சிறப்புக் கட்டுரைகள்

கணக்குப்போடுவதில் அசத்தும் குட்டி ராமானுஜன்! (விடியோ)

என்.​ அங்​கு​பாபு

பழனி: பழனி அருகே நெய்க்காரபட்டியில் ஏழு வயது சிறுவன் கணக்கு போடுவதில் கால்குலேட்டரை மிஞ்சி குட்டி ராமானுஜனாக விடை கூறுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரபட்டியை எஸ்கேசி நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவர் மேல்கரைப்பட்டி அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரதீபா. இவர் காவலப்பட்டி அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இருவருமே கணித ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு அபினவ் பிரத்யூஸ்(7), விபுல் பிரத்யூஸ்(11) என இருமகன்கள் உள்ளனர். அபினவ் கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் பள்ளிக்குச் செல்வதில்லை. ஆனால் அவனது அண்ணன் விபுல் பிரத்யூஸ் ஆன்லைனில் பள்ளிப்பாடங்களை படித்து வருவதை கூர்ந்து கவனித்துள்ளான். 

பழனியை அடுத்த நெய்க்காரபட்டியைச் சேர்ந்த கணிதமேதை சிறுவன் அபினவ் பிரத்யூஸ். உடன் தந்தை கணேசன், தாயார் பிரதீபா, சகோதர் விபுல் பிரத்யூஸ்.

இந்நிலையில் அவனது சிறிய மூளை பல்வேறு ஆற்றல்களை வெளிப்படுத்தியுள்ளது. அவரது அண்ணன் கணக்குப் பாடங்களில்படி நிலைகளை எழுதி விடை எழுதுமுன் இவன் விடைகளை தெரிவித்துள்ளான். இது அவனது குடும்பத்தாரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாரும் சொல்லித்தராமலே அவனாகவே ஒன்று முதல் நூறு வரை பெருக்கல் கணக்கு வாய்ப்பாட்டினை மனனமாக வாசித்துள்ளான். இது மேலும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவனது சாதனைகளை வெளிக்கொணர பெற்றோர்கள் பயிற்சியை தொடர்ந்துள்ளனர்.

தற்போது சிறுவன் அபினவ் கணிதத்தில் ஸ்பீடு மென்டல் மேத்ஸ் எனப்படும் திறனைப் பெற்றுள்ளான். முழு எண்கள், தசம எண்கள், முழுக்கள் ஆகியவற்றில் கேட்கும் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளுக்கு கால்குலேட்டர் போல வினாடிகளில் விடையை கூறுகிறான்.

இதுமட்டுமல்லாது வர்க்கம், வர்க்கமூலம், கனம், கனமூலம் ஆகியவற்றை கணக்கிடுவதோடு சில சூத்திரங்களையும் கண்டுபிடித்துள்ளான். ராமானுஜம் எண்களையும் வரிசையாகக் கூறும் திறன் பெற்ற சிறுவன் அபினவ் கணிதத்தில் மட்டுமன்றி பல்வேறு திறன்களையும் கூடுதலாக பெற்றுள்ளான்.

இதுகுறித்து அவனது தாயார் பிரதீபா கூறும்போது, ஒருவரது பிறந்தநாளைக் கூறினால் தற்போது வரை எத்தனை விநாடி என்று கூறுவான். அதேபோல அடுத்த பிறந்தநாளுக்கு இன்னும் எத்தனை விநாடி உள்ளது என்பதை கோடியில் கணக்கிட்டு கூறுவான். அவனது திறமை குறித்து அங்கீகரிக்க பல்வேறு புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். மறைந்த மனிதக்கணினி சகுந்தலா தேவி அம்மையார் போல இவனும் வரும் நாட்களில் பெருமை ஈட்டித்தரவேண்டும் என்பதே எங்கள் எண்ணம் என்றார்.

தந்தை கணேசன் கூறும்போது, கணிதத்தில் மட்டுமன்றி குத்துச்சண்டை, யோகாசனம், கராத்தே உள்ளிட்ட பல கலைகளையும் ஆர்வமாகக் கற்று வருகிறான். அவனது ஆர்வத்தை தடையின்றி மேம்படுத்தி வருகிறோம். உடலை சிக்ஸ் பேக் ஆக ஒரு மாதத்தில் மாற்றி அதை செய்தும் காட்டி எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தான். அவனுக்கும், அவனது அண்ணனுக்கும் போட்டி வைத்து பரிசுகள் வழங்கி ஆர்வத்தை அதிகப்படுத்துவோம்.

எங்கள் வீடு உள்ள பகுதியில் இவனை எல்லோரும் குட்டி ராமானுஜன் என்ற அழைப்பது மிகவும் பெருமையாக உள்ளது என்றார். இந்த சிறுவனது திறமை போல மலேசியாவில் யாஸ்வின் சரவணன் என்பவர் கணிதத்தில் திறமை பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு 15 வயது. இந்தியாவிலேயே தற்போது வரை இந்த வயதில் இதுபோன்ற கணிதத்திறமை கொண்ட சிறுவன் இவராகத்தான் இருக்கும் என பலரும் தெரிவித்துள்ளனர்.                                            
        
 
                                                                               
        
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT