்டியது. மத்திய அரசு தீர்ப்பில் மேலும் தெளிவை ஏற்படுத்தும் விதத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டியது. இதையும் குறை சொல்லியது காங்கிரஸ். எதிர்கட்சி எதிரிக்கட்சியாகிவிட்டது. அவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. நியாயமான எதிரியை நியாயமான போர்த் தந்திரங்களால் வீழ்த்தலாம். நியாயமில்லாத எதிரியை எப்படி வேண்டுமானாலும் வீழ்த்தலாம். அதெப்படி என்று கேட்கிறீர்களா? இந்தக் கதையை படிப்போம்.
ஒரு அரசன். சாதுவை சந்தித்தான். ‘சாதுவே! நாளை நடப்பதை இன்றே தெரிந்து கொள்ளும் சக்தியை எனக்கு வரமாக கொடுங்கள்', என்று வேண்டினான். வரத்தை கொடுத்தார் சாது. அரசனுக்கு மகிழ்ச்சி. சாது பேசினார்.
‘அரசே! கொடுத்த வரத்திற்கு ஒரு நிபந்தனையும் உண்டு. அதாவது, நீ தெரிந்துகொண்டதை யாரிடமும் சொல்லவும் கூடாது, அதற்கு பதில் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் உன் தலை வெடித்து சிதறும்', என்று எச்சரித்தார் சாது.
‘சாதுவே! எல்லாவற்றையும் முன்னரே தெரிந்து கொள்வது வரம். தெரிந்த பின் அதற்கு பதில் நடவடிக்கையாக ‘எதுவுமே செய்யக் கூடாது', என்பது சாபம். இது வரமா? சாபமா?' என்று கேட்டான் அரசன். சாது சிரித்தபடியே நகர்ந்தார்.
அந்த நாட்டில் ஒரு புரட்சிக்காரன் இருந்தான். அரசன் பெற்ற வரத்தை பயன்படுத்தியே அரசனை அழிப்பது', என்று முடிவு செய்தான். நேராக மக்களிடம் சென்றான்.
‘மக்களே! நாளை நம்ம ஊரில் இருக்கும் சத்திரம் இடிந்து விழப்போகிறது. அங்கு தங்கியிருப்பவர்கள் இறந்து போவார்கள். இது அரசனுக்கு தெரியும். நான் சொல்வது உண்மையா என்பதை அரசனிடமே கேளுங்கள்', என்று மக்களை தூண்டிவிட்டான். அதோடு மட்டுமில்லாமல் சத்திரத்து கூரையை இடிப்பதற்காக தனது ஆட்களை ரகசியமாக அனுப்பினான்.
‘ஆம்! கூரை இடிந்து விழும்', என்று அரசன் கூறினால், அரசன் தலை வெடித்து இறந்து போவான். ‘இடிந்து விழாது' என்று சொன்னால், என் ஆட்கள் சத்திரத்து கூரையை இடிப்பார்கள். தன் தலையை காப்பாற்றிக்கொள்ள அரசர் பொய் சொல்லிவிட்டார். உண்மையை மறைத்துவிட்டார்', என்று மக்களுக்கு அரசன் மீது கோபம் வரும்.
மக்களின் நம்பிக்கையை இழப்பான் அரசன். ஒழிந்தான் அரசன்', என்று கணக்குப் போட்டான் புரட்சிக்காரன்.
மக்கள் அரண்மனை வாயில் முன் கூடினர், ‘நாளை சத்திரம் இடிந்து விழுமா', என்று கேள்வி எழுப்பினார்கள். அரசன் யோசித்தான்.
‘மக்களே! கவலைப்படாதீர்கள். இடிந்து விழாது', என்று சொன்னான் அரசன். மக்கள் மகிழ்ச்சியோடு கலைந்து சென்றனர். திடீரென்று எழுந்தான் அரசன்.
‘மக்களே! . . . . மக்களே! என்று பதற்றத்தோடு கூப்பிட்டான். மக்கள் மீண்டும் கூடினர்.
‘மக்களே! ஒரு சின்ன திருத்தம். “இடிந்து விழாது”, என்று மட்டுமே சொன்னேன். “இடித்து வீழ்த்தப்படாது”, என்று சொல்லவில்லை', என்று சொல்லிவிட்டு புறப்பட்டான்.
சின்ன திருத்தம் பிரச்னையின் விபரீதத்தை மக்களுக்கு உணர்த்தியது. சத்திரத்தை நோக்கி வேகமாக ஓடினார்கள். சத்திரத்தை இடிப்பதற்காக கையில் கடப்பாரையோடு நின்றிருந்தவர்களை அடித்து உதைத்தனர். அதே நேரத்தில் அரசன் தலை வெடித்து சிதறும் என்று காத்திருந்தான் புரட்சிக்காரன். அரசன் தலை வெடிக்கவில்லை. வெறுத்துப் போன புரட்சிக்காரன் சாதுவை சந்தித்தான்.
‘சாதுவே! உங்கள் வரமும் அதன் நிபந்தனையும் பொய்த்துப் போய்விட்டதே! அரசன் தலை இன்னமும் வெடிக்கவில்லையே!', என்று கேட்டான் புரட்சிக்காரன்.
‘சத்திரம் இடித்துத் தள்ளப்படுவது தடுக்கப்படவேண்டும் என்பது விதி. அதாவது நடக்க வேண்டிய விஷயம். அதைப் பற்றி அரசன் ஏதும் சொல்லவில்லை. இடித்துத் தள்ளுவதற்கும், இடிந்துவிழுவதற்கும் வித்தியாசங்கள் உண்டு. மக்களின் கேள்வி இடிந்து விழுவதைப் பற்றியது. இடிந்து விழுந்தால்தான் அது நிகழ்வு. எந்த மாற்றமும் இல்லாத நிலையை நிகழ்வாக கருதமுடியாது. அதனால் அரசன் தலை வெடிக்கவில்லை', என்று சொன்னார் சாது. அமைதியாக நின்றான் புரட்சிக்காரன். தொடர்ந்து பேசினார் சாது.
‘விதிப்படி நடக்கும் விஷயங்களுக்கு கட்டுப்படும் வாய்மை, சதிப்படி நடக்கும்போது கட்டுப்படுவதில்லை. விதிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சதிக்கு கொடுக்க வேண்டியதில்லை. சதியை முறியடிக்க எதை வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். சதியை விதியாக்க நினைப்பதும், விதியை சதியாக்க நினைப்பதும் அதற்கான பலனை கண்டிப்பாகத் தரும். சதியும் விதியில் வரும், விதியும் சதியின் வடிவில் வரும். புத்திசாலி வில்லன் சதியை விதியோடு இணைப்பான். புத்திசாலி நல்லவன் சதியை சதியோடும், விதியை விதியோடும் பிரிப்பான். சதி வழி நிற்பவர்களுக்கு இது புரியாது. விதி வழி நிற்பவர்கள் புரிந்துகொள்வார்கள். இப்ப தெளிவா புரிஞ்சிருக்குமே!' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது. புரட்சிக்காரனுக்கு எதுவுமே புரியவில்லை. தலையை பிய்த்துக்கொண்டு நடந்தான். நேர்மையான அரசனை இண்டு இடுக்குகளில் நுழையச்செய்த பெருமை புரட்சிக்காரனைச் சாரும். இண்டு இடுக்கென்ன! சந்து சாக்கடையாக இருந்தாலும் சரி, நியாயத்தை நிலைநாட்ட வேண்டுமென்றால் இறங்கித்தான் ஆகவேண்டும்.
இந்தக் கதையில் வரும் அரசனைப் போலத்தான் பிரதமர் மோடி செயல்படுகிறார். கொடுக்கப்பட்ட வரையறையைத் தாண்டி விஷயங்களை வெளியில் சொல்ல முடியவில்லை. அதையே பலவீனமாக எதிர்கட்சிகள் நினைக்கின்றன. மக்கள் மனத்தை விஷமாக்க முயற்சிக்கின்றனர். இதில் வெற்றி பெற “சின்னத் திருத்தங்கள்” அவசியம் என்றால், அதையே செய்துவிட்டுப் போகலாம். கடந்த நான்கரை ஆண்டுகளாக எந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத பாஜக அரசை, பாதுகாப்பு காரணங்கள் கருதி வெளியில் சொல்ல முடியாத விஷயங்களை ஊழல் போல சித்தரிப்பது மிக மோசமான அரசியல். இது தவறான முன்னுதாரணமாகும்.
ரஃபேல் நிறுவனத்தின் இந்திய கூட்டு நிறுவனமாக பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோ நாடிகல் நிறுவனத்தை (எச்ஏஎல்) தேர்வு செய்யாமல், அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
எச்ஏஎல் நிறுவனம் ஏற்கனவே கொடுத்த பணிகளையே இன்னமும் முடிக்கவில்லை. இந்த நிலையில் ரஃபேல் உதிரி பாகங்களை தயாரிக்கும் பணியை கொடுத்தால் உரிய காலத்தில் அதனால் பணிகளை முடித்துக் கொடுக்க முடியாது. மேலும் எச்ஏஎல் நிறுவன தயாரிப்புக்கு டசால்ட் நிறுவனம் உத்திரவாதம் அளிக்க முன்வரவில்லை', என்று மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதை ஏற்க காங்கிரஸ் தயாராக இல்லை.
ஆனால் டிசம்பர் 14 அன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான 12 பேர் கொண்ட பார்லிமெண்ட் குழு ஒரு அறிக்கையை அளித்துள்ளது. அதில், “இந்திய விமானப்படைக்கு தேவையான தேஜஸ் போர் விமானத்தை தயாரித்து வழங்குவதில் எச்ஏஎல் மிகவும் காலதாமதம் செய்கிறது. இதனால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
அதாவது ஏற்கனவே கொடுத்த தேஜஸ் விமான பணியையே முடிக்கவில்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுதான் காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலை. தேஜஸ் விமான தயாரிப்பில் எச்ஏஎல் நிறுவனம் மோசம் என்று சொல்கிறது. ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் ‘மோசம்' என்று குற்றம்சாட்டிய அதே நிறுவனத்திற்கு பணியை ஏன் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறது.
கடந்த அக்டோபர் மாதம், எச்ஏஎல் நிறுவன பணியாளர் கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, ‘எச்ஏஎல் நிறுவனத்தை பாஜக அரசு அழிக்கிறது' என்று குற்றம் சாட்டினார். அதோடு மட்டுமல்லாமல், ‘ரஃபேல் உங்கள் உரிமை' என்று பணியாளர்களை உசுப்பேற்றினார்.
ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தியும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால், ஒப்பந்தமிட்ட பாஜக அரசை குறை சொல்கிறது. ரஃபேல் பேரத்தில் உண்மையை அறிந்துகொள்ள நாடு விரும்புகிறது என்று சொல்லி ராணுவ பாதுகாப்பு அம்சங்களை வெளியிடச் சொல்கிறது. இது சரியா?
காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகள் ஏராளம். இவர்கள் அடுத்தவரைப் பார்த்து ஊழல்வாதிகள் என்று சொல்வது அதிபயங்கரம். ஆதர்ஷ், காமன்வெல்த் கேம்ஸ், போபர்ஸ் என்று காங்கிரஸ் மீது சுமத்தப்பட்ட ஊழல் பட்டியல் நீண்டுகொண்டே போகும். போபால் விஷ வாயு, போபர்ஸ் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை சொகுசாக சொந்த ஊரில் இறக்கிவிட்ட பெருமை காங்கிரஸ் ஆட்சியையே சாரும். நாங்கள் சுத்தமானவர்கள், யோக்யர்கள்', என்று சொல்வது யோக்ய அரசியல். நாங்களும் சுத்தமானவர்கள் அல்ல. நீங்களும் சுத்தமானவர்கள் அல்ல என்று சொல்வது கேவல அரசியல். நாங்கள் சுத்தமானவர்கள் என்று சொல்லி மக்களை நம்ப வைப்பது காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் கஷ்டமான காரியம். அதற்கு பதிலாக பாஜகவும் ஊழல்வாதிகள் என்று நம்ப வைக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியிருக்கிறதோ என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது. ஐம்பது ஆண்டுகள் நாட்டை ஆண்ட ஒரு கட்சி, நாட்டின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாமல் மலிவு அரசியலில் இறங்கியிருப்பதை பார்க்கும் போது, பிரச்னை அந்தக் கட்சியில் அல்ல, அதை வழி நடத்திச் செல்பவர்களிடமே இருக்கிறது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com