சிறப்புக் கட்டுரைகள்

என்கவுன்டர்: மறுக்கும் சட்டமும் ஏற்கும் மக்களும்!

தினமணி

பாலியல் தொடர்பான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல.. பெண்களின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகியிருக்கிறதே என்று அதிருப்தியில் இருந்தவர்களுக்கும் கூட இன்றைய காலைப் பொழுது நிச்சயமாக மகிழ்ச்சியாகவே விடிந்திருக்கும்.

காரணம் ஒரு செய்திதான். தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, உடலை எரித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.

சம்பவம் நடந்தது எப்படி என்பது குறித்து குற்றம்சாட்டப்பட்டவர்களை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று நடித்துக் காட்டச் சொன்ன போது அவர்கள் தப்பியோட முயற்சித்துள்ளனர். அப்போது வேறு வழியில்லாமல் காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்டவர்களை சுட்டுக்கொன்றுள்ளனர். இது எதிர்பாராத வகையில் அதே சமயம் வேறு வழியில்லாமல் நடத்தப்பட்ட என்கவுண்டர்தான் என்றாலும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கூட இதனை வரவேற்றுள்ளனர். காவல்துறையினருக்கு தங்களது நேரடியான பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிகளாக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும், சட்டத்தை யாரும் கையில் எடுக்கக் கூடாது, குற்றம் செய்பவர்கள் எல்லோரையும் சுட்டுத் தள்ள முடியாது என்று வாதங்கள் முன் வைக்கப்படுகிறது. இதனை யாரும் எக்காலத்திலும் மறுக்க முடியாது.

ஆனால், தாமதமாகக் கிடைக்கும் நீதி, மறுக்கப்பட்டதாகவேக் கருதப்படும் என்றும் ஆணித்தரமான வாதத்தை பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் முன் வைக்கலாம்.

இதற்குக் காரணம், 2012 டிசம்பர் மாதம் 16ம் தேதி புது தில்லியில், ஓடும் பேருந்தில் நிர்பயாவுக்கு நடந்த கொடூரம் உலகத்தையே உலுக்கியது. ஆனால், அதில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளிகள் இன்னும் சிறையில் தான் உள்ளனர். அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டாலும் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இது நிர்பயாவின் பெற்றோருக்கு எந்த வகையில் மன வலியை ஏற்படுத்தும் என்பது அனைத்து பெற்றோராலும் உணர முடியும்.

அதே நிலைதான், 2010, அக்டோபர் 29ம் கோவை மாவட்டத்தில் ஒரு சிறுமியும், சிறுவனும் கடத்திச் செல்லப்பட்டு, சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி, இருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி ஒருவன் என்கவுண்டர் செய்யப்பட, மற்றொரு குற்றவாளிக்கு இன்னும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

இப்படி தண்டனை தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மனவலியை ஏற்படுத்தும் என்பதுதான் இங்கே நாம் உற்று நோக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.

அதே சமயம், தெலங்கானாவில் நடந்திருப்பது சரி என்று வாதிட முடியாவிட்டாலும், சட்டம் மறுத்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு தீர்வாக இது உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT