சிறப்புக் கட்டுரைகள்

15 நிமிடங்களில் ‘விசுக்’கென முடிவுக்கு வந்த பொய்க்கல்யாணம், லட்சங்களைப் பறிகொடுத்த ‘ஏமாந்த சோனகிரி’ மாப்பிள்ளை!

RKV

முன்பெல்லாம் திரைப்படங்களில் தான் இப்படியான ஏமாற்றுத்திருமணங்களை அடிக்கடி காட்சிப்படுத்துவார்கள். ஆனால், இப்போதெல்லாம் நிஜ வாழ்க்கையிலும் இப்படித் திட்டமிட்டு ஏமாற்றித் திருமண நாடகம் நடத்தி பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது. அதற்கொரு உதாரணமே ராஜஸ்தானில் நடைபெற்ற இந்தச் சம்பவம்.

ராஜஸ்தானைச் சேர்ந்த சஜ்ஜன்சிக்குக்கு நெடுநாட்களாகப் பொருத்தமான வரன் அமையவில்லை. அவரது சகோதரராலும் அவருக்குரிய பொருத்தமான மணமகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தர முடியவில்லை. இதனால் தனக்கு திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறதே... கவலையில் இருந்தார் சஜ்ஜன்சிக். அதை அறிந்து கொண்ட ஏமாற்றுக் கும்பல் ஒன்று சஜ்ஜன்சிக்கை ஏமாற்றத் திட்டம் தீட்டியது. அதன்படி அனிதா என்ற பெண் மூலமாக உஜ்ஜயினியைச் சார்ந்த காஜல் என்ற வரனை சஜ்ஜன்சிக்குக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தத் திருமணப் பரிந்துரை உதவிக்காக அனிதாவுக்கு 50,000 ரூபாயும், அவளுடன் இருந்த முகேஷுக்கு 2 லட்சம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டு அதைத் திருமணத்திற்கு முன்பு அவர்களுக்கு அளிப்பதற்கு சஜ்ஜன்சிக் ஒப்புக் கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. 


பேசியபடி காஜலுக்கும், சஜ்ஜனுக்கும் டிசம்பர் 30 அன்று திருமணம் நடந்தேறியது. உஜ்ஜைனிக்குத் தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியுடன் சென்ற சஜ்ஜன், காஜலைத் திருமணம் செய்து கொண்டார். முன்னரே ஒப்புக்கொண்டபடி பேசியதொகையும் அனிதா மற்றும் முகேஷ் கைகளுக்கு மாறியது. தொகை கை மாறியதோ, இல்லையோ அவ்வளவு தான் அடுத்த நொடியே அனிதாவும், முகேஷும் பணத்தை எடுத்துக் கொண்டு கம்பி நீட்டிவிட்டார்கள்.

சஜ்ஜன், தன் புத்தம்புது மனைவி காஜலுடன் தனது ஊருக்குச் செல்லும் பயணத்தைத் தொடங்கினார். மணப்பெண்ணும், மணமகனும் காரில் ஏறிச் சென்று கொண்டிருக்கையில், திடீரென சஜ்ஜனுடைய புது மனைவி செல்லும் வழியில் காவல்துறை ஆட்களைக் கண்டதும், தன்னை இவர்கள் கடத்திச் செல்வதாகக் கூறி கத்த ஆரம்பித்து விட்டார். வாகனத்தை மடக்கிப் பிடித்த காவல்துறையினர், விசாரிக்கையில் தான் தெரியவந்திருக்கிறது. அந்தப் பெண்மணியின் பெயர் காஜல் அல்ல என்றும், அவளுக்கு ஆதார கார்டின் படி வேறொரு நிஜப்பெயரும் இருப்பது. அதுமட்டுமல்ல, அவளுக்கு முன்பே திருமணமாகி தற்போது இரு குழந்தைகளும் வேறு இருக்கிறார்கள். என்பது.

தன்னையும், தன் குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ளத்தான் அந்தப் பெண் ரூ 10,000 பெற்றுக் கொண்டு இப்படி ஒரு பொம்மைக் கல்யாண நாடகத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். என்பது பின்னர் காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

அந்தப் பெண்ணிடம் தெரிவித்தபடி, அவளுக்கு இந்தத் திருமணத்தில் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே நடிக்க வேண்டிய வேலை இருந்திருக்கிறது. ஆனால், அவளுக்கு வேண்டுமானால் இது நாடகக் கல்யாணமாக இருக்கலாம், ஆனால் சஜ்ஜனுக்கு நிஜத்திருமணம் ஆயிற்றே, எனவே அவர், தன் மனைவியை அழைத்துக் கொண்டு ஊருக்குச் செல்ல கார் ஏறியதும் காஜல் அதிர்ந்து போனார். தனக்கும், தன் குழந்தைகளுக்கும் இந்தத் திருமணத்தால் ஏதாவது பாதிப்பு வந்து விடுமோ! என்ற அச்சத்தில் காவலர்களைக் கண்டதும் பாதுகாப்புக் கேட்டு கதற ஆரம்பித்து விட்டார்.

இப்போது பாருங்கள் சஜ்ஜனுக்குத் தான் பணத்துக்குப் பணமும் போச்சு, நடந்த கல்யாணமும் பொய்க்கல்யாணம் என்றாகி விட்டது. வட இந்தியாவில் மட்டுமல்ல, தென்னிந்தியாவிலும் நெடுநாட்களாகத் திருமணமாகாமல், திருமண ஏக்கத்தில் இருக்கும் வசதி படைத்த ஆண்களை திட்டமிட்டு ஏமாற்றி இப்படி நாடகத்திருமணங்கள் நடத்தி வைத்துப் பணம் பறிக்கும் திட்டத்தோடு சில கும்பல்கள் களமிறங்கி இருக்கின்றனவாம்.

குற்றவாளிகளை இன்னமும் பிடிபடவில்லை, காவல்துறையில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஆகவே, திருமண ஏக்கத்தில் இருக்கும் இளைஞர்களே, மணமகளைத் தேடுவதில் மட்டுமல்ல, திருமணம் செய்து கொள்வதிலும் உஷாராக இருங்கள். அறியாத நபர்களை நம்பி வகையாக மாட்டிக் கொண்டு பணத்தோடு சேர்த்து நிம்மதியையும் பறிகொடுத்து ஏமாந்து போகாதீர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT