சிறப்புக் கட்டுரைகள்

கொடூர ‘அபிராமி’கள் உருவாவதற்கான காரணங்களைக் களைய வேண்டாமா?

கார்த்திகா வாசுதேவன்

தான் பெற்ற குழந்தைகளையே கொல்லக் கூடிய மனநிலை ஒரு தாய்க்கோ, தந்தைக்கோ வந்தால் அம்மாதிரியான மனநிலையை மருத்துவ மொழியில் Filicide என்கிறார்கள். 

இந்த மனநிலை உருவாக 2 விதமான காரணங்கள் இருக்கலாம் என்கிறார் சைக்காலஜிஸ்ட் லதா ஜானகி; அவை

1. Emotional Disconnectedness(கணவரிடத்திலும், குடும்பத்திற்குள்ளும், பெற்ற குழந்தைகளிடத்திலும் உணர்வுப் பூர்வமான பிணைப்பு இல்லாமை),
2. சிறு வயதில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருக்கலாம். இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று பாதிக்கப்பட்டவராகவோ (victim)அல்லது சாட்சியாகவோ(Witness) இருந்திருந்து அதனால் உளப்பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம். அதனால் கூட மனநலப் பிறழ்வு ஏற்பட்டிருக்கலாம்.

அபிராமி விஷயத்தில் அந்தப் பெண் தன் கணவரை 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்தவர் என்ற போதும் கூட கணவரை விடுத்து இன்னொரு ஆணை நாடக் காரணமாக அமைந்தது கூட உணர்ச்சிகளைச் சரியாகக் கையாளத் தெரியாமலும், தன்னுடைய உணர்வுகளுக்கு கணவரிடத்தில் சரியான பதில் கிடைக்காமல் போனதாலுமாக இருக்கலாம். ஏனெனில் கணவர்களில் பெரும்பாலானோர், காதலிக்கும் போது காதலியின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயல்வது போல கல்யாணத்திற்குப் பிறகு முயல்வதே இல்லை. இது கணவன், மனைவி உறவுக்குள் எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அத்தகைய புரிதல் வெளியில் கிடைக்கும்படியாகத் தெரிந்தால் அதை நம்பி அவர்கள் மோசம் போகும் படியாகிறது. குடும்ப அமைப்புக்குள் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளிடையே க்வாலிட்டி டைம் செலவழித்தல், குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு புரிதல் கணவன், மனைவி இருபாலருக்கும் அவசியம். அது இல்லாத பட்சத்தில் தான் மேற்கண்ட அவலங்கள் நேர்ந்து விடுகின்றன.

இப்படியானவர்கள் குடும்பத்தினரால் கண்டறியப்பட்டு ஆரம்ப நிலையிலேயே சைக்கியாட்ரிஸ்டுகளிடம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தால் இந்த விபரீதத்தை தடுத்திருக்க வாய்ப்பிருந்திருக்குமா? என்றால் அப்படி இல்லை என்கிறார் சைக்காலஜிஸ்ட் லதா ஜானகி. இவரது யூ டியூப் நேர்காணலைக் காணும் போது இந்த உண்மை தெரிய வந்தது.

சைக்கியாட்ரிஸ்டுகள் பொதுவாக தங்களிடம் வரும் மனநல நோயாளிகளிடம் பிரச்னைகளைக் கேட்டு விட்டு உடனே அதற்கான மருந்துகளை எழுதிக் கொடுத்து விட்டு அனுப்பி விடுகிறார்கள். நிஜத்தில் பிரச்னைகள் மருந்துகளால் தீர்வதைக் காட்டிலும் பேசிப் பேசி மனதைக் கரைத்துத்தான் பல பிரச்னைகளைத் தீர்க்க முடியும். அது சைக்காலஜிஸ்டுகளின் வேலை. 1 மணி நேரமானாலும் சரி 2 மணி நேரமானாலும் சரி உளவியல் பிரச்னைகளுடன் எங்களை நாடுபவர்களை அமர வைத்து அவர்களது பிரச்னைகளுக்கான ஆணி வேரைக் கண்டடைந்து அதைக் களைய முயல வேண்டும். அப்போது தான் அவர்களை அந்தப் பிரச்னையில் இருந்து மீட்க முடியும்.

வாழ்க்கைப் பிரச்னை எல்லாக் குடும்பங்களிலும் இருக்கிறது. அதை எப்படி நாம் அணுகுகிறோம் என்பதில் இருக்கிறது வாழ்க்கைக்கான வெற்றி. இன்றைய இளைஞர், இளம்பெண்களில் 60% க்கும் அதிகமானோர் கணவன், மனைவிக்கிடையே இருக்கும் தீர்க்க முடியாத பல பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு வாழ்க்கையை ஆனந்த மயமாகவே வாழ ஆசைப்படுகின்றனர். ஆனால் அந்த ஆனந்தம் என்பது உடனடி நிகழ்வாக நிகழ்ந்தாக வேண்டும் என்ற பிடிவாதம் தான் அவர்களுக்கிடையிலான பிரச்னையின் ஆழத்தை மேலும் அதிகரிக்கச் செய்து அபிராமி விவகாரம் போன்று சிலரது வாழ்வைப் படுகுழியில் தள்ளி விடுகிறது. உளவியல் கவுன்சிலிங் என்பது மிக நிதானமானதொரு நடைமுறை. அதற்கு பொறுமையும், புரிதலும் மிக மிக அவசியமாகிறது. திடீர் சாம்பார், திடீர் ரசம் போல அதை அணுகினால் பலன் கிடைக்காது.

உலக அளவில் ஒரு பழமொழி உண்டு. கணவன், மனைவி பந்தத்தில் 7 ஆண்டுகள் ஒரு தம்பதியால் சேர்ந்து வாழ்ந்து விட முடிகிறதென்றால் அதன் பின் அவர்களுக்குள் பிரிவென்பதே நேராது என்பதே அது. ஆனால், இதில் விதிவிலக்குகள் உண்டு. இன்றைய இந்தியாவில் இது பெரும்பாலும் தற்போது சாத்தியப்படுவது இல்லை. சிலர் வயோதிக காலத்தில் கூட விவாகரத்து வாங்கிக் கொண்டு பிரிவதும் இந்தியாவில் நிகழத்தான் செய்கிறது. காரணம் கணவன், மனைவிக்கிடையே எந்த வயதில் வேண்டுமானாலும் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத ஏமாற்றங்களினால் பிரிவுகள் நேர்ந்து விடுவதுண்டு. உறவுகளின் எதிர்பார்ப்பை குறிப்பாக கணவனின் எதிர்பார்ப்புகளை மனைவியும், மனைவியின் எதிர்பார்ப்பைக் கணவரும் புரிந்து கொள்ளவில்லை என்றால் வாழ்க்கை சிக்கல் தான். அதை சிடுக்கு எடுக்காமல் நெடுங்காலம் அப்படியே விடும் போது ஏமாற்றத்துடன் இருப்பவர்களுக்கு எரிகிற நெருப்பில் எண்ணெய் விட்டது போலாகி விடுகிறது.

சதா ஏமாற்றத்தில் உழல்பவர்கள் தாங்கள் பிறரால் தனிமைப் படுத்தப் பட்டதாக உணரத் தொடங்கி விடுகிறார்கள். இந்த மனநிலையில் இருப்பவர்களுக்கு சுயநலமும், சுயபட்சாதாபமும், தன்னை மட்டுமே பிரதானமென்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை வந்துவிடுகிறது. அதனால் தான் அபிராமி போன்றோர் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காது, எதிர்காலத்தைப் பற்றிய அக்கறையின்றி பெற்ற குழந்தைகளைக் கொல்வது மாதிரியான விபரீதங்களில் ஈடுபட்டு மொத்த வாழ்க்கையையும் தொலைத்துக் குட்டிச் சுவராக்கி விடுகிறார்கள். இவர்களுக்கு விமோஷனமே இல்லை.

தங்களுடைய சுயநலங்களுக்காகத் திட்டமிட்டு கொஞ்சமும் ஈவு, இரக்கம் இன்றி பெற்ற குழந்தைகளைக் கொல்வது, கணவரைக் கொல்வது, காதலனைக் கொல்வது, காதலியின் மீது ஆசிட் வீசுவது, முறைகேடான காதலை நிலைக்கச் செய்வதற்காக முன்னரே திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் நபரின் மீதான வன்மத்தைத் தீர்த்துக்கொள்ள அவனது குழந்தையைக் கடத்தி கொலை செய்வது என்று விதம் விதமான சைக்கோத்தனங்களில் ஈடுபட்டு தங்களது வாழ்வை தாங்களே மேலும் நரகமாக்கிக் கொள்ள இப்படியானவர்கள் தயங்குவதே இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த பூங்கொடி என்ற இளம்பெண், தனது அலுவலக சக பணியாளர் ஒருவருடன் முறையற்ற உறவைத் தொடர்ந்து வந்தார். அந்த நபர் முன்பே திருமணமாகி குழந்தைகளுடன் இருப்பவர். அவரைத் தனக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆத்திரத்திலும், தன்னையும் திருமணம் செய்து மனைவியாக்கிக் கொள்ளச் சொல்லி மிரட்டுவதற்காகவும் இந்தப் பெண் அவனுடைய மகனைக் கடத்தி விடுகிறாள். கடத்தியவள் தனது மிரட்டல் பலிக்காது போனதும் அச்சிறுவனை நன்கு அறிந்தவளாக அவன் மீது பாசம் காட்டியவளாக முந்தைய காலங்களில் இருந்த போதும் கூட தனது எதிர்பார்ப்பு நிறைவேறாத ஆத்திரம் புத்தியை மறைக்க  நெஞ்சில் ஈரமின்றி அச்சிறுவனைக் கொன்று சடலத்தை ஒரு பெரிய டிராவல் சூட்கேஸில் வைத்து மூடி பேருந்து நிலையத்தில் அநாதரவாக விட்டுச் சென்று விட்டாள். சிறுவனின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார்  தீவிர விசாரணையில் ஈடுபட்ட போது கொலைக்கான காரணம் முறைகேடான உறவால் கிட்டிய ஏமாற்றம் என்று தெரிய வருகிறது.

அந்தப் பெண் பூங்கொடி புழல் சிறையில் அடைக்கப்பட்ட போது அங்கிருந்த பெண் கைதிகளால் கடும் தாக்குதலுக்கு உள்ளானதாக அப்போதைய நாளிதழ்களில் செய்தி வெளியானது.

இன்று இந்த அபிராமிக்கும் கூட இந்தக் கதி நேரலாம்.

அபிராமிக்குத் தன் கணவனிடத்தில் எதிர்பார்ப்பு வளர்த்துக் கொண்டு ஏமாந்திருக்கலாம். அது அவளுக்கும், அவளது கணவருக்குமிடையிலான பிரச்னை. ஆனால், இங்கு பழி, பாவம் அறியாத பச்சிளம் குழந்தைகள் இரண்டு பெற்ற தாயாலேயே விஷம் வைத்துக் கொல்லப்பட்டது தான் வேதனையிலும் வேதனை. அவர்களை ஏன் கொல்ல வேண்டும்? என்பது தான் புரியாத புதிர்?! அபிராமி தன் கடமைகளில் இருந்து விடுபட நினைத்திருக்கலாம். ஆனால், அதற்கு கொலை தான் தீர்வு என்று முடிவு செய்தது அவளது வக்கிர மனதைக் காட்டுவதோடு அவளை சமூகத்தின் முன் இரக்கமற்ற அரக்கியாகவும் ஆக்கியிருக்கிறது.

இப்போது அரசும், சட்டங்களும் என்ன செய்ய வேண்டும்? அபிராமிகள் உருவாகாமல் இருக்க காரணங்களைத் தேடிக் களைய வேண்டுமா? அல்லது அபிராமிகள் மாதிரியான அம்மாக்களைத் தேடிக் கண்டடைந்து  அவர்களது குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமா?  நாட்டின் தீர்க்க முடியாத பல பிரச்னைகளில் இதுவும் ஒன்றாகி இருக்கிறது இப்போது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவன் கோயில் கும்பாபிஷேகம்

விஐடி பல்கலை. பி.டெக். நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

பைக் மீது காா் மோதல்: கூரியா் ஊழியா் மரணம்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

குடிநீா் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT