சிறப்புக் கட்டுரைகள்

காலா நடிகர் vs ஆன்மிக அரசியல்வாதி: உண்மையான ரஜினியை நினைத்து குழம்பும் மக்கள்

ENS


அரசியல்வாதி ரஜினிகாந்தின் கொள்கை என்ன என்றால் அதில் அவருக்கே தலை சுற்றும் நிலையில், காலா நடிகர், ஆன்மிக அரசியலில் இறங்கினால் அவர் எப்படி இருப்பார் என்று நினைத்து தற்போது மக்களுக்கும் தலை சுற்றத் தொடங்கிவிட்டது.

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறும் ரஜினிகாந்த் எப்படியிருப்பார்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து  வெளியான காலா படத்தைப் பார்த்த பலருக்கும் இந்த கேள்விதான் மனதில் எழுந்திருக்கும்.

அதற்குக் காரணம், கடந்த வாரம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துவிட்டு விமான நிலையம் வந்த ரஜினிகாந்த், எல்லாவற்றுக்கும் போராட்டம் என்று போய்விட்டால் தமிழ்நாடு சூடுகாடாக மாறிவிடும் என்று மிக ஆக்ரோஷமாகக் கூறியிருந்தார்.

ஆனால், காலா படத்தில் பல உரிமைகளை போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது என்றும் போராட்டத்துக்கு முக்கியத்துவம் தரும் வகையிலும் வசனம் பேசி நடித்துள்ளார்.

அரசியலில் நுழைவேன் என்று ரஜினி அறிவித்த நாள் முதல், அவரது ஒவ்வொரு செயலும் கடும் விமரிசனங்களுக்கு உட்பட்டு வருகிறது. அதில்லாமல் ஆன்மிக அரசியல் என்று கூறியதால், அவரை பின்னணியில் இருந்து பாஜக இயக்கி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், காவலர்களை தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய கருத்தும், தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததே துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குக் காரணம் என்று கூறியதும் கடும் விமரிசனங்களை எழுப்பியது.

அதில்லாமல், துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் காவல்துறை மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் கருத்துக் கூறியிருந்ததே, காலா படத்துக்கு டிக்கெட் முன்பதிவு குறைந்ததற்கான காரணம் என்ற கருத்துகளும் வெளி வந்தன.

அரசியல் அறிவிப்புக்குப் பிறகு வரும் முதல் படம் என்பதால், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலா படமும் அரசியல் பின்னணி கொண்டதாகவே இருந்தது. 

மும்பை தாராவி குடிசைப் பகுதியில் வசிக்கும் கரிகாலன் என்ற பாத்திரத்தை ரஜினி ஏற்று நடித்துள்ளார். அங்கு வாழும் ஏழை தமிழர்களை பாதுகாக்கும் தலைவனாக கரிகாலன் உள்ளார். ஆனால், அவர் நிஜத்தில் நடந்து கொள்வதற்கும், பேசும் கருத்துக்கும், காலா பட வசனங்களுக்கும், கதைக் கருவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

காலா படத்தில் ரஜினிகாந்த் அடிக்கடி நிலம் என்பது நமது உரிமை என்று அவ்வப்போது வசனம் பேசுகிறார். ஆனால், இதே கொள்கையுடன் நெடுவாசல், கதிராமங்கலம், கூடங்குளம் பகுதிகளில் போராடிய மக்களுக்காக இதுவரை ரஜினிகாந்த் குரல் கொடுத்ததும் இல்லை. கொடுக்கவும் இல்லை.

படத்தில், மும்பையை தூய்மைப்படுத்துவோம் என்ற திட்டத்தின் கீழ், குடிசைப் பகுதிகளை இடித்துவிட்டு அங்கு குடியிருப்புக் கட்டடம் கட்ட திட்டமிடுகிறார் வில்லனாக நடித்திருக்கும் நானா படேகர். அவர் டிஜிட்டல் மும்பையைப் பற்றியும் பேசியுள்ளார்.

இது எல்லாம் பாஜகவின் தூய்மை இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா பிரசாரங்களை நினைவுபடுத்துகிறது. அதில்லாமல், சிலர் தங்களது நலனை தியாகம் செய்தால்தான் மும்பை மேம்பாடு அடைய முடியும் என்ற வசனமும் இடம்பெற்றுள்ளது.

இந்த வசனமும், நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் பகுதி வாழ் மக்கள் மீத்தேன் திட்டத்துக்கு எதிராக போராடிய போது, பாஜகவின் மூத்த தலைவர் எல். கணேசன் கூறிய வசனத்தைத்தான் நினைவுபடுத்துகிறது. அதாவது, நாட்டின் நலனுக்காக, சிலர் தங்களது நலனை தியாகம் செய்துதான் ஆக வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

அது மட்டுமல்லாமல், காவல்துறையினரை தாக்குபவர்களை தண்டிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் நிஜத்தில் வசனம் பேச, காலா படத்திலோ கரிகாலனின் ஆதரவாளர்கள் பலரும் காவலர்களைப் போட்டு அடித்து துவம்சம் செய்வது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த செயலை ஹீரோவான கரிகாலன் கண்டிக்கவே இல்லை.

தங்களுக்கு வரும் இடர்களை மக்கள் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதைத்தான் காலா படம் காட்டுகிறது. முக்கியமான தருணங்களில் மக்கள் போராட்டத்தைக் கையிலெடுக்க வேண்டும் என்கிறது.  ஆனால் நிஜத்தில் ரஜினிகாந்த் இதற்கு மாறாக பேசுகிறார்.

காலா படத்தின் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்ட பிறகே, ரஜினி தனது அரசியல் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.  அதனால், படத்தையும், அரசியலையும் ஒப்பிடக் கூடாது என்கிறார்கள் ரஜினியை உற்று கவனித்து வருபவர்கள்.

அதில்லாமல், இந்த திரைப்படம் முழுக்க முழுக்க இரஞ்ஜித்தின் படம். காலா படத்தில் இரஞ்சித்தின் அரசியல் அறிவும், ரஜினியின் ஸ்டார் புகழும் இணைந்து நன்றாக வேலை செய்துள்ளது. ரஜினி ரசிகர்களுக்கும் நல்ல பொழுதுபோக்குப் படமாக அமைந்துள்ளது.

இந்த இடத்தில், ஒன்று மட்டும் நன்கு புரிகிறது. சினிமா வேறு, அரசியல் வேறு. காலாவையும், ரஜினியையும் நாம் ஒப்பிடவேக் கூடாது. எனவே, காலாவில் வரும் கரிகாலனா? ஆன்மிக அரசியல்வாதியா? அரசியலில் நுழையும் உண்மையான ரஜினி யார்? யார் என்று அவரே கை தூக்கினால் மட்டுமே மக்களுக்கு விளங்கும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT