சிறப்புக் கட்டுரைகள்

ஏரும் போரும் கற்ற அதிபர் ஷி ஜின்பிங்: கூகுளை அடிபணிய வைத்தவரின் சுவாரஸ்யமான வாழ்க்கைக் குறிப்பு!!

சி.பி.சரவணன்

போர்க்காலங்களில் போரில் ஈருபடுவதும், மற்ற காலங்களில் விவசாயத்தில் ஈடுபடுவதும் தமிழர்களின் பண்பாடு. இந்த பண்பாட்டுக் கூறுகளின் வடிவங்களைக் கொண்டு ஷி ஜின்பிங் விளங்குகிறார். 

இன்று தமிழகம் முழுவதும் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் ஷி ஜின்பிங். பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக இரண்டாவது முறையாக இந்தியா வந்திருக்கிறார் அவர். இந்திய ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக உள்ள அவர், அமெரிக்காவுக்கு மிகப்பெரும் சவாலாகவும், உலகின் தனிப்பெரும் தலைவராகவும் மெல்ல உருவெடுத்து வருகிறார். தந்தை அரசியலில் ஈடுபட்டதால் ஷி ஜின்பிங்கிற்கும் இளம் வயது முதலே அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பம் இருந்திருக்கிறது. எப்பொழுதுமே சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் அல்ல.

பிறப்பு, இளமைக் காலம்]


ஷி ஜின்பிங் பெய்ஜிங்கில் 15 ஜூன் 1953 இல் பிறந்தவர். ஷி ஜாங்சன் (Xi Zhongxun ) மற்றும் அவரது மனைவி குய் ஜின் (Qi Xin) ஆகியோருக்கு இரண்டாவது மகனாக ஷி ஜின்பிங் பிறந்தார்.

1949 ஆம் ஆண்டில் மாவோ சீடாங்கால் (Mao Zedong ).  ஷிக்கு முன்னதாக இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். ஒருவர் கியாவாகியோ (Qiaoqiao) மற்றொருவர் அனான் (An'an).  ஷியின் சகோதரர் ஷி யுவான்பிங் (Xi Yuanping).  முதல் மனைவி கே லிங்லிங்கை (Ke Lingling) 1979 இல் திருமணம் செய்து, 1982-இல் செய்து விவாகரத்து செய்துவிட்டார்.

பெங் லியுவானை 1987 இல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஷி மிங்ஸே (Xi Mingze) என்ற மகள் இருக்கிறார். இவர் 2014 இல் ஹார்வட் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின்னர், ஷியின் தந்தை அக்கட்சியில் பிரசாரத் தலைவராகவும் அதன்பின் துணைத் தலைவர் பதவிகளையும் வகித்தார். பின்னர் தேசிய மக்கள் காங்கிரசின் துணைத் தலைவர் உள்ளிட்ட தொடர் பதவிகளை வகித்தார்

1963 ஆம் ஆண்டில், ஷிக்கு 10 வயதாக இருந்தபோது, அவரது தந்தை கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, ஹெனானின் லுயோங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு அனுப்பப்பட்டார்.  மே 1966 இல், கலாசாரப் புரட்சி ஷியின் இடைநிலைக் கல்வியை நிலைகுலையச்செய்தது.  மாணவப் போராளிகள்  ஷி குடும்ப வீட்டை நாசப்படுத்தினர். மேலும் ஷியின் சகோதரிகளில் ஒருவரான ஷி ஹெப்பிங் (Xi Heping) கொல்லப்பட்டார். பின்னர், அவரது தாயார் ஷியின் தந்தையை விட்டு விலக  வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஏனெனில் அவர் புரட்சிக் குழுக்களின் எதிரியாக சித்தரிக்கப்பட்டார். 

1968 ஆம் ஆண்டில் ஷிக்கு 15 வயதாக இருந்தபோது அவரது தந்தை சிறையில் தள்ளப்பட்டார், 1972 ஆம் ஆண்டு வரை தனது ஷி தந்தையை மீண்டும் பார்க்கவில்லை. தனது தந்தையின் அரவணைப்பின்றி, ஷி யான்ச்சுவான் நாட்டிலுள்ள, யான்சுவான் மாகணத்திலுள்ள வென்யானி நகரத்தில் வசித்துவந்தார். லியாங்ஜியா கிராமத்தில் வேலைக்கும் அனுப்பப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு, கிராமப்புற வாழ்க்கையை நிலைநிறுத்த முடியாமல், அவர் பெய்ஜிங்கிற்கு வந்துவிட்டார். கிராமப்புறங்களில் இருந்து வெளியேறியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது அவர் கைது செய்யப்பட்டு, பள்ளங்களை தோண்டுவதற்காக ஒரு வேலை முகாமுக்கு அனுப்பப்பட்டார்.

கல்லூரிப் படிப்பு
1975 முதல் 1979 வரை, ஷி பெய்ஜிங்கின் சிங்குவா பல்கலைக்கழகத்தில்(Tsinghua University) "தொழிலாளி-விவசாயி-சிப்பாய் மாணவர்" என்ற முறையில் வேதிப் பொறியியல் பயின்றார். அங்குள்ள பொறியியல் மாணவர்கள்  மார்க்சியம்-லெனினிசம்-மாவோ சேதுங் சிந்தனையை கற்றுக்கொள்வதிலும், 5 சதவிகித நேரத்தையும் பண்ணை வேலைகளையும், "மக்கள் விடுதலை இராணுவத்திலிருந்து கற்றல்" படிப்பையும் கற்கவும் செலவிட்டனர். இங்கு தான் ஷி விவசாயத்தை நன்கு கற்றார்.

ராணுவம் மற்றும் விவசாயம் 
ஷி ஜின்பிங்கிற்கு விவசாயத்தின் மீது எப்போதுமே அளவு கடந்த காதல் உண்டு. ஏனென்றால், தொடக்கக்காலத்தில் அவர் விவசாயம் செய்தவர். அதனால் விவசாயத் தொழிலில் உள்ள சிரமங்களை மறக்காமல் ராணுவம் மற்றும் உற்பத்தித்துறைக்கு அடுத்தபடியாக விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்.

1979 முதல் 1982 வரை, ஷி தனது தந்தையின் முன்னாள் துணைத் தலைவரான ஜெங் பியாவோவின் (Geng Biao) செயலாளராக பணியாற்றினார். இவர் அப்போதைய துணை அதிபர் மற்றும் மத்திய ராணுவ ஆணையத்தின் பொதுச் செயலாளருமாக இருந்தார். இங்கு பணிபுரிந்தது ஷிக்கு சில இராணுவ நுட்பங்களை தெரிந்து கொள்ள உதவியது. 1985 ஆம் ஆண்டில், அமெரிக்காவில், விவசாயத்தைப் படிப்பதற்கான ஒரு சீனக் குழுவின் ஒரு பகுதியாக,  அயோவாவின் மஸ்கடைன் நகரில் ஒரு அமெரிக்கரின் வீட்டில் தங்கினார். இந்தப் பயணம், அமெரிக்கா குறித்த அவரது கருத்துக்களில் நீடித்த நல்லெண்ணத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது 

அரசியல் வாழ்க்கை
ஷி 1971 இல் சீன கம்யூனிஸ்ட் இளைஞர் கழகத்தில் சேர்ந்தார். 1973 முதல், அவர் 10 முறை சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, இறுதியாக 1974 இல் தனது பத்தாவது முயற்சியில் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.  பின்னர் அவர் அக்கட்சியின் தயாரிப்புக் குழுவின் கட்சி கிளை செயலாளரானார். 1975 இல் அந்தப் பதவியை விட்டு விலகினார்.  1982 ஆம் ஆண்டில், ஹெபியில் உள்ள  ஜெங்டிங் (Zhengding) பகுதியின் துணை செயலாளராக அனுப்பப்பட்டார். அவர் 1983 இல் செயலாளராக பதவி உயர்வு பெற்று, நாட்டின் உயர் பொறுப்புக்குச் சென்றார்

ஷி பின்னர் தனது பிராந்திய அரசியல் வாழ்க்கையில் நான்கு மாகாணப் பொறுப்புகளில் பணியாற்றினார்.1997 இல், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 15 வது மத்திய குழுவின் மாற்று உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார். எவ்வாறாயினும், 15 வது கட்சி காங்கிரசில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய குழுவின் 151 மாற்று உறுப்பினர்களில், ஷி தனக்கு ஆதரவாக மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்றார், உறுப்பினர்களின் தரவரிசையில் அவர் கடைசி இடத்தைத் தான் பிடிக்க முடிந்தது. பியுஜியான் மாகாண ஆளுநராக இருந்த அவர், கடந்த 2008-ம் ஆண்டு சீன துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிபர் அவதாரமும் சீர்திருத்தங்களும்
12 வது தேசிய மக்கள் காங்கிரஸின்  வாக்கெடுப்பில், ஷி மார்ச் 14, 2013 அன்று சீன மக்கள் குடியரசின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்  பெற்ற வாக்குகள் 2,952 ஆகும். மன்னராட்சிகளாலும், காலனியாதிக்கத்தாலும், உள்நாட்டு யுத்தங்களாலும் பிளவுபட்டுக் கிடந்த சீனாவை ஒன்றுபடுத்தி நீண்ட பயணப் புரட்சியால், 1949 ஆம் ஆண்டு மக்கள் சீனக் குடியரசாக அறிவித்து ஆண்டவர் மா சே துங்.

1976 ஆம் ஆண்டு இவர் மறைந்தாலும், 1979 ஆம் ஆண்டுவரை இவரது கோட்பாடுகளின்கீழ் செயல்பட்டு வந்தது சீனா. அதன் பின்னர், காலத்திற்கேற்ற மாற்றங்களோடு, அன்னிய முதலீட்டுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களுடன், புதிய கோட்பாட்டை அறிமுகப்படுத்தி அந்த நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தியவர் டெங் ஜியோ பிங்.

இந்த இரு பெரும் தலைவர்கள் வரிசையில், சீனாவை உலகின் குறிப்பிடத்தக்க பொருளாதார மையமாக மாற்றும் கொள்கைக்கு ஷி ஜின்பிங்கின் கோட்பாடு என சீன ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி இரு ஆண்டுகளுக்கு முன்னர் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஷி ஜின்பிங் தனது கோட்பாடுகளை நிறைவேற்றும் வகையில், 5 ஆண்டு கால அதிபர் பதவியில், ஒருவர் இருமுறை மட்டுமே இருக்க முடியும் என்ற அரசியல் அமைப்பு விதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2012 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், நாட்டின் அதிபராகவும் பொறுப்பேற்ற ஷி ஜின்பிங்கின் பதவிக்காலம் என்பது, வரையறுக்க முடியாததாக தற்போது மாறியுள்ளது.

கட்சியிலும், ஆட்சியிலும் தனது அதிகாரத்தை வலுப்படுத்த ஷி ஜின்பிங் அறிமுகப்படுத்திய கோட்பாடு "புதிய சகாப்தத்திற்கான சீன கூறுகளை உள்ளடக்கிய, ஷி ஜின்பிங்கின் சோசியலிச சித்தாந்தம்" என்று அந்த நாட்டில் அழைக்கப்படுகிறது. இந்த கோட்பாட்டின் முக்கிய அம்சங்களாக, கம்யூனிச சித்தாத்தங்கள் மட்டுமன்றி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மனிதர்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்வது, சீன ராணுவம் மீது கம்யூனிஸ்ட் கட்சி முழு அதிகாரம் செலுத்துவது உள்ளிட்டவை உள்ளன.

இதனை நடைமுறைப்படுத்தும் நோக்கில், அவர் ஆட்சிக்கு வந்தது முதல் ஊழல் குற்றச்சாட்டில் உயர்ந்த பதவிகளில் இருந்த அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். சுமார் 10 லட்சம் பேர் ஊழல் குற்றச்சாட்டுகளால் தண்டிக்கப்பட்டனர். அதே நேரம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான தடைகளைத் தளர்த்துவது உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என்றும் ஷி ஜின்பிங் தெரிவித்தார்.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியே ஆளும் கட்சி, கட்சியின் பொதுச்செயலாளரே நாட்டின் அதிபர் என்றாலும், மேலும் 8 கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகள் தங்களை எதிர்க்கட்சிகள் இல்லை என்றும், அரசில் அங்கம் வகித்து ஆலோசனை வழங்கக்கூடியவை என்றும் தங்களை அழைத்துக் கொள்கின்றன.

அதன்படி, கீழ் நிலையிலிருந்து உயர் மட்ட மக்கள் காங்கிரஸ் வரை அனைத்திலும், இவர்களின் ஆலோசனைகளும் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஆக, நாட்டின் அதிபர், முப்படைகளின் தலைவர், கட்சியின் பொதுச் செயலாளர் என, அசைக்க முடியாத வல்லமையுடன் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு அடுத்தக் கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார் ஷி ஜின்பிங்.

2002 ஆம் ஆண்டு தற்காலிக மாகாண ஆளுநராக செயல்பட்ட காலத்தில் ஊழலுக்கு எதிராக இவர் எடுத்த நடவடிக்கைகள், 2012 ஆம் ஆண்டில் கட்சியின் பொதுச் செயலாளராகவும், ஆட்சியின் அதிபராக ஷி ஜின்பிங்கை உயர்த்தியது.

இன்டர்நெட் சென்சார்


சீனாவில் 90 சதவீத சென்சார் அமலில் உள்ளது. இதனை கோல்டன் ஷீல்டு புராஜக்ட் எனும் சட்டத்துக்கு உட்பட்டு சென்சார் விதிகளை கடைப்பிடித்து செயல்படுகிறது கூகுள். ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த கூகுள், இதற்கு கட்டுப்படாவிட்டால் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளிவிடுவோம் என சீன அரசு எச்சரித்ததால் அடங்கிப் போனது.

9 கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சியையும், 130 கோடி மக்கள் தொகை கொண்ட சீன நாட்டையும் ஷி ஜின்பிங் அடுத்த கட்டத்தை நோக்கி எப்படி அழைத்துச் செல்லப் போகிறார் என்பதை உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

ஏலூா்பட்டியில் விவசாயிகள், மாணவிகள் கலந்துரையாடல்

பாளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாக குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT