முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

கரோனாவுக்கு கலப்பு/கலவை தடுப்பூசி?

இரு வெவ்வேறுவிதமான தடுப்பூசியை கலந்து கரோனாவுக்கு எதிராக பயன்படுத்தலாமா என்பது குறித்து பிரிட்டனில் ஆய்வு நடந்து வருகிறது. 

Updated On : 25 மே, 2021 at 3:01 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:48 AM

ஒருவருக்கு இரு வெவ்வேறுவிதமான தடுப்பூசியை கலந்து கரோனாவுக்காக கொடுத்துப்பார்த்து சோதிக்கலாமா ?

இப்படி ஓர் ஆய்வுதான் தற்போது பிரிட்டனில் நடந்து கொண்டிருக்கிறது.

அதன் தொடர்வினைகள்தான் இதோ...

Advertisement

ஒருவருக்கே இரண்டு வேறு தடுப்பூசிகளை சேர்த்துக் கொடுத்தால், தடுப்பூசி திட்டம் நன்கு வெற்றி பெறுமா? அது பாதுகாப்பானதாக இருக்குமா அல்லது ஓரு தடுப்பூசி போடுவதைவிட இரண்டு விதமான தடுப்பூசிகளை இணைத்துப்போட்டால் அது இன்னும் அதிக செயல்திறன் உடையதாக இருக்குமா? என்ற வினாக்கள் எழும்பி அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர் விஞ்ஞானிகள்.

கலவை தடுப்பூசியில் 2021 பிப்ரவரியில் உலகளாவிய கரோனா பெருந்தொற்று நோய்த்தடுப்பு பிரசாரத்தின் அச்சுறுத்தும் தளவாடங்களை எளிதாக்கும் முயற்சியில் இங்கிலாந்தில் ஓர் ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. இதில் தடுப்பூசிகள் அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஃபைசர் இரண்டையும் சேர்த்துக் கொடுத்துப்பார்க்கலாமா என்ற கருத்துதான். தடுப்பூசிகளின் சேர்க்கைகளை ஒப்பிட்டுபார்த்து அவற்றின் திறனை அறியலாம் என விஞ்ஞானிகள் எண்ணுகின்றனர்.

தடுப்பூசியின் பணி

பெரும்பாலான கரோனா தடுப்பூசிகள்  இரண்டு டோஸ்கள்/தவணைகள் கொடுக்கப்படுகின்றன. முதலில் கொடுக்கப்படும் ஆரம்ப டோஸ், நோய்க்கு எதிராக சில பாதுகாப்பை வழங்குகிறது. இரண்டாவதாக கொடுக்கப்படும் பூஸ்டர் டோஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தின் நினைவக செல்களை மேலும் தூண்டுகிறது. இது நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து பெருக்குகிறது.

புதிய தொழில்நுட்பம்

ஆனால் பற்றாக்குறை பிரச்னைகள் உலகளாவிய வெளியீட்டை பாதிக்கும் நிலையில், தடுப்பூசி தொழில்நுட்பங்களை கலப்பது என்பது தடுப்பூசி பிரசாரத்தை மேலும் எளிதாக்கும் செயலாக இருக்கலாம் என்றுகூட கருதப்படுகிறது.  சாத்தியமான ஒரு தடுப்பூசி சேர்க்கை உத்தி என்பது - ஹெட்டிரோலோகஸ் பிரைம்-பூஸ்ட் (heterologous prime-boost) என அழைக்கப்படுகிறது. அதாவது இரண்டு வேறுவகையான பொருள்கள் ஒன்றிணைந்து அதன் திறனை மேம்படுத்துதல்/ஊக்குவித்தல். இப்படி இரண்டு வேறுவிதமான தடுப்பூசிகள் இணைப்பு என்பது நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் மேம்படுத்தக்கூடும்.

கலவை தடுப்பூசியின் பயனில் எபோலா & எச்.ஐ.வி

ஒரு நோய்க்கிருமிக்கு எதிராக, அதனோடு போர் தொடுக்க,  இரண்டு தடுப்பூசிகளை இணைப்பது ஒன்றும் ஒரு புதிய அணுகுமுறை அல்ல.  இது போல இரண்டு தடுப்பூசிகளை ஒன்றிணைத்து எபோலா நோய்க்கு எதிராக போட்டு வெற்றி பெற்று இருக்கிறோம். அந்தவகையில் ஹெட்டிரோலோகஸ் பிரைம்-பூஸ்ட் கலவை பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுபோலவே,ஹெட்டிரோலோகஸ் பிரைம்-பூஸ்ட்  கலவை எச்.ஐ.வி தடுப்பூசிகளில் சோதனையாக நடந்துகொண்டுள்ளது.

நிமோகோகல் நோய்கள்

பொதுவாக பாக்டீரியா ஸ்ட்ரெப்டோகாகஸ் நிமோனியா (Streptococcus pneumoniae/r pneumococcus) மூலம் ஏற்படும் நடுக்காது பிரச்னை மற்றும் நுரையீரலில் நிமோனியா போன்றவற்றை நிமோகோகல் நோய்கள்(pneumococcal disease) என்கிறோம். இந்த நோய்களுக்கு எதிராகவும்கூட ஹெட்டிரோலோகஸ் பிரைம்-பூஸ்ட்  கலவை  தடுப்பூசி பயன்படுத்தப்படுகிறது என்று குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக தொற்று நோய்கள் மருத்துவர், நுண்ணுயிரியலாளர், ஆராய்ச்சியில் தொற்று நோய்களின் இயக்குநரர் பேராசிரியர் பால் கிரிஃபின் (Professor Paul Griffin) கூறுகிறார்.

இரண்டு தொழில்நுட்பங்கள் இணைப்பு

ஹெட்டிரோலோகஸ் பிரைம்-பூஸ்ட்  கலவையின் மூலோபாயத்தின் பின்னணியில் உள்ள கோட்பாடு என்னவென்றால், இரண்டு வெவ்வேறு தொழில்நுட்பங்கள் - எடுத்துக்காட்டாக, அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியில் பயன்படுத்தப்படும் வைரஸின்  வெக்டார்  மற்றும் ஃபைசரில் பயன்படுத்தப்படும் எம்ஆர்என்ஏ ( mRNA) - ஒரு அற்புதமான நோயெதிர்ப்பு திறனை வழங்க முடியும் என கிரிஃபின் விளக்குகிறார்.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியில் பயன்படுத்தப்படும் சிம்பன்சி வைரஸ் வெக்டர் மூலம் வெளிப்படுத்தப்பட்ட சில நோயெதிர்ப்பு வெளிப்பாடுகள் SARS-CoV2 ன் ஸ்பைக் புரதத்திற்கான செயலை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று கருதப்பட்டது. 'வைரஸ் வெக்டார் தடுப்பூசியை வேறு வகை தடுப்பூசிகளுடன் இணைப்பது என்பது இதனைவிட சிறந்த  செயல்பாடு/திறனைக்  கொடுக்கும்' என்று அவர் கூறுகிறார்.

கலவையில் திறன் அதிகம்

இது பெரும்பாலும் சில அடிப்படை அறிவியலை அடிப்படையாகக் கொண்ட ஊகங்கள் அல்லது கருதுகோளை அடிப்படையாகக் கொண்டதுதான். இதற்கு எங்களிடம் அறுதியான பாதுகாப்புத் தரவு இன்னும் போதுமானதாக இல்லை. ஆனால், ஒரு விஷயம் என்னவென்றால், வேறு வேறு  கலவையான பொருள்கள் மூலம் ஊக்குவிப்பது என்பதில் திறன் கொஞ்சம் அதிகமாக இருக்கும். எனவே அவற்றைப் பயன்படுத்தலாம்/பயன்படுத்துவோம்  என்று எண்ணுவதாக கூறுகிறார்.

முழுமையான ஆய்வு தேவை

ஹெட்டிரோலோகஸ் பிரைம்-பூஸ்ட் கலவையின் செயல்திறன் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை என்றாலும் பிரிட்டிஷ் கரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக் குழு சமீபத்தில் பாதுகாப்பு குறித்த சில துவக்க கால தரவுகளை வெளியிட்டுள்ளது.

பக்கவிளைவு அதிகமில்லா கலவை தடுப்பூசி

ஹெட்டிரோலோகஸ் பிரைம்-பூஸ்ட்  கலவை தடுப்பூசியினைப் மக்களிடம் செலுத்தி பயன்படுத்தியபோது அதனால், உடல்  சோர்வு, தலைவலி, தசை வலி மற்றும் உடல்நலக்குறைவு போன்ற பொதுவான சின்ன சின்ன பக்க விளைவுகள்தான் ஏற்பட்டன என்று தெரிவித்துள்ளனர். ஆனால் நம்பிக்கையளிக்கும் விதத்தில்/வகையில் கடுமையான பக்க விளைவுகள் ஏதும் உண்டாகவில்லை என்பதே உண்மை.

இது தொடர்பான கூடுதல் தகவல்கள் /சான்றுகள் 2021 ஜூன் மாதத்திற்குள் கிடைக்கும் என்று ஆய்வுக் குழு எதிர்பார்க்கிறது. மனித இனத்துக்கு பயனுள்ள கரோனாவை அடக்கும் ஆய்வுதான் இது. 

'இது உண்மையிலேயே மனித இனத்துக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய ஆராய்ச்சிப் பகுதியாகும். எதிர்காலத்தில் இந்த தடுப்பூசிகளை எவ்வாறு பயன்படுத்துகிறோம்.பயன்படுத்த முடியும் என்பதைத் தெரிவிக்கும்' என்று கிரிஃபின் தெளிவாகத் தெரிவிக்கிறார். ஆனாலும்கூட இதற்கு இதனை நாம் ஏற்று செயல்பட இத மூலோபாய யுக்தியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் மேலதிக நல்ல தரவுகள் தேவை என்று குறிப்பிடுகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.